என் இனிய இன்பனே 12
என் இனிய இன்பனே 12
வறண்ட பாலையில் வீசும் மாருதமாய் இன்பா வந்திருந்தான் சிந்துவின் வாழ்வில்.
அடுத்த ஒரு வாரமும் இன்பா அங்கேயே இருந்து வேலை செய்ய, அவனிற்கு பிடித்தமானது முதல் பிடிக்காதது வரை, உணவின் ருசி முதல் சினிமா ரசனை வரை, அவனின் உடுப்புகளின் நிற பிடித்தங்கள் முதல் ஆடைகளின் தெரிவு வரை அனைத்தையும் அவனின் நடவடிக்கைகளை வைத்தே கணித்து அறிந்து கொண்டாள் சிந்துஜா.
அன்றாடம் ரகரகமாய் விதவிதமாய் அவளின் அத்தை அவளை திட்டியப்போதும், எதையும் காதினில் வாங்காது இன்பாவின் உலகத்தில் இன்பமயமாய் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
அவனுக்குச் சமைத்துப் போடுவதும், அதை அவனுக்குப் பரிமாறி உண்பதை ரசிப்பதும், அவன் வேலை செய்யும் வேளைகளில் இவளே அவனுக்காக காபி தயாரித்துக் கொடுப்பதும் என தனது பார்வையின் வட்டத்திலேயே இன்பாவை வைத்துக்கொண்டு அவனுக்கான வேலைகள் செய்வதே தனக்கு மனநிம்மதியென அவனையே சுற்றிச் சுழன்றிருந்தாள் சிந்து.
ஒரு வாரம் கழித்து அவன் பூனேவிற்கு கிளம்பும் நாளும் வந்தது.
நெஞ்சம் பிரிவின் வாதையில் வதங்கி கொண்டிருக்க, அவனுக்கான காபியை தயாரித்துக் கொண்டு அவனறைக்குள் நுழைந்தாள் சிந்து.
தனது பயணப்பையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவன் சிந்து நுழைவதைக் கண்டதும், அவளிடம் காபியைப் பெற்றுக் கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.
அவன் காபி அருந்துவதைச் சோகமாய்ப் பார்த்திருந்தவள், "அடுத்து எப்ப வருவீங்க?" எனக் கேட்டாள்.
பெருமூச்சு விட்டவனாய், "தெரியலை சிந்து. இப்போதைக்கு வர ஐடியா இல்ல!" என்றவன்,
"தேங்க்யூ சோ மச் சிந்து! நான் வரும் போது இருந்த மனநிலைக்கு இப்ப ரொம்பவே ஃபீலிங் பெட்டர். அதுக்கு நீயும் ஒரு காரணம். நீ பார்க்க தான் சாஃப்ட் அண்ட் சென்சிட்டிவ் ஆனால் உன்னோட மனத்திடம் வேற லெவல் சிந்து" என்று அவளைப் பற்றிய தனது எண்ணங்களை பகிர்ந்தவனாய்,
"உனக்கு எப்ப என்ன உதவி வேணும்னாலும் என்னை கான்டேக்ட் பண்ணலாம் சிந்து. உன்கிட்ட ஃபோன் இல்லைல அதனால் இந்த விசிட்டிங் கார்டு கொடுக்கிறேன். இதுல இருக்க நம்பர் என்னோட செல் நம்பர் தான்" என்றவாறு அவளிடம் முகவரிச் சீட்டை வழங்கினான்.
இயல்பாய் அவளிடம் ஒருமையில் பேச பழகியிருந்தான் இன்பா.
"உன்னோட ஃப்யூச்சர் பிளான் என்ன சொல்லு? மேலும் எதுவும் படிக்க நினைக்கிறியா சிந்து! நான் வேணா அப்பாகிட்ட பேசி அரேஞ்ச் செய்ய சொல்லவா?" எனக் கேட்டான்.
"ஒரு நல்லவருக்கு பொண்டாட்டியாகி குழந்தை பெத்துக்கிட்டு புருஷன் குழந்தைனு சந்தோஷமா நிம்மதியா வாழனும். அது தான் என்னோட ஆசை" தலையை குனிந்தவாறு கூறியிருந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் இன்பா.
என்னால் முடியாதது எதுவுமே இல்லை எனப் பெண்கள் பலரும் தனித்துவமாக இயங்கி ஒவ்வொரு துறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இப்படியும் யோசிக்கும் ஒரு பெண்ணா என்று தான் தோன்றியது இன்பாவிற்கு.
"நிஜமாகவே இது தான் உன் ஆசையா?" மீண்டுமாகக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் சிந்து.
"என் மேல நிறைய காதல் வச்சிருக்க என் கணவன்! அன்பும் பாசமும் கொட்டி வளர்க்க பிள்ளைங்க! இத்தனை வருஷ தனிமையையும் வெறுமையையும் போக்க எனக்கே எனக்குனு இப்படி ஒரு குடும்பம் வேணும்ங்க. அது போதும். நான் நிம்மதியா இருப்பேன்" அவனது கண்களை நோக்கியவாறு கூறியவளின் விழிகளில் தெரிந்த ஆவலில் கலங்கிப் போனான் இன்பா.
"உங்க அத்தைக்கு உன்னை யாருக்கும் கல்யாணம் செஞ்சி வைக்க விருப்பமில்லைனு அப்பா சொன்னாங்களே" என்று இன்பா கேட்க,
ஆமென தலையசைத்தவள், "இல்லாததையும் கிடைக்காததையும் தானே இந்த மனசு விரும்பும். அப்படி தான் இப்படியான வாழ்க்கைக்கு ஆசைப்படுது என் மனசு" என்று ஏக்கத்துடன் உரைத்தவளை கவலையுடன் பார்த்தவன்,
"ஏன் உங்க அத்தை இப்படி இருக்காங்க?" எனக் கோபத்துடன் கேட்டான்.
"பணமில்லாத மனிதனை பிணமாக கூட மதிக்காத உலகம் தானே இது! அத்தை அப்படியான அவமரியாதையான நிலையில் அவங்களோட மாமியார் வீட்டுல வாழ்ந்துட்டு இருந்தாங்க. அத்தை மாமாவுக்கு பிள்ளைங்க இல்லை. மாமா இறந்த பிறகு அவரோட பென்ஷன் பணத்தை அத்தையோட மாமியார் தான் வாங்கிப்பாங்க. இவங்களை அந்த வீட்டு வேலைக்காரி போல தான் வச்சிருந்தாங்க. மாமாவோட தம்பி பார்த்தசாரதியும் அவரோட பொண்டாட்டியும் இரண்டு பசங்களும் அந்த வீட்டில் இருந்தாங்க. அவங்க எல்லாருக்கும் சமைச்சு போட்டுட்டு இருந்தது அத்தை தான். என்னோட அப்பா அம்மா இறந்த பிறகு அத்தை என்னை அந்த வீட்டுக்கு தான் கூட்டிட்டு போனாங்க. வீடு பெருக்கி துடைக்க துணி துவைக்கலாம் வேலைக்கு ஆளு வச்சிருந்தாங்க. அந்த வீட்டுக்கு நான் போனதும் அந்த வேலைலாம் எனக்கு கொடுத்துட்டு அந்த வேலையாளைலாம் நிறுத்திட்டாங்க. எனக்கு அவங்க போடுற உணவுக்கும் உடைக்குமான வேலையா அதை நினைச்சிக்கிட்டு செய்ய ஆரம்பிச்சிட்டேன். அங்கே யாரும் என்கிட்ட பாசமா பேசலைனாலும் பொண்ணா எனக்கு வேண்டிய பாதுகாப்பு அங்க இருந்தனால அப்படியே வாழ பழகிட்டேன். பார்த்தசாரதி மாமாவோட பையன் காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க! அவங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்தாங்க. அங்க ஆரம்பிச்ச பிரச்சனை தான் இது. நான் தான் அந்த பையனை மயக்கி லவ் செய்ற அளவுக்கு தூண்டி விட்டதா அந்த வீட்டுல எல்லாரும் என் மேல் தான் பழியை போட்டு பேசினாங்க. அதுக்கு காரணமாக என் அம்மாவோட காதலையும் அப்பா கூட ஓடி போய் அவங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டதையும் சொன்னாங்க. பார்த்தசாரதி மாமாவோட இரண்டு பையன்ங்க முன்னாடியும் நான் வந்துடவே கூடாதுனு எனக்கு அங்கே ஸ்ட்ரிக்ட் ஆர்டர். பாவம் அந்த பையன் ரொம்ப பயந்துட்டாங்க. பெரியவங்க முன்னாடி எதிர்த்து பேசவும் முடியாம எனக்காக வருத்தப்பட்டுக்கிட்டு சாரி கேட்க வந்தாங்க. திரும்ப அடுத்து அதுக்கும் என் மேல் தான் பழி விழுந்துச்சு. இந்த முறை அடி உதைலாம் கிடைச்சிது. அந்த பையனை ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்க அனுப்பிட்டாங்க. மூனு வருஷம் நரக வாழ்க்கை அது! ஒவ்வொரு நாளும் மனசை குத்தி கொதறுற மாதிரி பேசுற அவங்க வார்த்தைகளைலாம் தாங்கிட்டு வாழுறது கொடும் நரகமா இருந்துச்சு. ஒரு வருஷம் முன்னாடி அத்தைக்கு ஸ்ட்ரோக் வந்து இப்படி ஆனதும் அவங்களை இப்படி வச்சி பார்த்துக்க யாருக்கும் மனசில்லை. அவங்க வீட்டுல படுக்கைலயே ஒருத்தரை வச்சிக்க விசனப்பட்டு இப்படி எங்களுக்கு தனியா வீடு பார்த்து கொண்டு வந்து விட்டுட்டாரு பார்த்தசாரதி மாமா. இரண்டு பொம்பிளைங்க இருக்கிற மாதிரி பாதுகாப்பான இடமாக வேணும்னு பார்த்து தான் இங்கே கொண்டு வந்து விட்டாரு. அது வரைக்கும் சந்தோஷம்னு நினைச்சிக்கிட்டேன்.
எங்களை இங்கே கொண்டு வந்து விடும் போது தான் எங்கப்பாக்கு சொத்து இருக்குனே எனக்கு தெரிஞ்சிது. எங்களோட சொந்த வீட்டையும் கடையையும் வாடகைக்கு விட்டு அந்த காசையும் பார்த்தசாரதி மாமா தான் வாங்கிட்டு இருந்திருக்காங்க இத்தனை நாளானு இப்ப தான் தெரிஞ்சது. இப்ப அந்த காசை என் அக்கவுண்ட்ல போட்டுடுவாங்க பார்த்தசாரதி மாமா. அதை தான் அத்தையோட மருத்துவ செலவுக்கும் இந்த வீட்டு வாடகைக்கும் யூஸ் செஞ்சிட்டு இருக்கேன்.
எங்கே வயசு கோளாறுல எந்த பையனாவது லவ் பண்ணிட்டு ஓடிப் போய்டுவேனோனு பயம் அத்தைக்கு. முதல் முறையா எனக்கு ஒருத்தன் கொடுத்த லவ் லெட்டர்ல தொடங்கின வசைமொழி இப்பவும் என்னை தொடர்ந்துட்டு இருக்கு" சின்ன புன்னகையுடன் அமைதியாக அவள் பேசுவது போல் தோன்றினாலும் அந்த கண்களில் தெரிந்த வலியும் அவ்வப்போது விழிகளை சூழ்ந்த நீரும் அந்நாட்களில் அவள் வாழ்ந்த துயரமான வாழ்வை இன்பாவிற்கு படம்பிடித்து காட்டியது.
அவளின் வாதையை எண்ணி வேதனைக் கொண்டான் இவன்.
"இன்னும் எதுக்கு நீ எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்க! திரும்ப பேசி திட்ட வேண்டியது தானே. இப்படி அமைதியா போகனும்னு உனக்கென்ன தலையெழுத்து! அவங்க தான் உன்னை நம்பி இருக்காங்க! நீ ஒன்னும் அவங்களை நம்பி இல்லையே" ஆத்திரத்தில் படபடவென பொரிந்தான் இன்பா.
"யானையோட கால்ல சின்ன வயசுலருந்தே சங்கிலி கட்டி பழக்கிட்டா, இந்த சங்கிலி தாண்டி தன்னால போகவே முடியாதுனு நம்பிட்டு அப்படியே இருந்துடுமாம். அப்படி தான் இதுவும்! அவங்களை எதிர்த்து பேசுற தைரியம் இல்லை எனக்கு. இப்படியே வளர்ந்து பழகிட்டேன்" என்றாள்.
இத்தனையாய் வாழ்வில் கஷ்டப்பட்டிருக்கும் ஒரு பெண்ணை முதன் முதலாக தனது வாழ்வில் நேரில் காண்கிறான். அவளின் பார்வையில் அவளது வாழ்வை காணாது பொதுப்படையாக இவ்வுலகம் பேசும் பெண்ணிற்கான முன்னேற்றங்களை அவள் மேல் திணித்து தான் யோசித்ததே தவறென்று இப்பொழுது புரிந்தது அவனுக்கு. அவளின் நல்ல குடும்பம் சூழ் வாழ்க்கைக்கான ஏக்கத்திற்குமான காரணமும் தெளிவாக விளங்கியது அவனுக்கு.
சில நிமிடங்கள் அவளை வெறித்து நோக்கினான் இன்பா.
பின் தன்னை சமன்படுத்தி பெருமூச்செறிந்தவனாய், "சிந்து நான் சொல்றதை கேளு. நீ மட்டும் உனக்குனு ஒரு வேலை வாங்கி உன்னோட சொந்த கால்ல நிற்க ஆரம்பிச்சிட்டீனா இவங்க யாரையும் நம்பி நீ இருக்க தேவையில்லை! படிப்பும் வேலையும் ஒரு பொண்ணுக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா! உங்க அத்தை உன்னை படிக்கவோ இல்லை வேலைக்கு போகவோ விட மாட்டங்கனா சொல்லு, நான் அப்பாகிட்ட பேசி உங்க அத்தையை ஒத்துக்க வைக்கிறேன்" பொறுமையாக எடுத்துக் கூறினான்.
அதற்கெல்லாம் தனக்கு விருப்பமில்லை என்பது போல் விரக்தியுடன் அவனை அவள் பார்க்க, "ம்ப்ச் சிந்து நான் சொன்னா கேட்பியா இல்லையா?" ஆத்திரத்துடன் சற்று அதிகாரமாக கேட்டான் அவன்.
"உங்களுக்கு நான் படிச்சா பிடிக்கும்னா படிக்கிறேன். ஆனா நான் பத்தாவது பாதிலேயே நிறுத்திட்டேனே. நான் ஒன்னும் உங்களை மாதிரி படிப்ஸ்லாம் கிடையாது. ஏதோ பாஸ் ஆகிறதே அதிர்ஷ்டம்ன்ற மாதிரி தான் படிச்சேன். திரும்பவும்லாம் ஸ்கூலுக்கு போய் படிக்க முடியாதுங்க" சற்று சிணுங்கலாக அவள் கூறியதும், மெல்ல சிரித்துவாறு ஏதோ சிந்தித்தவனாய்,
"உனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும்ல! அது சம்பந்தமாக ஏதாவது கோர்ஸ் செய்யலாம். வேலைக்கு போகலாம். இப்படியே இருக்காம உன் பியூச்சர் பத்தி யோசி சிந்து. உனக்கு என்ன படிக்கனும் இல்ல என்ன வேலைக்கு போகனும்னு யோசி. கண்டுபிடிச்சதும் என்கிட்ட சொல்லு. நான் அப்பாகிட்ட சொல்லி உன்னை சேர்த்துவிட சொல்றேன். ஒரு தோழனாக உனக்கு என்ன உதவி வேணாலும் செய்ய நான் தயாராக இருக்கேன். இப்படியே இருந்துடாத சிந்து" என்று பேசி மனத்தினை கரைத்து சிந்துவை அவளது வாழ்வின் பாதையை நோக்கி சிந்திக்க செய்திருந்தான் இன்பா.
இன்பாவின் மீதிருந்த ஈர்ப்பும் பிடித்தமுமே அவளை அவன் பேச்சை கேட்க வைத்தது. அவனுக்காகவே ஏதேனும் செய்ய வேண்டுமென்று அவளின் மனம் உந்தியது.
விழி நிறைத்த நீருடன் இன்பாவிற்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினாள் சிந்து. தாயிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு தந்தையை அணைத்து பாசமழை பொழிந்து விட்டு சென்றிருந்தான் இன்பா.
அடுத்து வந்த நாட்களில் இன்பாவின் நினைவுடன் சுற்றித் திரிந்தவளின் மூளை அவன் கூறியவைகளை அசைப்போட ஆரம்பித்திருந்தன.