top of page

என் இனிய இன்பனே 11


"என்னப்பா இது? அந்தம்மா வாய்க்கு வந்தபடி பேசுறாங்க? நம்மகிட்ட வேலை செய்றவங்க தானே! நீங்க எதுவும் கேட்க மாட்டீங்களா? நான் போய் கேட்டா, சிந்துவை கூட கொஞ்சம் பேசுவாங்களேனு தான் உங்களை கூப்பிட்டேன்! போய் கேளுங்கப்பா"


அந்த முதியவரின் பேச்சினைப் பொறுக்க முடியாது அப்பா என அலறலாய் கத்தியவன், தந்தை தன் முன்பு வந்து நிற்கவும் தனது அறைக்குள் இழுத்துச் சென்று ஆத்திரத்துடன் கேட்டிருந்தான் இன்பா.


இங்கே சிந்துவோ, 'என் காது கேட்காது' என்பதைப் போலவே அங்கே எதுவும் நடவாததுப் போல, படுக்கையில் கிடந்த அத்தையைத் தூக்கி அமர வைத்து, கையில் வைத்திருந்த தட்டில் மதிய உணவினைப் பிசைந்து அவருக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்‌.


அங்கே இன்பாவின் பேச்சில் முழித்தவராய் கந்தசாமி, "யாரைடா நம்மகிட்ட வேலை செய்றவங்கனு சொல்லிட்டு இருக்க? நம்ம வீட்டுல சமையல் வேலை செய்றவங்க தான் ஒரு வார லீவ் எடுத்து அவங்க ஊருக்கு போய்ருக்காங்களே! அவங்களை எப்படி உனக்கு தெரியும்?" என்று கேட்க,


"அப்ப சிந்து நம்ம வீட்டுல வேலை செய்றவங்க இல்லையா? அப்புறம் ஏன் அவங்களை எனக்கு சாப்பாடு போட சொன்னீங்க? இங்கே ஏன் தங்க வச்சிருக்கீங்க அவங்களை?" அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான் அவன்.


"அடேய் நீ தானடா உங்க அம்மா சமைச்சதை சாப்பிட மாட்டனு சொன்ன! நம்ம வீட்டுல சமையல் வேலை செய்றவங்க லீவ்ல இருக்கனால உங்க அம்மாவும் திவ்யாவும் தான் இப்ப சமைக்கிறாங்க. அதனால தான் அந்த பொண்ணு சமைச்சதை உனக்கு கொடுக்க சொன்னேன். அதுவுமில்லாமல் சிந்து நம்ம குடும்பத்துல ஒரு பொண்ணு மாதிரி தான்டா இன்பா! நானே நம்ம வீட்டுல சமைச்சது பிடிக்கலைனா சிந்து சமைச்சதை கேட்டு வாங்கி சாப்பிடுவேன். அதுலாம் அந்த பொண்ணு ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டா. உங்கம்மாவும் திவ்யாவும் இப்ப சமைக்கும் போது ஏதாவது ஹெல்ப் வேணும்னா செஞ்சி கொடுப்பா‌. நம்ம வீட்டு துணியெல்லாம் திவ்யாவோட சேர்ந்து உட்கார்ந்து பேசிட்டே மடிச்சி கொடுப்பா. திவ்யா மாசமா இருக்கனால அவ ஏதாவது கேட்டா செஞ்சி கொடுப்பா! திவ்யாவும் சிந்துவும் அக்கா தங்கச்சி மாதிரி தான் பேசிப்பாங்க‌. எங்களுக்கும் கை கால் வலிக்கு மருந்து தேய்ச்சி விடும் அந்த பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு! அந்த பொண்ணை போய் வேலைக்கார பொண்ணுன்னு நினைச்சியா நீ?" என்று கோபத்துடன் முறைத்தார் அவர்.


"அப்பாஆஆஆ" எனப் பற்களை நறநறத்தவன், "எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்!" என்றான்.


"நான் தான் நீ வந்தன்னைக்கே அவங்க நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்காங்கன்னு சொன்னேன்ல! ஏன் என்னாச்சு? என்ன பிரச்சனை?" எனக் கேட்டார் கந்தசாமி.


சிந்துஜாவின் அத்தை பேசியதை கூறிய இன்பா, "நான் வேற வேலைக்கார பொண்ணுனு நினைச்சு காபிலாம் கேட்டு வாங்கி குடிச்சேன். அவங்க எதுவுமே சொல்லலை. சொந்த பொண்டாட்டியே நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியானு கேட்கும் போது நான் இந்த பொண்ணை என்னவா நினைச்சி வேலை வாங்கியிருக்கேன்" நெற்றியிலேயே அறைந்தவனாய் அமர்ந்து விட்டான் இன்பா.


"விடுடா இன்பா. தெரியாம தானே நினைச்ச!"


"இல்லப்பா இது தப்பு! இதுவே சிந்து நல்ல கலரா இருந்து தாவணி இல்லாமல் டிராக் பாண்ட் டிசர்ட் மாதிரி மார்டனா டிரஸ் போட்டிருந்தா இப்படி யோசிச்சிருப்பேனா‌! நீங்களே வேலை செய்றவங்கனு சொன்னா கூட நம்பி இருக்க மாட்டேன். இந்த மனநிலை தப்புப்பா. கண்டிப்பாக அவங்ககிட்ட சாரி கேட்கனும்" தவறு செய்து விட்டோம் என்ற குற்றவுணர்வில் தவித்தான் இன்பா.


"எப்படிப்பா இந்தம்மாக்கு நம்ம வீட்டை வாடகைக்கு விட்டீங்க? மனசாட்சியே இல்லாம பழிப்போட்டு பேசுறாங்க" என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது மனசாட்சி, 'நீ அப்படி தானே நங்கை மேல பழிப்போட்டு பேசின' சதக்கென்று அவனது நெஞ்சை குத்தி விட்டு போனது.


நல்லவன் செய்யும் சிறு தவறையும் வாழ்நாள் முழுவதும் குத்திக் காண்பிக்கும் அவனது மனசாட்சியை விட பெரிய தண்டனையை வேற எதுவும் கொடுத்திட முடியாது.


ஆம் இன்பா நல்லவன் தான்! அடிப்படையில் நல்லவனாய் இருப்பவன் சூழ்நிலைக்கேற்ப எதிர்வினையாற்றும் போது ஏற்படும் தவறினை உணர்ந்து மன்னிப்பு கேட்க தயங்காது, தண்டனை ஏற்கவும் தயாராய் இருக்கும் போது அவன் நல்லவன் என்ற நிலையில் தானே இருப்பான். அவ்வகையில் இன்பா நல்லவன் தான்.


நெஞ்சில் வலித்த இடத்தில் தடவிக் கொண்டவனாய், 'ஆயுசுக்கும் இந்த வலியை நான் அனுபவிச்சி தான் ஆகனுமா?' வேதனையுடன் எண்ணியவாறே அமைதியாகிப் போனான்.


மகனின் மனவோட்டத்தினை அறியாமல் பேசிக் கொண்டு போனார் கந்தசாமி.


"அந்த அம்மா எப்பவுமே அப்படி தான் இன்பா. இவங்க இங்க வந்து ஆறு மாசம் ஆகுது. புதுசா யாராவது பசங்க வீட்டுக்கு வந்துட்டு போனாலே இந்த பொண்ணை இப்படி பேசி வாட்டி வதக்கிடுவாங்க. அந்தம்மாக்கு இந்த பொண்ணை யார்கிட்டயும் கட்டிக்கொடுக்காம ஆயுசுக்கும் தன் கூடவே வச்சிக்கனும்னு ஆசை. அதான் இப்படி பேசி அந்த பொண்ணோட மனசை கொன்னுட்டு இருக்காங்க.


தூயவன் தான் நாங்க தனியா இருக்கோம்னு அந்த ரூமை வீடு மாதிரி எல்லா அறையும் வச்சி கட்டி வாடகைக்கு விடுற ஐடியா கொடுத்தான். எங்களுக்கு உதவியாக இருக்கிற மாதிரி குடும்பம் ஏதாவது வந்தா விடுவோம்னு பார்த்துட்டு இருந்தப்ப தான் இவங்களை பத்தி தெரிஞ்சிது.


என் கூட கம்பெனில வேலை பார்த்த பார்த்தசாரதியோட சொந்தம்னு சொல்லி, பார்த்தசாரதி தான் இவங்க இங்க இருக்கிறது பாதுகாப்பாக இருக்கும்னு என்கிட்ட பேசி இவங்களை இங்கே தங்க வச்சிட்டு போனான்.


ஸ்ட்ரோக் வந்து இப்ப ஒரு வருஷமா தான் கை கால் செயல்படாம படுத்த படுக்கையாக இருக்காங்களாம். அவங்களுக்கு சொந்த ஊர்ல ஏதோ சொத்து பிரச்சனையாம். அங்க தங்க முடியாதுனு இங்க வீடு பார்த்துட்டு வந்துட்டதா சிந்து சொன்னா. எது எப்படியோ சிந்து இங்க இருக்கிறது எங்களுக்கு பேருதவியா இருக்கு‌. ஆனா பாவம் அந்த பொண்ணு தான் வாழ்க்கைல சந்தோஷம் இல்லாம தினமும் அந்தம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு பொழப்பை நடத்திட்டு இருக்கு" என்றவரை கீழே பூர்ணம் அழைக்க,


"அடிக்கடி கூப்டாதடா! மேலையும் கீழேயும் ஏறி இறங்கி அலைய முடியலை" என்றவாறு வெளியே வந்தார்.


"பரவாயில்ல வாங்க. அப்ப தான் சுகரு கொழுப்புலாம் குறையும்" விளையாட்டாய் அவன் கூற,


"படவா" என்று அவன் முதுகில் அடித்தவரின் முகம் மகனின் இந்த இயல்பான வார்த்தைகளில் இளகிப்போனது. தனது மகன் விரைவில் இயல்பு நிலைக்கு மீண்டுவிடுவான் என்ற நம்பிக்கை துளிர் விட்டது.


அத்தைக்கு ஊட்டி விட்டு அவருக்கான பணிவிடை செய்து படுக்க வைத்த சிந்துவின் மனம் முழுவதும் பழைய நினைவுகள்.


'ஏன்ம்மா என்னை விட்டு போனீங்க? ஏன்ப்பா என்னை விட்டு போனீங்க? நீங்க இரண்டு பேரும் இருந்திருந்தா எனக்கு இப்ப இந்த நிலைமை வந்திருக்காது தானே' அன்றாடம் ஒரு முறையேனும் தாய் தந்தையரை எண்ணி ஏங்கி கதறுபவளை இன்றும் அவ்வாறு மனத்தோடு கதற வைத்திருந்தார் அவளின் அத்தை.


தந்தை சென்றப்பின் அவனது அறை வாயிலில் நடைபாதை முற்றத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த இன்பாவின் பார்வையில் அவளின் அத்தைக்கு அவள் செய்த பணிவிடைகள் அனைத்தும் பிசறாமல் விழுந்தது.


அந்த வார்த்தைகளுக்கு மேல் ஏதும் பேசாது முறைப்பாய் அவளின் பணிவிடைகளை ஏற்றிருந்தவரை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவரின் மீது சொல்லொண்ணாக் கோபம் எழுந்தது.


மாத்திரையின் உபயத்தில் அவளின் அத்தை உறங்கிக் கொண்டிருக்க, உண்ணவும் மனமில்லாது பால்கனியில் நின்று பெற்றோரின் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தாள் சிந்து‌.


அலுவல் பணியில் முக்கிய வேலைகளை முடித்து விட்டு தனது மடிகணிணியை அறையில் வைத்தவனாய் கைகளை தூக்கி நெட்டி முறித்தவாறு பால்கனி நோக்கி நடந்தவன் அங்கே காற்று வாங்கியவாறு நின்றான்.


பெற்றோர்களின் நினைவில் கரைந்தவளின் மனமோ இப்பொழுது அத்தை கூறிய பேச்சில் இன்பா தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்கின்ற கவலையில் வந்து நின்றது‌. தனது மனத்திற்கு பிடித்தவர் முன் தான் தாழ்ந்து போன உணர்வு எழ, தேம்பி அழுதாள் சிந்து‌.


தனது அருகில் நின்று யாரோ விசும்புவது போன்ற சத்தம் கேட்டுத் திரும்பியவன், பக்கத்து பால்கனியில் சிந்து கண்ணீருடன் நிற்பதை கண்டதும், தனது பால்கனியில் இருந்த இரும்பு கம்பியைத் தட்டி சத்தம் எழுப்பி தன் திசை நோக்கி அவளை திரும்ப வைத்து தன்னை பார்க்கச் செய்தான்.


எங்கே தான் பேசினால், மீண்டுமாய் அவளின் அத்தை அவள் மனம் நோக பேசிடுவாறோ என அஞ்சியவனாய், "சாரி" கண்களைச் சுருக்கி சத்தமில்லாது வாயை அசைத்துக் கூறினான்.


அவன் தன்னை தவறாக நினைத்திருப்பானோ என்று எண்ணிக் கலங்கியிருந்தவளுக்கு அவனின் இந்த மன்னிப்பு ஏன் எதற்கு என்று புரியவில்லை.


புருவங்கள் இடுங்க, 'ஏன்?' என வாயசைத்து அவள் கேட்க, தனது கண்ணை நோக்கி கைகளை எடுத்துச் சென்று கண்ணீரை துடைப்பது போல் சைகை செய்தவன், அவளின் கண்ணீருக்காக மன்னிப்பு கேட்பதாக உரைத்தான்.


அவளுக்கு அவன் கூற வருவது புரியவில்லை என்றாலும், தன்னிடம் இவ்வாறு அவன் பேசுவது பிடித்திருந்தது அவளுக்கு. திரும்பி உறங்கி கொண்டிருந்த அத்தையை பார்த்தவள், தான் அங்கு வருவதாக உரைத்து அவனறைக்குச் சென்றாள்.


அறைக்குள்ளே நுழைந்தவளை நோக்கி பால்கனியில் இருந்து வந்தவனைப் பார்த்து, "நீங்க சாப்பிட்டீங்களா? டைம் ஆகிடுச்சே! நான் எடுத்துட்டு வரவா?" எனக் கேட்டாள் சிந்துஜா.


"உங்க அத்தை எதுவும் சொல்லப் போறாங்க சிந்து. என்னால் நீங்க திட்டு வாங்க வேண்டாம். நான் எங்க வீட்டுலயே சாப்பிட்டுக்கிறேன்" என்றவன் சொன்னதும், இன்று அவனுக்காக ஆசை ஆசையாக சமைத்து வைத்திருந்தவளின் முகம் சட்டெனச் சுருங்கிப் போனது.


அவளின் முக மாற்றத்தினை கவனித்தவனாய், "எனக்காக சேர்த்து சமைச்சிட்டீங்களா? சரி இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுறேன்‌. எடுத்துட்டு வாங்க" என்றான்.


அவனது பேச்சில் சட்டென அவளின் முகம் பளிச்சிட, "இதோ எடுத்துட்டு வரேன்" எனப் புன்னகை முகமாய் சென்றாள் சிந்துஜா.


அவனுக்கு அவள் பரிமாற, சாப்பிட அமரும் முன்பு, "சிந்து முதல்ல நான் உங்ககிட்ட சாரி கேட்கனும்" தயங்கியவாறே கேட்டான் இன்பா.


"ஏன் எதுக்கு?" என்றவள் கேட்க,


"சாரி நான் உங்களை எங்க வீட்டுல வேலை செய்றவங்கனு நினைச்சிட்டேன்‌" என்றவன் தயங்கியவாறே சொன்னதை கேட்டவளோ மெல்ல சிரித்தாள்.


"பரவாயில்ல விடுங்க. வீட்டு வேலை செய்றதும் கௌரவமான வேலை தானே! நீங்க அப்படி நினைச்சது ஒன்னும் எனக்கு பெரிய தப்பா தோணலை. அதுவுமில்லாமல் வீட்டு வேலை செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும். விதவிதமாக சமைக்கிறது, வீட்டை அலங்கரிச்சி வைக்கிறது, பராமரிக்கிறது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்" கண்கள் மின்ன ஆசையாக கூறியவள், "அதுக்கு யாராவது காசு கொடுத்து செய்ய சொன்னா வேண்டாம்னு சொல்லுவாங்களா என்ன? எனக்கு இப்ப அந்த தேவை வரலை! அதுவும் இல்லாம உங்க குடும்பத்துக்குள்ள ஒருத்தராக தான் நான் என்னை நினைச்சிக்கிட்டேன்! நீங்க என்னை அப்படி நினைக்கலையா?" நேரடியாகவே அவள் அவ்வாறு கேட்கவும் திணறியவனாய்,


"இல்ல சாரி! அப்பா சொன்னாங்க. நீங்க அவங்களுக்கு எவ்ளோ உதவி செய்றீங்கனு சொன்னாங்க! திவ்யா அண்ணிக்கு நீங்க தங்கச்சி மாதிரின்னு சொன்னாங்க. எங்க வீட்டுல ஒரு ஆளா தான் உங்களை எல்லாரும் பார்க்கிறாங்க. நான் தான் தெரியாம தப்பாஆஆ" என்று அவன் இழுக்க,


"நீங்க உங்க வீட்டுல ஒருத்தரா என்னை நினைச்சீங்கனா இப்படி சாரி கேட்குறதை நிறுத்துங்க முதல்ல! அதோட தினமும் நான் சமைக்கிறதை சாப்பிடுறேன்னு சொன்னீங்கனா இன்னும் சந்தோஷப்படுவேன்! ஏன் நான் சமைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?" கண் சிமிட்டி கேள்வியாக அவனை அவள் பார்க்க,


"அய்யோ இல்லங்க! உங்க அத்தை உங்களை தப்பா பேசுவாங்களேனு, அதுக்கு நாம ஏன் வழி கொடுக்கனும்னு தான் சாப்பாடு வேண்டாம்னு சொன்னேன். உங்க சமையல் பிடிக்காம சொல்லலைங்க" உடனே மறுதலித்து பதிலிறுத்தான்.


"நீங்கனு இல்லை. யாரா இருந்தாலும் அவங்க அப்படி நான் பேசுவாங்க. எனக்கு பழகிப்போச்சு. நீங்க அதை கண்டுகாதீங்க. வாங்க உட்காருங்க சாப்பிடுங்க" என்றவளாய் அவனுக்கு பரிமாறத் தொடங்கினாள்.


ஏனோ அவனால் அந்த அத்தையினால் அவள் படும் துன்பத்தை ஏற்கவே முடியவில்லை. கண் முன்னால் ஒரு ஜீவன் வதைப்படுவதை தடுக்க முனையும் நோக்கில், "ஏன் நீங்க இப்படி ஏச்சு பேச்சு வாங்கிட்டு இவங்க கூடவே இருக்கீங்க? அதிலும் உங்ககிட்டயே ஹெல்ப் வாங்கிட்டு உங்களை இப்படி திட்ட அவங்களுக்கு எப்படி மனசு வருது?" உண்டவாறே ஆதங்கத்துடன் கேட்டான் அவன்.


"யாருமில்லாம அனாதையா போக்கிடம் இல்லாம இருந்த நேரத்துல என்னை ஆதரிச்சவங்க அவங்க. கடைசி வரைக்கும் அவங்களை வச்சி பார்த்துக்க வேண்டியது என்னுடைய கடமைனு நினைக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டாள் அவள்.


மேலும் அவளிடம் தோண்டி துருவி கேட்கும் உரிமையோ நட்போ இல்லாதிருக்க அமைதியாக உண்டான் இன்பா.


சில நிமிடங்கள் அவன் உண்பதையே பார்த்திருந்தவள், "நீங்க நிறைய என் அப்பாவை நினைவுப்படுத்துறீங்க" என்றாள்.


அவன் புரியாது விழியை உயர்த்தியவனாய் அவளைப் பார்க்க, "அப்பாக்கு உங்களை மாதிரி தான் நிறைய கோபம் வரும். கோபம் வந்தா நீங்க கத்துற மாதிரி தான் கத்துவாங்க. உங்களை மாதிரியே வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி சுத்தி நடக்கிறதை மறந்துட்டு தீவிரமா வேலை செய்வாங்க. அவங்க கார் மெக்கானிக்கா இருந்தாங்க. எல்லாரும் பெரிய விஐபி கஸ்டமர்கள் தான். அவங்ககிட்ட அப்பா இங்கிலீஷ்ல உங்களை மாதிரியே சரளமாக பேசுவாங்க" அப்பாவின் நினைவில் கண்கள் மின்ன அவள் பேசிக் கொண்டே போக, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த இன்பா, "இப்ப அப்பா எங்கே?" எனக் கேட்டவாறு கைகளை கழுவினான்.


மேலே கையை காண்பித்து, "ஆண்டவன்கிட்ட போய்ட்டாரு! தனியா போக பிடிக்காம கூட அம்மாவையும் கூட்டிட்டு போய்ட்டாரு. நான் பத்தாவது படிக்கும் போது அவங்க ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அப்பா அம்மா லவ் மேரேஜ். சொந்தக்காரங்க துணை இல்லாம தனியா தான் வாழ்ந்தோம். பத்தாவது வரைக்கும் கவலைனா என்னனு தெரியாத சந்தோஷமான வாழ்க்கை. திடீர்னு அவங்க இல்லாம போகவும், யாருமில்லாம தனியா நின்னப்ப அப்பாவோட அக்கானு இந்த அத்தை தான் வந்து அவங்க கூட கூட்டிட்டு போனாங்க. அப்போதுலருந்தே அனுபவிக்கிறேன் இந்த வேதனையை! முதல்ல ரொம்ப கோபம் வரும். அழுகையாக வரும். இப்ப மரத்து போன மனசால கண்ணீர் கூட வத்தி போச்சு. தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழுற வாழ்க்கையை கூட பெரிய நரகம் இல்லைங்க" என்றவாறு எழுந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றவளை பார்த்தவாறு மெத்தையில் அமர்ந்தவனின் மனம் பாரமாகிப் போனது. அவளின் மனத்திலோ பாரம் இறங்கி போனது.


இத்தனை நாட்களாக மனத்தில் பாரமாக அழுத்தியிருந்ததை தனது மனத்திற்கு பிடித்தமானவரிடம் பகிர்ந்து கொண்டதில் சற்று நிம்மதியாக உணர்ந்தாள் சிந்துஜா. தனது அத்தை பேசியதை வைத்து அவன் தன்னை மதிப்பிடாது, தன்னை நம்பி தனக்காக வருந்தி பேசியது பிடித்திருந்தது அவளுக்கு. அதுவே அவளை மீறி அவளின் நிலையை அவனிடம் உரைக்க வைத்தது‌.


சிந்துவின் சொற்கள் அவனது காதினில் தொடர்ந்து ரீங்காரமிட, நேற்று வரை உலகிலேயே தான் மட்டும் தான் துர்பாக்கியவான், இறைவனால் சபிக்கப்பட்டவன் என்றெல்லாம் எண்ணித் துயருற்றிருந்தவனுக்கு தனக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற உண்மையை முகத்தில் அறைவது போன்று எடுத்துரைத்திருந்தது சிந்துவின் வாழ்வு நிலை.


'என்கிட்ட என்ன இல்ல? நல்ல வேலை, குடும்பம், தேவையான அளவு பணம், வேளா வேளைக்கு உண்ண உணவு, இருக்க இடம், என்னை கவனித்துக் கொள்ள அன்பான சொந்தங்கள் எல்லாரும் இருக்காங்க. காதல் அது கொடுக்கும் வலியை விட வேற வலி பெரிதே இல்லைனு நினைச்சேனே! தன்மானத்தோட சுயமாக வாழ முடியாத வாழ்க்கையை விட பெரிய வலி என்ன இருக்க முடியும்னு என் வலி எல்லாம் ஒன்னுமே இல்லைனு சொல்லிட்டு போய்ட்டாங்களே இந்த சிந்து! உண்மை தானே'


சிந்துவின் வார்த்தையும் வாழ்வு நிலையும் இன்பா தனது காதல் வலியிலிருந்து வெளி வர சிறு பொறியை அவனுள் தூண்டிவிட்டிருந்தது.


இன்பா தனது காதல் தோல்வியிலிருந்து வெளிவர தன்னையறியாமலேயே இன்பாவிற்கு உதவியிருந்தாள் சிந்து.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page