top of page

என் இனிய இன்பனே 10

என் இனிய இன்பனே 10

"இன்பா.. இன்பா" காதினுள் தூரமாய்க் கேட்ட அழைப்பு, மெல்ல மெல்ல படபடவென்ற ஒலியுடன் மிக அருகே கேட்பது போல் தோன்ற, சட்டென உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்தான் இன்பா.


"இன்பா.. இன்பா" கதவை யாரோ படபடவென அடித்தவாறு அழைக்கும் ஓசை கேட்க, சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டவனாய் கைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான்.


மாலை நான்கு மணி ஆகியிருந்ததைப் பார்த்தவன், 'இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா' என்று எண்ணியவாறு எழுந்து சென்று கதவினைத் திறந்தான்.


அவனது தாய் அங்கே நின்றிருந்தார்.


அவரைப் பார்த்ததும் கோபம் பெருக்கெடுக்க, முறைத்தவனாய் கதவைத் திறந்து விட்டுக் கட்டிலில் அமர்ந்தான்.


'என்னடா குளிக்க கூட இல்லாம வந்ததும் அப்படியே படுத்து தூங்கிட்டியா? சாப்பிட வருவனு மதியத்துலருந்து காத்துட்டு இருந்தா இப்படி தூங்கிட்டு இருந்திருக்கியே' என்றவராய் அவனருகில் சென்று அமர, தள்ளி அமர்ந்தவனாய், "உன் கையாலேயே கொஞ்சம் விஷத்தை கொடு! குடிச்சிட்டு செத்துடுறேன்" மெல்லிய குரலில் முனகினான்.


"என்னடா சொன்ன?" அதிர்ந்து நோக்கியவராய் குரல் உயர்த்தி அவர் கேட்க,


"விஷத்தை கொடு! குடிச்சிட்டு செத்துடுறேன்னு சொன்னேன்" அந்த வீடே அதிரக் கத்தியிருந்தான் இன்பா.


நெஞ்சம் ஏற இறங்க கண்களில் உக்கிரம் பொங்க ருத்ரமாய்த் தாயை முறைத்திருந்தான் இன்பா.


கண்களில் சரேலெனக் கண்ணீர் வழிய அவனைப் பார்த்திருந்தார் பூர்ணம்.


அந்த வீட்டின் கீழறையிலிருந்து கந்தசாமியும் திவ்யாவும் எட்டிப் பார்க்க, தரைத்தளத்திலிருந்த சமையலறையின் அடுப்பில் எதையோ கிண்டியவளாய், சமையலறையில் இருந்த ஜன்னல் வழியாகச் சத்தம் கேட்ட மேலறையை எட்டிப் பார்த்தாள் சிந்துஜா.


'ஏன் இப்படி கத்துறாரு? அதுவும் செத்து போறேன்னு! அவருக்கும் அவங்க அம்மாவுக்கும் ஏதோ சண்டை போல' மனதோடு எண்ணியவளாய் தனது வேலையைத் தொடர்ந்தாள்.


'அம்மாவும் பையனும் திரும்பவும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்களா' என்றெண்ணியவாறு மேலறை நோக்கிச் சென்றார் கந்தசாமி.


கதவருகே வந்து நின்றத் தந்தையைப் பார்த்தவனாய், தாயை நோக்கித் திரும்பி, "மனசாட்சி இருக்காமா உனக்கு? அன்னிக்கு அந்த குதி குதிச்ச! செத்து போய்டுவேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக என் காதலை தூக்கி எறிஞ்சிட்டு நடைபிணமா சுத்திட்டு இருக்கேன்மா. என் மனசு புரியலையா உனக்கு! நீ என்னடானா அன்னிக்கு யாரை வச்சி எங்க காதல் சேரவே கூடாதுனு சொன்னியோ இன்னிக்கு அவங்க கூடவே கூடி பேசிட்டு இருக்க! உன்னை நம்பி என் காதலை கைவிட்டு வந்து நிக்கிறேனேமா!" கோபமாய் ஆரம்பித்துக் குரல் தழுதழுக்க நிறுத்தியவன்,


"என் மேல தான்மா தப்பு! அண்ணா அண்ணி மாதிரி நான் என் காதல்ல திடமா நிக்காம போனது தான் தப்பு! என்னை பிரிய வைக்கனும்னு என் நங்கை மேல நானே பழிப்போட்டு பேசினது தான் நான் செஞ்ச பெரிய தப்பு" எனும் போது அவனது கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.


"வேணாம்டா இன்பா!" என்றவராய் கந்தசாமி மகனின் கண்ணீரை துடைத்து அணைத்துக் கொள்ள,


"அவளை வேணாம்னு ஒதுக்கி வைக்க வழி தெரியாம, என்னை அவ வெறுக்கிற மாதிரி பேசிட்டேன்ப்பா!" என்றவாறு தந்தையின் வயிற்றுடன் முகத்தை புதைத்துக் கொண்டு கதறி அழுதான் இன்பா.


"போய்ட்டாப்பா! இனி நான் அவளை நெருங்கவே முடியாத அளவுக்கு அவ மனசை விட்டு தூரமா நான்‌ போய்ட்டேன்ப்பா! என் காதல் செத்து போச்சுப்பா! எப்படிலாம் அவ கூட வாழனும்னு நான் ஆசைப்பட்டேன் எல்லாம் கனவா போச்சுப்பா. அவ என்னை விட்டு போய்ட்டாப்பா"


மனத்தின் ஆழத்தில் இத்தனை நாட்களாக அமிழ்த்தி வைத்திருந்தவை அனைத்தையும் கதறலாய் புலம்பி அழுதிருந்தான் இன்பா.


மகனின் கண்ணீர் தாய் தந்தையர் இருவரையும் வெகுவாகக் கலங்க செய்தது.


அவன் தனது காதலில் இத்தனை தீவிரமாக இருந்திருப்பான் என இருவருமே எண்ணியிருக்கவில்லை. அப்பொழுது நடந்த தூயவனின் காதல் பிரச்சனையில் இவனது காதலை இவர்கள் பெரியதாய் நினைக்கவேயில்லை. அதனை முளையிலேயே கிள்ளி எறிவதாய் நினைத்து தான் பூர்ணம் அன்று வாக்கு வாங்கியிருந்தார்.


அந்த நாளில் அந்த நொடியில் அன்றிருந்த மனநிலையில் நிகழ்ந்தவைகள் அவை! மனித மனம் தான் சூழலுக்கு ஏற்றவாறு உணர்வு வயப்பட்டு முடிவெடுத்திடுமே! காலத்தின் ஓட்டத்தில் எடுத்த முடிவுகள் எல்லாம் எத்தனை அபத்தமானது என்று உணர்ந்திடும் வேளையில் எல்லாம் கை மீறி போயிருக்கும்.


"இன்பா" தந்தையின் வயிற்றில் முகம் புதைத்திருந்த மகனின் தலையை வருடியவாறு அழுகை குரலில் பூர்ணம் அழைக்க, ஆவேசமாய் தாயை நோக்கித் திரும்பியவன், "இனி ஒரு வார்த்தை என்கிட்ட பேசின நீ! செத்து போய்டுவேன் நான். உனக்கு மட்டும் தான் செத்து போறேன்னு பிளாக் மெயில் செய்ய தெரியுமா. நானும் செத்து போவேன். இந்த பால்கனியிலிருந்து குதிச்சு கூட செத்து போவேன்" என்று அவசரமாக அவன் எழுவதைக் கண்டதும் பதறியடித்துக் கைகளைப் பற்றியிருந்தார் கந்தசாமி.


"தம்பி! என்ன‌ இது? அவ தான் கூறுகெட்டத்தனமா செஞ்சானா! நீயும் ஏன் அப்படி பேசுற" என்று மகனை தனது கை வளைக்குள் வைத்தவர்,


"அவன் கண்ணு முன்னாடி நிக்காதே! போ" என்று மெல்லிய குரலில் மனைவியிடம் சொன்னவராய் பூர்ணத்தை அந்த அறையை விட்டு வெளியே போக வைத்தார்.


"இன்பா போய் குளிச்சிட்டு வா! காலைலருந்து சாப்பிடாம இருக்கிறதே மனசை கண்டபடி யோசிக்க வைக்கும். நீ குளிச்சிட்டு வா! அப்பா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றவர் கூறிய நொடி,


"உங்க மனைவி சமைச்சதை நான் சாப்பிட மாட்டேன். பட்டினி கிடந்து செத்து போறேன்" என்றவன் சொன்ன நொடி, "படவா இனி ஒரு நேரம் இப்படி சொன்ன!" என்று கையை ஓங்கி கொண்டு அடிக்கச் சென்று விட்டார்.


சிறு குழந்தை தாயின் அடியை மிரட்சியுடன் பார்ப்பது போல் எதிர்பாராத தந்தையின் செயலில் சட்டென பின்னே நகர்ந்து கண்களில் மிரட்சியுடன் தந்தையை அவன் பார்க்க, சிறு வயது இன்பா ஒரு நிமிடம் அவர் கண் முன் வந்து போக, கண்கள் பனிக்க அவனை அணைத்திருந்தார் கந்தசாமி.


அவனது முகத்தை நிமிர்த்திப் பாசத்துடன் வருடியவராய், "அப்பாக்கு பிராமிஸ் பண்ணு" என்று கைகளை நீட்டினார்.


அவன் புரியாது நெற்றியைச் சுருக்க, "இனி இப்படி பேச மாட்டேன். செத்து போறதை பத்தி பேசவும் நினைக்கவும் கூட மாட்டேன்னு அப்பாக்கு பிராமிஸ் பண்ணு" என்று தீர்க்கமான பார்வையுடன் கைகளை நீட்டினார் கந்தசாமி.


"ஏன்ப்பா செத்து போய்டுவேன்னு பயப்படுறீங்களா! இதெல்லாம் எப்பவோ தாண்டி வந்துட்டேன்ப்பா" விரக்தியுடன் கூறியவனாய் அவரின் கை மீது கைகளை வைத்து, "இனி இப்படி பேச மாட்டேன்ப்பா பிராமிஸ்" என்றான்.


"ஆனா பிளீஸ் இனி நான் அம்மாகிட்ட பேச மாட்டேன். இந்த வீட்டுல சாப்பிடவும் மாட்டேன்! என்னை கம்பெல் செய்யாதீங்க. ஐ நீட் சம் டைம்! என்னோட வலி உங்களுக்காவது புரியுது தானே" கண்களில் வலியுடன் தந்தையைப் பார்த்து அவன் கேட்க, உருகிப்போனார் அப்பா.


"புரியுதுடா தம்பி! அப்பா இருக்கேன் உனக்கு! நீ நல்லா இருப்ப! அப்பா அம்மாக்காக வாழுறவன் கெட்டு போக மாட்டான்டா. நீ ரொம்ப நல்லா வாழுவடா இன்பா. அப்பா இருக்கேன்" என்று அணைத்து முதுகை வருடியவாறு பேசினார் கந்தசாமி.


"சரி நீ அம்மா சமைச்சது தானே சாப்பிட மாட்ட! உங்க அம்மா சமைக்கிறதை நிறுத்தி வேலைக்காரங்களை வச்சி தான் பல வருஷம் ஆகுதே" என்றவராய் சிந்து என்று சற்றுச் சத்தமாக அழைத்தார்.


பக்கத்து வீட்டிலிருந்து இந்த வீட்டிற்கு வந்து கதவின் புறம் நின்று அவள் எட்டிப் பார்க்க, "இன்பா சாப்பிட கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு வர்றீயாமா! இருக்கு தானே?" எனக் கேட்டார் கந்தசாமி.


இன்பா எழுந்து கழிவறைக்குள் புகுந்து கொள்ள, "நானா? எங்க வீட்டுலருந்து எடுத்து வரவா அங்கிள்?" என்று கண்களை விரித்து அவள் கேட்க,


"ஆமாடா தங்கம்! அப்படியே கேசரி செய்றேன்னு கீழே எதையோ கிண்டிட்டு இருந்தியே அதையும் கொண்டு வந்து கொடு" என்றார்.


"ஆமா திவ்யா அக்கா இனிப்பா ஏதோ சாப்பிடனும்னு போல இருக்குனு ஆசையாக கேட்டாங்க. அதான் கேசரி செஞ்சி கொடுத்தேன்! இருங்க எடுத்துட்டு வரேன்" என்றவளாய் சென்றிருந்தாள் சிந்துஜா.


இன்பா குளித்து முடித்து வெளியே வர, "சிந்து ரொம்ப நல்ல பண்பான அன்பான பொண்ணு இன்பா. தூயவனும் நீயும் கூட இல்லாத குறையை இந்த பொண்ணு தான் தீர்த்துட்டு இருக்கா! எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கா" என்று மேலோட்டமாக சிந்துவைப் பற்றிப் பேசி இன்பாவை திசை திருப்பி இயல்பாக்க முனைந்தார் கந்தசாமி.


அதன் பிறகு தந்தையும் மகனும் வேலையைப் பற்றி, அண்ணன் அண்ணியின் வாழ்க்கை, தாய் தந்தையின் உடல்நிலை, மருத்துவ பரிசோதனை என்று அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க உள்ளே வந்தாள் சிந்து‌.


இன்பா தரையில் அமர, அவனின் முன்பு சிந்துஜா தட்டினை வைத்து பரிமாற, கந்தசாமி உண்ணும் மகனையே பெருமூச்சுடன் பார்த்திருந்தார்.


"சிந்து" எனப் பக்கத்து அறையில் கேட்ட சத்தத்தில், "அத்தை கூப்பிடுறாங்க. நான் போறேன் அங்கிள்" என்றவள் இன்பாவிடம், "நீங்க சாப்பிட்டுட்டு பாத்திரத்தை இங்கேயே வச்சிடுங்க. நான் வந்து எடுத்துக்கிறேன்" என்றவளாய்ச் சென்றிருந்தாள். அவளை ஏறிட்டும் பார்க்காது உண்டு கொண்டிருந்தவனின் தலை அவளின் பேச்சில் தானாக ஆடியது.


தங்களது வீட்டினில் வேலை செய்யும் பெண் என்ற அளவில் தான் சிந்துவை நினைத்திருந்தான் இன்பா.


அன்றிரவு மகனுடன் அவனது அறையிலேயே தங்கி கொண்டார் கந்தசாமி. அன்பும் அரவணைப்புடனும் ஆசையாய் வளரத்த மகனை பறிகொடுத்து விடக் கூடாதே என்ற பயம் அவரைப் பீடித்திருந்தது.


இன்பாவின் அறையிலிருந்து தனது அறைக்குச் சென்ற பூர்ணம், அதன் பிறகு இந்தப் பக்கம் வராமலே இருந்தாலும் மூத்த மகனுக்கு அலைபேசியில் அழைத்து நடந்ததைக் கூறி அழுது கரைந்திருந்தார். அதன் தாக்கம் அவரின் உடலில் ரத்த அழுத்தத்தை எகிற செய்ய அன்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பூர்ணம்.


அடுத்த இரண்டு நாட்கள் தாயிற்காக மருத்துவமனையிலேயே செலவிட்டவன், தந்தைக்கான மாதாந்திர பரிசோதனைக்காகவும் அழைத்துச் சென்றான்.


தாயின் உடல்நிலை பொருட்டு அவரை மொத்தமாய் முறைத்துக் கொண்டு திரியாமல் கேட்பதற்கு மட்டும் பதிலளிப்பது என ஒதுங்கியிருக்க ஆரம்பித்திருந்தான் இன்பா. மருத்துவமனை செல்லும் நாட்களில் உணவை வெளி கடைகளில் உண்டவன், வீட்டினில் இருந்த நேரங்களில் தந்தையின் வற்புறுத்தலில் சிந்து சமைத்துப் பரிமாறியதை உண்டான்.


வாரயிறுதிக்காக மட்டுமே வந்திருந்தவனை பெற்றோரின் உடல்நிலையும் மருத்துவமனை தொடர் விஜயமும் மேலும் சில நாட்கள் அவனை அங்கேயே இருக்க வைத்தது. வீட்டிலிருந்து வேலை செய்தவாறே அச்சூழலை கையாண்டிருந்தான் இன்பா.


முன்று நாட்கள் அலுவலகத்தில் விடுப்பெடுத்து விட்டு நான்காம் நாள் தனது அறையினில் அமர்ந்து மடிகணினியில் வேலை பார்த்திருந்தவனின் மடிகணினி அணைந்து போகவும் தான் மின்னுயிரூட்டி இணைக்கப்படவில்லை என்பதையே பார்த்தான் இன்பா.


தனது அறையினில் எந்தவொரு மின்னூட்ட முனையுமே (சார்ஜ் பாய்ண்டு) வேலை செய்யவில்லை என்பதை அப்பொழுது தான் கண்டறிந்தவனாய், "அப்பா! இங்க சார்ஜ் பாயிண்ட் எதுவுமே வேலை செய்யலையே! நான் எப்படி என் லாப்டாப்புக்கு சார்ஜ் போடுறது?" என்றவாறு தனது அறையின் வாயிலில் நடைவழி முற்றத்தில் நின்று படிக்கட்டின்‌ கைப்பிடியைப் பிடித்தவாறு கீழ் தளத்தைப் பார்த்து கத்தினான்.


தனது அறையிலிருந்து வெளியே வந்த கந்தசாமி, "ஆமாப்பா எலக்டீரிசியன்க்கு சொல்லிருந்தோம்! நீ சனி ஞாயிறு மட்டும் தானே தங்குறதா சொல்லிருந்த! அதனால் அவசரமில்லைனு சொல்லிருந்தேன்" என்றவராய் மாடிப்படி ஏறி வர,


"ம்ப்ச் என்னப்பா நீங்க? எனக்கு வேலை நிறைய இருக்கு. அவசரமா ஒரு மெயில் அனுப்பனும்! மீட்டிங் வேற கனெக்ட் செய்யனும்" என்றதும்,


"கீழே அப்பா ரூமுக்கு வர்றீயா?" என ஆசையாக கேட்டார்.


"அங்க உங்க பொண்டாட்டியும் தானே இருப்பாங்க. நான் வரலை. எனக்கு மாத்து வழி சொல்லுங்க" என்றான் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.


"சரி" எனப் பெருமூச்சுடன் யோசித்தவராய்,


"இப்போதைக்கு சிந்து வீட்டு ஹால்ல இருந்து சார்ஜர் கனெக்ட் செஞ்சி இந்த வராண்டால வெளிய சேர் போட்டு உட்கார்ந்து வேலை செய்! நான் எலக்ட்ரிசியனை வர சொல்றேன்" என்றவர், "சிந்து" என்றவாறு அந்த வீட்டின் கதவைத் தட்டினார்.


கதவைத் திறந்து, "என்ன அங்கிள்?" என்றவளாய் அவரைப் பார்க்க, இன்பாவின் நிலையை எடுத்துக் கூறி அவனது மடிகணிணிக்கு மின்னூட்ட வழி வகை செய்து கொடுத்தார். இதனால் சிந்துவின் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருக்க, இன்பா தனது வீட்டின் வாயிலில் இருந்த நடைவழி முற்றம் வரை மின்னுயிர்வூட்டியை (வயரை) இழுத்து விட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து வேலை செய்ய தொடங்கினான்‌.


வீட்டினுள் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு திறந்திருந்த கதவின் வழியாக வெளியே நடைபாதை முற்றத்தில் வேலை செய்யும் இன்பாவைப் பார்த்திருந்தாள் சிந்துஜா.


அவனது படித்த களையான முகம், அலை அலையான கேசம், அலைபேசியில் எவருடனோ ஆங்கிலத்தில் அவன் பேசும் பாங்கு, இத்தனை நாட்களாக இறுகிக் கிடந்த முகத்தில் அலுவல் பேச்சினிடையே இழையோடிய மெல்லிய நகை என அவனது நாகரிகமான தோற்றத்தினையும் செயல்களையும் உடல்மொழியினையும் உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்த சிந்துஜாவின் மனத்தில் தந்தையின் நினைவுகள்.


மனதினுள் ஓடிய தந்தையின் நினைவுகளைக் கடந்து, தன்னை மீறி தந்தையுடன் அவனது இயல்புகளை ஒப்பிட்டுப் பார்த்து உள்ளம் உள்வாங்கி கண்கள் ரசனையாய் அவனை நோக்கி கொண்டிருந்த நொடி, "சிந்து ஒரு காபி கிடைக்குமா?" என அவளைப் பார்த்துக் கேட்டிருந்தான் இன்பா.


சட்டென மாயை அறுபட தலையை உலுக்கிக் கொண்டவளாய், "என்ன.. என்ன கேட்டீங்க?" எனக் கேட்டாள்.


"ஒரு காபி கிடைக்குமானு கேட்டேன்" என்றான்.


அவனை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த அவளின் மனத்திற்குள் இன்பச்சாரல்‌.


"இதோ.. இதோ போடுறேன்" என்றவளாய்த் தங்களது வீட்டினுள் இருந்தச் சமையலறையிலேயே காபியைப் போடுவதற்கு ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டே இருந்தவளின் மனமோ, "என்கிட்ட ஏன் காபி கேட்டாரு? ஒரு வேளை என் சாப்பாட்டை சாப்பிட்டு ரொம்ப பிடிச்சி போச்சோ அவருக்கு! அதான் என் கையால காபி குடிக்க நினைக்கிறாரா?" நினைக்கும் போதே மகிழ்வில் நெஞ்சம் துள்ளியடங்க, அருமையான காபியை அவனுக்காக தயாரித்துக் கொடுத்தாள் சிந்து.


அவன் குடித்து விட்டு ஏதேனும் சொல்வான் என்று அவன் முகத்தையே அவள் பார்க்க, அவனோ காபியின் சுவையைக் கூட உணராது கடமையே கண்ணாக மடிகணிணியில் கண்களைப் பதித்தவனாய் காபியை அருந்தி முடித்தான்.


அவனிடம் இருந்து காபி டம்ப்ளரை வாங்கி விட்டு வீட்டினுள் நுழைந்த நொடி, "புதுசா ஒரு ஆம்பிளைய பார்த்தா உன்னை கைல பிடிக்க முடியாதே!" என்று காதில் கேட்கவும், வரவேற்பறையின் ஓரத்தில் கட்டிலில் படுத்திருந்தவரை நோக்கி, "அத்தை" என்று அதிர்வுடன் கூவியிருந்தாள் சிந்து‌. இத்தனை நேரமாய் அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் இயல்பாய் உலாவிய சிந்து, 'அய்யோ எப்ப முழிச்சாங்கனு தெரியலையே' என்று முனகியவளாய் அவரைப் பார்த்தாள்.


தீவிரமாக மடிகணினியில் வேலை பார்த்திருந்த இன்பாவின் செவிகளையும் இவ்வார்த்தைகள் தீண்டியிருக்க, அதிர்வுடன் சட்டென நிமிர்ந்து அறைக்குள் பார்வையைச் செலுத்தினான்.


அறுபது வயது மதிக்கத்தக்க முதிய பெண்மணி ஒருவர் நோயுற்றுப் படுக்கையில் கிடந்தவராய் இதைக் கூறியிருக்க மேலும் அதிர்ச்சி அவனுக்கு.


"உங்கம்மா மாதிரி தானே நீ இருப்ப? உன்னை பத்தி தெரியாம அந்தாளு வேற அவர் வீட்டு பையன் கூட உன்னை பழக விடுறாரு. அவர் தான் கேட்டாருனா முடியாதுனு கதவை சாத்திட்டு உட்கார வேண்டியது தானே! உங்கம்மா மாதிரி எப்படி உன் அழகை காட்டி மயக்கலாம்னு திட்டம் போட்டுட்டு இருக்கியா? இப்படி தானே உங்கம்மா என் தம்பியை திட்டம் போட்டு கூட்டிட்டு போனா! நல்லா வாழ்ந்த குடும்பத்தையே அழிச்சிட்டீங்களேடி" மேலும் அவர் பேசிக் கொண்டே போக, தலையைக் குனிந்தவாறு அமைதியாக நின்றிருந்தாள் சிந்து.


கடந்த ஆறேழு வருடங்களாகக் கேட்கும் இந்த வசை மொழிகள் அவளின் மனத்தினை மரத்துப் போக வைத்திருக்க, பல்லைக் கடித்தவாறு அமைதியாக நின்றிருந்தவளுக்கு, 'அய்யோ இதெல்லாம் அவரும் கேட்டுட்டு இருப்பாரு தானே' என்ற எண்ணம் தோன்றிய நொடி பதட்டமாய் திரும்பி பார்க்க, கோபமும் முறைப்புமாக அந்த முதிய பெண்மணியையும் பாவமாய் அவளையும் பார்த்திருந்தான் இன்பா.


© KPN NOVELS COPY PROTECT
bottom of page