இணை கோடுகள்
கோடு - 3
அவ்யுக்தின் தலைமையின் கீழ் ஹோட்டல் அபோட் இயங்க ஆரம்பித்து ஒரு வாரமாகிறது. கட்டிட புணரமைப்பு பணி துவங்கி தங்கு தடையின்றி துரிதமாக நடந்துக் கொண்டிருக்க, ப்ராஜெக்ட் லீடிடம், உள்ளலங்காரம் மற்றும் சாஃப்ட் ஃபர்னிஷிங் குறித்து தன் கருத்துக்களை அவி தெரிவித்துக் கொண்டிருந்தான்.
அனுமதி கேட்டு அறைக்குள் நுழைந்த சிவாவின் முகமே, ஏதோ முக்கிய விஷயம் என்று உணர்த்தவும், பி.எல்.லிடம் பேசி முடித்தவன், அந்த டீம் வெளியேறியவுடன் என்னவென்பதாக தன் முதன்மை உதவியாளனை பார்த்தான்.
“சார்…” என்றவன், அவியின் முன் வைத்த கோப்பில், ஒரு வங்கி காசோலை புத்தகத்தின் உள் பக்கமாக கவுன்டர் ஃபாயில் பகுதியில் 5/4 - ‘Vanavil, Rs. 25,00000 Lakhs, என்று படிக்க சிரமமான அளவில் மிகவும் கிறுக்கலாக குறிக்கப்பட்டிருந்தது.
அது ஹோட்டல் அபோட்டின் முந்தைய நிர்வாகமான தாஸ் குழுமத்துக்கு சொந்தமான வணிக வங்கிக் கணக்குக்கான அதிகாரபூர்வ காசோலை புத்தகம் என்பதை கவனித்த அவ்யுக்த், “என்ன விஷயம் சிவா? ஒரு ட்வென்டி ஃபைவ் லாக்ஸ்க்கு என் பெர்மிஷன் வேணுமா என்ன? அப்படி நான் தான் கையெழுத்து போடணும்னா, நம்ம ஸ்வர்ணகீர்த்தி செக் லீஃப் ஃபில் பண்ணி தரணும்னு கூட உனக்கு தெரியாதா? இதென்ன இப்படி பழைய செக் புக்கை, அதுவும் ஏற்கனவே எழுதி, கிழிச்சுட்ட பக்கத்தை, என் முன்ன நீட்டுற?” காரமாய் கேள்வி தொடுத்தவனிடம்,
“இல்ல சார், இதை விட்டல் சார் இறக்கறதுக்கு முன்ன, இஷ்யு செஞ்சுருக்கார்!” லேசாய் வார்த்தை தந்தியடிக்க பதிலளித்தான்.
“அதுக்கென்ன சிவா? ஏதாவது சேரிட்டி ஆர்கனைசேஷனுக்கு (தர்ம ஸ்தாபனத்துக்கு) அபோட் சார்பில், வருஷாவருஷம் இந்த அமவுண்ட்டை நன்கொடையா கொடுக்கறதா ஏற்கனவே விட்டல் அங்கிள் ஒத்துக்கிட்டதா? நோ ப்ராப்ளம், நாமும் அப்படியே செஞ்சுடலாம். டேக்ஸ் ரிலீஃப் வரும், கரெக்ட் ஆடிட் ப்ராசஸ் செஞ்சுடு,” ஒப்புதல் தந்ததோடு நடைமுறையை அவி நினைவுறுத்திட,
“அது சார்… இல்ல சார்…” தயங்கிய சிவா, முதலாளியின் முகம் பொறுமையின்மையை பிரதிபலிப்பதைக் கண்டு, “இது யாரு என்னன்னு தெரியலை சார். அது மட்டுமில்ல… இந்த செக்கை ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருந்தப்ப சார் கொடுத்த மாதிரி தெரியுது.”
“வாட் கம் அகைன்” என்றவன் நெற்றியை சுருக்கி, கண்களை இடுக்கி பார்க்க…
“விட்டல் சார், கடைசியா இங்க ஆஃபீஸுக்கு வந்தது இந்த வருஷம் ஏப்ரல் மாசம் நாலாம் தேதி! அதுக்கப்புறம் அவரோட ஹாஸ்பிடல் வாசம், பிசினெஸ்சும் கை மாறி, அவரும் போய் சேர்ந்துட்டார். அப்படியிருக்க, இந்த செக்கை ஏப்ரல் அஞ்சாம் தேதி கொடுத்து இருக்கற மாதிரி, புக்கோட கவுன்டர் ஃபாயில்ல நோட் பண்ணியிருக்கார். ஆனா, அன்னைக்கு நைட் வரை அவர் ஐ.சி.யூல இருந்ததா, ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ் ரெகார்டஸ் தெளிவா இருக்கு. அதான் ஒரே குழப்பமா இருக்கு.”
பொறுமையிழந்த அவி கோபமாக, “என்ன சொல்லற சிவா? பி கிளியர் அண்ட் குவிக்…”
முதலாளியின் உறுமலில், “சார், வானவில் என்ற பேரோட இயங்கற கம்பெனி கூட இது வரைக்கும் அபோட் பிசினெஸ் பண்ணதில்லை. நல்லா அலசி பார்த்துட்டோம். அப்படியிருக்க, ஹாஸ்பிட்டல்ல அதுவும் சீரியஸா ஐ.ஸி.யூவிலிருந்த விட்டல் சார், பெரிய அமவுண்டை, அதுவும் அவரோட அஃபீஷியல் அக்கவுண்ட் செக் புக்ல இருந்து தந்துருக்கார். வெறுமே லீஃப் இஷ்யு பண்ணி இருக்கார். கையெழுத்து அவருது தான்னு, சீஃப் மேனேஜர் வவுச் பண்றார். பட் கொஞ்சம் கிறுக்கலா தெரியுதுன்னு ஒத்துக்கறார்.”
“பெர்சனல் ரீசன்ஸ்க்காக கொடுத்ததான்னு ஒழுங்கா அலசி பார்த்தீங்களா?”அவ்யுக்த் கேள்வியாக பார்க்க,
“சொந்த வேலைக்காக கொடுக்கறதா இருந்தா, அவரோட பெர்சனல் அக்கவுண்ட் மட்டும் தான் விட்டல் சார் எப்போவும் யூஸ் பண்றதாம். கம்பெனி, அண்ட் பெர்சனல் அக்கவுண்ட்ஸ் என்னைக்கும் மிக்ஸ் பண்ணதில்லைன்னு மேனேஜர் க்ளியரா சொல்றார். அப்படி இருந்தா நமக்கும் தெரிய வந்து இருக்க போறதில்ல சார்.”
“ம்ம்ம்…” மேலே சொல் என்பதாக கூர்மையாக பார்த்தவனிடம், “இது ஹோட்டல் அக்கவுண்ட்ல இருக்கற செக் புக். அதுவும், ஏப்ரல் மூணாம் தேதி தான், இந்த புக்கை சார்கிட்ட கொடுத்ததா என்ட்ரி லாக் (log) ஆகியிருக்கு! எல்லாமே அக்கவுண்டபில், நம்மகிட்ட ஹான்டோவரான பேப்பர் வர்க்கை க்ராஸ் செக் பண்ணும் போது தான், ஆடிட் டிபார்ட்மென்ட் இப்படி ஒரு அமவுண்ட் எழுதின விஷயத்தை கண்டு பிடிச்சாங்க.”
அவ்யுக்தின் செவிகள் கூர் தீட்டி விஷயத்தை கேட்க, மூளையும் தீவிர யோசனைக்கு சென்றது.
“அப்போ இருந்த பண நெருக்கடியில் இவ்வளோ தொகையை எழுதி யாருக்கு கொடுத்தார்? இது பத்தி அவர் செக்ரட்டரி, மானேஜர் யாருக்கும் சுத்தமா விவரம் தெரியலை. ஆக்சுவலி, அன்னைய தேதியில் ஹோட்டல் அக்கவுண்டில் சரியா இருபத்தி அஞ்சு லட்சம் மட்டும் தான் சார் இருந்தது. அதான்... அந்த விஷயம் தெரிஞ்ச, இங்க வேலை பண்ற யாரோ தான், விட்டல் சாருக்கு உடம்பு முடியாதப்ப, அந்த சந்தர்ப்பத்தை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி ஃபோர்ஜரி பண்ணியிருப்பாங்கன்னு சந்தேகம் வருது!
“வாட் நான்சென்ஸ் சிவா? ஆர் யூ ஷுர்… இந்நேரம் அந்த செக் பாஸ் ஆகியிருந்தா யாரு, என்னன்னு ட்ரேஸ் செஞ்சு எல்லாம் கண்டு பிடிக்க முடியுமே!”
“ஏற்கனவே பேங்க்ல கேட்டுட்டோம் சார். இன்னும் யாரும் செக்கை டெபாசிட் பண்ணலைன்னு தான் சொன்னாங்க. விட்டல் சாரோட லாஸ்ட் டேஸ்ஸப்போ, இங்கே மேனேஜ்மேன்ட்ல வேற நிறைய பிரச்சனைங்க நடந்துட்டு இருந்ததே! இப்படி செஞ்சு, மாட்டிக்காம தப்பிக்கவும் சான்ஸ் இருந்ததால யாரோ ஸ்டாஃப் தைரியமா ஃபோர்ஜ் பண்ணியிருக்கறதா மனசுக்கு படுது. திடீர்னு, நாம சார்ஜ் எடுக்கவும் தான், பயத்துல ப்ரோசீட் செய்யாம இருக்காங்க போல!!” சிவா பகிர்ந்த விவரங்களை உள்வாங்கிய அவ்யுக்த் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
“பேசாம ஸ்டாப் பேமென்ட் கொடுத்துடலாம் சார்,” சிவா முடிக்கும் முன்பாக,
“நோ… என்னை கேட்காம அப்படி பண்ணாதீங்க. முதல்ல உண்மையா இப்படி ஒரு கம்பெனி இருக்கான்னு இன்னொரு முறை தரோவா சர்ச் பண்ணுங்க. இங்கேயே யாரோ ஃபோர்ஜ் பண்றாங்கன்னா, ஐ வானா கேட்ச் தெம் ரெட் ஹான்டெட். லெட் அஸ் கிவ் சம் டைம் ஃபார் தி ப்ளாக் ஷீப். இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்தில் இது யாரு என்னன்னு முழு விவரம் கண்டுப்பிடிக்கறீங்க.”
அவ்யுக்த்துக்கும் ‘இது யாரோ ஊழியனின் கையாடல் முயற்சி என்பதாக தான் தோன்றியது. ஏனெனில், ஹோட்டலின் நிதி மீள முடியா அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்க, வேலை செய்பவர்களுக்கு, இனி அந்த மாத சம்பளம் கொடுப்பதுவே சந்தேகம் என்ற இக்கட்டான கட்டத்தில் தான் அவனை, விட்டல் சந்திக்க வேண்டினார். அவன் அறிந்த அங்கிள் இவ்வளவு பெரிய தொகை வங்கியில் இருக்க, பண நெருக்கடியும், அவசிய தேவையும் இருக்கும் நேரத்தில், அப்படி பொறுப்பில்லாமல் தெரியாதவருக்கு தூக்கி கொடுக்க கூடியவரல்ல. அவனின் முந்தைய தொழிலை கையகப்படுத்தும் முயற்சிகள் எதற்கும் மசியாத விட்டல், பணியாளர்கள் நலன் என்றதில் சறுக்கி தானே, தான் சொன்னதற்கெல்லாம் ஒப்புதலாக இசைந்து, பெருவாரி ஷேர் தனக்கு வரும் படி சுலபமாக வழி செய்தார்.’
‘வியாபாரத்துக்கு மூளையை உபயோகிக்க வேண்டும்… உள்ளத்தால் எதையும் முடிவு செய்யக் கூடாது. இது புரியாத சரியான செண்டிமெண்டல் முட்டாளாக அங்கிள் இருக்கவும் தான், அவன் திட்டம் சுமூகமாக கை கூடியது!’
‘விட்டல் அங்கிள் மட்டும், சற்று பொறுமையாக யோசித்திருந்தால், அந்த இக்கட்டான நிலைக்கு வேறு தீர்வு நிச்சயம் புலப்பட்டிருக்கும். ஏன்… பழைய நட்பும், உறவும் தோள் கொடுக்க, அவனே விட்டல் கேட்காமல் தகுந்த ஆலோசனை கொடுத்து, மூழ்க இருந்தவர்களை கரை சேர்த்திருப்பான். “ஹரீஷ்…” எல்லாவற்றுக்கும் அவனின் சுயநலம் தானே காரணம்!’ யோசனை சங்கிலி அறுப்பட, நிமிர்ந்தவன் சிவா அப்போதே வெளியேறி விட்டதை கவனித்து, மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
***********************
அதே தினம்,... அடையாரில் அஞ்சுவின் அடுக்கு மாடி ஃபிளாட்டில்,...
“உனக்கு வரவர விளையாட்டுத்தனம் கூடி போச்சு அஞ்சு. எக்ஸாம் முடிஞ்சு ஒரு வாரமாகியும், அந்த விட்டல் சார் செக்கை எப்படி யூஸ் செய்யன்னு உருப்படியா எதையும் யோசிக்காம பொழுதை ஓட்டிட்டு இருக்க. அவர் கொடுத்து ஒரு மாசம் மேல ஆகியும், இன்னமும் அக்கவுண்ட்ல போடாம இருக்க! ஆமா, செக்கையாவது பத்திரமா வெச்சுருக்கியா, இல்ல தொலைச்சுட்டியா?” வரிசையாக சந்து கேள்விகளை தொடுத்தான்.
அப்பேச்சை செவியில் வாங்காமல் காண்டி க்ரஷை மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவளை கண்டு காண்டானவன், கோபமாக அவள் மொபைலை பிடுங்கினான்.
“எரும, வர்கிங் ஃபிரம் ஹோம்ன்னா உன் வேலையை பார்க்க வேண்டியது தானேடா! எதுக்கு சும்மா நொய் நொய்ன்னு என் காதுல கத்துற?”
“ஏண்டி சொல்ல மாட்ட… சிவனேன்னு வீட்ல நான் பாட்டுக்க, கடமையை ஆத்தீட்டு இருந்தா, ‘போர் அடிக்குது, கொஞ்சம் கம்பெனி குடுடா’ன்னு என்னை பிடுங்கி எடுத்து, இங்க கூப்பிட்டு உக்காத்தி வெச்சுட்டு,” சந்து புலம்ப துவங்கவும், அப்போது அவன் ஆஃபீசில் இருந்து அழைப்பு வர அவர்களின் பேச்சு தடைப்பட்டு அதன் பின் மறக்கவும் பட்டது.
*********************************************
அதே நேரம் இங்கே அபோட் ஆஃபீசில்…
மரணப் படுக்கையில் இருந்த நிலையில் யாருக்கு, இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தார் விட்டல் என்று தெரியாமல் சிவா தலைமையில் அனைவரும் மண்டை காய்ந்துக் கொண்டிருந்தனர்.
சூரஜை போட்டு பிச்சு எடுத்தும் பயன் தான் பூஜ்யம். “அவரோட பர்சனல் செக்ரட்டரியான உனக்கு தெரியாம எப்படி இது நடந்துச்சு?” இதே கேள்வியை பல விதங்களில் சிவா கேட்டு விட்டான்.
“என் தாத்தாவும் அந்த நேரத்தில் ரொம்ப உடம்புக்கு முடியாம இருந்தார் சிவா சார். நான் அப்போ லீவ்ல இருந்தேன். சாரை ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததே, எனக்கு ரெண்டு நாள் கழிச்சு தான் தெரியும்.” திரும்ப திரும்ப அதே பதிலை தந்து, சூரஜூம் அலுத்து விட்டான்.
‘இந்த விட்டல் சார் எத்தனை இளகினவரா இருந்தா, இப்படி அவர் செக்ரட்டரி சரியா வேலைக்கு வராம இருந்து இருப்பான்?’ என்று மனதில் நினைத்த சிவா, ‘இப்போ சின்னவருக்கு நான் இல்ல பதில் சொல்லணும்! கடவுளே, ஒரு நாள் தான் அவகாசம் கொடுத்திருக்கார்!’ என்று நொந்துக் கொண்டான்.
அதே போல் மறுநாள் செக் விஷயத்தை நினைவு வைத்துக் கொண்டு அவி விசாரிக்கவும், ‘இவர் ஞாபக சக்தியில் தீயை வைக்க,...’ என்று குமுறிய சிவா…
“மேற்கொண்டு விவரம் தெரியலை சார்” மென்று முழுங்கி வார்த்தை தந்தியடிக்க பதில் தந்தான்.
“இப்போலாம் சின்ன கம்பெனிங்க கூட ஆன்லைன்ல தங்களை மார்க்கெட்டிங் பண்ணிக்கறாங்க. சோ வெப்சைட், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ச்சாட், எட்ஸி, பின்ட்ரெஸ்ட் இதுல எல்லாம் தேடி பார்த்தீங்களா? ஹோட்டல் சம்பந்தமா இருக்க மத்த உப தொழில்களில், பொட்டிக், டிராவல் ஏஜென்சிஸ், (souvenir)சௌவெனிர் கிஃப்ட் ஷாப் செயின்ஸ்னு வேற கோணத்துல விசாரிச்சு பார்த்தீங்களா? அது ரெஜிஸ்டர்ட் கம்பெனி தானே? அந்த விவரம் தேடி பாருங்க,” அவி தன் பங்குக்கு கேள்விக் கணைகளை தொடுக்க, சிவாவுக்கு போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.
நல்ல வேலையாக அவி சொன்ன எல்லா மார்க்கங்களையும் ஏற்கனவே புரட்டி போட்டிருந்தனர் அவர்களின் ஆடிட் டீம். தக்க பதிலைக் கொடுத்த பின், “அப்படி ஒரு கம்பெனி பெயரே பதிவாகலை சார்.” சிவா முடிக்கவும்,
ஆகாயத்துக்கும், பூமிக்கும் குதித்தான் அவ்யுக்த். ‘அவனுக்கு இருபத்தைந்து லட்சம் பெரிய தொகை அல்ல தான். ஆனால், இது ஃபோர்ஜரி என்னும் பட்சத்தில், அதுவும் அந்த நபர் இங்கே இன்னும் வேலை செய்து கொண்டும் இருக்கலாம். மீண்டும் இப்படி நிகழாது என்று என்ன நிச்சயம்? வெளிப்படையாக ஊழியர்களிடம் விசாரிக்கவும் முடியாது. குற்றவாளி உஷாராகி விடக் கூடும். ஃபோர்ஜரி செய்ய துணிந்தவர்கள், ஏன் செக்கை வங்கியில் டெபாசிட் செய்யவில்லை என்று புரியலையே! பேசாமல் பேங்க்கில் சொல்லி செக்கை கான்சல் செய்வோம்’ என்று முடிவு செய்தவன்… அப்படி செய்ய, “ஸ்டாப் பேமென்ட்” கடிதம் கொடுக்க சொல்லி சிவாவை பணித்த கையோடு,
“சிவா, இந்த விஷயம் இப்போதைக்கு மத்த ஸ்டாஃப் காதுக்கு போக வேணாம். நாம கொஞ்சம் அசட்டையா இருக்க மாதிரி காமிங்க. முக்கியமா விட்டல் அங்கிளோட நெருங்கின வட்டத்துல இருந்த எல்லா ஸ்டாஃப் டீட்டெயில்ஸ் கேதர் பண்ணுங்க. அங்க தான் அந்த கருப்பு ஆடு இருக்கணும்… இல்லைன்னா செக் புக் எல்லாம் அத்தனை சுலபத்துல தொட முடியாதே. லெட்ஸ் நாப்(nab) தட் பர்சன்.”
முதலாளியின் குரலில் தெறித்த கோபம், சிவாவின் முதுகு தண்டுவடத்தை சில்லிட செய்தது. அவ்யுக்தின் சினத்தின் அளவுக்கும், துரோகிகளை அவன் எப்படி சின்னாபின்னமாக்குவான் என்பதற்கு ஹரிஷ்ஷின் முகம் சாட்சியாக மனதில் வலம் வர, “சிக்கினா… செத்தாண்டா சேகர்” அந்த முகமறியா ஆளை நினைத்து கொண்டான்.
“அப்புறம் இந்த டேக்கோவர் கணக்கு வழக்கெல்லாம் சரியா டேலி ஆகிடுச்சுன்னா, அந்த பேங்க் அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்ய எல்லா நடவடிக்கையையும் எடு சிவா. இன்னும் ஒரு வாரத்துல எல்லாம் ஸ்வர்ணகீர்த்தியின் முழு அதிகாரத்துக்கு வந்திருக்கணும். ஓகே!” என்றிட…
“நிச்சயம் ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சுடும் சார். ஜஸ்ட் க்ராஸ் செக்கிங் பண்ணிட்டு இருக்கோம். ஃபைனல் ஃபினிஷிங் இனிஷியேட் செஞ்சுட்டேன்.”
“குட்… யூ கேரி ஆன்!” அவி, அனுமதி அளிக்க…
“ஓகே சார்” என்று அந்த விசுவாச ஊழியன் வெளியேறினான்.
மேலும் அந்த வாரம் ஒரு முன்னேற்றமும் இன்றி அவிக்கு செல்ல, அஞ்சுவோ பார்லர் வேலை, மற்றும் தன் எதிர்காலம் குறித்த தீவிர யோசனையில் அவ்வப்போது தன்னை மறந்து ஆழ துவங்கி இருந்தாள்.
“உன் ஃபிரெண்ட் ஷக்தியோட அண்ணா, போன வருஷம் தானே அமெரிக்கா போனார்? அவர்கிட்ட GMAT புக்ஸ் இருந்தா எனக்கு வாங்கி கொடேன் சந்து.”
சந்தரப்ரகாஷுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றுவது போல் இருந்தது. தான் கேட்டதை நம்ப முடியாமல், தோழியை ஆச்சரிய பார்வை பார்த்தான்.
“ஷாக்கை குறைடா குரங்கு, பெரிய நடிகர் திலகம்னு நினைப்பு!”
“ஏன் நக்கல் செய்ய மாட்ட நீ! ஸ்கூல் நாள்ல இருந்து, எப்போடா படிக்கறதுல இருந்து பிச்சிக்கலாம்னு பார்க்கற ஆளு, திடீர்னு இப்படி பெரிய படிப்பு பத்தி எல்லாம் பேசினா, நான் வேற எப்படி ரியாக்ட் பண்றதாம். இனி இப்படி ஏதாவது அதிர்ச்சி கொடுக்கறதுக்கு முன்ன, ஒரு சோடா குடு கொரங்கே.”
சந்துவின் பதிலில் காண்டானவள், “எரும… பொறுப்பில்லாம இருக்கேன்னு சும்மா சும்மா நீயும் தானே என்னை திட்டுற. சரின்னு, உருப்படறதுக்கு ஒரு வழி பார்த்தா... இப்போ நக்கலாடா பண்ற? உன்னை...” அருகில் இருந்த டெட்டியை அவன் மீது வீசினாள்.
“ஸ்டாப் பஞ்சு மிட்டாய். நம்ம அபி அண்ணாவும், அக்ஷு அக்காவும், ஏன் முகுந்த் அண்ணாவும், அமெரிக்கா போனப்ப, ‘ஐ அம் ப்ரவுட் டு பீ இந்தியன். ஏன்டா இப்படி எல்லாரும் வெளிநாட்டுக்கு போக அலையறாங்க? அங்க போய் நம்ம புத்திசாலித்தனத்தை இப்படி அடுத்தவனுக்கு உபயோகப்படுத்துறதுக்கு, சொந்த நாட்டுல அதே உழைப்பை கொடுக்கலாமே’ன்னு பாரத் மாதா கீ ஜேன்னு கோஷம் போடாத குறையா ஒரு லோட்டா ஆரஞ் ஜூஸை ஒரே மடக்குல உள்ள முழுங்கினவ, இப்போ இப்படி பேசுனா திக்குங்குதுல்ல?”
“பச்ச்…” சலித்தவள் பதில் தராமல் மொபைலை பார்க்க, அவளையே பார்த்திருந்தவனுக்கு ‘என்ன தான் இவ பிரச்சனை? வரவர இவ என்னோட பெஸ்ட் ஃபிரெண்டான்னு தோணுது!’ மனதில் நினைத்துக் கொண்டிருந்தவனின் மீது, இன்னொரு பெரிய டெட்டி வந்து விழ, சுயநினைவுக்கு வந்தவனிடம்,
“என்ன, ட்ரீம் லேண்ட்ல யார் கூட டூயட்? ரித்திகாவா இல்ல ரக்ஷனாவா?” என்று கிளுக்கி சிரித்தவள், பேச்சை திசை திருப்புகிறாள் என்று அவனுக்கு புரியாமல் இல்லையே. இன்று எப்படியும் பேசியே ஆக வேண்டும் என மீண்டும் கேள்வி எழுப்பினான் சந்திரபிரகாஷ்.
“அப்போ அந்த இவன்ட் மானேஜ்மென்ட் கம்பெனி ஐடியா என்ன ஆச்சு அஞ்சு? நீ இப்போ பண்ணிட்டு இருக்க சாதாரண பார்ட்டி பிளானர் லெவலில் இருந்து, கல்யாணங்களை கோஆர்டினேட் செஞ்சு நடத்திக் கொடுக்க முயற்சி பண்ணனும்னு தானே உன்னோட ரொம்ப நாள் ஆசை, கனவு எல்லாம்? அப்படியிருக்க, அமெரிக்கா போய் என்ன பண்ண போற?”
மொபைலில் எதையோ டைப் செய்துக் கொண்டிருந்தவளின் விரல்கள் தன் வேலையை ஒரு நொடி நிறுத்தின. நண்பனை ஏறிட்டு பார்க்காமல், உள்ளத்தில் பொங்கிய வலியை மறைக்க சிரமப்பட்டவள், மீண்டும் டைப் செய்ய ஆரம்பித்தாள்.
பதில் வரவில்லை என்றவுடன், ஏற்கனவே சில மாதங்களாக தோன்றிக் கொண்டு இருந்த ‘எதுவோ சரியில்லை’ என்ற எண்ணம் சந்துவுக்கு மீண்டும் வலுக்க, “அஞ்சுமா… வாட் இஸ் ஈட்டிங் யூ? நீ என்கிட்ட எதையோ மறைக்கற! இத்தனை க்ரியேடிவ் டேலன்ட் இருக்க நீ, ஏற்கனவே ஒரு பிசினெஸ் அது சின்ன அளவில் இருந்தாலும், காலேஜ் நாளில் இருந்து தனியா வெற்றிகரமா நடத்திட்டு வர்றவ, இதையெல்லாம் அம்போன்னு விட்டுட்டு இப்போ அமெரிக்கா போக வேண்டிய அவசியம் தான் என்ன? சொல்லு…”
கேட்டு விட்டான்… எந்த கேள்வியை இவனோ, கலையோ கேட்கக் கூடாது என்று அஞ்சனா பயந்திருந்தாளோ, அதை உற்ற நண்பன் இன்று வெளிப்படையாக கேட்டு விட்டான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், இருக்கும் வித்தியாசம் க்ஷண நொடியில் அவளுக்கு புரிந்தது.
ஆம்… கூட்டுக் குடும்பமும், அதில் இருக்கும் பொறுப்புகள், குழந்தை வளர்ப்பு என்று பாதை மாறி விட்ட கலைவாணி, மிகவும் அன்பான, உற்ற உயிர் தோழி தான்! சிறு வயது முதல் அஞ்சுவை நன்கறிந்தவள், இருந்தும் அவளிடம் ‘அமெரிக்கா போகிறேன்’ என்ற போது, அதை பற்றி வேறு விதத்தில் கலை பெரிதாக ஆழ்ந்து யோசிக்கவில்லை.
ஆனால், இவன்? மிக சரியாக யூகித்து கேட்கிறான். சொல்லக் கூடிய விஷயமா? இது நாள் வரை பெற்றவர்களிடம் இருந்தும் மறைத்த ஒன்றை, எப்படி நண்பனிடம் கூறுவாள்? உயிர் நண்பனிடம் கூட பகிர முடியாத, தன் மனதை அழுத்தும் விஷயத்தை, தோல் சாய்ந்து ஆறுதல் தேட முடியாத தன் நிலையை வெறுத்து கலங்கியவள், ஆப்த நண்பனின் சந்தேகம் மேலும் வலுக்காத வண்ணம், அவன் நம்பும் படியான பொய் காரணத்தை, இப்படி ஒரு நிலை வந்தால் சமாளிக்க ஏற்கனவே யோசித்து வைத்திருந்ததை இன்று திடமாக சரளமாக அவிழ்த்து விட்டாள்.
“எனக்கே அபத்தமா தான் இருக்கு ஜண்டு. ஆனா, அப்பாவும், அம்மாவும் அமெரிக்கா தான் சொர்க்கம் என்றது போல ஒரு அபிப்ராயம் வெச்சுட்டு, என்னை திட்டிட்டே இருக்காங்க.”
கேசவன், சுலோ பற்றி நன்கு அறிந்தவனுக்கு, இது தெரிந்த விஷயம் தான். இருந்தாலும், ‘பல விஷயங்களில் தனக்கு பிடித்ததை பெற்றோர் பேச்சை மீறி செய்யும் தோழி, இப்போது ஏன் இப்படி யோசிக்கிறாள்’ அவளின் திடீர் மாற்றத்துக்கான சரியான காரணம் புரியாமல் குழம்பியவனாக, அவளை கூர் பார்வையால் அளவிடும் விதம் பார்த்தான்.
அந்த பார்வை, பெண்ணவளை துளைக்க… “மத்த விஷயம் போல, இந்த முறை அவங்களை எதிர்க்க முடியலை ஜண்டு. ஒண்ணு நானா ஒரு நல்ல வேலையில் சேரணும்… இல்லை அமெரிக்காவில் ஏதாவது வரன்…” என்றவளால் அதற்கு மேல் பேச்சளவில் கூட அவ்விஷயத்தை தொடர முடியாமல், சந்துவை சோர்வாக பார்த்தாள்.
“சொல்லுடா” தொடர ஊக்கியவனிடம், மனதை கல்லாக்கி மேலும் பொய்யுரைக்கலானாள்.
“அப்படி ஒருத்தருக்கு மனைவியா அமெரிக்காவுக்கு போனேன் என்பதை விட, என் சொந்த முயற்சியில், என் படிப்புக்காக, வேலைக்காக போனேன் என்பது தானே எனக்கு பெருமை ஜந்து? அக்காவும், அண்ணாவும் படிக்க போனாலும், அங்க ஒருத்தர் கூட பழகறதுக்கு முன்ன, அவங்களோட கரியரில் ஒரு நல்ல நிலையை சுயமா அடைந்து, சொந்தக் காலில் நின்னுட்டாங்க. நானும்…” அவள் முடிக்காமல் நிறுத்த,
“ஹப்பா…” மூச்சை இழுத்து விட்ட சந்து, “ஹே பஞ்சுமிட்டாய், இதை கேட்கவே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? என்ன தான் சின்னப் பிள்ளையில இருந்து நாம கூட்டு களவாணிகளா இருந்தாலும், நீ இஞ்ஜினியருக்கு படிக்க முடியாம போன சந்தர்ப்ப சூழ்நிலையை நினைக்கும் போதெல்லாம் என் மனசுல ஒரு சின்ன உறுத்தல் அழுத்தும். அதுவும், நடுவுல... கொஞ்சம் பிசினெசை கூட சரியா கவனிக்காம, ஏதோ ஒரு வெறுப்பு… இல்ல விட்டேத்தி மனப்பான்மையில நீ திரிஞ்சதை பார்த்தப்ப, எனக்கு ரொம்பவே கில்டியா இருந்துச்சு தெரியுமா? திடீர்னு நீ MBA சேர்ந்தப்புறம் தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு.”
“இப்போவும், நீ மேல படிக்க போறேன்னு சொல்றதை என்னால நம்ப முடியலை அஞ்சு. இருந்தாலும், வெறும் டிகிரியோட நிக்காம, இத்தனை தூரம் நீ படிக்கறதே எனக்கு சந்தோஷமா இருக்குடா. என்கிட்ட சொல்லிட்ட இல்ல, ஷக்தி அண்ணாவோட புக்ஸ், நோட்ஸ், எல்லாம் உனக்கு வாங்கி கொடுக்கறேன்.” ஆத்மார்த்த மகிழ்ச்சியோடு அந்த உற்ற நண்பன் ஆர்ப்பரிக்க,
“ஷ்… ஷப்பா… முடியல சாமி, இப்படி செண்டி சீன் போட்டு என்னைக் கொல்றானே இந்த தடியன்!”
தோழியின் மீது இருந்த அன்பிலும், அக்கறையிலும், சீரியசாக, உணர்ந்து பேசிக் கொண்டிருந்தவன், அவள் கிண்டலான பேச்சில் கடுப்பாகி, “போடி எரும…” அவள் தலையில் ஒரு குட்டை வைத்து விட்டு, வாசலை நோக்கி ஓடினான்.
“குரங்கே நீயும், என் அம்மாவும் குட்டி குட்டியே நான் குள்ளமாகிட்டு வரேன்,” கத்தி கொண்டே அவனை துரத்திக் கொண்டு வந்த அஞ்சு, வெளி கிரில் கேட்டுக்கு அருகே, மைதிலி மாமியிடம் பேச ஆரம்பித்திருந்தவன் முன் மூச்சு வாங்க போய் நின்றாள்.
‘ஆஹா… இப்போ இந்த ஜந்து மேல கை வைக்க முடியாது, மாமிக்கு பிடிக்காது.’ மேல் ஃப்ளோரில் இருக்கும் அவர்கள் வீடு நோக்கி சந்து படி ஏறி இருந்தால் கூட துரத்திக் கொண்டு போய், வெளுத்து இருப்பாள். அது தெரிந்ததால் தானே, அஞ்சுவின் அடியில் இருந்து தப்புவதற்காகவே, மாமியிடம் பேசும் சாக்கில் அங்கேயே நின்று விட்டான் சந்து.
‘இப்போ என்ன பண்ணுவே?’ என்பதாக சந்து சிரித்து வைக்க, அந்த கேலி சிரிப்பை அஞ்சுவும் புரிந்துக் கொண்டு, ‘உன்னை விட மாட்டேன்’ என்று சைகை செய்தவள், மாமியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
சில நிமிடங்களில் பின்னோடு உள்ளே வந்த மாமி “அஞ்சு, இப்படி வீட்டை திறந்து போட்டுட்டு வருவியா? போ… போய்… கதவை சாத்து…”
“அந்த தடியன் அங்க க்ரில்லுக்கிட்ட தானே நிக்கறான்!”
“சந்துவுக்கு ஏதோ முக்கிய வேலையாம், கிளம்பிட்டான். நீ கதவை சரியா சாத்தலைன்னு அவன் தான் கவனிச்சு சொன்னான். நம்ம சந்துவுக்கு இருக்க பொறுப்பு மாதிரி வேற யாருகிட்டயும் நான் பார்த்ததில்லை. அந்த தைரியத்துல தான் கௌரி ஹைதராபாத்ல நிம்மதியா பேரனோட பொழுதை கழிக்கறா!”
சிலாகித்த மைதிலி மாமியின் பாராட்டு பேச்சில், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்த நிலைக்கு போன அஞ்சு, ‘என்னை கொட்டினதும் இல்லாம, மாமிகிட்ட என்னை போட்டு கொடுக்கறியா? இருக்குடா ஜண்டு…’ கருவியவள், தங்கள் வீட்டு கதவை சார்த்தி விட்டு வந்து, பேச ஆரம்பித்தாள்.
********************************
மறுநாள் மாலை,
வேலையில் இருந்து நேரே அஞ்சுவை பார்க்க வந்த சந்து, “ஷக்திகிட்ட பேசிட்டேன் பஞ்சு மிட்டாய்… அவங்க அண்ணாவோட ஃபிரெண்ட்கிட்ட இப்போ அந்த புக்ஸ் இருக்காம். இன்னும் ரெண்டு நாளுல வாங்கிட்டு வந்து தரேன்னு சொல்லியிருக்கா.”
“தேங்க்ஸ் குரங்கு, இந்த நல்ல காரியம் பண்ண உனக்கு இன்னைக்கு என் கையால தான் டின்னர்” அஞ்சு சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“ஆத்தா, உன் அளப்பரிய பாசத்தை மெச்சினோம். அதை பாயாசத்துல காமிக்க பார்க்காதே… என்னை விட்டுடு” அவன் தப்பிக்க பார்க்க,...
“எரும, என் கையால பரிமாறுறேன்னு சொல்றதுக்குள்ள, நான் சமைச்சு, அதுவும் பாயசத்தோட விருந்து போடப் போறதா தப்பு தப்பா பேசுவ…” அவனிடம் வீண் சண்டைக்கு நின்றாள்.
“ஓ… பரிமாற போறியா? நான் கூட ஒரு வேளை அமெரிக்காவுல நீயே சமைக்கணுமே, அதுக்கு இப்போவே என் மேல எக்ஸ்பரிமென்ட் ஆரம்பிச்சுட்டியோன்னு பயந்தே போயிட்டேன்,” வடிவேல் பாணியில் குரலில் ஏற்ற இறக்கத்தோடு சந்து சொல்லவும்,
“லூசு ஜந்து, அதையெல்லாம் சொல்லிட்டா செய்வாங்க? சத்தமில்லாம பாய்சனை கலந்துட ஐ மீன் பாயசத்தை காய்ச்சுடா மாட்டேன்!” என்றவள் இன்னும் சந்துவுக்கு பீதியை கூட்டினாள்.
“எப்படியோ… நீ பேரு வாங்க என்னை பலியாக்க முடிவு பண்ணிட்ட!” என்றவனுக்கு அப்போது நினைவு வரவும், “ஏன் அஞ்சு, அந்த செக்கை என்ன பண்ண?” மீண்டும் ஆரம்பித்தான்.
“அதான் அன்னைக்கே சொன்னேன்லடா, எப்படியும் அதை பேங்க்ல டெபொசிட் பண்ண முடியாது நான். இல்லாத கம்பெனி பேர்ல ஒரு செக்… அது காலாவதி ஆகுதோ இல்லையோ அதுக்கு வேல்யூவே இல்லை. சும்மா அதை பத்தி பேசாதே!”
“ஏன் சொல்ல மாட்ட? உன் அப்பா, இல்ல அம்மாகிட்ட விஷயத்தை சொன்னா…”
“ஒழுங்கா ஒரு செக்குக்கு உன் விவரத்தை சரியா சொல்ல கூட உனக்கு மூளை இல்லைன்னு அதுக்கும் அர்ச்சனை வாங்குவேன்!”
“அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா திட்டுவாங்க அஞ்சு. பெரிய அமவுண்ட் குரங்கே! இப்படி கைக்கு கிடைச்சது எதுக்கும் உபயோகம் இல்லாம வீணா போச்சுன்னு தெரிஞ்சா… பிரளயமே வெடிக்கும்.” பணத்தின் மீது கேசவன் தம்பதிக்கு இருக்கும் பற்றை நினைத்து, சந்து யோசனையோடு சொல்ல,...
தோளைக் குலுக்கிய அஞ்சு, “பாரு சந்து, நியாயமா அந்த விட்டல் சார் எனக்கு செக் எல்லாம் கொடுத்தே இருக்க கூடாது. ஏதோ கடவுள் செயல், நைட் டைம் கையில, மொபைல் கூட இல்லாம வாக்கிங் போயிட்டு இருந்தப்போ திடீர்னு அவருக்கு நெஞ்சு வலி வந்த நேரம்… நானும் அதே சந்தில் என் ஸ்கூட்டியில் போயிட்டு இருந்தேன். ஒரு மனிதாபிமான அடிப்படையில், யாரு என்னன்னு விவரம் தெரியலைன்னாலும்… பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். அதுக்கு போய் பணம் கொடுத்துட்டார்.”
“நீ ஒண்ணும் சும்மா சேர்க்கலை. ஒரு நைட் முழுக்க, அங்கேயே தவம் கிடந்த…” சந்து எரிச்சலாக சொல்ல,...
“ஆமாடா… மனுஷன்கிட்ட ஒரு பர்ஸ், மொபைல் எதுவும் இல்ல. எனக்கு தெரிஞ்ச அங்கிள்னு பொய் சொல்லித் தான் ஹாஸ்பிடலில் சேர்த்தேன். அவர் குடும்பத்தை பத்தி அங்க டாக்டர்ஸ் கேட்டப்ப கூட, அவங்க யாரும் ஊர்ல இல்ல, நான் தகவல் சொல்றேன்னு பொய் சொல்லி சமாளிச்சேன். அப்புறம் எப்படி அம்போன்னு விட்டுட்டு வர முடியும், சொல்லு?”
“யாருன்னு தெரியாதவருக்காக நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுத்தன்னு தான் நானும் அன்னையில இருந்து கேட்கறேன்?”
“உயிருக்கு போராடினவரை அப்படியே விட்டிருக்க சொல்றியா?”
“ஆனாலும் உனக்கு தைரியம் தான் அஞ்சு. இருட்டுல ரோட்ல வேற யாரும் இல்ல, எந்த தைரியத்துல அவர் பக்கத்துல போன நீ? அப்புறம், அவருக்கு எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகியிருந்தா, நீ எப்படி சமாளிப்பேன்னு கூட யோசிக்காம உதவறேன்னு டக்குன்னு இறங்கிட்ட. நானும் அப்போ ஹைதராபாத்ல இருக்கேன். அங்கிள், ஆன்ட்டியும் இங்க ஊருல இல்ல.”
“மைதி மாமிக்கிட்டயும், நைட் கலை வீட்ல தங்க போறேன்னு பொய் சொல்லிட்டு, தனியா ஹாஸ்பிடல்ல தவம் கிடந்து உதவி செஞ்சுருக்க! ஏதோ உசுர காப்பாத்த சேர்த்தோமா, இனி டாக்டர்ஸ் பார்த்துக்குவாங்கன்னு சத்தமில்லாம அங்கேர்ந்து எஸ் ஆகாம, உனக்கென்ன அவர் மேல அத்தனை அக்கறை? அத்தோட விட்டியா? அதுவும் இல்ல... அப்புறமும் போய், பார்த்து, விசாரிக்க வேற செஞ்ச!”
“ஏண்டா இப்படி பேசற? அவர் கண் முழிச்ச பின்ன தான், எனக்கும் உசுரே வந்துச்சு. வயசான மனுஷன்… பாவம், அவர் விடோயர் தெரியுமா? பிள்ளைங்க கூட, துணைக்கு பக்கத்துல இல்லையாம். இவர் வீட்டுக்கு வராததே, அடுத்த நாள் அவரா கண் முழிச்சு, தான் இன்னார்னு என்கிட்டே சொல்லி, அவர் டிரைவருக்கு நான் போன்ல விஷயம் சொல்ற வரை, அவரை சேர்ந்த யாருக்கும் அவர் காணோம்னு கூட தெரியலை.”
“அது மட்டுமா? கூட இருந்த சமயம் நான் பார்த்த வரை, அந்த ரெண்டு நாளும்… அவர்கிட்ட வேலை செய்த அந்த டிரைவர் சாமிகண்ணு தாத்தா தவிர வேற யாரும் வரலை. உடம்பு சொகமில்லாதப்ப ஒரு உறவு கூட பக்கத்துல இல்லாத பணக்கார அனாதை. ‘ஏன் சார்?’னு கேட்டதுக்கு, வெறுமே சிரிச்சு மழுப்பிட்டார்.”
“போற போக்குல மேலோட்டமா ‘சின்ன மகனால ஏதோ ப்ராப்ளம்’னு சொல்ல ஆரம்பிச்சு, அப்புறம் நான் யாரோ, எவரோ என்கிட்டே புள்ளையை பத்தி புலம்பிட்டோமேன்னு அதுக்கும் வருத்தப்பட்டு, அமைதியாகிட்டாரு. உண்மையாவே பணக்கார ஏழை என்கிற முரணுக்கு அவர் நல்ல உதாரணம். ஹும்… என்ன பணம், காசு இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு? அந்த பணத்தால தான் சில பேருக்கு பிரச்சனையே!”
உளமார ஆதங்கப்பட்ட அஞ்சுவிடம், “ஆமா… சமீபத்துல அவரை போய் பார்த்தியா நீ?”
சந்துவின் கேள்விக்கு, “இல்லடா, எங்க… எனக்கு எக்ஸாம் டென்ஷன். அவர் மொபைலுக்கு ரெண்டு வாட்டி ட்ரை பண்ணேன், எடுக்கலை. அந்த சாமி தாத்தா நம்பர் இப்போ வேற யாரோ வெச்சிருக்காங்க. பேசாம, நாளைக்கு அவரோட ஹோட்டலுக்கு நேரே போய் பார்க்கறேன்.”
“பார்த்து? என்ன சொல்லப் போற?”
“அந்த உப்புக்கு பெறாத செக்கை திரும்ப கொடுத்துடப் போறேன் சந்து.”
“டீ… பஞ்சு… வேணாம், தப்பா எடுத்துக்க போறார் உன்னை.”
“அதெல்லாம் நான் நல்லவிதமான சொல்லி, சாருக்கு புரிய வைக்கறேன். உடல் அளவில் பலகீனமா இருந்த விட்டல் சார், அந்த சமயத்துல மனரீதியா ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருந்தார். என்னை பத்தி அவர் கேள்வி கேட்கவும், சும்மா அவருக்கும் பொழுது போகட்டுமேன்னு நானும் கொஞ்சம் நம்ம திறமையை மானே தேனேன்னு மசாலா போட்டு பில்டப் கொடுத்து, என் எதிர்கால கனவை பத்தி சொல்லி, ‘வானவில்’னு என் கம்பெனிக்கு நான் ஏற்கனவே யோசிச்சு வெச்ச பேரை அவர்ட்ட உளறி கொட்டினேன்.”
“அந்த மனுஷன் என்னடான்னா யோசிக்காம, ட்ரைவர்ட்ட செக் புக்கை எடுத்து குடுக்க சொல்லி, இருபத்தி அஞ்சு லட்சம் செக் எழுதி கையில திணிச்சுட்டார். நான் எவ்வளவோ மறுத்தும் கேக்காம, ‘உன் கனவை நிஜமாக்க, பணம் தடையா இருக்கு தானே? இந்த பணத்தை வெச்சு இவென்ட் மேனேஜ்மென்ட் செய்ய துவங்கு’ன்னு வற்புறுத்தினார். போதாதுக்கு, உனக்கு முதல் வாய்ப்பு நான் கொடுத்ததா இருக்கட்டும்னு, அவங்க ஹோட்டலோட ஒரு காண்ட்ராக்ட் வேற போட வெச்சுட்டார்.”
“அப்போ இருந்த விட்டல் சாரோட உடல்நிலையை மனசுல வெச்சு, அவரை வருத்த படக் கூடாதுன்னு நானும் ஒரு கட்டத்துல ‘வானவில்’னு இன்னமும் உருவாகாத என் கம்பெனி பேரை போட்டு அவர் எழுதின அந்த செக்கை சரி கொடுங்கன்னு, வாங்கிட்டேன். அவர் இருந்த பலகீன நிலைமையில, இன்னும் ஆரம்பிக்காத கம்பெனி, அதுக்கு அக்கவுண்ட் கூட இல்லைன்னு எல்லாம் அந்த பெரியவருக்கு தோணலை. எமோஷனலா, மனசுக்கு பட்டதை ஒரு வேகத்துல செஞ்சார். சரி… அவருக்கு ஒரு ஆறுதல் கொடுக்கட்டுமேன்னு நானும் எதுக்கும் உபயோகப்படாத செக்கை அமைதியா வாங்கி ஹேண்ட்பேக்கில் போட்டுட்டேன்.”
“எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காம தான், அவருக்கு உதவினேன். பணக்காரர் இல்லையா… அவர் உயிருக்கு கூட ஒரு விலையை பேசிட்டார். எனக்கு அது ரொம்ப வருத்தம் தான் சந்து.”
மிகவும் வருந்திய தோழியிடம், “விடு பஞ்சு மிட்டாய், இதுக்கு போய் ஃபீல் பண்ணிட்டு. செக் தான் ப்ரயோஜனப்படாது, ஆனா அந்த காண்ட்ராக்ட் போட்டது தானே? அதை என்ன பண்ணப் போற?”
“ஹ… அதெல்லாம் சரி வராதுன்னு நான் தான் ஏற்கனவே சொன்னேன் தானே? அமெரிக்கா போற என் முடிவுல மாற்றம் இல்ல ஜந்து.”
“ஒரு காலத்தில் திருமணங்களை நடத்தி தரும் வெட்டிங் ப்ளானராக எத்தனை ஆசைப்பட்ட? இப்போ அந்த விட்டல் சார் போட்ட காண்ட்ராக்ட் அந்த வாய்ப்பை உன் கைல கொடுத்து இருக்கு. தானா வர்ற வாய்ப்பை தட்டி கழிக்கறவ நீ இல்ல… ‘ஒரு முயற்சி செய்யறேனே ஜந்து’ன்னு தான் இறங்குவ. அப்படிப்பட்ட என் அஞ்சு, இப்போ இந்த அமெரிக்கா, சொரக்கான்னு பிடிவாதம் பிடிக்கறது ஏன்?”
ஏனோ இந்தியாவை விட்டு சென்று விட அவள் துடிக்கிறாளோ என சிறு சந்தேக பொறி அவனுக்கு தோன்றி உறுத்த தொடங்கிய நாளாக கேட்க நினைத்து, தவிர்த்து வந்த கேள்வியை இன்று கேட்டு விட்டான் சந்திரபிரகாஷ்.
“என்ன ஆச்சு அஞ்சு? அன்னைக்கும் அப்படி தான் அந்த காண்ட்ராக்ட் பார்த்து நான் தான் தலை கால் புரியாம எக்ஸைட் ஆகி சந்தோஷத்துல குதிச்சேன். நம்ம சென்னையில இருக்க ஒரு பழம் பெருமை வாய்ந்த ஹோட்டல் ஓனர், அவராவே உனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் தந்தப்ப, இனி உன் கனவு கை கூடுற நாள் தொலைவில் இல்லன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.”
“நீ என்னடான்னா, இந்த இருபத்தியஞ்சு லட்சம், இந்த காண்ட்ராக்ட் எதுவும் வேணாம்னு சொன்னே. சரி, எக்ஸாம் முடிஞ்சு நீயா எதாவது என்ட்ட கலந்து பேசி நல்ல முடிவா எடுப்பேன்னு காத்துட்டு இருந்தேன். கடைசில உன் முடிவுல மாற்றம் இல்லாம இருக்கு. எனக்கு நிஜமாவே என்ன சொல்லன்னு தெரியலை அஞ்சு!”
அமைதியாக எழுந்து சென்றவள், கையில் ஒரு கோக் டின்னோடு திரும்பி வந்து, “இந்தா ஜந்து… தொண்டை வரள ரொம்ப பேசிட்டே. முதல்ல இதைக் குடி.”
இந்த பேச்சில் வெகுண்டவன், “நான் இப்போவே அங்கிளுக்கு போனை போட்டு செக் விஷயம் போட்டு கொடுக்கறேன்.”
“சந்து… ப்ளீஸ்… இன்னும் எத்தனை நாளைக்கு உருப்படாதவ, உதவாக்கரைன்னு பேச்சு வாங்க சொல்ற என்னை? ப்ச்… எந்த பின்புலமும் இல்லாம இவன்ட் பிளானிங்ல இறங்கி, வெற்றி பெற ஒரு அஞ்சாறு வருஷமாவது ஆகும். அது வரை அம்மாப்பா சும்மா இருப்பாங்களா?”
இல்லை என சந்துவின் தலை தன்னால் ஆட… “அமெரிக்காவுல, கார்பரேட்ல டாப் பொசிஷன்ல இருக்க, டாலர்ல புரளுற எவனுக்காவது கட்டி வெக்க நிச்சயம் ட்ரை பண்ணுவாங்க. ஓரளவுக்கு மேல தடுக்க முடியாம போகும். இதுக்கு மேல இந்த வயசான காலத்துல அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் தர நான் விரும்பலை. உருப்படியான கரியர் ஒண்ணுல செட்டில் ஆகலாம்னு நினைக்கற எனக்கு அதுக்கு சப்போர்ட் பண்ண மாட்டியா நீ?”
“ஹே அஞ்சுமா… என்ன நீ இப்படி கேட்டுட்ட? ஐ வில் பீ தேர் டா… ஆல்வேஸ் ஐ வில் சப்போர்ட் யூ டா. உன்னோட ட்ரீம்ஸ் பத்தி நல்லா புரிஞ்சவனா, அதை கை விடறேன்னு நீ சொல்லறது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு.”
இருவரும் சில நொடிகள் அமைதியாகி விட, “ஓகே அஞ்சு, நாளைக்கு மறக்காம சாரை பார்த்து முதல்ல பேசு.”
“டேய்… என் போன் காலையே அவர் எடுக்கலைங்கறப்ப, நேர்ல போய் நின்னா அது சரி வரும்னு எனக்கு தோணலை.”
அஞ்சுவின் கூற்றும் சரி… அவசரத்துக்கு உதவியவளுக்கு உணர்ச்சி வேகத்தில் பெரியவர் ஏதோ பிரதியுபகாரம் செய்ய விழைந்து செய்து விட்டார். இப்போது போய் நின்றால், எப்படி ரியாக்ட் செய்யவாரோ… இருவருமே இந்த ரீதியில் யோசித்தனர்.
“இப்படி பண்ணு அஞ்சு. செக்கை திரும்ப கொடுத்துடற சாக்குல போ. அவர் ரொம்ப நல்ல டைப்பா தெரியறார்! எனக்கென்ன தோணுதுன்னா, கண்டிப்பா நீ பண்ண உதவிக்கு பதில் மரியாதை செய்யாம விட மாட்டார்னு மனசுல ஒரு பட்சி சொல்லுது.”
“ப்ச்… இன்னொரு செக்கை நீட்டினா என்ன செய்ய? எனக்கு பணம் எல்லாம் வேணாம்!”
“இப்போ உடம்பு தேறி இருப்பார். அதையும் சொல்லி, அவரோட நலனை விசாரிக்க வந்ததா புரிய வை… உன் வருகைக்கு எந்த உள்குத்தும் இல்லைன்னு மனசு வருத்தப்படாத விதமா சொல்லிடு.”
இதை செய்ய என்ன தேவை என தான் அப்போதும் அஞ்சுவுக்கு தோன்றிய உணர்வு. போக வேண்டாம் என மேலும் மறுத்தால் சந்து விடாமல் வழக்காடுவான் என்பதால், சரி வருவது வரட்டும், அதை தைரியமாக எதிர்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்த அஞ்சனா “ஓகே டா…” என அந்த பேச்சை முடிவுக்கு கொண்டு வந்தாள்.
நம் நாயகிக்கு நல்ல நாளிலேயே நியூஸ் பேப்பர் படிக்கும் கெட்ட வழக்கம் சுத்தமாக இல்லை. கூடவே அவள் வழக்கம் போல. இறுதி பரீட்சைக்கு கடைசி நிமிட கடின படிப்பும் சேர, செய்திகளில் வந்த திரு. விட்டல் தாசின் மரணத்தை பற்றிய எந்த விஷயமும் அவளுக்கு தெரியவே இல்லை. ஹைதராபாத் ஆஃபீசில் மூன்று வாரங்கள் புது ப்ராஜெக்டில் பிசியாக இருந்த சந்துவும், அவர் மரணம் குறித்து அறியாது போனான். இரு அரை வேக்காடுகளும் சேர்ந்து எடுத்த முடிவின் பயன்?
மறுநாள் அபோட் செல்வாளா அஞ்சா செல்வி அஞ்சனா? அங்கே….??
Comments