top of page

இணை கோடுகள் 6.2
இணை கோடுகள்


கோடு -6.2


“லுக் மிஸ். அஞ்சனா, விட்டல் சார் இஸ் நோ மோர்!” ஸ்டீஃபன் விஷயத்தை பொட்டென போட்டுடைத்தார்.


“வாட்? என்ன?” சில நொடிகள் அதிர்ச்சியில் பேச்சற்று சமைந்தவள், “யூ மீன்?” மேலே கேட்க தயங்கி, சூரஜை பார்த்து… “நிஜமாண்ணா, ஐயோ எப்போ? பெருமாளே!” அரற்றியவளின் கண்கள் கலங்கி போனது. 


“சாருக்கு மைல்ட் அட்டாக்னு தானே அந்த டாக்டர் சொன்னாரு? நல்லா தேறிட்டாருன்னு சந்தோஷப்பட்டேனே! ஓ காட்… எத்தனை சாந்தமா, சிரிச்சு கனிவா பேசினார்! இல்ல… நிஜமாவா சொல்றீங்க சூரஜ் அண்ணா?”


ஆம் என்பதாக அவன் வெறுமே தலையசைக்கவும், “எப்போ தவறினார் சார்? நான் கடைசியா பார்த்தப்ப, ‘ஒரு மாசம் கழிச்சு நாம அவசியம் மீட் பண்ணலாம் அஞ்சுமா’ன்னாரே!” தன் போக்கில் அஞ்சு புலம்பியதை எல்லாம் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் அவ்யுக்த். 


“என் எக்ஸாம் முடிஞ்சவுடனேயே இந்த ஜண்டு தடியன், ‘ஒரு வாட்டி, போய் பாரு’ன்னான்! என்னைக்கு அவன் பேச்சை மதிச்சேன்! அதான், என் காலை யாரும் அட்டென்ட் பண்ணலையா? ச்சே… உங்களை தப்பா நெனைச்சதுக்கு, இப்போ நேர்ல ஒரு சாரி கூட கேக்க முடியாம போச்சே விட்டல் சார்.  ஜெம் ஆஃப் அ பெர்சனான உங்களுக்கு இப்படி ஆகும்னு நான் கொஞ்சமும் நினைக்கலையே!” அதிர்ச்சியில் புலம்பினாள்.


“இந்த தண்ணியை குடிங்க…” ஸ்டீஃபன் அங்கிருந்த பானையில் இருந்து நீர் கொணர்ந்து தர, அதை மடமடவென விழுங்கியவளுக்கு கண்ணீர் திரையிட்டு பார்வை வட்டத்தை மறைத்தது. 


அவள் அழுவதை ஸ்டீஃபன் மறுபுறம் தெரிவிக்க, அந்தப் பேச்சு காதில் விழவும் சுதாரித்த அஞ்சு, கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். 


இப்போது ஸ்டீஃபன் புறம் அழுத்தமாக பார்வையை பதித்தவள், “போன்ல யாரு? யார்ட்ட சார் இந்த விஷயத்தை சொல்றீங்க?” குரலில் கோபம் மிக இருந்தது.


“அது…” சூரஜ், ஸ்டீஃபன் இருவரும் கொஞ்சம் தடுமாற, “யாரு, விட்டல் சாரோட அந்த யூஸ்லெஸ் பையன்ட்ட தானே? குடுங்க போனை… நல்லா நாக்கு பிடிங்கிக்கற மாதிரி நான் கேக்கணும்.” 


“என்ன மனுஷங்க அவங்க? அப்பா சேர்த்த சொத்து மட்டும் வேணும். ஆனா, பெத்தவரை ஒடம்பு சொகமில்லாதப்ப கூட கவனிக்க முடியாதா? பாவம்… வயசானவர், பெத்த பசங்க இருந்தும், யாருமில்லா அனாதை போல அந்த ஹாஸ்பிடல்ல கிடந்தார். ச்சே… இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம்…” பட்டாசாக பொரிந்து தள்ளியவள், மேலே என்னவெல்லாம் சொல்லி திட்டியிருப்பாளோ,


“ப்ளீஸ் அஞ்சு… காம் டவுன். ப்ளீஸ்… ஃப்ர்ஸ்ட் லிசன் டு மீ, உன்ட்ட ஒரு முக்கிய விஷயம் கேட்க தான், இந்நேரத்துக்கு தொந்தரவு செஞ்சோம். ட்ரை டு ஹெல்ப் அஸ்.” சூரஜ் குறுக்கே இடையிட, அங்கே ஆஃபீசில் அவ்யுக்துக்கு ஏகத்துக்கும் கோபம். அஞ்சு மீதும், விட்டல் பெற்ற மக்களின் மீதும். 


ஆம்… என்ன இருந்தாலும் ஹரீஷ், தினேஷ் அவனோடு வளர்ந்த பாசம் துளி மிச்சம் இருக்க, தன் நட்புகளை திட்ட இவள் யார் என்ற எரிச்சல் நிச்சயம் இருந்தது. அதே நேரம், அஞ்சு பேசியதில், விட்டல் அங்கிளுக்கு உடல் நலம் குன்றிய நேரத்தில், உடன் இரு மகன்களும் இல்லை என்ற புது செய்தி தெரியவும், அவர்கள் மீதும் கோபம் கூடியது.


“விட்டல் சார் தான் அந்த செக்கை உங்களுக்கு கொடுத்தாரா மிஸ்?” ஸ்டீஃபனின் கேள்விக்கு பதில் தராமல், ஏதோ யோசனையில் இருந்தவளை பார்த்து,


“ப்ளீஸ் அஞ்சு, சார் கேள்விக்கு சரியா பதில் சொல்லும்மா? தயவு செஞ்சு என் வேலையை காப்பாத்தி கொடு,” சூரஜ்ஜின் கெஞ்சலில் நிமிர்ந்த அஞ்சு, 


ஸ்டீஃபனை முறைத்த படியே, “என்னாச்சு சூரிண்ணா?” என்றவளிடம்,


சுருக்கமாக அன்று காலை அவள் செக்கை திருப்பி தந்ததிலிருந்து நடந்தவற்றில், அவசியமானதை மட்டும் தெரிவிக்க,


“நீங்க எல்லாம் லூசா?” காட்டமாக அஞ்சு ஆரம்பிக்கவும், 


“மிஸ், கொஞ்சம் மரியாதையா பேசுங்க…” பட்டென ஸ்டீஃபன் எச்சரிக்கை விடுத்திட,


“அஞ்சு… ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா பேசேன்,” சூரஜ் இறைஞ்சினான்.


“உங்களுக்காக பார்க்கறேன் சூரிண்ணா” என்றவள், “சாமி தாத்தாட்ட கேட்டுருந்தா, அவரே எல்லா விவரத்தையும் சொல்லியிருப்பாரே?” பதில் கேள்வியை கேட்டவளை பே என பார்த்தனர் இரு ஆண்களும். 


“யாரு? டிரைவர் சாமிக்கண்ணுவை சொல்றியா அஞ்சு?”


“ம்ம்… அவர் தான் செக் புக் கொடுத்ததே ண்ணா.” 


“ஆஸ்க் ஹர் அபவுட் தி எக்சாக்ட் சர்கம்ஸ்டன்சஸ் ஸ்டீஃபன்?” அவ்யுக்த் ஆணையிட, அதை கேள்வியாக முன் வைத்தான் செக்யூரிட்டி ஹெட். 


“விட்டல் சார், விஷயத்துல எங்களுக்கு சில விளக்கம் வேணும் மிஸ். அஞ்சனா. நீங்க எப்படி அவரை சந்திச்சீங்க? இந்த செக்கை அவர் கொடுத்த விவரத்தை கொஞ்சம் பொறுமையா சொன்னா நல்லது.” தன்மையாக கேட்டான் ஸ்டீஃபன். 


பதில் தந்து விடேன் என்பதாக சூரஜ் பாவமாக பார்க்க, “ஏப்ரல் மாசம் ஒரு நாள்,” அஞ்சு துவங்கியடனே “எந்த தேதின்னு சரியா சொல்லுங்க மிஸ்,” ஸ்டீஃபன் குறுக்கிட,


கைபேசியின் காலெண்டரை உபயோகித்து, தேதியை சொன்னவள், “அன்னைக்கு ஸி.ஐ.டி காலனி பக்கம் ஒரு தெரிஞ்ச ஃபேமிலிக்கு பர்த் டே, அப்புறம் பேபி ஷவர் பார்ட்டி ஒத்துட்டு இருந்தேன். ரெண்டு விசேஷம் என்றதால நெனைச்சதை விட பார்ட்டி முடிய நைட் லேட்டாகிருச்சு. என்னோட பார்ட்டி எக்குவிப்மெண்ட்ஸ் எல்லாம் ஒரு ஆட்டோல ஏத்தி, போட்டோ எடுத்து ஹெல்ப் பண்ற ஆகாஷ் பொறுப்புல என்னோட ஃபிரெண்ட் கலையோட கடைக்கு அனுப்பிட்டு, நான் மட்டும் தனியா ஸ்கூட்டியில வீட்டுக்கு திரும்பிட்டு இருந்தேன்.” 


“அந்தப் பக்கம் டிரைனேஜ் வேலை பண்றதால, நான் எப்போவும் போற ரோட்ல திரும்பாம, குறுக்க இருந்த சந்துல நுழைஞ்சப்ப தான் லேசா ஒரு தள்ளாட்டதோட நடந்துட்டிருந்தவரை பார்த்தேன். யாரோ குடிச்சுட்டு நடக்கறாங்கன்னு தான் முதல்ல நினைச்சு, கொஞ்ச வேகமா அவரை கடந்துட்டேன். அப்போ தடால்னு வந்த சத்தத்துல திரும்பி பார்த்தா, மனுஷன் ரோட்ல கிடக்கிறார். அவசரமா ஸ்கூட்டியை திருப்பிட்டு அவர் பக்கத்துல நிறுத்திட்டு பார்த்தா… நெஞ்சை பிடிச்சுட்டு, வலியில முனகிட்டு, மூச்சு விட சிரமப்பட்டுட்டு இருந்தார்.”


“சார்… என்ன பண்ணுதுன்னு கேட்கும் போதே, ஆள் மயங்கிட்டார். எனக்கு செம டென்ஷன். ரோட்ல யாருமே இல்ல. சார் சார்னு உலுக்கறேன்… பேச்சு, மூச்சு இல்ல. நல்ல வேளை, ஒரு கால் டாக்சி சந்துக்குள்ள நுழையவும், கை காட்டி அதை நிறுத்தி, அந்த ட்ரைவர்ட்ட கெஞ்ச, உதவ ஒத்துக்கிட்டார்.”

 

“மனுஷன், ஈவினிங் வாக் பண்ணிட்டு இருந்தார் போல! மொபைல் போன், பர்ஸ்னு கைல, பாக்கெட்ல எதுவும் இல்லன்னு டேக்சி ட்ரைவர் திரும்ப மறுத்தார். சார், நிச்சயம் உங்களுக்கு பிரச்சனை வராம பார்த்துக்கறேன்னு கெஞ்சின பின்ன தான் வண்டியை எடுத்தார். என் ஸ்கூட்டியில் பின்னாடியே போனேன். பக்கத்துல இருந்த தேவகியில சேர்த்தோம்.”


“ஆளு யாரு, எவர்னு எனக்கு எதுவும் தெரியல. யாரோ தெரியாத ஆள் ரோட்ல விழுந்து இருந்தார்னு சொன்னா, சேர்த்துப்பாங்களோ மாட்டாங்களோன்னு பயந்து, பக்கத்து வீட்டு அங்கிள்னு ஒரு பொய்யை சொல்லி, ஒப்பிலியப்பன்னு எங்க குலதெய்வ பேரையே அவரோட பேரா கொடுத்து, எப்படியோ அட்மிஷன் போட்டேன்.” 


“ஹாஸ்பிடல்ல, அவர் விழுந்த விதத்தை சொல்லவும், ஹார்ட் அட்டாக்கா இருக்கும்னு உடனே எமர்ஜென்சி ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாங்க. இவர் குடும்பத்தை பத்தி கேட்டப்ப, அவங்க நார்த் டூர் போயிருக்காங்க, இனி தான் விஷயத்தை சொல்லி, வர வெக்கணும்னு இன்னொரு பொய்யை அவிழ்த்து விட்டேன். அவர் மெடிக்கல் ஹிஸ்டரி பத்தி அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் முழிச்சு, கெஞ்சி, கூத்தாடி ட்ரீட்மென்ட் பார்க்க வெக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.” 


“எல்லாத்துக்கும் மேல, இந்த டென்ஷன்ல, அன்னைக்கு ராத்திரி நான் வீட்டுக்கு கூட போகலை. அப்பாம்மா, ஊர்ல இல்லாதது எனக்கு நல்லதா போச்சு. எதிர் வீட்டு மாமிட்ட, என் ஃபிரெண்ட் கலை வீட்ல நைட் ஸ்டே பண்றதா இன்னொரு பொய்யை சொல்லிட்டு, ராத்திரி முழுசும் அங்க ஹாஸ்பிடலில் இருந்தேன்.” 


“ஹாஸ்பிடல்ல சேர்த்தது பெருசில்ல சார்… இப்படி நிறைய கேள்வி வரும்னு யோசிக்காம, முக்கியமா கையில காசு இல்லாம சேர்த்தது, தான் பிரச்சனை ஆகிடுச்சு.” 


“எப்படி சமாளிச்சீங்க மிஸ்.அஞ்சனா?”


“என் நல்ல நேரம், எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, அன்னைக்கு நைட் டியூட்டியில இருந்தாங்க. நான் அங்க வெராண்டாவுல டென்ஷனா உட்கார்ந்து இருக்கறதை பார்த்து, என்ன ஏதுன்னு என்ட்ட வந்து விசாரிக்கவும், இப்போதைக்கு பணம் இல்ல, காலையில கட்டிடறேன்னு அவங்க மூலமா ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்கிட்ட, டைம் வாங்கினேன். தேங்க் காட், அதுக்கும் விட்டல் சாரே வழி பண்ணிட்டார்.”


“எப்படி?” இரு ஆண்களும் ஒரு சேரக் கேட்க, 


“சார் போட்டுருந்த கோல்ட் செயின், ரெண்டு வைர மோதிரம், ப்ரேஸ்லெட் தான் கை கொடுத்துச்சு. காலையில விட்டல் சார் கண் முழிக்கலைன்னவும் எனக்கு பயமாயிடுச்சு. வேற வழி இல்லாம, முன் தினம் அட்மிஷனப்ப, நர்ஸ் என் கைல கொடுத்த, அவரோட நகைகளை கொண்டு போய் அடகு கடை வெச்சுருக்க இன்னொரு தெரிஞ்ச கஸ்டமர்ட்ட அடமானம் வெச்சு, கிடைச்ச பணத்தை கட்டிட்டு, இதுக்கு மேல ஆகற செலவை அவர் ஃபேமிலி வந்து பார்த்துப்பாங்கன்னுட்டேன்.”


“இதெல்லாம் சந்துவுக்கு கூட நான் இதுவரைக்கும் சொன்னதில்லை சூரி அண்ணா. அந்த கடன்காரன், அப்போன்னு பார்த்து ஹைதராபாத்ல இருந்தான். அட்லீஸ்ட் அவன் கூட இருந்திருந்தா அத்தனை டென்ஷனாகி இருக்க மாட்டேன். அவனும் துணைக்கு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இதெல்லாம் தெரிஞ்சப்புறம், ‘படிச்சவ தானே நீ? இருட்டுல, யாரோ ரோட்ல விழுந்தா, பக்கத்துல போவியா? நாடு இருக்க இருப்புல, புத்தியை எங்க அடகு வெச்ச எருமைன்னு என்னை எப்படி திட்டினான் தெரியுமா? இப்படி ரிஸ்க் எடுத்தது அவசியமா’ன்னு என்னை போட்டு காய்ச்சு எடுத்துட்டான்.”


“ஒரு உண்மையை சொல்லட்டா… படிக்காம எக்ஸாமுக்கு போனப்ப கூட, இத்தனை வேண்டினது இல்ல நான். நைட் ஃபுல்லா சார் பொழச்சிடணும்னு அவ்வளோ சாமி கும்பிட்டேன். இன்னொரு பில்லை நீட்டி, இன்னும் பே பண்ண சொன்னப்ப… ஐ வாஸ் ஸ்டன்ட்.” 


“அப்பாவோட அக்கவுண்ட்ல இருந்து எடுத்து இருக்கலாம் தான். ஆனா, அப்புறம் கொலைகாண்டாகுற கேசுகிட்ட யார் பாட்டு வாங்கறது? சந்து தடியனை கூப்பிட்டு உதவி கேக்கலாமா? அப்பா அக்கவுண்ட்ல ஆட்டைய போடலாமான்னு இங்கி பிங்கி பாங்கி எல்லாம் போட்டு, செம ஸ்ட்ரெஸ் ஆகிட்டேன். ஒரு வழியா பதினோரு மணி வாக்குல விட்டல் சார் கண் முழிச்சப்ப தான், போன என் உயிர் திரும்ப வந்துது.” 


“அப்புறம் என்ன ஆச்சு அஞ்சுமா?”


“அதை ஏன் கேக்குறீங்க? அப்புறம் தான் பெரிய காமெடியே ஆச்சு ண்ணா. டாக்டர், நர்ஸ் எல்லாம் மிஸ்டர். ஒப்பிலியப்பன்னு அவரை கூப்பிட, விட்டல் சார் அதுக்கு ரெஸ்பான்ட் பண்ணாம, முழிக்க, ஹ ஹா… ஓ காட்… ஒரு வேளை கொஞ்சம் மூளை பாதிச்சுடுச்சோன்னு அந்த டாக்டருக்கு டவுட் வந்து, என்ட்ட வந்து விஷயத்தை சொல்லி, ‘இன்னும் சில இன்வெஸ்டிகேஷன்ஸ் பண்ணனும்’னுட்டார். அவர்ட்ட ஒரு டூ மினிட்ஸ் நான் பேசறேன்னு அனுமதி வாங்கி , ஐ.ஸி.யூ உள்ள போனேன்.”


“அந்த பாவப்பட்ட டாக்டர், மேல டெஸ்ட் பண்றதா நெனச்சு, ‘இந்தப் பொண்ணை தெரியுதா மிஸ்டர்.ஒப்பிலியப்பன்? நல்லா பாருங்க, யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்’ன்னு கேட்டாரே! ஹா ஹா ஹா, அதுக்கு சார் பெப் பெப் பேன்னு யாருடா இவங்கற மாதிரி என்னையும், டாக்டரையும் மாறி மாறி பார்த்து முழிக்க, ‘நிச்சயம் ப்ரெயின் பாதிச்சு இருக்கு, எதுக்கும் ஸ்கேன் எடுத்துடலாம்’னு டாக்டர் சொன்னப்ப, எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியலை.”


“அப்புறம், நான் தான் உங்களை அட்மிட் பண்ணேன்னு நடந்ததை சார்ட்ட விளக்கி, ப்ளீஸ் உங்க பேர், டீட்டெயில்ஸ் தாங்க, உங்க ஃபேமிலிக்கு இன்பார்ம் பண்றேன்னு கேட்டப்ப, அவர் தான் ஒரு போன் நம்பர் தந்து, ‘சாமின்னு ஒருத்தர் எடுப்பார். எந்த விவரமும் சொல்லாம, நான் வர சொன்னதா மட்டும் சொல்லி, இங்க வர சொல்லும்மா’ன்னு அவரோட பேரை விட்டல்னு சொன்னார்.”


“சார்… பில் பே பண்ணனும், கொஞ்சம் கேஷ் கொண்டு வர சொல்லட்டா?ன்னு நான் கேட்டதுக்கு, ஆஃபீஸ்ல இருக்கற ப்ரீப்கேஸை எடுத்துட்டு வர சொல்லி சொல்ல சொன்னார்.”


“அது படி வந்த சாமி தாத்தா, விட்டல் சார் இருந்த நிலை பார்த்து பதறினார். ஆனா, ‘ஆஃபீஸ்ல யாருக்கும் எந்த விஷயமும் சொல்லாதே சாமி’ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் பெரியவர். வேற யாரோ பேஷண்ட் சீரியசா இருக்கவும், ஸ்டேபிலா இருந்த விட்டல் சாரை ஐ.ஸி.யூவுல இருந்து ஸ்பெஷல் ரூமுக்கு மாத்தினாங்க. அப்போவே, சாரோட நகையை அடமானம் வெச்ச ரசீதை கொடுத்துட்டேன். பில் பே பண்றதுக்காக, கேஷ் வித்டிரா பண்ண சாமி தாத்தாவுக்கு ஒரு செக்கை கொடுத்தார் சார்.”


“சாமி தாத்தா இஸ் அ ஜெம் தெரியுமா? சார் மேல ரொம்ப பாசம். அவரை தனியா விட்டுட்டு பேங்க் போக யோசிக்கவும், சரி… நான் கூட துணைக்கு இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்கன்னு சொல்லி தாத்தாவை அனுப்பினேன்.”


“அப்போ கிடைச்ச அந்த தனிமையில தான், ரெஸ்ட் எடுக்க சொன்னாலும் என் பேச்சை கேட்காம, என்னை பத்தி விசாரிச்சார். நம்ம தான் ஓட்டைவாய் ஆச்சே! அவர் ஹோட்டல் ஓனர்னு சொன்னதால, சும்மா இல்லாம, இவன்ட் ப்ளான்னிங்ல எனக்கு இருக்க ஆர்வத்தை பத்தி நான் உளறின எல்லாத்தையும் கேட்டுக்கிட்டார் விட்டல் சார்.” 


“பேங்க் போன சாமி தாத்தா, திரும்ப வந்தார். அந்த நகைங்களையும்  மீட்டுட்டதா சொன்னார். அதுக்கப்புறம் நான் கிளம்பி வந்துட்டேன். நைட் ஒரு வாட்டி போன் செஞ்சு எப்படி இருக்கார்னு சாமி தாத்தாவை கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ, அவர் தான் ‘காலையில கொஞ்ச நேரம் வந்து போ பாப்பா… எனக்கு கொஞ்ச வெளிய வேலை இருக்கு. ஐயா தனியா இருப்பார்’னு சொன்னார். அதுபடி அடுத்த நாள் காலையில விட்டல் சாரை பார்க்க போனேன்.”


“முன் நாளை விட நல்ல இம்ப்ரூவ்மென்ட், ஆனா ஏதோ யோசனையாவே இருந்தார். பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு. பார்க்க பெரிய இடத்து ஆள் போல இருக்கறவரை கவனிக்க வெறுமே ஒரு வயசான டிரைவர் மட்டுமே வந்தது எனக்கு வருத்தமா இருக்கவும், சாரை பத்தியும், அவர் ஃபேமிலி பத்தி கேட்டப்ப, மூணு பசங்க, தான் ஒரு விடோயர்னு எல்லாம் பேசினார்.” 


“கொஞ்சம் பிசினெஸ் பிரச்சனைங்க வாட்டினதாவும், அதான் மதியத்துல இருந்தே நெஞ்சு வலி இருந்தும் அசட்டையா இருந்துட்டேன்னு சொன்னவர், ‘சாரி அஞ்சு, உனக்கு தேவையில்லாம ஸ்ரமம் கொடுத்துட்டேன்’னு வருத்தப்பட்டார்.”


“நான் அங்க இருந்தவரை அவரை பார்க்க சொந்தம், நட்பு யாருமே வரலை. அது பத்தி கேட்டப்ப… ‘இல்ல அஞ்சு, இப்போதைக்கு யாரையும் பார்க்கற மனநிலை இல்ல. நான் தேறி வரணும்… சில விஷயங்களை தீர்க்கணும். இங்க ஹாஸ்பிடல்ல நிம்மதியா இருக்கேன்’னு அவர் சொல்லவும், நானும் மேல வேற எதுவும் கேட்டுக்கலை.”


“சாமி தாத்தா வந்தப்புறம் நான் கிளம்ப இருந்தப்ப, ‘ஒரு நிமிஷம் அஞ்சுமா… நீ வெளிய இரு… உன்ட்ட முக்கியமா பேசணும்’னு சொல்லி வெயிட் பண்ண சொன்னார்.”


“கொஞ்ச நேரம் கழிச்சு, ‘ஐயா கூப்பிடறார்’னு சாமி தாத்தா சொல்லவும், உள்ள போனா… என் கையில ஒரு கவரை தந்தார். பிரிச்சு பார்த்தா… இருபத்தியஞ்சு லட்சத்துக்கு செக் இருந்தது. ‘இந்த பணத்தை வெச்சு உன் இவன்ட் பிளானிங் கம்பெனி துவங்கு’ன்னு சொன்னார் விட்டல் சார்.” 


“எனக்கு இதெல்லாம் வேணாம் சார். யாரா இருந்து இருந்தாலும், அந்நேரத்துக்கு உதவி இருப்பேன்னு சொல்லி நான் மறுத்தப்ப, அவரும் விடாம வற்புறுத்த, அப்போ வந்த நர்ஸ் தான் ரெஸ்ட் எடுக்க சொல்லி அதட்டினாங்க. ‘உனக்கு நன்றி சொல்லணும் அஞ்சுமா. ப்ளீஸ்’னு பெரியவர் முடிவா சொல்லவும், எனக்கு சங்கடமா போயிடுச்சு.” 


“சார், ப்ளீஸ் பணத்தை தந்து என்னை அசிங்கப்படுத்தாதீங்க… அப்படியே எதுவும் செய்ய நினைச்சா, உங்க ஹோட்டல்ல, எதாவது இவன்ட் நடத்த சான்ஸ் கொடுங்கன்னு துடுக்கா சொல்லிட்டேன்.”


“சாமி தாத்தாவை கூப்பிட்டு, ப்ரீஃப்கேஸை எடுக்க சொன்னார். அதுல இருந்து ஏதோ பேப்பரை எடுத்தவர், அவரால முடிஞ்ச வேகத்துக்கு கிறுக்கலா ஏதோ எழுதினார். நான் கூட எதுவும் வேலை அப்பாயின்மென்ட்னு தான் நினைச்சேன். பார்த்தா, அபோட் ஹோட்டல்ல இவன்ட் மேனேஜ்மென்ட் பண்ண மூணு வருஷ காண்ட்ராக்ட் அது.” 


“எனக்கு ஷாக்கிங்கா போச்சு. இப்போவே சைன் பண்ணுன்னு, என்னை கையெழுத்தைப் போட வெச்சு, அங்க வந்த நர்சை வேற சாட்சி கையெழுத்து போட சொல்லி, அந்த பத்திரத்தை என்ட்ட கொடுத்தார், கூடவே அந்த செக்கையும்.”


“திரும்ப வேணாம்னு நான் மறுக்க… சார், அந்த நர்ஸ், சாமி தாத்தா எல்லாரும் சேர்ந்து என்னை ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி, என் கையில் திணுச்சுட்டாங்க.”


“அப்புறம் நீங்க அங்க போகலையா?”  ஸ்டீஃபனின் கேள்விக்கு, 


“அப்போ எனக்கு எக்ஸாம் ஸ்டடி லீவ் டைம் சார். அதுக்கு அடுத்த நாளும் காலையில போனேன். கொஞ்ச நேரம் பேசி, அவர் ரொம்பவே முன்னேறினதை பார்த்து சந்தோஷமா இருந்துச்சு. ஒரு உயிரை காப்பாத்த முடிஞ்சதால வந்த பெரிய நிம்மதி அது சார். எந்த சாமி பண்ண புண்ணியமோ, சரியான நேரத்துல அவரை பார்த்தேன், இல்லைன்னா? நினைக்கவே முடியலை.” 


“குடும்பம்னு யாரும் அவரை கவனிக்காதது நிறைய வருத்தம் எனக்கு. சார் என்ன நினைச்சாரோ, ‘அஞ்சுமா, உனக்கு எக்ஸாம் இருக்கு. இனியும், இந்த வயசானவனை கவனிக்கறேன்னு உன் நேரத்தை வீணாக்காதே. நல்லா படிச்சு, எக்ஸாம் எழுது. நாம ஒரு மாசம் கழிச்சு பார்க்கலாம்’னு சொல்லி, அன்னைக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ் ஆகப் போறதா சொன்னார்.”


“சரி, எக்ஸாம் முடிஞ்சு, இந்த செக் விஷயம் டீல் செஞ்சுக்கலாம்னு நானும் விட்டுட்டேன். மரணத்தின் வாசலில் நின்றிருக்கார்… சோ எமோஷனலா இருக்கார். இப்போவே நோ சொல்லி அவரை வருத்த வேணாம்னு நானும் கிளம்பிட்டேன். அப்புறம் ஒரே ஒரு முறை சாமி தாத்தாவுக்கு போன் போட்டேன். ‘பெரிய தம்பி ஊர்ல இருந்து வந்துருக்கார், ஐயா கூட இருந்து கவனிச்சுக்கறார், இப்போ ஐயாவுக்கு பார்வையில்ல பாப்பா’ன்னார்.”


“அப்புறம் நானும் எக்ஸாம்ஸ்ல பிசி ஆகிட்டேன். அந்த செக்ல என்னோட இல்லாத கம்பெனி பேர் எழுதியிருந்தார். அப்படியே அதை கண்டுக்காம விட்டுடலாம்னு இருந்தேன். இந்த சந்து எருமை தான், ‘பெரிய மனுஷன் உன்னை மதிச்சு இவ்வளோ பண்ணியிருக்கார், ஒரு வார்த்தை அவர்ட்ட சொல்லாம நீயா முடிவு பண்ணக் கூடாது’ன்னு கரடியா கத்தினான்.”


“அதனால தான் நேர்ல வந்து பேசிடலாம்னு இன்னைக்கு வந்தேன் சார். அந்த ரிசப்ஷனிஸ்ட் நான் சொல்ல வந்ததை சரியா கேட்டுக்கலை. செம கடுப்பாகி, போடின்னு அந்த செக்கை மட்டும் குடுத்துட்டு வந்துட்டேன்.” 


சில நிமிடங்கள் நால்வருமே அமைதியாகினர். ‘ஜஸ்ட் ஹாஸ்பிடலில் சேர்த்ததற்கு இவ்வளவோ பெரிய தொகையை தூக்கி கொடுத்தாரா இந்த அங்கிள்?’ என யோசித்துக் கொண்டே, “அந்த காண்ட்ராக்ட் காண்பிக்க சொல்லுங்க ஸ்டீஃபன்.” என்ற அவ்யுக்த்தின் ஆணைக்கிணங்க, அதை பற்றி விசாரித்தார்.


“ஏன் அஞ்சு, அந்த காண்ட்ராக்ட் காமிச்சு இருந்தாலே, இன்னைக்கு இத்தனை குழப்பம் வந்து இருக்காது.” காலையில் இருந்து இவர்கள் மிரட்டலில் அவன் வயிறு கலங்கியதில் சூரஜ் அப்படி கேட்க,


“அது எதுக்கு அண்ணா? எனிவே, அந்த காண்ட்ராக்ட் எங்க இருக்கோ?” 


“வாட், எங்க இருக்கோவா? என்ன இத்தனை அஜாக்கிறதையா இருக்க அஞ்சு?” சூரஜுக்கு பதட்டமாகியது. அவனறிந்த அவ்யுக்த் எல்லா பேப்பர்வர்க்கும் கண்ணில் பார்க்க விரும்பும் ரகம் அல்லவா!


“அந்த பேப்பர் கிடைச்சு இருந்தா, அதை இன்னைக்கு கொண்டு வந்து கொடுத்து, இது இனி தேவையில்லைன்னு சொல்லி கேன்சல் பண்ணியிருப்பேனே அண்ணா. எங்க வெச்சேன்னு தெரியலை. எனிவே… அதுக்கு வேலையில்ல இனி. நான் வேலை எல்லாம் பண்ற ஐடியாவை விட்டுட்டேன்.”


அவளாக ஒரு முடிவுக்கு வர, எல்லாம் அது போலவே நடந்து இருக்கும், அஞ்சு மட்டும் பேச்சை குறைத்து இருந்தால் என்றாள். விதி வேறு முடிவில் இருக்க, நாடகம் தொடர்ந்தது. தொடர்ந்த சூரஜ் மற்றும் அஞ்சுவின் உரையாடலை கவனிக்காமல் அபோட் தன் கைக்கு வந்த நாளை எண்ணி பார்த்தான் அவ்யுக்த்.


அவன் மதிக்கும் தினேஷ், ‘அப்பாவுக்கு உடம்பு முடியலை உன்னை பார்க்க பிரியப்படறார் அவி’ என அவுட் ஆஃப் தி ப்ளூ அழைத்ததும், விரைந்து சென்று தேவகியில் அப்பா, மகனை சந்தித்ததும்… ‘அபோடை உனக்கு குடுத்துடறேன் அவி கண்ணா… வர்கர்ஸ் யாரும் பாதிக்கப் படக் கூடாது. இந்த இக்கட்டுல இருந்து என்னை மீட்டுடு” என கையெடுத்து அந்த அன்பான ஜீவன் கும்பிட்டதும் கனவு போல அல்லவா இருந்தது. 


அன்றைய மருத்துவமனை அவசர சந்திப்புக்கு சில மாதங்களுக்கு முன்பே, அபோட்டின் ஃபைனான்சியல் நிலை குறித்து அரசல் புரசலாக பல விஷயங்கள் காதில் விழுந்தாலும், எதுவும் ஊர்ஜிதமாக தெரியாமல் இருந்தது. அந்த நிலையில், பேசியில் விட்டலை தொடர்பு கொண்ட அவி… தன் காதுகளை அடையும் விவரத்தை சொல்லி, ஹோட்டலை தனக்கு விற்கும் படி நேரிடையாக கேட்டு இருந்தான்.


சற்றும் யோசியாமல், ‘இது என் பரம்பரை தொழில் அவி கண்ணா, சாரி… என் பிரச்சனைகளை நானே தீர்த்துப்பேன்’ என்று அத்தனை உறுதியாக சொன்னவர், ஒரே மாதத்தில் ‘உனக்கே குடுக்கறேன்’ என்றது, அவனுக்குமே அதிர்ச்சி தான். 


என்ன தான் ஹரீஷ்ஷை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்தாலும், அவனுக்கு பிரியமான விட்டல் அங்கிளை அந்த நிலையில் பார்க்க அவிக்கு மனம் வலித்தது. 


தீனக் குரலில் பேசிக் கொண்டிருந்த விட்டலின் முகம் நெஞ்சு வலியில் சுருங்க, உடனே டாக்டர் வந்து கவனித்ததும், கவலையாக வெளியே காரிடாரில் காத்திருந்த போது, 


“நானும், ஸ்வேதாவும் எங்க ஷேர்ஸ் உனக்கே வித்துடறோம் அவி. ஜஸ்ட்  ப்ளீஸ் சே எஸ் டு அப்பா. ஹோட்டலை விக்க மனசு வரலை. பட், இப்போ என்னால இவ்ளோ கேஷ் அரேஞ்ச் பண்ண முடியாது. ஹரீஷ் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமா இருந்தாலும் அப்பா முகத்துக்கு பார்த்து விக்கறதுக்கு ஒத்துக்கறேன். டேக்கோவருக்கு ஸ்வேயும், சம்மதிச்சுட்டா. வெளியாளுக்கு போறதை விட, உனக்கு கொடுக்க தான் அவளும் விருப்பப்படறா. வர்கர்ஸ் பத்தி அப்பா ரொம்ப வொரி பண்ணிக்கறார். சோ ப்ளீஸ் ப்ரோசீட் இம்மிடியட்லி அவி. நாங்க மூணு பேரும் ஒத்துட்டாலே போதும், மெஜாரிட்டி ஷேர்ஸ் உனக்கு வந்துடும். இப்போவே ஹரீஷுக்கு தெரிய வேணாம், நிச்சயம் பிரச்சனை பண்ணுவான்.” 


இப்படி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அதுவே அவனுக்கும் வசதியாக இருக்க, கூட இருந்தே குழி பறித்தவனுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்க அவன் குடும்பத்தாரே சுலபமாக வழி செய்ய, அந்த டீலை மறுக்க வேண்டிய அவசியமில்லை அவ்யுக்த் மகேந்திரனுக்கு. 


தன் யோசனையில் இருந்தவனை, “வாட்?” என்ற அஞ்சுவின் அலறல் நடப்புக்கு இட்டு வந்தது.


“என்ன சூரிண்ணா சொல்றீங்க? நீங்க போய் ஃபோர்ஜ் பண்ணதா சந்தேகப்பட்டாங்களா? யாரு அந்த கிறுக்கு? இவங்களுக்கு எல்லாம் பணம் ஒண்ணு தான் பெருசு. ‘தான் கள்ளன் பிறரை நம்பான்’னு ராகவன் தாத்தா அடிக்கடி சொல்லுவாரு. அவங்களை போலவே அடுத்தவங்களையும் நினைச்சுட்டாங்களா?” கடுகாக பொரிந்துக் கொண்டிருந்தவளிடம்…


“ஹே அஞ்சு, விடும்மா... ஏதோ மிஸ்சண்டர்ஸ்டாண்டிங்.” அவள் பொங்கல் வைப்பதை தடுக்க பார்த்த சூரஜ்ஜின் பேச்சை காதில் வாங்காமல்… 


“என்னண்ணா, எப்படி சும்மா விட சொல்றீங்க? இப்படி அடியாள் எல்லாம் அனுப்பி உங்களை அசிங்கப்படுத்தினவங்களுக்கு ஒரு காட்டு காட்டறோம். நம்மை எப்படி தப்பா நினைக்கலாம்? இவங்களை போல பெத்தவங்க பணம் மட்டும் வேணும்னு இருக்கற சுயநல பிண்டமா நாம? அதெப்படி வேலை பண்றவன்னா சந்தேகப்பட்டுடுவாங்களா? சும்மாவா காசை கொடுக்கறாங்க? செய்யற வேலைக்கு சம்பளம்… கை நீட்டி சம்பளம் வாங்கினா, என்ன வேணா பேசுவாங்களா? ஏன் நமக்கெல்லாம் மானம், மரியாதை, இந்த நேர்மை, எருமை எல்லாம் இருக்காதா?” அந்தப் பேச்சில் தான் சூரஜ் அன்றைய நடப்பை அஞ்சுவுக்கு விவரித்து கொண்டிருந்தது அவிக்கு புரிந்தது.


அஞ்சுவின் பேச்சில் ஸ்டீஃபனுக்கு கோபம் பொங்குவது கண்ட சூரஜ், “சார்… ஒரு நிமிஷம் நீங்க கார்ல இருங்க சார்… ப்ளீஸ்,” நிலைமை ரசாபாசம் ஆகிடுமோவென கையை பிசைந்தான்.


அங்கே பேசியில் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சிவாவுக்கு, கண்ணால் பார்க்காத அந்த அஞ்சனாவை பிடித்து விட்டது. அவளுடைய நேர்மை, தைரியம், இரக்க குணம், நட்புக்கு தரும் மரியாதை, எல்லாவற்றுக்கும் மேல் அவளின் பயமற்ற இயல்பான பேச்சு… லூசு, எருமை, கிறுக்கு என சரமாரியாக வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டு வந்த சிரிப்பை அடக்க போராடிக் கொண்டிருந்தான். 


இல்லையா பின்னே! அவியிடம், ஒவ்வொரு வார்த்தையும் ஜாக்கிரதையாக அல்லவா உதிர்க்க வேண்டும். அஞ்சுவை போல சிவாவால் நினைத்ததை பேச முடியாதே.


ஆனால் அஞ்சனாவின் அந்த பேச்சில் முகம் இறுகிய அவ்யுக்த், “ஸ்டீஃபன், ஆஸ்க் ஹர் டு ரிபோர்ட் டு மீ டுமோரோ ஷார்ப் அட் நைன் ஏ.எம்., அண்ட் ஸ்டீஃபன், ஐ வான சீ தட் காண்ட்ராக்ட் டெஃபனட்லி.” 


“ஓகே சார்” என்ற ஸ்டீஃபனின் பேச்சை கேட்டு, “ஹலோ மிஸ்டர், யாருட்ட எல்லாத்தையும் போட்டு கொடுக்கறீங்க? தில் இருந்தா நேர்ல வந்து பேச சொல்லுங்க. இந்த அஞ்சனா பேருக்கேத்த மாதிரி அஞ்சா நெஞ்சம் உள்ளவ! எவனா இருந்தா எனக்கென? என் மடியில கனமில்ல… நான் எவனை கண்டும் பயப்பட மாட்டேன். எந்த பிஸ்க்கோத்தோட உதாரும் இங்க வேலைக்காகாது.” 


சூரஜின் “அஞ்சு… வேணாம்… காம் டவுன்…” கெஞ்சல் தடுப்பு முயற்சிகள் வீணாகி, இம்முறை தன் தலையெழுத்தை தானே மாற்றி எழுதின பெருமை அஞ்சனாவையே சேரும்.


இத்தனை களேபரத்தில், அபோட் ஹோட்டல் கை மாறி விட்டது. அந்த பக்கம் பேசுவது விட்டலின் மகனல்ல புது முதலாளி என ஸ்டீஃபன், சூரஜ் இருவருமே சொல்ல தவறி விட்டனர். ஏற்கனவே விட்டலின் பிள்ளைகள் மீது ஏக எரிச்சலிலும், கோபத்திலும் இருந்த அஞ்சுவோ, கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடாமல், வார்த்தைகளில் குதறிட தயாரானாள். 


அவளுக்கு அந்த வாய்ப்பு அமைவதற்குள்ளாக “நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு நீங்க சின்னவரை சந்திக்கணும். அந்த காண்ட்ராக்ட் கொண்டு வர சொன்னார் சார்.” என ஸ்டீஃபன் சொல்லவும், 


அந்த கூற்றில் விட்டலின் பிள்ளையிடம் சண்டை போடுவது பின்னுக்கு போய் விட, “அதெல்லாம் முடியாது, நான் எதுக்கு மீட் பண்ணனும். அதான் இன்னும் ரெண்டு வாரம் இருந்திருந்தா தன்னால காலாவதியாகப் போற அந்த டுபுக்கு செக்கை அந்த வீணா போனவனோட பேச்சைக் கேட்டு வேலை மெனக்கெட்டு இன்னைக்கு வந்து கொடுத்துட்டேனே,” அஞ்சு மறுக்க,


தன் வேலையை கருத்தில் கொண்டு, “அஞ்சு ப்ளீஸ்… எனக்காக ஒரு முறை வந்து போம்மா. சொன்னேனே, எனக்கு வேலை போயிடற மாதிரி இருக்குன்னு.”


“என்னண்ணா நீங்க? உங்களை இத்தனை அவமானப்படுத்தி இருக்காங்க. போங்கடா நீங்களும் உங்க ஒன்றையணா வேலையும்னு தூக்கி எறிவீங்களா? விட்டு தள்ளுங்கண்ணா.”


“ஐயோ அஞ்சு! ப்ளீஸ்… என் நிலைமை இப்போ ரொம்ப மோசம். கல்யாணம் ஆகியிருக்க இந்த நேரத்துல போய், இருக்கற வேலையை விட்டுட்டு? பாரு அஞ்சு, உனக்கும், விட்டல் சாருக்கும் இருந்த கனெக்க்ஷன் யாருக்கும் தெரியாது. சாமி தாத்தா, சார் இறந்த கையோட வேலையை விட்டுட்டு சொந்த ஊர் பக்கம் போயிட்டார். ஸி.ஸி.டீ.வியில உன்னோட நான் பேசுறதை வெச்சு ஏதோ குழப்பம். அதான் எல்லா விஷயத்தையும் நீ தெளிவு பண்ணிட்டியே. ஒரே முறை எனக்காக சின்னவரை வந்து பார்த்துடு. அவர் எதாவது கேட்டா, நல்லவிதமா பதிலை சொல்லிட்டா போதும். எல்லாருக்கும் தலைவலி விட்டுடும்ல?”


கெஞ்சியவனிடம், “ஓகேண்ணா, உங்களுக்காக வரேன். ஆனா, ஒன்பது மணிக்கெல்லாம் நோ சான்ஸ்…” அவளின் அடாவடி பேச்சில் அங்கே ஒருவன் பல்லை நரநரத்துக் கொண்டிருந்தது பாவம் அஞ்சு அறியவில்லை.


“ஒரே ஒரு நாள் அஞ்சு, உன் வேலையை கொஞ்சம் ஒதுக்கிட்டு ஷார்ப் நைனுக்கு ரெடி ஆகிடு. நானே வந்து அழைச்சுட்டு போறேன். அப்படியே அந்த காண்ட்ராக்ட்டை  கொஞ்சம் தேடி பாரேன்.”


“நோ வே சூரிண்ணா, நைன் இஸ் டூ எர்லி! விட்டல் சாரை சந்திச்சப்ப, எக்ஸாமுக்கு படிச்சுட்டு இருந்தேன்ல, அநேகமா என் புக்ஸ்ல தான் அந்த காகிதம் எங்கானும் ஒட்டிட்டு கெடக்கும். இனி சாப்பிட்டு, என் புக்ஸ் எல்லாம் புரட்டி, அந்த பேப்பரை கண்டுபிடிக்கறதுக்குள்ள, நிச்சயம் என் தூக்கம் கெட்டுடும். சாதாரணமா காலையில லெவெனுக்கு முன்ன நான் எழ மாட்டேன். போனா போகுதுன்னு... உங்களுக்காக வேணா, நாளைக்கு ஒரு நைனுக்கு கண் முழிச்சு, பை லெவென் அங்க இருக்க பார்க்கறேன். நீங்க வர வேணாம், நானே வந்துடுவேன்.” 


தன் பிடியில் பிடிவாதமாக நின்றவளை அவ்யுக்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த பேச்சை நீட்டிக்க விரும்பாமல், “ஸ்டீவ்… ஷார்ப் லெவென்” என காலை கட் செய்த அவ்யுக்த்தின் முகம் கோபத்தில் ஜொலித்தது. 


அதைக் கண்ட சிவாவுக்கு வேர்த்தது. ‘ஐயோ… இந்த பொண்ணு கொஞ்சம் தன்மையா பேசணுமே!’ அவன், அஞ்சுவுக்கு பாவம் பார்ப்பதற்குள்ளாக, அவனுக்கு இங்கே மண்டகப்படி துவங்கியது.


“நீயெல்லாம் இத்தனை வருஷம் எங்கட்ட வேலை பண்றன்னு வெளிய சொல்லாதே சிவா! அந்த ட்ரைவர்ட்ட ஏன் முதல்லயே விசாரிக்கலை. வாட் அ வேஸ்ட் ஆஃப் டைம்.” 


கத்தி தீர்த்தவன், புயலென வெளியேற… அடுத்து தான் செய்ய வேண்டியது புரிய, சாமிகண்ணுவுக்கு அழைக்க தன் காரியதரிசியை பணித்தான்.


சிவாவின் கேள்விகளுக்கு, “அது தங்கமான பிள்ளைங்க ஐயா. யார் எவர்னு தெரியாதவருக்கு, பெரிய உபகாரம் செஞ்சதும் இல்லாம, பாசமா ஐயாட்ட பேசுச்சு. ஐயா தான் ரொம்ப வற்புறுத்தி அந்த செக்கை தந்தாருங்க.” என்றார் அந்த விசுவாச ஊழியன்.


“நீங்க ஏன் தினேஷ் சாருக்கு உடனே தகவல் சொல்லலை?”


“ஐயா தான், நானா சொல்லற வரை யாருக்குமே உடம்பு சரியில்லாத விஷயத்தை தெரிவிக்க வேணாம்னுட்டாருங்க. அவர் சொல்லை மீறி எதுவும் செஞ்சு எனக்கு எப்போவும் பழக்கம் இல்லைங்க.” சாமிக்கண்ணு சொன்னதை அவியிடம் ஒலிபரப்பினான் சிவா.


“ஓகே சிவா” வேறு விஷயங்களுக்கு தாவிய அவியால், என்ன முயன்றும் ஏனோ விட்டலை தாண்டி யோசிக்க முடியவில்லை.


ஒரு பிசினெஸ் மேனனின் நிலையில் இருந்து யோசித்த மூளை, மெல்ல அபோட் டீலிங்கை பற்றி சிந்தித்தது. ஹோட்டல் ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு உடல் நலமில்லை என்ற செய்தி வெளியே கசிந்தால், கடன்காரர்கள் தொல்லை செய்வார்கள். 


அதை தவிர்க்க எண்ணி, பெற்ற மகனுக்கு கூட விஷயத்தை சொல்லவில்லை விட்டல் என்பது புரிந்தது. அழுத்தும் பண பிரச்சனைகளில் இருந்து விடு பட சரியான மார்க்கம் புலப்படாமல் இறுதியாக தான் தினேஷின் மூலம் தன்னை அழைத்து விட்டிருக்கிறார் என்பது தெளிவாகியது. 


ஏற்கனவே சரிந்து விட்ட பிசினெசை வாங்க நினைப்பவர்கள், கூட அடிமாட்டுக்கு தான் விலை பேசுவார்கள், அவரின் ஃபைனான்சியல் நிலைக்கு அது பாதகமாக தான் முடியும். அது மட்டுமில்லாமல், அப்படி வாங்குபவர்கள், அபோடை தொடர்ந்து நடத்துவார்கள் என சொல்ல முடியாது. ஹோட்டல் அமைந்து இருக்கும் இடம் ரியல் எஸ்டேட் ப்ரைம் லொகேஷனாதலால், ஹோட்டலை இடித்து, அடுக்கு மாடி குடியிருப்பாக்கும் சாத்தியம் தான் மிக அதிகம். 


ஹோட்டல் தொழில் மேல் உள்ள பற்று மட்டுமல்ல தன் ஊழியர்கள் மேலும் கரிசனத்தால் தான் ஹரீஷ் விஷயத்தில் தனக்கு ஏற்கனவே அபோட் மீது இருக்கும் தனிப்பட்ட ஆர்வத்தை சரியாக பயன்படுத்தி, அவர் மீது தான் கொண்டுள்ள மரியாதையை, அன்பை உபயோகித்து, ‘உன் காலம் வரைக்குமாவது நீ அபோடை ஹோட்டலா நடத்தணும் அவி. இது என்னோட ரிக்வஸ்ட் கண்ணா. நான் கும்பிடற அந்த மூகாம்பிகை, உனக்கு நிரம்ப ஆயுளை தந்து, உன்னை என்னைக்கும் ஆசிர்வதிப்பா’ என கை கூப்பினாரே!  


இறக்கும் தருவாயில் கூட, தான் ஒரு பண்பட்ட வியாபாரி என நிருபித்த விட்டலின் வியாபார சூட்சுமத்தை, தந்திரத்தை, முதன் முறை சரியான கோணத்தில் புரிந்துக் கொண்டவனுக்கு, ஒரு விதத்தில் தான், தான் ஏமாந்து விட்டோமோ என தோன்றியது. 


இங்கே அவ்யுக்த் ஓர் யோசனையில் மூழ்க… அங்கே அஞ்சனாவோ கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தாள். ஆண்களிடம் கெத்து குறையாமல் வாயடித்து விட்டாலும், இப்போது வீட்டின் தனிமையில், விட்டலை பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்க… சந்துவுக்கு அழைக்கலாமெனில் சிங்கப்பூரில் இருப்பவனுக்கு இரவு மிகவும் நேரமாகியிருக்க, அந்த எண்ணத்தை கை விட்டு… ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு, அந்த பேப்பரை தேடத் துவங்கினாள். ஆம் அவளை பொறுத்தவரை அது வெற்றுக் காகிதம்! 


ஒரு மணி நேர தேடலுக்கு பின், ஒரு புத்தகத்தின் உள் எட்டாக, மடிக்கப்பட்ட புக்மார்க்காக இருந்த அந்த அக்ரீமென்ட் கிடைக்க, அதை எடுத்து விரித்தவளுக்கு, மேலோட்டமாக பார்வையை ஓட்டிய போது, அதில் குறிப்பிட்டிருந்த சில பல வாசகங்கள் புரியவேயில்லை. 


சாதாரண வேலைக்கான அக்ரீமென்ட் தாள் இல்லை அது. அந்த சமயத்துக்கு தன்னிடம் இருந்த பொதுவாக அபோட் உடன் தொழில் செய்ய விரும்பும் வியாபார நிறுவனங்களுக்கு என இருக்கும் மிகவும் விரிவாக தயாரிக்கப்பட்ட ஒரு சட்ட பத்திரத்தை அவசரத்துக்கு உபயோகித்து இருந்தார் விட்டல் தாஸ். 


தனிப்பட்ட நபரோ, இல்லை நிறுவனமோ ஒப்பந்தங்கள் செய்யும் போது ஒவ்வொருவர் சூழலுக்கு ஏற்ப, இரு தரப்புக்கும் ஏற்றார் போல, அவர்களுக்கு அதில் சில சாதகங்கள், சலுகைகள் கிடைக்கும் படி, தக்க பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தான் பொதுவாக இது போன்ற காண்ட்ராக்டுகளுக்கு இறுதி எழுத்து வடிவம் தரப்படும். 


அபோடுக்கு மட்டுமே சாதகமாக வடிக்கப்பட்ட இந்த பொதுவான படிவத்தை அப்படியே எப்போதும் உபயோகிக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கு தக்கபடி மாற்றி எழுதுவது தான் வழக்கமும் கூட. ஆனால் விட்டலுக்கு, அப்படி எழுத நேரமோ, சந்தர்ப்பமோ இல்லை. வாக்கு கொடுக்கும் நோக்கில் தான் அவர் அந்த பத்திரத்தில் அஞ்சுவை கையெழுத்தை போட வைத்தார். ஆதலால், தான் செய்யும் செயலுக்கான பின் விளைவுகளை சிந்திக்க தவறினார் பெரியவர். 


அந்த வேலையை விளையாட்டாக தான் அஞ்சு கேட்டதே. அதனால் விட்டல் வற்புறுத்திய போது, மறுக்க மார்க்கம் அறியாமல், அவர் திருப்திக்கென கையெழுத்தை போட்டவள், என்ன தான் எம். பி. ஏ. மாணவி என்றாலும், நுணுக்கமாக பல்வேறு சட்ட வாசகங்கள் கொண்ட அந்த பத்திரத்தை சரியாக படித்திருக்கவில்லை. அதற்கான அவகாசமும் அப்போது அவளுக்கு இருந்திருக்கவில்லை. சட்ட ரீதியாக அத்தனை சுலபத்தில் விடுபட்டு, வெளி வர முடியாத ஒரு லீகல் காண்ட்ராக்ட்டில் அபோட் நிறுவனத்துடன், தான் இணைந்து விட்டதை அறியாமல் இருந்தாள் அஞ்சனா ஆதிகேசவன். 


அஞ்சனா vs அவ்யுக்த் ஆடு புலி ஆட்டம் ஆரம்பமாகியது. வெகு நேரம் விட்டலை பற்றியே எண்ணிக் கொண்டு இவ்விரு ஜீவன்கள் தம் உறக்கத்தை தொலைத்து யோசனையில் ஆழ்ந்தன. விட்டல் என்ற புள்ளியில் துவங்கும் இவர்கள் வாழ்க்கை கோலம், சிக்கல் நிறைந்ததாக அமைய இருப்பது அறியாமல், மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தனர்.


Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT
bottom of page