top of page
madhivadhani Stories

இணை கோடுகள் 2

இணை கோடுகள்


கோடு - அத்தியாயம் 2


செவ்வாய்கிழமை காலை பத்து மணி…


ஏ.சி குளிரில் இருந்து காக்கும் பொருட்டு முகம் முழுவதும் மறைத்த வண்ணம், போர்வையை இழுத்து மூடிக் கொண்டு, நல்ல உறக்கத்தில் இருந்த அஞ்சனாவின் படுக்கையறையின் திரை சீலைகள் இன்னும் விலக்கப்படாததால், சூரிய கிரணங்கள் உட்புகாததில் அறை இருட்டாகவே இருந்தது.


அவளை சுற்றி இருப்பவர்கள் காலை நேர பரபரப்பில் அவரவர் வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கும், அவசரமாக கிளம்பி சென்றிருக்க, இங்கே ஒரு ஜீவன், எதை பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக நிச்சலனமாக நித்திரையில் ஆழ்ந்து இருக்கிறாள்.


வீட்டு தொலைப்பேசி ஒலித்ததினால் எழுந்த சத்தம், மூடியிருந்த அறைக் கதவை தாண்டி, தூக்கத்திலிருந்தவளின் காதுகளை எட்டவே இல்லை. இன்னும் இரு முறை அது அடித்து, கேட்பார் அற்றதால் ஓய்ந்த பின், சில நிமிடங்கள் கழித்து,...


என்னமா பண்ணலாம்… டிஸ்கோவா போகலாம்... வோட்காவா போடலாம்… ஆடி பாடி ஆடலாம்... ஆல்ரெடி நேரம் ஆச்சு… பப்பும் தானே மூடி போச்சு…

வேர் இஸ் தி பார்ட்டி… ஆஹா… உங்க வீட்ல பார்ட்டி… வேர் இஸ் தி பார்ட்டி… ஆஹா… நம்ம வீட்ல பார்ட்டி…


என்று இப்போது கைப்பேசி அலறியது.


இந்த காலர் டியூனை கேட்டதும், அங்கே ஓஹயோவில் இருந்து மகளை அழைத்திருந்த சுலோச்சனாவின் பி.பி. ஏகத்துக்கும் எகிறியது. முழுதாக இரு முறை அடித்து ஓய்ந்தது மொபைல். யானையை சிறு எறும்பு பதம் பார்த்தது போல், அந்த சத்தமெல்லாம் நம்ம அஞ்சனாவுக்கு கேட்குமா?


அஞ்சனா தான் லேடி கும்பகர்னி ஆயிற்றே! அவள் பெற்றோர் நன்றாக அறிந்த விஷயம் தான் இது. அங்கே அமெரிக்காவில் நேரம் நள்ளிரவை தாண்டி விட்டதால், மகள் காலை பத்து மணிக்கேனும் எழுவாள் என்று குத்து மதிப்பாக கணக்கிட்டு அழைத்திருந்த, பெற்றவர்களை ஏமாற்றாமல் நம் நாயகி நித்திரையில் தான் சுகமாய் ஆழ்ந்திருந்தாள். அடுத்து ஒரு முறையும் அடித்து நின்றது கைப்பேசி.


இப்போது வாயில் மணி விடாமல் ஒலிக்க, ஒரோரு முறையும் வெவ்வேறு இசை எழுப்பும் அந்த காலிங் பெல்லின் டியூன் சத்தம், அஞ்சுவை லேசாக அசைத்தது.


மீண்டும் மொபைல் “வேர் இஸ் தி பார்ட்டி…” என்று கூவ, லேசாக தன் ஆம்பல் விழிகளை திறந்த அஞ்சு, “ஷ்… ஷப்பா… மனுஷியை நிம்மதியா தூங்க விடறாங்களா?” அலுத்துக் கொண்டே ஒரு நீண்ட கொட்டாவியை விட்டு, அலட்சியமாக பேசியை ஆன் செய்து, ஸ்பீக்கரை தட்டினாள்.


“தண்டச் சோறு, கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? மணி பத்து ஆகுது, இன்னும் முழிக்காம இப்படி இருந்தா எங்க இருந்து உருப்படறது?”


ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் விடாமல் சுலோ தன் சுப்ரபாதத்தை பாடவும், பொறுமையிழந்தாலும், குரலில் அதை வெளியிடாமல், “ம்மா… நீ அமெரிக்காவில இருந்து பேசறியா, இல்ல பக்கத்து ரூம்ல இருந்து கத்துறியா? ரொம்ப தெளிவா கேக்குதே!”


மெதுவாக சோம்பல் முறித்துக் கொண்டே அஞ்சு சந்தேகம் கேட்டவுடன், பொங்கி எழுந்த கோபத்தில் சுலோ, இன்னொரு ரவுண்ட் திட்டர்ச்சனை துவங்க, நம் பெண் சிங்கமோ, ஸ்பீக்கரின் சத்தத்தை குறைத்து விட்டு, தலையணையை எடுத்து இரு காதுகளையும் போர்த்தியது போல பிடித்து கொண்டாள்.


மனைவியிடமிருந்து பேசியை பிடுங்கி “கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு அஞ்சு!” தன் பங்குக்கு கேசவன் இரண்டு வார்த்தைகள் மகளை திட்ட துவங்கியவர், திருந்தாத கேஸ் மகள் என்று புரிந்து கொண்டதால், எப்போதும் ஷார்ட் ஆனால் ஹாட்டாக தான் கடிவார்.


தந்தையை இந்த விஷயத்தில் அஞ்சுவும் அறிந்தே வைத்திருந்தபடியால், அடுத்து அவர் கூற இருப்பதை கேட்கும் விதமாக உடனே தலையணையை விலக்கி இடம் மாற்றினாள்.


“இந்த மாச வாடகையை கொடுக்க Mr.ராஜாராமன், லேட் செஞ்சுட்டார். வாடகை வேற இப்போ பத்தாயிரம் ரூபா கூட்டி இருக்கு. நான் மெயில் பண்ணதுக்கு, ‘ஒன் டைம் பேமென்ட்டா செக் தான் தர முடியும்’னு சொல்லிட்டார். நீ என்ன பண்ற, இன்னைக்கே போய் அவர்கிட்ட இருந்து செக்கை வாங்கிடு அஞ்சு. முக்கியமா, நீ செக்கை எங்கையாவது மறந்து வெச்சுட்டு, எனக்கு டென்ஷன் கொடுப்பே. அதனால கையோட பேங்க் அக்கவுண்ட்ல போட்டுடு. என்ன, நான் சொன்னது காதுல தெளிவா விழுந்ததா?”


“அப்… ப்பா… இது என்ன புதுசா, செக் கொடுக்கற பழக்கம்? எல்லாம் ஆன்லைன் மூலமா அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்றது தானே ஆ… அவரோட வழக்கம்?”


அஞ்சுவை முடிக்க விடாமல், “அதிங்கப்ரசங்கித்தனம் பண்ணாம சொன்னதை மட்டும் செய். அப்படி முக்கியமா வெட்டி முறிக்கற வேலை உனக்கு எதுவும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒழுங்கா இன்னைக்கே போயிட்டு வா… செக் பத்திரம்.” என்ற கேசவன் மகளின் பதிலை எதிர்பாராமல் காலை கட் செய்தார்.


“ச்சே… காலையிலேயே இந்த அப்பா ஏழரையை கூட்டி விட்டுட்டார்.” பொறுமியவள், தந்தை சொன்ன வேலையை செய்யாமலும் இருக்க முடியாது என்பதனால் உடனே தோழன் சந்துவுக்கு அழைத்தாள்.


அவளின் இரண்டு தொடர் அழைப்புகளையும் சந்து கட் செய்ய, ‘ஐயா, ரொம்ப பிசின்னு காமிச்சுக்க, கட் பண்றான்.’ என்று அதற்கும் பொருமியவள், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அறைக் கதவை திறந்த போது மணி பதினொண்ணே கால்.


ஃபிரிஜில் இருந்த கடையில் வாங்கிய தோசை மாவை எடுத்து வெளியே வைத்தவள், தோசைக் கல்லை அடுப்பில் போட்டு விட்டு பார்க்க, இட்லி மிளகாய் பொடி டப்பா காலியாக இருந்தது. “இன்னைக்கு நேரமே சரியில்லை…” முனகிக் கொண்டே, மாவை மீண்டும் ஃப்ரிஜினுள் வைத்தவள், வீட்டுக் கதவை பூட்டி விட்டு, அவளின் அக்க்ஷய பாத்திரமான, எதிர் வீட்டு வாசல் மணியை அழுத்தினாள்.


கதவைத் திறந்த நந்தகோபாலனுக்கு, “குட் மார்னிங் நந்து மாமா… அப்பா சொன்னதுக்காக காலிங் பெல்லை விடாம அடிச்சு, என் தூக்கத்தை கலைக்கறது நல்லாவே இல்லை.” சிணுங்கலாக புகார் வாசித்தவள்,


“எங்க மாமி?” என்று கேட்டு விட்டு, “என் ஆசை மைதிலியே…” என்று உரக்க பாட ஆரம்பிக்க, உள் அறையில் இருந்து வெளியே வந்த மைதிலி மாமி, அவள் காதை திருகினார்.


“வாலு… உன் அம்மா போன்ல கோபமா பேசறதுக்கு ஏத்தாப்புல நீயும் பொறுப்பில்லாம நடந்துக்கோ.”


கோபம் போல் கடிந்தவரிடம், “மம்மி திட்டறதெல்லாம் ஒரு விஷயமா மாமி? விடுங்கோ… நேக்கு கொஞ்சம் இட்லி பொடி கொடுங்கோ, அன்னலட்சுமியே” ராகமாக இழுத்தாள்.


“மணி ஆச்சு பாரு, உனக்கும் சேர்த்து தான் தளிகை செஞ்சுருக்கேன். வா சாப்பிடுவே…”


“இது… இது தெரிஞ்சு தான் தோசைக் கல்லை பத்த கூட வைக்கல நான்.”


அவள் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவளை, “அருந்த வாலு நீ “ என்றவாறே அன்பாக அவளுக்கு உணவு பரிமாறினார்.


“முகுந்த் அண்ணா பேசினானா?”


“ம்ம்… இந்த வருஷ லீவுக்கு வராளாம்.”


“ஹை ஜாலி… குட்டி க்ரிஷ்ஷோட ஜாலியா விளையாடலாம்.”


மாமாவும், மாமியும் கலகலவென சிரிக்கவும், என்ன என்பதாக அஞ்சு புருவத்தை உயர்த்த, “க்ரிஷும் இதைத் தான் சொன்னானாம். ‘அம்மா எனக்கு இப்போவே பயமா இருக்கு’ன்னு முகுந்த் சொல்லிண்டுடிருந்தான்.”


அதற்குள் அவள் கைபேசியில், ‘ஜண்டு பாம்… ஜண்டு பாம்...’ என்று துவங்கும் பழைய விளம்பர பாடல் ஒலிக்க, பேசியை எடுத்தவுடன் நண்பனிடம் ஐந்தாம் கியரில், “சொல்லுடா அல்டாப்பு ஜந்து,” எகிறினாள் அஞ்சனா.


“எரும, ஆஃபீஸ்ல சும்மா ஈ ஓட்டறேன்னு நெனச்சியா?”


“ஈ ஒட்டறதுக்கு இன்ஜினியர் குவாலிஃபிகேஷன் கேக்கறாங்களா ஜந்து இப்போ!” நக்கலடித்து நண்பனின் கோபத்தை கூட்டினாள்.


“உனக்கு ஃபிரெண்டா இருக்கறதுக்கு ஈயே ஓட்டலாம்! டி.எல். கூட மீட்டிங்ல இருந்தேன். ஒரு வாட்டி கால் கட் பண்ணா, திரும்ப பண்ணாதேன்னு சொல்லி இருக்கேன்ல? அந்த மனுஷனுக்கு எங்க இப்படி ஃபிரெண்டும் அது குடுக்கற இம்சையும் புரியும்? திட்டி தாளிச்சுட்டான்.” பதிலுக்கு கத்திய சந்திரப்ரகாஷ்ஷின் பேச்சுக்கு மதிப்பே தராமல்,


“லெமன் ரசம் அமர்களமா இருக்கு. இன்னும் கொஞ்சம் ரசத்தை விடுங்க மாமி!”


தன்னை சட்டை செய்யாமல், மாமியிடம் பேசுபவளை நினைத்து பல்லைக் கடித்தவன், “என்ன பிரச்சனை, ஏன் ஆன்ட்டியும் போன் செஞ்சுருக்காங்க?” நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.


காலையில் தனக்கு பேச முயன்று, தான் பேசியை எடுக்கவில்லை என்றவுடன், எதிர் வீட்டு மாமி, தோழன் சந்து, என்று அனைவருக்கும் வழக்கம் போல பெற்றவர்கள் அழைத்து தொந்தரவு கொடுத்தது தெரிந்தாலும், சற்றும் அலட்டிக் கொள்ளாமல்,


“இன்னைக்கு சாயங்காலம் சீக்கிரம் வர முடியுமாடா?”


“முக்கியமான விஷயமா பஞ்சு?”


சலிப்பாக, “ம்ம்ம்… எல்லாம் அந்த ஆப்ப தலையனை நேர்ல போய் பார்த்து, வாடகை செக் கலெக்ட் பண்ணனும்.”


தந்தையிடம் காலை அஞ்சு எழுப்பிய அதே சந்தேக கேள்வியை அவளிடமே திருப்பி கேட்டவனிடம், அவள் தந்தை அவளுக்கு கொடுத்த பதிலையே, நண்பனுக்கு அட்சரம் பிசகாமல் அஞ்சுவும் திருப்பி தரவும்,


“சரி… சரி... நான் மெஸ்சேஜ் அனுப்பினப்புறமா என் ஆஃபீசுக்கு கிளம்பி வந்துடு. நான் இல்லாம அங்க போயிடாதே அஞ்சா செல்வியே,” அக்கறையாக எச்சரிக்கை செய்தவன், பேசியை வைத்து விட்டான்.


திருப்தியாக உண்டு முடித்தவள், மைதிலி மாமியோடு வளவளக்க துவங்க, இந்த பதிமூன்று ஆண்டுகளில் அஞ்சனாவின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை பார்த்து விடலாம்.


அஞ்சுவின் அண்ணா அபிஷேக், ஐ.ஐ.டியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவுடன், சில காலம் ஆந்திராவில் ஒரு ரிஃபைனரி கம்பெனியில் பணி செய்து, அனுபவமும், கொஞ்சம் வருவாயும் பார்த்த பின், பட்ட மேற்படிப்பை தொடர அமெரிக்கா பயணமானான்.


பகுதி உதவி தொகை பெற்று (part scholarship) கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் (கால்டெக்) உயர் படிப்பை முடித்தவனுக்கு கையோடு நல்ல வேலைகள் அமைய திறமை, அறிவு, மட்டுமல்லாது உழைப்பாளியுமானவனுக்கு ஏறுமுகம் மட்டுமே. இவன் அமெரிக்க பயணத்துக்காக பெற்றோர் போட்ட எஜூகேஷனல் லோனை படிப்பு முடிந்த இரண்டே ஆண்டில் முழுதும் அடைத்து விட்டான்.


இதனிடையே அஞ்சு பத்தாம் வகுப்பில் இருந்த போது முதலில் அவளின் குருவான ராகவன் தாத்தாவின் மறைவு. சின்னவளுக்கு நினைவு தெரிந்து முதல் இழப்பு… அவளுக்கு பிரியமானவரும் கூட. அதில் அவள் சற்று நிலைகுலைந்து போனாள்.


அடுத்து வெங்கட் தாத்தா காலமாகி விட, கணவனை தொடர்ந்து ஆறே மாதங்களில் வசந்தா பாட்டியும் இறைவனடி சேர்ந்தார்.


இதில் சரியாக பரீட்சை நேரமாக வெங்கட்டின் மறைவு ஏற்பட, எப்போதும் லாஸ்ட் மினிட் டாட் காமான நம் அஞ்சுவின் நிலை பரிதாபமானது. பின்னே கடைசி நொடியில் தினமும் உறவு கூட்டம் என்று கூடி விட, பாடங்களை ரிவிஷன் செய்வதற்குள் தத்தளித்து விட்டாள். எப்படியோ எழுபத்தைந்து சதவிகிதம் மதிப்பெண் பெற்று விட்டாள். அதற்கு அவள் வாங்கிய ஏச்சு பேச்சுக்களை அவர்கள் வீட்டு ஜடப்பொருட்களுக்கு வாய் இருந்தால் அவை பக்கம் பக்கமாக சொல்லும்.


அடுத்த நிகழ்வாக பல ஆண்டு இழுபறிக்கு பின், கேசவன், நந்தகோபால், மற்றும் அவர்களின் அருகே வசித்த முரளி, தாமோதர் அனைவரின் வீடுகளையும் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுமான நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியது.


இவர்களுக்கும் ஆளுக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அந்த ஒப்பந்தத்தின் படி வர, பழகிய குடும்பங்கள் நால்வரோடு, சந்துவின் அண்ணா சூர்யாவும் ஒரு ஃபிளாட்டை வாங்க, முகுந்தன் ஆறாவது வீட்டை வாங்க விரும்ப, வெளியே இருந்து ஆள் வருவதற்கு, அவனே வாங்க மற்றவர்கள் ஒப்புக் கொள்ள, இப்போது வசிக்கும் இந்த கட்டிடம் இவர்கள் வசமானது.


விசாலமான மூன்று படுக்கையறை அபார்ட்மெண்ட். முக்கியமாக, எவர் ஒருவர் விற்பதெனினும், இவர்களுக்குள் வாங்கி கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் தான் வெளியாட்களுக்கு விற்பது என்று ஒரு ஒப்பந்தத்துக்கு உட்பட்டிருக்கின்றனர்.


கட்டிடம் எழும்ப ஆன இடைப்பட்ட இரு ஆண்டுகள் வேறு வாடகை வீட்டுக்கு அனைவருமே மாறி போனதில் சற்று இடைவெளி விழுந்தாலும், சந்து வந்து அஞ்சுவை பார்க்க தவறவில்லை.


முன்பு போல தெருவாசிகளான சந்து, கலைவாணி உடன் இல்லாததில், அஞ்சுவின் கவனம் கொஞ்சம் படிப்பு பக்கம் திரும்ப தான் செய்தது. ஆனால், விதி சதி செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வின் போது டைஃபாய்டு ஜுரம் கடுமையாக தாக்க, பரிட்சைக்கு போனதே சாதனை எனும் நிலை. ஏதோ அவள் நல்ல நேரம், இந்த முறை முன்பே கொஞ்சம் படிப்பில் சிரத்தை காட்டியதில் என்பது சதவிகிதம் வாங்கியும் விட்டாள்.


மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல, ஒரு தடைக்கல்லை எப்படியோ கடந்த அஞ்சுவுக்கு அடுத்த சோதனை வரிசையில் நிற்க, கேசவன் செய்த குளறுபடியால் பொறியாளர் ஆவதற்கு பதிலாக பி.எஸ்.சி., கம்பியூட்டர் சயின்ஸ் சேரும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.


அப்பாவின் அச்செயல் பெண்ணவளை இந்த முறை அதிகமாகவே பாதித்தது. எப்போதும் அவள் விஷயத்தில் பெற்றோர் காட்டும் அந்த அலட்சியம் எல்லாம் சேர்ந்து ஆட்டி படைக்க, நடுவே கொஞ்சம் கல்வியின் பக்கம் நெருங்கியவள், மீண்டும் எதிர் திசையில் பயணிக்க துவங்கினாள்.


அப்போது தான் அபி, அவன் நண்பர்கள் நீலாங்கரையில் ஒரு புது குடியிருப்பில் முதலீடு செய்வதாகவும், அவனும் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கப் போவதாக சொல்லி, அப்படி தான் ஒரு லக்ஷுரி ஃபிளாட்டை வாங்கினான்.


புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அடையார் வீட்டில் குடியேறாமல், வாடகைக்கு விட்டுவிட்டு, சில ஆண்டுகள் நீலாங்கரைக்கு அஞ்சுவின் குடும்பம் இடம் பெயர்ந்தனர். இந்த மாற்றத்தில் அஞ்சுக்கு துளியும் இஷ்டமில்லை என்றாலும் அவள் விருப்பத்துக்கு என்று கேசவனும், சுலோவும் மதிப்பளித்து இருக்கின்றனர்!


அப்போதே நந்தகோபாலன் தம்பதியரும், சந்திரப்ரகாஷின் குடும்பமும் இந்த அடுக்குமாடிக்கு குடி புகுந்து விட்டனர். மீண்டும் சந்து தான் தோழியை தேடி போகும் படி ஆனது. எல்லா மாறுதல்களிலும் இவர்கள் நட்பு மட்டும் இறுகியது.


********************************

தற்போது பென்சில்வேனியாவில் ஒரு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பெரிய பதவி வகிக்கும் அபிஷேக், ஸ்ரீசைலத்தை பூர்வீகமாக கொண்ட, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பெண்ணான சிரிஷாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் மணந்து, அங்கே அமோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.


சிரிஷாவின் பெற்றோர் அமெரிக்காவில் மருத்துவர்களாக இருக்கின்றனர். கம்பெனி லாவில் பட்டம் பெற்ற சிரிஷா பிரபல சட்ட மையத்தில் பணி புரிகிறாள். அபிஷேக் முழுக்க ஆந்திர மாப்பிள்ளையாகி, அமெரிக்காவை புக்ககமாக ஏற்று கொண்டு விட்டான்.


அஞ்சுவின் அக்கா அக்க்ஷயா - சென்னை மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் மருத்துவம் முடித்து, பெற்றோர் மற்றும் அண்ணா அபியின் நிதி உதவியோடு பென்சில்வேனியாவில் உள்ள பெர்ல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், தன் ரெசிடென்சியை முடித்தாள். அந்த சமயங்களில் அவளுக்கு அபிஷேக் முழு உறுதுணையாக நின்று பெற்றவர்கள் உள்ளத்தை குளிர்வித்தான்.


சமீபத்தில் தான் ஓஹயோ பல்கலைக்கழகத்தில் நுரையீரல் மற்றும் கிரிடிகல் கேர் (தீவிர சிகிச்சை ) துறையில் அக்ஷயா ஃபெல்லொஷிப் சேர்ந்திருக்கிறாள்.


ரெசிடென்சி செய்யும் போது, கல்லூரியில் சந்தித்த குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி, மூன்றாம் தலைமுறையை சேர்ந்த டாக்டர் சாம் என்னும் சமீரை காதலித்து, இரு வீட்டினர் சம்மதத்துடன் மணந்துக் கொண்டாள். அதே, ஓஹயோ பல்கலைக்கழகத்தில் தான் இப்போது சமீரும் அவசர சிகிச்சை பிரிவில் ஃபெல்லோஷிப் முடிக்கும் தருவாயில் இருக்கிறான்.


அபிஷேக், சிரிஷாவுக்கு சைதன்யா என்று ஒரு மகன் இருக்கிறான். பேரன் பிறப்புக்கு முதல் முறை அமெரிக்க பயணம் மேற்கொண்ட கேசவன் தம்பதியினர், அடுத்து அக்ஷுவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் கோவிட் குறுக்கே வர, இதில் சமீரின் பெற்றோரும் அவர்கள் திருமணத்துக்கு அவசரம் செய்ய, இவர்கள் இல்லாமலேயே அங்கே குஜராத்தி முறைப்படி கோவிலில் வைத்து ஒரு திருமணம் முடித்தனர். அபிஷேக் குடும்பம் தான் இவர்கள் சார்பில் எல்லாம் செய்தது.


கோவிட் அடங்கி பயணம் செய்வது சற்றே சுலபமான போது, அபி மற்றும் அக்ஷு தத்தம் புகுந்த வீட்டினர் சகிதம் சென்னைக்கு பயணப்பட, இங்கே இவர்கள் திருப்திக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் தென்னிந்திய முறையில் ஒரு கல்யாணம் செய்தனர். சமீர் குடும்பத்தினர் குஜராத்தில் ஒரு வரவேற்பும் வைத்தனர்.


சிறப்பான முறையில் கடமையாற்றி, சென்ற ஆண்டு பணியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார் கேசவன். குடும்ப கடமைகளை கவனிக்கும் பொருட்டு சுலோவும் இந்த ஆண்டு தான் விருப்ப ஓய்வு பெற்றார். இப்போது குழந்தை உண்டாகி இருக்கும் செல்ல மகள் அக்ஷுவுக்கு உதவ தான் சுலோவும், கேசவனும் கிளம்பி சென்று இருக்கின்றனர்.


நம் நாயகி, அஞ்சா நெஞ்சினள், எப்படியோ உருண்டு பிரண்டு அரியர் வைத்து, ஒரு ஆண்டு வீணாகி ஒரு வழியாக பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயன்ஸ் முடித்து விட்டாள். பெற்றோரின் நச்சரிப்பு தாளாமல் எம்.பி.ஏவும் சேர்ந்து, எந்த வில்லங்கமும் இல்லாமல் இப்போது தான் பரீட்சை எழுதி முடித்து இருக்கிறாள்.


அஞ்சு Jack of all trades but master of none ரகமாக ஆளாகி நிற்கிறாள். தங்கள் சொல் பேச்சு கேட்டும், போட்டு தந்த பாதையில் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொண்ட மூத்த இரு பிள்ளைகள் குறித்து கேசவனுக்கும், சுலோவுக்கும் அப்படி ஒரு பெருமை, பெருமிதம், பூரிப்பு பொங்கி வழிகிறது.


“எங்க அபி வீட்ல பெரிய நீச்சல் குளம் இருக்கு. வீட்டோட ஒரு கேர் டேக்கர் இருக்காங்க… அங்க போனா எனக்கு எந்த வேலையும் இல்ல. மஹாராணி போல என் பையன் என்னை கவனிக்கறான். எங்க போனாலும் ஃபிளைட்ல பிசினெஸ் க்ளாஸ்ல மட்டும் தான் அபி போவான். எங்க அக்க்ஷு, அமெரிக்காவுல கூட யூனி டாப்பர்! அவளை பார்த்து மயங்கி போன மாப்பிள்ளை சீரா அடுக்கி தள்ளிட்டார்!” எப்போதும் மூத்த மக்கள் பற்றி பீற்றல் பீதாம்பரமாகவே இருந்தவர்களுக்கு வெறும் எம்.பி.ஏ அதுவும் அஞ்சல் வழியில் படித்த அஞ்சுவின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை.


சுலோ, கேசவன் கவலைப்படும் அளவுக்கு அஞ்சு அப்படி ஒன்றும் உதவாக்கரையாக தறிகெட்டு போகவில்லை. விளையாட்டாக சிறு வயதில் ராகவன் தாத்தாவிடம் கற்ற மேஜிக் கலையில் இருந்த தேர்ச்சி, மெஹந்தி போடும் திறமை, மற்றும் இயற்கையாகவே கற்பனை, கை திறம் நிரம்ப அமைய பெற்றதால், சுயமாக ஒரு பார்ட்டி ப்ளானராக சின்ன அளவில் தொழில் செய்கிறாள்.


ஆம்… கல்லூரியில் இளங்கலை பட்டம் படிக்கும் காலத்திலிருந்தே சிறு குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களை ஒருங்கமைத்து வருகிறாள். சிறு சிறு விளையாட்டுக்கள் மட்டுமன்று, ஆடல், பாடலுடன், ஃபேஸ்பெய்ன்ட் செய்வது, பலூன்கள் கொண்டு வெவ்வேறு உருவங்கள் உருவாக்குவது, நெயில் ஆர்ட் போடுவது, மெஹந்தி வரைவது, பெண் குழந்தைகளுக்கு ஃபேரி டேயில்(Fairy Tales) கதையில் வரும் கதாபாத்திரங்கள் போல அலங்காரம் செய்வது, சிறார்களுக்கு புரியும் விதமாக அறிவியலை அடிப்படையாக கொண்ட கேம்ஸ் என்று வித விதமாக பார்ட்டி நடத்துவதில் கை தேர்ந்த வித்தகி.


தன் கற்பனை சக்தியை கொண்டு குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் அருமையாக பார்டியை களைக் கட்ட செய்யும் திறமைசாலி. இது எதுவும் அவள் பெற்றோர் மனதை குளிர்விக்கவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.


அவர்களை பொறுத்தவரை ஒன்று கார்ப்பரேட் வேலை இல்லையா காலம் பூராவும் வருவாய்க்கு குறைவில்லாத டாக்டர் தொழில். இது இரண்டில் எதாவது ஒன்றில் தான் வாழ்க்கை தரம் ஒளிந்திருக்கிறது என திடமாக நம்பினர். அவர்களின் தாரக மந்திரமான பல லட்ச சம்பளம், வெளிநாட்டு சொகுசு வாழ்க்கையை அடையாத, அடையும் திறமையற்ற இளைய மகளை எப்போதும் குறை கூறியே பழகி விட்டனர்.


மைதிலி மாமியின் வீட்டில் கொஞ்ச நேரம் கதை பேசியவள், தன் ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு போய், நேரே நிறுத்தியது ஆர்.ஏ புறத்தில் இருக்கும் பிரின்சஸ் பார்லரில். இந்த பார்லர் தான் நம்ம அஞ்சுவின் தலைமையகம்!


பார்லரின் சொந்தக்காரி கலைவாணி… அஞ்சுவின் உயிர் தோழி. சிறு வயது முதல் பழக்கம்… இருவரும் ஒரே தெருவில் பல ஆண்டுகள் வசித்ததாலும், ஒரே வயது, ஒத்த குணம் என்பதாலும் நெருங்கிய நட்பு, இன்றும் தொடர்கிறது.


ஒரு கஸ்டமரின் கூந்தலுக்கு ஹென்னா போட்டுக் கொண்டு இருந்தாள் கலைவாணி. அங்கே காத்திருந்த மற்றொரு கஸ்டமரிடம், என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட அஞ்சு, அவர் புருவத்தை திருத்த வேண்டும் என்று சொல்ல, உடனே அந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்.


ஆம்… இது போல சிறு சிறு அழகியல் வேலைகளும் அருமையாக செய்வாள். புருவம் திருத்துவது, மெஹந்தி போட வரும் பெண்களுக்கு இடுவது, பெடிக்யூர் செய்வது கூட அஞ்சுவுக்கு கை வந்த கலை. உபயம் - கலைவாணி கொடுத்த பயிற்சி தான். அஞ்சு தான் கண் பார்த்ததை, கைகள் செய்யும் வரம் பெற்றவளாயிற்றே.


அழகாக புருவத்தை செதுக்கியவள், பணத்தை வாங்கி மேஜையில் வைத்தாள். அங்கிருந்த புத்தகத்தில் வேறு அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா என்று பார்த்தாள்.


மேலும் வந்த சிறு சிறு வேலைகளை கலையும், அஞ்சுவும் பகிர்ந்து செய்தனர். கஸ்டமர் இருக்கும் நேரம் வேலையில் கவனமாக இருப்பார்கள், கஸ்டமரோடு நட்பாக பேசுவதோடு சரி. மற்ற படி அவர்களின் சொந்தக் கதைகளை வளவளவென பேசுவது இல்லை தோழிகள். மூன்று மணியானவுடன், கலையின் மாமியார் ஒரு ஃபிளாஸ்கில் டீ கொண்டு வந்து வைத்தார். பொதுவாக அஞ்சுவின் பரிட்சையை பற்றி கேட்டு விட்டு சென்றார்.


கலைவாணியின் வீடு பார்லரின் மேல் தான், அவள் சொந்த தாய் மாமன் மகனை தான் திருமணம் செய்து இருக்கிறாள். அதனால் தோழியின் பிறந்த, புகுந்த வீட்டு மனிதர்களை அஞ்சு நன்றாகவே அறிவாள்.


இருந்த வேலைகளை முடித்தவுடன், ஓய்வாக டீயை பருக ஆரம்பித்தனர் தோழிகள். தன் குழந்தை ஷ்ரவனை பற்றி விசாரித்த அஞ்சுவுக்கு, பதில் சொல்லி கொண்டிருந்த கலை, “எப்படியோ ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சுடுச்சு, அடுத்து என்னடீ பண்ண போற?” அக்கறையாக கேட்டாள்.


“அபிண்ணாக்கிட்ட பேசணும் கலை, அமெரிக்காவில் செட்டிலாக வழி பண்றதா முன்ன சொன்னார்,” சட்டென்று மனதை அழுத்திய கலவையான எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், தோழி தன்னை கண்டுக் கொள்ளக் கூடாதென பதறி, பார்லரின் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்தினாள்.


ஆங்… என தோழியை அதிர்ச்சியாக பார்த்த கலைவாணி, ‘இது என்ன புது விளையாட்டு?’ என்று நினைத்தவளாக,...


“ஆமாடீ… நீ எப்போ வருவேன்னு, அங்க செவப்பு கம்பளம் போட்டு வெச்சு காத்திருக்காங்க… போடி… இவளே…” கிண்டலடித்தாள்.


தோழியின் பேச்சு கேலிக்கென புரிந்தாலும், மனதை சுருக்கென தைத்தது. அஞ்சுவின் இப்போதைய தலையாய பிரச்சனை, ‘ஆப்ப தலையனை சமாளிப்பது’ என்பதால், கலையின் பேச்சை ஒதுக்கி வைத்து, மனதில் ஒரு திட்டத்தை வகுத்தவள், வேறொரு கஸ்டமர் வரவும், வேலையில் மூழ்கினாள்.


பார்லரின் ஓனர் கலைவாணி தான் என்றாலும், தனி ஆஃபீஸ் இடம் என்ற ஒன்று இல்லாததால், இந்த விலாசத்தை தான், தன் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபீஸ் அட்ரெசாக எப்போதும் அஞ்சு கொடுப்பது. அஞ்சு பார்ட்டி நடத்த தேவையான உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கும் இடமும் இதுவே.


மாலை ஐந்து மணிக்கு சந்துவிடம் இருந்து மெசேஜ் வர, “என் ஸ்கூட்டி இங்கேயே இருக்கட்டும் கலை, நாளைக்கு எடுத்துக்கறேன்” என்ற அஞ்சுவை, அவள் கேட்டுக் கொண்ட படி கிரீன்வேஸ் சாலை MRTS நிலையத்தில் இறக்கி விட்டாள் கலை.


திருவான்மியூர் MRTS ஸ்டாப்பில் படி இறங்கி அஞ்சு வெளியே வரவும், சந்து ஸ்டேஷனுக்குள் வரவும் சரியாக இருந்தது. எதிரில் இருக்கும் டைடல் பார்க்கில் தான் சந்துவின் ஆஃபீஸ் இருக்கிறது.


அங்கிருந்து நீலாங்கரைக்கு இருவரும் காரில் பயணப்பட்டனர். “தாங்க்ஸ்டா சந்து, நானே சொல்லணும்னு தான் நெனச்சேன். ஆனா, திடீர்னு காருக்கு எங்க போவேன்னு விட்டுட்டேன்… நீயே ப்ளான் செஞ்சுட்ட.”


“எனக்கு தெரியாதா அஞ்சுமா, நல்ல வேலை ரஞ்சித் இன்னைக்கு காரில் வந்தான். இல்லைன்னா நாம வேற தான் யோசிச்சு இருக்கணும். இந்த முறை அமெரிக்காவில் இருந்து அங்கிள் வரட்டும், இந்த ஆப்ப தலையனுக்கு ஒரு முடிவு கட்டலாம். நீ கவலைப்படாதே.”


ஆப்ப தலையன் எனப்படும் ராஜாராமன்… நீலாங்கரையில் அஞ்சுவின் அண்ணா அபிஷேக் வாங்கி போட்டிருக்கும் அதிநவீன அடுக்கு மாடி வீட்டில் வாடகைக்கு குடி இருப்பவன். நடுத்தர வயது… அவருக்கே ஒரு பதிம் வயது பெண் குழந்தை உண்டு. ஆனால்… சபலக்காரன்! ஒரு முறை அண்ணனின் ஃபிளாட்டுக்கு அப்பாவோடு போன போது, அவன் தன்னை பார்த்த பார்வை சரி இல்லை என்பதை கண்டு கொண்டாள் அஞ்சு. அதுவும் கேசவன் கவனியாத போது அப்படி வழிந்தான் அந்த பாதகன்.


இப்போது இரண்டு ஆண்டுகளாக அஞ்சுவின் பெற்றோர் வருடத்தில் சில மாதங்களை அமெரிக்காவில் இரு பிள்ளைகளோடு கழிக்க, சரியாக அந்நேரம் பார்த்து ஃபிளாட்டில் ஏதேனும் பிரச்சனை என்று சொல்லி அஞ்சு அங்கே வரும் படி செய்து, அவளிடம் சில்மிஷம் செய்ய முயற்சிக்கும் குள்ளநரி தான் ராஜாராமன்.


முதல் முறை தெரியாமல் வந்த அஞ்சு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அவனிடம் சிக்காமல், எப்படியோ வெளியேறிய பின், சந்துவிடம் சொல்லி அழுதாள். இவ்விஷயத்தை அப்பாவிடம் தெரிவிக்க தயக்கமும் பயமும் இருந்ததால், நண்பனிடம் மட்டும் பகிர்ந்துக் கொண்டாள்.


ஆதிகேசவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பின் வேறு பிரச்சனைகள் எழவில்லை. சந்து பொறுத்துக் கொள்ள சொல்லவும், அஞ்சுவும் அமைதி காத்தாள். இப்போது மீண்டும் பெற்றோர் கிளம்பியவுடன், ராஜாராமன் தன் வேலையை ஆரம்பித்து விட்டான்.


இருவரிடையே இருப்பது பிறந்தது முதல் இருக்கும் நட்பாயிற்றே. தோழி சொல்லாவிட்டாலும், அவள் மூளையை போலவே தான் சந்துவின் மூளையும் யோசிக்கும், செயல்படும், அத்தனை ஆத்மார்த்தமான நட்பு அவர்களது. அனைத்திலும் கூட்டுக் களவாணிகள் அல்லவா!!


கதவை திறந்த ராஜாராமன், வீட்டு மணியை அழுத்தியது சந்து என்று பார்த்தவுடன் கடுப்பாகி விட்டார். தான் வாடகை செக் வாங்க வந்த விஷயத்தை சந்து தெரிவிக்கவும், பெரிய தொகை, அவனை நம்பி தர முடியாது என்று அந்த ஆள் மறுக்க ஆரம்பிக்க, கொஞ்சமும் தயங்காத சந்திரபிரகாஷோ, தற்காலிக பால்டிமோர்வாசிகளுக்கு உடனே அழைத்தான்.


சுருக்கமாக அஞ்சு, ஸ்கூட்டியில் இருந்து சறுக்கி விழுந்ததில், கால் சுளுக்கி விட்டது, வாடகை செக் வாங்க வந்தால், MR. ராஜாராமன் கொடுக்க மறுத்து விட்டதாக கேசவனிடம் உரிய விதத்தில் தெரிவித்தான். அந்த புறம் கேசவன் என்ன சொன்னாரோ, பேசியை முறைப்பாக ராமனிடம் நீட்டினான் சந்து.


“ஓகே சார்… சந்து தம்பியை நல்லா தெரியும். இருந்தாலும்… நம்ம பாப்பா போல வருமா? ஓகே சார்… கொடுத்துடறேன்.” என்ற ராமன், வாசலில் வைத்தே செக்கை கொடுத்து விட்டு கதவை கோபமாக அடைத்தார்.


கீழே இறங்கி வந்த சந்து, வீட்டு பால்கனியை நோக்கி பார்வையை செலுத்தி, அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு நிம்மதி அடைந்தவன், குடியிருப்புக்கு வெளியே ஒரு நாலு கட்டிடம் தள்ளி நிறுத்தி இருந்த காருக்கு வந்து, தோழியின் முகத்தின் முன் செக்கை ஆட்டினான்.


வீட்டுக்கு வரும் வழியில் நண்பர்கள் இருவருக்கும் அடக்க முடியாத சிரிப்பு. “தேங்க்ஸ்டா… மை ஸ்வீட் சந்து! நீ இருக்க சமாளிப்போம்னு நான் தைரியமா நினைச்சபடியே, ஒரு ஐடியாவை யோசிச்சு, எப்படியோ இந்த செக்கை வாங்கி கொடுத்துட்ட.” நெகிழ்ந்து போன அஞ்சனாவிடம்,


“அம்மா தாயே… நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்கோ, உன்னை பேங்க் கூட்டிட்டு போக சொல்லி அங்கிளோட ஆர்டர். இல்லைன்னா நாளைக்கும் என் போன் ஓயாம அடிக்கும்,” கெஞ்சுதலாக விண்ணப்பம் வைத்தவனிடம்,


“ம்ம்… ரொம்ப கஷ்டம் தான், இருந்தாலும் உனக்காக முயற்சி பண்றேன் ஜண்டு” என்றவளைப் பார்த்து முறைத்தான் சந்திரபிரகாஷ்.


“டேய் கார்லாம் கடன் வாங்கி ஆப்ப தலையனை சமாளிச்சுருக்கோம். ஒரு ட்ரீட் கிடையாதா?” டெம்போலாம் வெச்சு கடத்தி இருக்கோம் காமெடி டோனில் கேலி செய்த தோழியை முறைத்தாலும், அவளுக்கு பிடித்த உணவகத்தில் வண்டியை நிறுத்தியவனை பார்த்து “நண்பேன்டா…” என்று உற்சாகமாக கூவி கொண்டே காரில் இருந்து இறங்கிய அஞ்சனாவின் வாழ்வின் அடுத்த கட்டம் துவங்கும் நாள் நெருங்கியது.

இணையுமா……





Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT
bottom of page