top of page

இணை கோடுகள் 1

இணை கோடுகள்


கோடு - 1


பதிமூன்று ஆண்டுகள் கடந்து சென்று… வருடம் - 2022


உலகையே ஸ்தம்பிக்க செய்த கோவிட் அரக்கன் இப்போது முற்றிலும் மறையா விட்டாலும், மக்கள் சகஜமாக வாழ துவங்கி சில மாதங்கள் கடந்திருந்த நிலையில், ஒரு நாள் இரவு, நேரம் பதினொன்றறையை தாண்டியிருக்க, சென்னை அடையாரில் ஒரு முக்கிய சின்னமாக விளங்கும், பழம் பெருமை நிறைந்ததுவும், இன்றைய நவநாகரீக இளைஞர்களிடமும் மிக பிரபலமான ஐந்து நட்ஷத்திர ஹோட்டலான அபோட்டின் பாரில், வெளியே நிலவிய இரவின் நிசப்தத்துக்கு மாறாக, செவிப் பறையைக் கிழிக்கும் மேற்கத்திய இசை அதிர்ந்துக் கொண்டு இருந்தது.


தொங்கும் கிறிஸ்டல் அலங்கார சாண்டலியர் விளக்குகளில் இருந்து வீசிய மங்கிய ஒளியில் யுவன்களும், யுவதிகளும் தங்களை மறந்து, இசைக்கேற்ப உடலை நளினமாக அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.


ஒரு புறம் வெளிநாட்டு வகை மதுபானங்கள் தடையில்லாமல் ஆறாக பாய்ந்தோட, சுற்றுபுறத்தில் கவனமில்லாமல் மெல்லிய குரலில் பேசும் காதல் ஜோடிகளும், ஓய்வாக அமர்ந்து இசையை ரசிக்கும் ஒரு சிலரும், தன்னிலை மறந்து ஆடுபவர்களை ரசிக்கும் கூட்டமுமாக சொர்க்கம் பூமிக்கு வந்து விட்டதோ என்று எண்ணும் படியாக அந்த இடமே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் களைக் கட்டி இருந்தது.


“சியர்ஸ்…” ஆரவாரத்தோடு தத்தம் பானம் இருந்த கண்ணாடி கோப்பையை லேசாக முட்டி, உற்சாகம் கொப்பளிக்க அடுத்த ரவுண்ட் மதுவை உள்ளே இறக்கிக் கொண்டு இருந்தனர், அந்த பெரிய டேபிளில் அமர்ந்து இருந்தவர்கள்.


அதில் ஒருவன் மட்டும் கையில் ஒரு ஆரஞ்சு பழச்சாறு கோப்பையை பிடித்து இருந்தான். அவன் கண்கள் அந்த பாரை அளவிடும் வண்ணம் வலம் வந்தது.


“நீ திரும்ப சென்னைக்கு வந்தது, எங்க எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம் டூட்!”


“கலக்கிட்டீங்க ப்ரோ…”


“வெல்கம் பாக் மேட்…”


“லெட்ஸ் ராக் அவி…”


“குட் டு சீ யூ அவி…”


ஆளாளுக்கு ஆண்களும், பெண்களுமாக அவி எனப்படும் அந்த ஆரஞ்சு சாறு இளைஞனை பார்த்து கோப்பையை தூக்கி டோஸ்ட் செய்து அவனை வரவேற்கும் விதமாக பேசினர்.


“ஃபீல்ஸ் கிரேட் டு பி பாக் ஃபிரெண்ட்ஸ். ஐ மிஸ்ட் யூ ஆல்,” அவனும் பதிலுக்கு உரக்க சொல்ல… அவர்களின் உற்சாக ஆர்பரிப்பாலும், சிரிப்பாலும் அந்த இடம் மேலும் அதிர்ந்தது. அப்படியே டான்ஸ் ஃப்ளோர் நோக்கி சென்றவர்கள், மேடையில் பாடிக் கொண்டிருந்த இன்னிசை குழுவிடம், தங்களுக்கு பிரியமான பாடலை பாட சொல்லி விட்டு, அதற்கேற்ப தங்கள் நடனத்தை துவக்கினர்.


சில நிமிடங்கள் நண்பர்களின் நடனத்தை ரசித்த அவி, நீயும் வா என்பதாக கரம் அசைத்து அவர்கள் அழைப்பு விடுக்க… மறுப்பாக பதிலுக்கு கையை அசைத்தவன், அங்கே கேட்கும் தொலைவில் இவன் ஆணையை நிறைவேற்ற தயார் நிலையில் விறைப்பாக நின்றிருந்த கோட் சூட் போட்டவனை, சொடக்கிட்டு அழைத்து, “டேக் கேர் ஆஃப் எவிரிதிங் சிவா,” உத்தரவு பிறப்பித்து விட்டு,


“என்ஜாய் கைஸ்… காட் டு கோ,” எனவும், அவர்கள் “அவி… அவி… அவி” அவனின் பெயரை மந்திரம் போல உச்சரிக்க, சிறு சிரிப்பினூடே அங்கிருந்து கிளம்பிய அவி… அவ்யுக்த்… முப்பது வயது இளைஞன்.


தோற்றமே அவன் உயர் தட்டு பையன் என்று காட்டி விடும். ஆறு அடிக்கு மேல் உயரம், ஆளை அசரடிக்கும் வசீகரம்… காந்தமாய் இழுக்கும் கண்கள், சுருளான கேசம். சுருக்கமாக பெண்கள் ஒரு முறையேனும் அவனை திரும்பி பார்த்து விட்டே செல்வர். அவனுக்கு இருபத்தியொரு வயது இருக்கும் போது, மிகவும் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் தன் படத்தில் நடிக்க கேட்கும் அளவுக்கு, ஆளுமையும், கம்பீரமும், பொலிவும் வசீகரமும் நிறைந்தவன்.


பார்ன் வித் அ பிளாட்டினம் ஸ்பூன் வகையறாவை சேர்ந்த அவ்யுக்த், உண்மையில் ராஜா வீட்டு கண்ணுக் குட்டி. ஆம்… அவியின் அம்மா சுனந்தா - கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஒரு ராஜ பாரம்பரியம் மிக்க, ஜமீந்தார் வீட்டின் ஒரே வாரிசு.


அவியின் அப்பா மகேந்திரன் மட்டும் சளைத்தவரா? சென்னையில் பேர் பெற்ற மிக முக்கிய பழைய தொழில் குடும்பமான ஸ்வர்ணகீர்த்தி குழுமத்தை சேர்ந்தவர். அவரே ஹார்வர்ட் ரிடர்ன் தான். பணம் மட்டுமல்ல புகழும் சேர்ந்த இந்தத் தம்பதியரின் ஏகபோக ஒற்றை வாரிசு தான் அவ்யுக்த்.


அரசியல், தொழில் வட்டங்களில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பம் மகேந்திரனுடையது. அவர்கள் செய்யாத தொழிலே இல்லை எனலாம். தங்களுக்கென்று ஒரு சிறு நட்பு வட்டம் வைத்து, அதில் இருப்பவரோடு மட்டுமே நெருங்கி பழகும் அந்தஸ்து பார்க்கும் மேல் தட்டு வர்க்கம்.


அவ்யுக்த்துக்கு நண்பர்களாக இருக்கிறார்கள், அவ்யுக்த் நட்பு கரம் நீட்டி இருக்கிறான் என்றால் அவர்களும் அவன் அளவு இல்லை எனிலும், அதற்கு ஈடாக செல்வாக்கு நிறைந்த ஆளாக தான் இருக்க முடியும்.


தங்களை போல் ஒரு அளவுக்கு மேல் உயர் தட்டில் இருப்பவர்களோடு மட்டும், முக்கியமாக பழம் பெருமையும் பாரம்பரியமும் உள்ளவர்களிடம் தான் இவர்கள் தொடர்பு வைத்திருப்பர். புது பணக்காரர்கள் உட்பட மற்ற அனைவரையும் துச்சமாக பார்க்கும் ஸ்டேடஸ் பைத்தியம் பிடித்த கூட்டம்.


நடு இரவு நேரமாதலால் ட்ராபிக் இல்லாத சென்னையின் சாலையில் அனாயாசமாக தன் போர்ஷ் 911 காரை, லாவகமாக ஓட்டியவன், போயஸ் கார்டனில் இருந்த தங்கள் வீட்டை சென்றடைந்த போது, அவன் கார் நம்பரை வைத்தே இனம் கண்டுக் கொண்டு தானாகவே திறக்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்த வாயில் கதவு, சொர்க்க வாசலை போல திறக்க… அதில் நுழைந்தவன், தோட்டத்து பாதையில் ஓட்டி, ஏற்கனவே அங்கே நின்றிருந்த பென்ஸ், மற்றும் ஜாகுவாருடன் தன் போர்ஷ்ஷை நிறுத்தினான்.


காத்திருந்த காரோட்டியிடம் சாவியை வீச, அவன் அதை பத்திரமாக பிடித்தான். வழக்கம் போல் வண்டியை கராஜில் வைப்பது மட்டுமே அவன் பணி.


சந்தோஷமாக, விசில் அடித்துக் கொண்டே அவி படிகளில் தாவி ஏற, வீட்டுக் கதவை பவ்யமாக திறந்தார் வேலையாள்.


உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தவன் கவனத்தை அப்போது வந்து நின்ற வெள்ளை ரேஞ் ரோவர் இழுக்க, அதில் இருந்து இறங்கும் பெற்றோரைக் கண்டவன், ஹாலில் அவர்களுக்காக காத்திருந்தான்.


“ஹாய் அவி டியர்…” என்று வந்த சுனந்தாவை, அவன் அம்மா என்று யாரும் நம்ப மாட்டார்கள். அக்கா என்று சொல்லக் கூடிய இளமையான தோற்றம் உடையவர். பளிங்கு போல் மாசு மறுவற்ற சருமத்தில், அவருடைய வயதைக் குறிக்கும் சுருக்கங்கள் மருந்துக்கும் இல்லை.


ஸ்லீவ்லெஸ் டிசைனர் பார்ட்டி கவுனில், கழுத்து, கை, காதில் வைரங்கள் மின்ன, மகனின் அருகே வந்தமர்ந்த சுனந்தா, “பார்ட்டி எப்படி இருந்தது, நல்லா என்ஜாய் செய்தியா அவி?”


“என்ன கேள்வி இது நந்து? என் மகன் கொடுத்த பார்ட்டி டாப் கிளாஸ் தான்” மனைவியின் தோளில் கை போட்டு நெருங்கி அமர்ந்தார் மகேன்.


அன்று மாலை அவர்கள் கலந்து கொண்ட விருந்தும், அங்கு வந்திருந்தவர்கள் பற்றியும் சிறிது நேரம் பேசி விட்டு, மூவரும் இரவு வணக்கம் கூறி உறங்க சென்றனர்.


மகேந்திரனும், சுனந்தாவும் பெற்றவர்கள் என்றாலும் அவனின் பதினாறு வயது வரை அவியை கண்ணும் கருத்துமாய் வளர்த்தவர் அவனின் தந்தை வழி பாட்டியான ராஜேஸ்வரி தான்.


மகேந்திரன், அவரின் தந்தை ராஜேந்திரன் மற்றும் சுனந்தா ஆகியோரிடம் நிலவும் ஏகாதி பத்திய மனப்பான்மை, தம் அந்தஸ்தினரோடு மட்டுமே பழகும் பாங்கு போன்ற மேல் தட்டு கிறுக்குத்தங்கள் ஏதும் இல்லாத இனிமையான, மென்மையான ராஜேஸ்வரி, என்ன தான் ராஜ வம்சத்தினள் என்றாலும், அதி எளிமையாக ஒரு சாமானியனாகவே வாழ்ந்து மறைந்தவர்.


குழந்தை பிறந்தால் அழகு குறையும், என சுனந்தா பிள்ளை பிறப்பை தள்ளி போட, மகேந்திரனும் அதற்கு ஒத்திசைக்க… மருமகளிடம், “நீ ஒரு வாரிசை கொடு போதும் தாயி. அந்த பிள்ளையை நான் கருத்தா வளர்த்துக்கறேன். எனக்கு தெரிஞ்ச கேரளத்து வைத்தியமாருங்க இருக்காங்க. அவங்க உன்னை பேறு காலம் முழுசும் அருமையா பார்த்து, உன்னை பழைய நிலைக்கு கொண்டு வந்துடுவாங்க.” இப்படி கெஞ்சி தான், ஒரு வழியாக சுனந்தா சம்மதித்து, அவ்யுக்த் அந்த குடும்பத்து வாரிசாக அவதரித்தான்.


அவி பிறந்த சில மாதங்கள் வரை உடல் நலனில் அக்கறை காட்டி எல்லா பத்தியமும் இருந்த சுனந்தா மீண்டும் பார்ட்டி, க்ளப் பழக்கங்களை துவங்கி விட, வாக்கு கொடுத்தது போல குட்டி அவியின் வளர்ப்பை தன் பொறுப்பில் ஏற்ற ராஜி பாட்டி, வயிற்றுக்கான உணவை மட்டும் பெயரனுக்கு ஊட்டவில்லை. புராண, இதிகாச நீதி கதைகளை சேர்த்தே செவி வழி புகட்டி ஒழுக்க சீலனாக வளர்த்தார்.


ராஜி பாட்டியின் ஆதிக்கமும், செல்வாக்கும் அவியை மென்மையாக்கி, சரி, தவறு, நியாய அநியாயங்களை உள்ளபடி அவன் பேசவும், ராஜேந்திரன், மகேந்திரன், மற்றும் சுனந்தாவுக்கு இளையவனின் அப்போக்கு பிடிக்காததால், ராஜியின் தாக்கம் இனி அவன் மேல் விழாதிருக்க வலுக்கட்டாயமாக டேராடூனில் உள்ள மிக பிரபலமான போர்டிங் பள்ளியில் சேர்த்து விட்டனர்.


அவி அங்கே சேர்ந்த ஆறு மாதங்களில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் ராஜேந்திரன் அகால மரணமடைந்து விட்டார். கணவரை இழந்த ராஜேஸ்வரி பெரும் துக்கத்தில் மூழ்கி விட, பாட்டியை அப்படி காண சகியாத குட்டி அவ்யுக்த் அடம் பிடித்து மீண்டும் சென்னைக்கே வந்து விட்டான்.


மகன் மற்றும் மருமகளின் சில பழக்க வழக்கங்களை கண்டும் காணாமலும் ஒதுக்கினாலும், பெயரன் எந்த தீய வழியிலும் தடம் புரள கூடாது என்பதில் திடமாக இருந்த ராஜி பாட்டி, குடி, புகை பழக்கங்களின் பாதகங்கள், ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதாக சின்ன கதைகள் மூலம் நியாய தருமங்களை மட்டுமல்ல, தனி மனித மன கட்டுப்பாடு, ஒழுக்கத்தையும் பெயரெனின் மனதில் மிக ஆழமாக உருவேற்றி, அவனை செதுக்கி விட்டார்.


பாட்டியின் சொல்லே மந்திரமென வளர்ந்த அவ்யுக்த் எதிலும் ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பவனாக, சுய ஒழுக்கத்துக்கு அதி முக்கியத்துவம் தருபவனாக வளர்ந்திருந்தாலும், பண திமிர் மற்றும் அதிகார திமிர் இயல்பிலேயே ரத்தத்தில் ஊறியவனாகவே இருந்தான். அந்த ஒரு குணத்தை மட்டும் ராஜி பாட்டியால் சீர் செய்ய முடியாமலேயே போய் சேர்ந்து விட்டார்.


ராஜி பாட்டியின் இறப்பை தாளாதவன், ஒரு மாற்றத்துக்கு அமெரிக்காவுக்கு சென்று படிப்பை தொடர, பின் அங்கேயே பட்ட மேற்படிப்பையும் முடித்து, தொழிலையும் துவங்கி சிறப்பாக நடத்தி காட்டினான். வெளிநாட்டில் வாழ்ந்த பன்னிரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூட ராஜி பாட்டி வகுத்த வாழ்வு முறையில் இருந்து பிறழாமல் தன்னை காத்துக் கொண்டான்.


சுய கட்டுப்பாடு நிறைந்தவன், நட்புக்கு உயிர் கொடுப்பான். அதே நேரம் பகை என்றால் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடவும் மாட்டான்.


தன் அறைக்கு வந்த அவி, அன்றைய அசதியும், அலைச்சலும் தீரும் வண்ணம் ஜக்கூசியில் சிறிது நேரம், பொறுமையாக குளித்தான். இரவு உடையை மாட்டிக் கொண்டு, மெத்தையில் விழுந்த நொடியே உறங்கியும் விட்டான்.


காலை ஆறு மணிக்கு எழுந்தவன், அன்றைய தினத்தை துவக்கும் முகமாக வீட்டிலேயே இருக்கும் அனைத்து நவீன உபகரணங்களும் அமையப் பெற்ற ஜிம்மில் உடற்பயிற்சி செய்து, குளித்துக் கிளம்பினான்.


சரியாக ஒன்பது மணிக்கு, முன் தின இரவு நண்பர்களோடு ஜாலியாக கழித்த அதே அபோட் ஹோட்டலினுள் அவியின் ஆடி கார் நுழைய, அவன் வருகைக்காக ஆவலாக காத்திருந்த ஊழியர்கள் தம்மிடையே ஒரு சிறு பரப்பரப்போடு அவனை எதிர்க் கொண்டனர்.


ஊழியர்களுக்கு பதில் வணக்கம் சொல்லும் முகமாக வெறுமே தலையை அசைத்தவன் முகமோ, அத்தனை இறுக்கத்தை காட்டியது கண்டு ஊழியர்களுக்கு கிலியாக இருந்தது.


காலை நேர வெளிச்சத்தில் அந்தக் கட்டிடத்தை மீண்டும் ஒரு முறை முழுதுமாக அராய்ச்சியாக பார்த்தவன் மனம் கனத்தது. சிறு வயது முதல் எண்ணற்ற தடவை அவன் வந்துப் போன அந்த ஆங்கிலேய காலத்து கட்டிடத்தில் நுழைந்தவனின் மனதில் முன்பு தோன்றும் அந்த பரவசம் இன்று நிச்சயம் இல்லவே இல்லை.


ஒரு பார்வையில், அவனின் காரியதரிசி சிவா, “திஸ் வே சார்” அவனுடைய அலுவலக அறைக்கு அவியை அழைத்து சென்றான்.


கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக ஒரே குடும்பத்தின் சொத்தாக இது நாள் வரை இருந்த அந்த ஹோட்டல் இன்று இவனுக்கு சொந்தம். ஆனால், புதிதாக ஒரு சொத்தை வாங்கிய குதூகலம், புது வியாபாரத்தில் அடி வைக்கும் போது எழ கூடிய அந்த படபடப்போ, மகிழ்ச்சியோ அவ்யுக்த்துக்கு துளியும் இல்லை.


அவன் உள்ளம் பிரதிபலித்த உணர்வே வேறு! பட்ட அவமானம் அப்படி பட்டதாயிற்றே! ‘ஏதோ இந்த மட்டும் ஹோட்டலை என் கைப் பிடியில் கொண்டு வந்து, கொஞ்சத்துக்கேனும் என் காயத்துக்கு மருந்து இட்டுக் கொண்டேனே’ என்று மனதில் நினைத்தவன், அடுத்து செய்ய வேண்டியவைகளை பற்றி சிவாவுக்கு வரிசையாக ஆணைகள் பிறப்பித்தான்.


காலை ஒன்பதரை மணிக்கு, ஹோட்டல் பாங்க்வெட் ஹாலில் சிறு பரபரப்பு…


அபோடில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் பிரதிநிதிகளாகிய வெவ்வேறு துறைகளின் தலைமை மேனேஜர்கள், ஆபரேஷனல் ஹெட், அவர் தம் சில பல காரியதரிசிகள், ஒரு வித கலக்கத்தோடு அங்கே குழுமியிருந்தனர். அவர்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தவர்கள், அந்த ஹாலினுள் அவ்யுக்த் நுழையவும், கப்பென்று வாயை மூடிக் கொண்டு, மரியாதையாக எழுந்து நின்ற போது, ஹாலில் சில நொடிகள் மயான அமைதி நிலவியது.


அவர்களை அமருமாறு சைகை செய்தவனின் பார்வை அந்த பெரிய சபையின் ஒவ்வொரு இடுக்கையும் விடாது சுழன்று வந்து அவன் முன் இருந்தவர்களில் மையம் கொண்டது. அவனின் தோற்றத்தில் நிதானம் இருந்தாலும், விழி வீச்சின் கூர்மையை கண்ட பலருக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது என்றால் மிகையல்ல. அங்கு நிலவிய அமைதி அச்சுறுத்துவதாக இருந்தது தான் உண்மை.


“டியர் ஸ்டாஃப், இனி எங்களோட சுவர்ணகீர்த்தி குழுமத்தின் பொறுப்பில் அபோட் ஹோட்டல் செயல்படும்னு உங்களுக்கு ஏற்கனவே தெரிய வந்திருக்கும். புது மேனேஜ்மென்ட் என்றாலும், ஹோட்டலோட பெயரை மாற்றும் எண்ணம் எனக்கில்ல. இனி எங்க தலைமையில் இங்க நடக்க போற சிலதை சுருக்கமா இப்போ சொல்றேன்.”


அவியின் குரலில் ஒரு அழுத்தம், வார்த்தைகளை அவன் உதிர்த்த விதம் எல்லாம் தாண்டி அவன் சொல்ல போகும் விஷயம் அவர்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அசைக்க கூடிய ஷக்தி கொண்டதென்பதால் ஒரு எதிர்பார்ப்போடு அனைவரும் உள்வாங்கி கொண்டிருந்தனர்.


“கடந்த சில ஆண்டுகளில் ஹோட்டல் கட்டிடம், சரி வர பராமரிக்கபடாததால், முதல் நடவடிக்கையா அடுத்த நான்கு மாதமும், பகுதி வாரியாக முழு வீச்சில் மராமத்து மற்றும் புதுப்பிக்கும் பணி நடக்க போகுது. அதனால, இனி எந்த புது ஃபங்க்ஷன் புக்கிங்கும் செய்ய வேண்டாம்.”


“காலத்துக்கேற்ப நவீனமயமாக்க போறதால, வெளிதோற்றத்தில் மட்டுமில்ல, அட்மினிஸ்ட்ரேஷனிலும் நிறைய மாறுதல்கள் நடக்கவிருக்கிறது. முடிவில், புது பொலிவோடு, அதே நேரம் பழம் பெருமை சற்றும் குன்றாமல், முற்றிலும் மாறுபட்ட வகையில் அபோட் இனி திறம்படவும், லாபகரமாகவும், நடத்தப்படும்.”


அவியின் கம்பீரத் தோற்றமும், அதிகாரம் தொனிக்கும் பேச்சையும் கேட்டவர்கள், மாறுதல்கள் என்ற சொல்லை கேட்டதும் பயம் பீடிக்க கட்டுண்டிருந்தனர் என்பது தான் நிஜம்.


ஸ்வர்ணகீர்த்தி க்ரூப் பற்றி மட்டுமல்ல அதன் சேர்மன் மகேந்திரனை பற்றியும் அனைவரும் நன்றாகவே அறிவர். பிசினெஸ் உலகில் முடிசூடா மன்னன் மட்டுமல்ல, ரூத்லெஸ் என்று சொல்லக் கூடிய வகையில் ஈவு இறக்கம் பார்க்காத அக்மார்க் முதலாளி மகேந்திரன் என்றும் கேள்விப் பட்டிருக்கின்றனரே! அப்படிப்பட்டவர் மகன் ஆயிற்றே! புலிக்கு பிறந்தது பூனையாக இருக்குமா?


தந்தையைப் போல என்ன, அவருக்கும் பல அடிகள் மேலே தானே இருப்பார்! ஹும்… தங்களுடைய முன்னால் முதலாளியை போல் இரக்க சுபாவம் இவர்களிடம் இல்லை என்று அனைவருக்கும் ஏற்கனவே ஒரு புரிதல் இருக்க, அவர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் வராது போக, ‘யாருக்கெல்லாம் வேலை வேட்டு விழப் போகிறதோ...’ என்ற கிலி அகலாமல், தத்தம் வேலைகளை கவனிக்க சென்ற ஊழியர்கள், பாவம்… கருணையே உருவாக இருந்த முன்னாள் முதலாளி அவர்களை நட்டாற்றில் கை விடவில்லை என்று அறியாதவர்களாக தமக்குள் மென்குரலில் பேசியும், புலம்பியும் பணிகளை பார்த்தனர்.


தங்கள் ஸ்வர்ணகீர்த்தி க்ரூப்பை சேர்ந்த மிகவும் நம்பகமான, அதி திறமையான மேனேஜ்மென்ட் ஆட்களை தக்க பணிகளில் தலைமை பொறுப்பில் அமர்த்தியவன், தான் அவர்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை அவர்களுக்கு தெளிவாக்கி விட்டு, அனைவற்றையும் மேற்பார்வையிடும் முதன்மை பொறுப்பில் சிவாவை விட்டவன், அவர்கள் குழுமத்தை சேர்ந்த மற்ற தொழில்களை கவனிக்கும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினான். அவ்யுக்த் கிளம்பியவுடன் தான் சிவா மூச்சை இழுத்து வெளியே விட்டான்.


*******************


அவி கிளம்பிய சில நிமிடங்களில், சிவாவின் அறைக் கதவு தட்டப்பட்டது.


“கம் இன்” என்று சிவா நிமிர்ந்து போது, வியர்வையில் குளித்த நிலையிலும், டிப்டாப்பாக தன் முன் காட்சியளித்த இளைஞன் யார் என்பது போல் நெற்றியை சுருக்கி பார்க்க,


“குட் மார்னிங் சார். ஐ அம் சூரஜ், Mr. விட்டலோட பெர்சனல் செகரட்டரியா இருந்தேன். சாரி சார், வீட்ல ஒரு துக்கம், அதனால ஒரு வாரம் லீவ்ல இருந்தேன். இன்னைக்கும் ஹாஃப்ஃப டே பெர்மிஷன் போட்டிருந்தேன். வந்தவுடனேயே, உங்ககிட்ட ரிப்போர்ட் பண்ணும் படி கீழ ரிஷப்ஷன்ல சொன்னாங்க.”


சிரித்த முகமாக தனக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தவனை ஏற இறங்க பார்த்து விட்டு, “ஓ... Mr. சூரஜ்! உங்களைப் பத்தி சின்னவர் கொஞ்ச முன்ன கூட கேட்டார்.” என்றவன், அதன் பின் ஒரு நொடியை கூட வீணாக்காமல், சில பல சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டான்.


வேலை பார்ப்பதில் சிவாவின் வேகம் கண்டு சூரஜ் பயந்து தான் போனான். சந்தர்ப்பம் கிடைத்த போது அதை சொல்லவும் தயங்கவில்லை.


“ஹ ஹா ஹா…” என்று வாய் விட்டு சிரித்த சிவா, “என்னை பார்த்து பயமா… சரியா போச்சு போங்க சூரஜ். நீங்க இன்னும் சின்னவரை மீட் பண்ணல. ஜஸ்ட் ஒரு இருபத்தினாலு மணி நேரம் அவரோட வேலை செஞ்சீங்கன்னா தான், டென்ஷன்னா என்னன்னு உங்களுக்கு நிஜமா தெரிய வரும்.” என்று சொல்லி, சூரஜ்ஜின் வயிற்றில் மேலும் புளியை கரைத்தான்.


அப்போது, யாரோ கோபமாக கத்தும் சத்தம் சிவாவின் அறைக்கு வெளியே கேட்க, இருவருமே விரைந்து அங்கே சென்றனர்.


“எங்கடா அவி?” சிவாவின் சட்டையை கொத்தாக பற்றினான் கத்தியவன்.


“சார்… அவரோட ஆஃபீஸ் போய்ட்டார்.” சிவா திணறிக் கொண்டு சொல்லவும், அவன் சட்டையை வெடுக்கென்று விட்ட புதியவன், புயலாக அங்கிருந்து வெளியேறினான்.


அபோட் வாசலைக் புதியவன் தாண்டும் முன்பாகவே, சிவா தன் முதலாளியை அழைத்து விஷயத்தை கடத்தி விட்டான்.


தன் அறைக்குள் சென்ற சிவா, ஒன்றும் நடவாதது போல் மற்ற வேலையை கவனிக்க ஆரம்பித்தான். எல்லாவற்றையும் பார்த்து அதிர்ச்சியில் இருந்த சூரஜ்ஜை, சிவாவின் அழைப்பு கலைக்க, அறைக்குள் நுழைந்தவனுக்கு தலை சுற்றும் போல் இருந்தது.


‘ஒரு வாரம்… ஏழே நாள் தான் அவன் வேலைக்கு வரவில்லை. அதற்குள் ஹோட்டல் அபோட், தாஸ் குழுமத்திடம் இருந்து, ஸ்வர்ணகீர்த்தி குழுமத்துக்கு சத்தமில்லாமல், அதுவும் வெளியே செய்தி கசியாமல், கிட்டத்தட்ட இரவோடு இரவாக கை மாறி விட்டது.


சற்று முன் கோபமாக வந்து, கத்தி விட்டு போன முன்னாள் முதலாளி விட்டல் தாஸின், கடைக்குட்டியும், செல்ல மகனுமான ஹரிஷின் முகமே, அவருக்கும் இந்த விவரமெல்லாம் தெரியாது என்பதையும், அவரின் அதிர்ச்சியையும் சொல்லாமல் சொல்லியது. இது எப்படி சாத்தியம்?’ எதுவும் புரியாமல், இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவன் தோளை தட்டி,


“நீ இதுவரை விட்டல் சார்கிட்ட வேலை செஞ்சதுக்கும், இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சூரஜ். ஏன், எதுக்கு, எப்படின்னு குழம்பாம, நாம வெறும் கை நீட்டி சம்பளம் வாங்கும் ஆளுங்க என்பதை மட்டும் மனசில் பதிய வெச்சு, கண்டினியூ பண்ணுங்க. சின்னவர் சரியான முன் கோபி… அவர் மனசுக்குள்ள நினைக்கறதை, மந்திரத்தால நாம புரிஞ்சுக்கணும் என்று எதிர்பார்ப்பார். அதாவது, ஆரஞ்சுன்னு அவர் சொல்றதுக்குள்ள, ஜூஸா கொண்டு வந்து அவர் முன்ன நாம வைக்கணும், என்ன நான் சொன்னது புரிஞ்சுதா?”


சிவாவின் பேச்சில், ‘ஐயோ இது என்னடா?’ என அதிர்ந்தாலும், சரி என்பது போல் சூரஜ் மெதுவே தலையசைக்க, ஓரளவுக்கு அவன் மனநிலை புரிந்தவனாக,


“விட்டல் சார் ரொம்ப அமைதியானவர், பொறுமைசாலி, இளகிய மனசு உள்ளவர்னும், தன் கீழ வேலை பண்றவங்களை குடும்பத்துல ஒருத்தரா நடத்துவார்னும், அன்பா தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார்னும், நிறைய கேள்விப்பட்டுருக்கேன்.”


ஆம் என்பதாக சூரஜ் வேகமாக தலையசைக்க, “இங்க பாரு சூரஜ்… அதெல்லாம் இறந்தக் காலம்! செய்யற வேலைன்னு மட்டுமில்ல மத்த எல்லா விஷயத்துலயுமே எங்க பெரியவரும் சரி, சின்னவரும் சரி ஒரே மாதிரி தான்!”


“எப்படின்னு…” சூரஜ் முடிக்காமல் தயக்கத்தோடு மிரண்டு பார்க்க,...


“அதாவது, அவங்க முதலாளி, என்கிற எண்ணம் ஜாஸ்தி. நாமெல்லாம் அவங்கக்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற வெறும் வேலையாள் மட்டும் தான். எதிர் கேள்வி கேட்காம, வாங்குற பணத்துக்கு வஞ்சகம் இல்லாம வேலை பண்ணனும். சிரிச்சு பேசறதோ, ‘என்னப்பா வீட்ல துக்கமாமே’ன்னு விசாரிக்கறதோ, இதெல்லாம் அவங்க ரெண்டு பேருக்கிட்டயும் கிடையாது. உன் பெர்சனல் வாழ்க்கையை ஆஃபீசுக்கு வெளிய கழட்டி வெச்சுட்டு வந்துடணும். அடிமைன்னு வெளிப்படையா சொல்லாட்டியும் கிட்டத்தட்ட அது தான் உண்மை!”


ஆவென முழித்தவாறு ‘இதையெல்லாம் சொல்லி ஏன் இவர் பயமுறுத்தறார்?’ மனதில் நினைப்பதாக எண்ணி சூரஜ் மெல்ல முணுமுணுக்க,


“உன்கிட்ட ஏன் விலாவரியா சொல்றேன்னா, உன் மூலம் மத்த எம்ப்லாயிஸ்க்கும் இந்த செய்தி பரவும். அவங்களும் சுதாரிப்பா இருப்பாங்க என்ற நல்ல எண்ணம் தான்.”


“சார்… ஒரே ஒரு சின்ன டவுட்,” தயக்கமாக பார்த்தவனிடம்,


“ம்ம்… கேளு சூரஜ்,” இன்றே இவனுக்கு இந்த வேலையின் தீவிரத்தை புரிய வைக்கும் நோக்கோடு சிவா சீரியசாக சொல்லவும்,


“அது சிவா சார், எப்படி சார், இத்தனை வருஷம் இவங்களோட வேலை செய்யறீங்க? இன்னும் முழுசா பாதி நாள் கூட முடியல, அதுக்குள்ள எனக்கு லூஸ் மோஷன் ஆகிடும் போல ஃபீல்!” அழுது விடும் தொனியில் சூரஜ் முகத்தை சுருக்கவும்,


“ஹ ஹா ஹா…” சிவாவின் வெடி சிரிப்பில் மேலும் கலவரமானவனாக, “ஐயோ சார்… சின்னவர்கிட்ட சொல்லிட மாட்டீங்களே?” பாவமாக பார்த்தவனிடம்,


“எல்லாம், பணம் தான் காரணம் ப்ரோ. அவங்க கொடுக்கற நல்ல சம்பளம், அப்புறம் மத்த சலுகைங்க எல்லாம் அனுபவிக்கறோமே! நாய் வேஷம் போட்டாச்சு… குரைக்க யோசிச்சா வேலைக்காகாது சூரஜ். அதே போல அந்த நாயோட விசுவாசத்தையும் காட்ட தவறக் கூடாது. இங்க துரோகிங்களுக்கு எப்போவும் இடமே இல்ல.”


அந்த கடைசி வாக்கியத்தில் இருந்த அழுத்தத்தில் சூரஜ் உறைய, “சரி… வா வேலையை பார்ப்போம்…” என்ற சிவா, அதன் பின் ஒரு நொடியையும் வீணடிக்கவில்லை.


*****************************************************


நுங்கம்பாக்கம்


ஸ்வர்ணகீர்த்தி குழுமத்தின் தலைமையகத்தினுள் அடிபட்ட நாகம் போல் கோபமாக சீறிக் கொண்டு நுழைந்த ஹரிஷ்ஷிடம், அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் அவியை பார்க்க முடியாது என்று அங்கிருந்த வரவேற்பு பெண் தன்மையாகவே மறுக்க, அதை பொருட்படுத்தாமல் கத்தியவனை, வரவேற்பறையில் இருந்த வேறு சிலர் தடுக்க முயல, அவன் திமிற, சிறு கைகலப்பு நிகழ்ந்தது.


அப்போது அங்கிருந்த இன்டர்காம் ஒலித்தது. “உங்களுக்கு தான் சார்…” ரிசப்ஷனிஸ்ட் பேசியை ஹரிஷிடம் நீட்டவும், அதை அலட்சியமாக காதுக்கு கொடுத்தவனிடம், மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, ஆத்திரத்தில் பேசியை விசிறி அடித்தவன், அங்கிருந்து புயலென வெளியேறினான்.


இப்படி அவ்யுக்த் இருக்குமிடம் என்று அவனுக்கு சொல்லப்பட்ட இடங்களுக்கெல்லாம் அலைந்து திரிந்த ஹரிஷுக்கு மாலை ஆறு மணிக்கு, ஒரு வழியாக விஸ்வரூப தரிசனம் தந்தான் அவ்யுக்த் மகேந்திரன்.


*******************************************************


இடம் - காலை ஹரிஷ் வந்த, அவர்களுக்கு நேற்று வரை சொந்தமாக இருந்த அதே ஹோட்டல் அபோட்.


“டேய் அவ்யுக்த்…” கர்ஜித்தவாறே அறைக்குள் நுழைந்த ஹரிஷ்ஷை, புழுவைப் போல் அலட்சிய பார்வை பார்த்த அவியின் உதட்டில் இப்போது வெற்றி களிப்பை குறிக்கும் நக்கல் சிரிப்பு இருந்தது.


லண்டனில் இருந்து அன்று காலை தான் சென்னைக்கு திரும்பி இருந்தான் ஹரிஷ். பத்து மணி நேர விமான பயணம் செய்த களைப்பும், காலையில் இருந்து அவியை தேடி அலைந்து திரிந்ததில் கசங்கிய உடையும், நலுங்கிய தோற்றமுமாக, சோர்வாக ஓய்ந்து இருந்தான்.


ஹரீஷின் நிலைக்கு நேரெதிராக இளவரசனின் கம்பீரத்தோடு அமர்ந்திருந்த நாற்காலியை ஒய்யாரமாக அசைத்து கொண்டிருந்த அவ்யுக்த், ஒரு நாளெல்லாம் பல்வேறு அலுவல்களை கவனித்தும், முக்கிய வியாபார முடிவுகளை எடுத்த சோர்வு சற்றும் தெரியாமல் உற்சாகமாக, புத்துணர்வோடு காட்சி அளித்தான்.

“உன்கிட்ட பேச வேண்டிய அவசியமே இல்லை ஹரிஷ். தேவைப்பட்டா, எதுவா இருந்தாலும் என் லாயர், உன்கிட்ட நேரடியா டீல் பண்ணுவார். என் நேரத்தை வீணடிக்காம கிளம்பு.” தயவு தாட்சண்யமில்லாமல் வந்து விழுந்தன வார்த்தைகள்.


“பழி வாங்கிட்ட இல்ல அவி… நடந்த எதுவும் என்னை பாதிக்கலைன்னு வெளிய காமிச்சுக்கிட்டாலும், மூணு வருஷம் பதுங்கி இருந்து, நான் எதிர்பார்க்காதப்ப, மறைஞ்சு இருந்து தாக்கிட்ட இல்ல. நீ எல்லாம் ஃபிரெண்டாடா?”


“ஹா ஹா ஹா… ஃபிரெண்ட்ஷிப் பத்தி பேசற தகுதி உனக்கில்ல ஹரிஷ். எல்லாம் உன்கிட்ட கத்துக்கிட்ட பாடம் தான். எப்படி... உன்னை மிஞ்சிட்டேன் இல்ல?” அவி உரக்க சிரித்தது, அறையெங்கும் எதிரொலித்தது.


“அப்பாவுக்கு எப்போவும் உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர்னு எனக்கு நல்லாத் தெரியும். பணப் பிரச்சனை இருப்பது தெரிஞ்ச நீ, உன் சாமர்த்தியமான பேச்சில் அப்பாவை வளைச்சு, அவரோட நாற்பது பர்சன்ட் ஷேர் வாங்கினது பெரிய விஷயமில்ல! ஆனா… ஸ்வேதாக்கா, தினேஷ் அண்ணா!! அவங்களை எப்படிடா வளைச்ச? அண்ணா ஒரு நாளும் ‘அபோட்...’ உன் கைக்கு வர விட்டு இருக்க மாட்டான். என்னடா பண்ண அவரை?”


“பணம்… மணி, துட்டு கண்ணா… துட்டு! கேள்விப்பட்டு இருப்பியே ஹரிஷ், பணம் பத்தும் செய்யும்! உன் அப்பா உயிரோட இருந்தப்ப, அவர் கண் முன்னாடி தான் உன் அக்காவும், அண்ணாவும் கூட கையெழுத்து போட்டாங்க. எல்லாமே லீகலா தான் நடந்து இருக்கு.”


“இனி நீ ஒரு பிரச்சனையும் பண்ண முடியாது. இப்போ அபோட்டோட என்பது பர்சன்ட் ஷேர் என்கிட்டே. மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர் என்பதால் எல்லா அதிகாரமும் என்னோடது தான். உன் இருபது பர்சன்ட் ஷேரை நீ விக்க ஆசைப்பட்டா, என் வக்கீலை பார். இல்லையா, அடுத்த போர்ட் மீட்டிங்க்கு, ஒரு ஷேர் ஹோல்டரா உனக்கும் நோட்டிஸ் வரும். அப்போ வந்து அட்டென்ட் பண்ணிட்டு போ.”


“டேய் அவி… உன்னை...” ஆவேசமாக எழுந்த ஹரிஷை பார்த்து இகழ்ச்சியான புன்னகையை சிந்திய அவி,


“ஒரு காலத்தில் பெயரளவுக்கு எனக்கு ஃபிரெண்ட்டா இருந்த நீ செய்த கேவலமான காரியத்துக்கு, உன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கணும். ஏதோ, உன் நல்ல நேரம்! உன் அப்பா முகத்துக்காக பார்த்து தான், இதோட விடறேன்.” அவி பேசி முடிக்கவும், சரியாக கதவு தட்டப்பட்டது.


“கம் இன்…” என்றவன் குரலை அடுத்து, உள்ளே நுழைந்த நான்கு செக்யூரிட்டி ஆட்களுக்கு அவி கண்ணசைக்க,


“ஓகே சார்… வாங்க போகலாம்…” என்று ஹரிஷை நெருங்கினர் அவர்கள்.


இதே ஹரிஷ், ஒரு காலத்தில், அப்பாயின்ட்மென்ட் என்ன, கதவைக் கூட தட்டாமல் அவியின் அறைக்குள் சுதந்திரமாக நுழையக் கூடிய நெருக்கமான உரிமையை உடையவன். இன்றோ, முன்பு அவனுக்கு சிரம் தாழ்த்தி, சலாம் போட்ட பாதுகாப்பு ஆட்களாலேயே குண்டுக்கட்டாக வெளியேற்றப்படுகிறான்.


இனி அவனால் எதுவும் செய்ய முடியாது என்பது புரிய, இயலாமையால் பொங்கிய வெறியும், கோபமும் தவிர வேறெந்த உணர்ச்சியும் ஹரிஷின் உள்ளத்தில் அந்த நொடி இல்லை. எதிர்ப்பை காட்ட திராணி இல்லாமல் போக, மௌனமாக வெளியேறினான்.


எதிரியை வென்று விட்ட சந்தோஷம் துளியும் அவிக்கு இல்லை. அன்று அவன் பட்ட அவமானம், இன்று ஹரிஷ் அனுபவிக்கும் வலியை விட பன்மடங்கு அதிகம். ‘என்றாவது அதை மறக்க முடியுமா?’ என்று நினைத்தவன், கசப்பான நினைவுகளை சட்டென்று ஒதுக்கி வைத்து விட்டு, வேலையில் ஆழ்ந்தான்.


கோடுகள் இணையுமா….
Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page