இணை கோடுகள்
கோடு - 1 தொடக்கவுரை (Prologue)
வருடம் - 2009
சென்னை அடையார் இந்திரா நகரில் ஒரு குறுகலான முட்டு சந்தில் இருந்த பழைய ஓட்டு வீட்டில், காலை நேர பரபரப்பு...
“இன்னைக்கு இன்ஸ்பெக்க்ஷன் இருக்கறதால சாயங்காலம் வர நேரமாகும் சுலோ."
“சரிங்க, வேலை மும்முரத்துல லஞ்ச் சாப்பிட மறந்துடாதீங்க, பார்த்து வண்டி ஓட்டுங்க,” இன்முகமாக கணவனுக்கு விடை கொடுத்த சுலோச்சனா, பெசன்ட் நகர் அரசினர் மேனிலை பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணி புரிகிறார்.
“வரேன் ம்மா, ப்பா,” உள்ளறையில் இருந்த பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு லஞ்ச் பேகை எடுத்து தோளில் மாட்டிய ஆதிகேசவன், தரமணியில் இருக்கும் பொது பணித் துறை அலுவலகத்தில் முதன்மை பொறியாளராக இருக்கிறார்.
“சாயங்காலம் மறக்காம அந்த மூட்டுவலி தைலத்தை வாங்கிட்டு வந்துடு கேசவா” செருப்பில் காலை நுழைத்துக் கொண்டிருந்த மகனிடம் நினைவுறுத்திய அம்மா வசந்தாவிடம், “சரிம்மா” ஒப்புதலாக கேசவன் தலையசைக்கும் போதே,
“இந்தா வசு, நான் தான் நாளைக்கு அந்த பக்கம் போறப்ப வாங்கிட்டு வரேங்கறேன்ல, சும்மா பிள்ளையை தொந்தரவு பண்ணிட்டு,” மனைவியை அதட்டிய கேசவனின் அப்பா வெங்கடேசனுக்கு, பூர்வீகம் கும்பகோணத்துக்கு அருகே திருநாகேஸ்வரம்.
நடுநிலை பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கடேசனுக்கு சம்பாத்தியம் அதிகமில்லை. தலைக்கு மேல் சொந்தமாக கூரை கூட இல்லாமல் வாழ்க்கையின் பெரும் பகுதியை திருநாகேஸ்வரத்தில் கிருஷ்ணா, ராமா என பெருமாளின் பேரை ஜபித்து ஓர் வாடகை ஓட்டு வீட்டில் கழித்து விட்டவர்.
கான்க்ரீட் காடான சென்னையில் காலூன்றி விட்ட ஒரே பிள்ளையான ஆதிகேசவனின் குடும்பத்தோடு, இப்போது சில ஆண்டுகளாக தான், அந்த முதிய தம்பதிகள் ஒன்றாக வசிக்கின்றனர்.
கந்தலானாலும் கசக்கி கட்டி, ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்த வெங்கடேசன் தம்பதிக்கு தினமும் ஒப்பிலியப்பனை தரிசிக்கவில்லை என்றால், அன்றைய பொழுதே ஓடாது. அப்படிப்பட்டவர்களுக்கு சென்னை சரி வரவில்லை.
அடி மட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறிய வெங்கடேசனுக்கு திருமணம் கை கூடியதே தாமதமாக தான். அதன் பின்னும் உடனே பிள்ளை வரம் அமையாது தவமிருந்து பிறந்த கேசவனை வளர்த்து படிக்க வைத்து ஒப்பேற்றுவதற்குள்ளாகவே மூச்சு முட்டி விட்டது. பணி ஓய்வுக்கு பின் அக்கடா என நிம்மதியாக இருக்க முடியாமல் வயோதிகத்தின் காரணமாக அழையாமல் வரும் உடல் உபாதைகள் படுத்தி எடுக்க மருத்துவ செலவுகள் ஏகத்துக்குமாக எகிறி விட்டது.
எதிர்பாராத ஆஸ்பத்திரி செலவுகளாலும், பெற்றோருக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் சென்னைக்கும், திருநாகேஸ்வரத்துக்கும் அலைந்து திரிந்ததில் போக்குவரத்து செலவுகள் கூடி விட்டதால் பொருளாதார சிக்கல்கள் முளைக்க, பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகள் வேறு கழுத்தை இறுக்க, பெற்றவர்களின் தனி வாசத்தால் கூடி விட்ட பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க திராணி அற்றவராக அவர்களை வற்புறுத்தி தங்களோடு சென்னையில் வசிக்க அழைத்து வந்து விட்டார் கேசவன்.
மகனின் கஷ்டம் புரிந்ததால், இட மாற்றத்தை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டு வெங்கடேசன் தேறி விட்டாலும், வசந்தாவால் அப்படி முடியவில்லை. அதன் வெளிப்பாட்டை அவ்வப்போது மகனிடமும், அவன் குடும்பத்தாரிடமும் காண்பிப்பார்.
சுலோச்சனாவுக்கும் கும்பகோணம் பக்கம் தான் பூர்வீகம். அவருடைய பெற்றோர் தற்சமயம் மகனுடன் மும்பையில் வசிக்கின்றனர்.
“ம்மா, சீக்கிரம் டிஃபன் வைங்க, லேட்டாகுது” சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த செயின்ட் மைக்கல்ஸ் அகாடமி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் செல்ல மகள் அக்க்ஷயாவுக்கு இட்லியை எடுத்து வைத்து, சாம்பாரை ஊற்றி, மேலே கொஞ்சம் நெய்யை விட்டவரிடம்,
“ம்மா, இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு, நான் அப்படியே லைப்ரரி போயிட்டு லேட்டா தான் வருவேன்,” சொல்லிக் கொண்டே சாப்பிட அமர்ந்தான் ஐ.ஐ.டியில் கெமிக்கல் இஞ்சினியரிங் இறுதி ஆண்டு படிக்கும் மூத்தவன் அபிஷேக்.
“உனக்கு ப்ரேக் டைம் ஸ்நாக், சாயங்காலத்துக்கு டிஃபன், எல்லாம் பேக் பண்ணிட்டேன் அபி,” மகனுக்கும் ஆசையாக உணவை பரிமாறியவர், ஆஸ்திக்கு ஒரு மகன், ஆசைக்கு ஒரு மகள் என திட்டமிட்டு தான் மக்கள் செல்வத்தை பெற்றார். ஆனால்… இவர்களுக்கு மேல் இருந்த அந்த ஆண்டவன் வேறு கணக்கு போட்டு எதிர்பாரா அதிர்ச்சியாக மூன்றாவதாக ஒரு குழந்தையை அனுகிரகித்து விட்டார்.
“அஞ்சு, இன்னும் என்ன பண்ற? பாரு அக்கா ரெடி ஆகிட்டா! சீக்கிரம் வா,” கடைக்குட்டி(குரங்கு)க்கு குரல் கொடுத்த சுலோ, அப்படியே “நீங்க இப்போ சாப்பிடறீங்களா மாமா?” என மாமனாரை பதிலுக்காக பார்த்தார்.
“நீங்க முதல்ல நேரத்தோட கிளம்புங்க சுலோம்மா, நாங்க எட்டரை போல நிதானமா சாப்பிட்டுக்கறோம்” என்றார் வெங்கடேசன். வீட்டு பெரியவர்கள் சாப்பிடும் முன், தான் உண்ண தயங்கி, நித்தமும் இதே கேள்வியை சுலோ கேட்பதுவும், வெங்கி தாத்தா இதே பதிலை தருவதும் வாடிக்கையான வழக்கம்.
“ஏய் அஞ்சு, ஆட்டோ வந்துடும், சீக்கிரம் வா” இளைய மகளுக்கு குரல் கொடுத்தவர், மூன்று பிள்ளைகளின் உணவு பைகளை கொண்டு வந்து வாசலருகே வைத்து விட்டு, தானும் இட்லிகளை தட்டில் போட்டுக் கொண்டு, மாமியாரின் அறைக்கு வெளியே நின்றுக் கொண்டு அவசரமாக சாப்பிட்டவாறே,
“டிஃபனும், மதிய சாப்பாடும், டேபிள் மேல இருக்கு அத்த. சாப்பிட்டப்புறம் ரெண்டு பேரும் மறக்காம மாத்திரை போட்டுடுங்க. அப்புறம், நாளைக்கு வெள்ளிக்கிழமை! வெறுமே வீட்டை மட்டும் துடைச்சுட்டு போயிடப் போறா அந்தக் குமுதா. மாடியை கூட்டிட்டு, அப்படியே மேல இருந்து கழுவி தள்ள சொல்லுங்க அத்தை. சாமி ரூம்ல பணம் இருக்கு, மறக்காம பூக்காரம்மாவுக்கு இந்த மாச கணக்கை தீர்த்துடுங்க மாமா.”
மருமகள் பேச்சைக் கொண்டே “இன்னைக்கு வர நேரமாகுமா சுலோம்மா?” வினவிய வேங்கடேசனிடம்
“ஆமா மாமா, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு, அதை முடிச்சுட்டு, மார்க்கெட் போயிட்டு, நான் வர எப்படியும் ஆறாகிடும்.”
“நீ கவலைப்படாதே சுலோம்மா, பசங்களுக்கு ஒரு டெஸ்டை கொடுத்து உக்கார வெச்சு, டியுஷனை நானே ஆரம்பிச்சுடறேன்.”
“தேங்க்ஸ் மாமா, அப்படியே முடிஞ்சா இந்த சின்னவளை கொஞ்சம் பிடிங்க. மன்த்லி டெஸ்ட்ல மார்க் ரொம்ப கம்மியா வாங்கியிருக்கா,” சாப்பிட்டுக் கொண்டே பெரியவர்கள் இருவரிடமும் சில விண்ணப்பங்களை வைத்து விட்டு, வேலைக்காரிக்கு பாத்திரங்களை ஒழித்து போட்டார்.
மகன் மீது இருந்த கோபத்தை மருமகளிடம் பாராமுகமாக காட்டிய வசந்தா, பேச்சுக்களை காதில் வாங்கினாலும், எனக்கென்ன என்ற பாவத்தோடு அறையில் முடங்கி இருப்பது புரிந்ததாலும், இது அவ்வப்போது நடக்கும் ஒன்று என்பதால் எதையும் பெரிதுப்படுத்தாமல், தன் காரியத்தில் கண்ணாக இருந்தார் சுலோச்சனா.
“அஞ்சு… அஞ்சு…” மீண்டும் மீண்டும் பெற்றவள் அழைத்த பின் மெல்ல வந்தமர்ந்த பதினோரு வயது அஞ்சு, இட்லியை பார்த்து முகத்தை சுழித்து,
“அம்...ம்மா, தினமும் இந்த கல்லை தவிர வேற எதுவும் உனக்கு பண்ணத் தெரியாதா?”
எட்டுக் கட்டையில் கேட்ட மகளின் தலையில் நங்கென்று ஒன்றை வலிக்க வைத்தவர், “பேசாம சாப்பிட்டுட்டு கிளம்பற வழியை பாரு" வார்த்தைகளை கடித்து துப்பினார்.
அதற்குள், மற்ற இரு மக்களும் தத்தம் புத்தக பைகளோடு ஹாலுக்கு வர, அரக்க பறக்க ஒரு வாய் காப்பியை விழுங்க துவங்கிய சுலோ, இட்லியை இன்னமும் அப்படியே வைத்திருந்த அஞ்சுவை முறைத்தார்.
சின்னப் பேத்தியின் பேச்சு காற்று வாக்கில் காதில் விழ, ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த வசந்தா, “எல்லாம் என் பிள்ளை வாங்கின வரம், எங்க வம்சத்துல இப்படி ஒரு அடங்காத குதிரையை நாங்க பார்க்கலைடியம்மா. ஒரு வாய் கஞ்சி தண்ணி குடிச்சுட்டு போய் படிச்சு பட்டம் வாங்கினவன் எம்புள்ள. எல்லாம் உங்க வீட்டு கோண புத்தி அப்படியே வந்துருக்கு. எம்புள்ள தான் பாவம் அவஸ்தைப்படறான்.”
மருமகளை குட்டும் கருவியாக அஞ்சுவை பயன்படுத்திய பெரியவளின் குத்தல் பேச்சில், சுலோவின் கோபம் பல மடங்காக கூடியதில் அதுவரை காத்த பொறுமை இருந்த இடம் தெரியாமல் பறக்க,
“எங்கம்மா அந்த காலத்து பி.யூ.சி.,யாக்கும். மூணாவது கூட தாண்டாதவங்க இல்ல! அந்தக் காத்து தான் எம்பொண்ணு மேல வீசுதோ என்னவோ? இப்படி மக்கு பிளாஸ்திரியா பிறந்திருக்கா!” காலையில் இருந்து உதவியாக ஒரு துரும்பையும் அசைக்காமல், வெறுமே எண்ணெய்யாய் காயும் மாமியாருக்கு தக்க பதிலடி கொடுத்த கையோடு,
“இடுப்பொடிய மாவை ஆட்டி, இட்லி ஊத்தி, ருசியா நெய் மணக்கற சாம்பாரோட போட்டா, அது போறாம வக்கனை கேக்குதோ உனக்கு? இந்த ஆர்வத்தை படிப்புல காண்பிக்க காணோம்! மிட் டெர்ம்ல ஜஸ்ட் எழுவது பர்சன்ட் வாங்கிட்டு, நாக்குக்கு ருசியா கேக்குது உனக்கு? இதோ, ஐ.ஐ.டியில படிக்கற அபியும், எப்போவும் கிளாஸ் ஃபர்ஸ்ட் வர அக்க்ஷுவும், போட்டதை சாப்பிட்டுட்டு அமைதியா போகலை? படிக்கிற பிள்ளைங்களுக்கு கவனம் அதுல இருக்கணும். உனக்கு திங்கறதுல இருக்க பவுசு வேற எதுலயும் இல்ல.”
எப்போதும் போல மூத்த மக்களோடு ஒப்பிட்டு பேசியும், படிப்பை சாக்கிட்டு தன்னை தாளித்துக் கொட்டிய அம்மாவை முறைத்தவாறே, தொண்டையில் சிக்கிய இட்லியை கடனே என்று விழுங்கி வைத்தாள் அஞ்சனா.
“ஹே அஞ்சு, வா… ஆட்டோ வந்துடுச்சு,” அக்க்ஷூ அழைக்க, உர்ரென்ற முகத்துடன், ஸ்கூல் பேக், லஞ்ச் பேகை மாட்டிக் கொண்டு கிளம்பும் அஞ்சு @அஞ்சனா தான் நம் கதையின் நாயகி.
குடும்பத்துக்கு ஒன்றென்று ஒரு வித்தியாச பிறவி இருக்குமே, சாட்சாத் அப்படி மாறி பிறந்து விட்ட ஜீவன் நம் அஞ்சு! பெரும்பாலான வீடுகளில் கடைக்குட்டி குடும்பத்துக்கே மிகவும் செல்லமாக இருப்பார்கள். இங்கே நிலைமை தலைகீழ்… அவளின் விளையாட்டு குணமே மொத்த குடும்பத்துக்கும் அஞ்சு பஞ்ச் பேக்காக இருந்தததற்கு காரணமாக போனது.
அன்று மாலை…
கூடுதல் வருவாயை பெருக்கவென வீட்டு மொட்டை மாடியில் ஒரு கூரையை போட்டு, அங்கே அக்கம்பக்கத்து பிள்ளைகளுக்கு டியூஷன் சென்டர் நடத்திக் கொண்டிருந்த மருமகள் சுலோவுக்கு உதவியாக களம் இறங்கிய ரிடையர்ட் வாத்தியாரான வெங்கடேசனுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது.
அவரிடம் ஒழுங்காக பாடம் படிக்கும் மற்ற பிள்ளைகளை கண்டவர், “ஊரு பிள்ளையெல்லாம் நம்ம சொல் பேச்சு கேட்டு படிக்குது. இந்த வீட்லயும் இருக்காளே ராங்கி… வரட்டும் இன்னைக்கு இருக்கு!” பேத்தி அஞ்சுவைத் தான் தாளித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். பின்னே, பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவள், அரக்க பறக்க சிற்றுண்டியை விழுங்கி விட்டு, அவர் சற்றே அசந்த நேரத்தில் விளையாடவென சிட்டாக வெளியே பறந்து விட்டாள்.
டியூஷன் படிக்கும் மற்ற மாணாக்கர் வந்து விட்டதால், அருகே இருக்கும் கிரவுண்டில் ஆடிக் கொண்டிருக்கும் பேத்தியை கட்டி இழுத்து வர முடியாத இயலாமையால் துளிர்த்த கோபம் வெங்கடேசனுக்கு.
அக்க்ஷு, ரெகார்ட் சப்மிஷன் என அதில் ஆழ்ந்து விட, “ஏற்கனவே என் மூட்டு பாடா படுத்துது, இதுல அந்த சின்ன கழுத பின்ன என்னால ஓட முடியாது,” வசந்தாவும் கிரவுண்டுக்கு சென்று அஞ்சுவை இழுத்து வர மறுத்து விட்டார்.
அங்கே ப்ளே கிரவுண்டில், உயிர் நட்பான ஜண்டு அலையஸ் சந்திரப்ரகாஷுக்கு சப்போர்ட்டாக கத்திக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
“ஒரே ஒரு சிக்ஸ் அடிடா சந்து.”
“ஆமா சந்து ஒரு சிக்ஸ் அடிச்சுட்டு, அவுட் ஆகிடு” எதிர்தரப்பில் இருந்து ஒரு சிறுவன் குரல் கொடுக்க…
“முதல்ல இந்த தடியன் மூக்கை உடைடா சந்து…” இப்போது மாற்றி கத்தினாள்.
“மூக்கை உடைப்பீங்களோ? எங்க... தில் இருந்தா, என் தம்பி மேல பந்தை அடிடா பாக்கலாம்” இன்னொருவன் சண்டைக்கு வர… ஆட்டம் பாதியில் நின்று, இப்போது சிறுவர்களிடையே சண்டை துவங்கியது.
வாய் பேச்சு கை சண்டையாக முற்றுவதற்கு முன் அங்கே வந்து சேர்ந்த சந்துவின் அண்ணன் சூரியப்ரகாஷ், இரு தரப்பையும் பிரித்து விட்டு… சமாதானம் செய்ய முயன்று, அதில் தோற்று, பின் வாங்கினான்.
“அஞ்சு, அவங்க அடிச்சுக்கட்டும்… நீ வா நாம போலாம்.”
அழைத்த சூர்யாவை பார்த்து “என்னது அவங்க சந்துவை அடிப்பாங்க, நான் விலகி போகணுமா? நோ சான்ஸ்… இன்னைக்கு அந்த குட்டி பிசாசு மூக்கை நிஜமாவே உடைக்காம விட மாட்டேன்” உச்ச ஸ்தாயியில் அஞ்சு அலற,
சற்று மட்டுப்பட்டிருந்த சண்டை அஞ்சுவின் உஷ்ண பேச்சினால் மீண்டும் வேகம் பிடிக்க, ஒருவாறு யாருக்கும் அடி இல்லாமல் தன் உடன் பிறப்பையும், அடங்காத அஞ்சுவையும் அங்கிருந்து இழுத்து வந்தான் சூர்யப்ரகாஷ்.
“விடுங்க சூர்யா ண்ணா…”
“ஏய் குட்டி பிசாசு, அங்க உன்னை காணோம்னு உன் தாத்தா செம டென்ஷனா இருக்கார். இங்க ரவுடியாட்டம் சண்டை போடுற… வா நீ…”
“வெவ்வெவ்வே… தாத்தாவுக்காக தான் வந்தீங்களா? வாடா சந்து, நாம கலை வீடு வரை போயிட்டு வரலாம்.”
“ஏய் அஞ்சு, உன்னை கூட்டிட்டு வரேன்னு தாத்தாட்ட சொல்லியிருக்கேன். ஒழுங்கா வீட்டுக்கு வா.”
“முடியாது… மேத்ஸ் போட சொல்லி, தாத்தா தலையில குட்டுவார்”
“என் தங்கம்ல, ஹோம்வர்க் முடிக்கணுமே அஞ்சு… ப்ளீஸ் வா…” மிரட்டல் கை வராது என்று புரிந்து கெஞ்சலில் இறங்கி விட்டான்.
“நீயும் அவங்க கூட சேர்ந்துட்ட இல்ல சூர்யா அண்ணா? சூர்யா டவுன் டவுன்,...” அஞ்சு கோஷம் போட,
தோழிக்காக, “சூர்யா டவுன் டவுன்” சந்துவும் ஒத்து பாட….
“டேய்… இவ படிக்கணும்னு அக்கறையா கூப்பிட்டா, கூட பொறந்தவனுக்கே டவுன் டவுன்னு குரல் கொடுப்பியா?” தம்பியை துரத்தினான் சூர்யா.
ஓடினாலும் “சூர்யா டவுன், டவுனை” விடவில்லை சந்து.
“ஓடு சந்து, இந்த வில்லன்ட்ட சிக்காதே…” அவர்கள் இருவர் பின்னும் தானும் ஓடிக் கொண்டே நண்பனுக்கு சப்போர்ட் செய்த அஞ்சு, செல்லும் பாதையில் கவனம் வைக்கவில்லை.
விளையாட்டாக ஓடிக் கொண்டிருந்தவள், சூர்யா மூச்சு வாங்க நின்ற போது தான், தங்கள் வீட்டுக்கே வந்து விட்டது புரிய, திரும்பி ஓடலாம் என்று அவள் நினைக்கும் முன்பாக அவளை அலேக்காக தூக்கினான் முகுந்தன்.
“தேங்க்ஸ் முகுந்த் அண்ணா…” ஓடிக் களைத்தவனாக நன்றி கூறினான் சூர்யா. அடுத்தடுத்த வீட்டில் குடியிருக்கும் இவர்கள் அனைவருக்குமே அஞ்சு செல்லத் தங்கை, பிரிய தோழி!
“விடுங்கண்ணா…” கத்தி, திமிர பார்த்த அஞ்சுவை, அவள் வீட்டினுள் போய் இறக்கி விட்டவன், “அஞ்சு வந்துட்டா தாத்தா,” மொட்டை மாடியில் இருந்தவருக்கு குரல் கொடுத்தான்.
உள் அறையில் இருந்து பாட்டி வரும் சத்தம் கேட்க, இன்னும் ஒரு நொடி அங்கே நின்று தாமதித்தால், நிச்சயம் தனக்கு திட்டு விழும் என்பதால் தன் அறைக்கு ஓட துவங்கியவளிடம், “அஞ்சு, சீக்கிரம் கை கால் அலம்பிட்டு வா… இன்னைக்கு நான் சொல்லித் தரேன்” என்ற முகுந்தனுக்கு பழிப்பு காட்டி முறைத்தவள், அறைக்குள் ஓடி கதவை சாற்றி விட்டாள்.
“எங்க அந்தக் கழுதை?” மெதுவே வசந்தா ஹாலுக்கு வர,
அவர் பேச்சில் முகம் சுருக்கிய முகுந்த், “ஃபிரெஷ் பண்ணிக்க போயிருக்கா… எங்காத்துக்கு அழைச்சுட்டு போய் மேத்ஸ் சொல்லித் தரேன் பாட்டி.”
“ஏதோ பண்ணுடாப்பா, இந்த வானரத்தை பெத்துட்டு, எம்பிள்ளை நிம்மதி இல்லாம இருக்கான். கொஞ்சமாவது பயம் இருக்கா? எந்நேரமும் பொறுப்பில்லாம கூத்தடிக்க வேண்டியது. இருக்கு இன்னைக்கு அவளுக்கு, அவ அப்பன் வரட்டும், லொடக்கு லொடக்குன்னு க்ரவுண்டுக்கு ஓடுற அந்த காலை ஒடிச்சு போடச் சொல்லறேன்.”
பெரியவர் கரித்துக் கொட்டியது எரிச்சலை கிளப்பினாலும், பதிலுக்கு பேசினால், இன்னும் கத்துவார் வசந்தா என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தான் முகுந்த்.
“முகுந்த் அண்ணா, இந்த கெமிஸ்ட்ரி ஈகுவேஷன் சரியான்னு பாருங்க?” பாடத்தில் சந்தேகம் கேட்ட அக்க்ஷயாவுக்கு சொல்லித் தந்தவன், பதினைந்து நிமிடங்கள் சென்றும் அஞ்சு வெளியே வராததால், “அக்க்ஷு, போய் அவளை அழைச்சுண்டு வா,” என்று மூத்தவளை அனுப்பினான்.
உர்ரென்ற முகமாக தன் புத்தக பையோடு வந்தவளை பார்த்து சிரித்தவன், “உன் டவுட் க்ளியராகிடுச்சா அக்க்ஷு, இப்போ நான் போலாமா?”
“ம்ம்… ஆச்சுண்ணா, தேங்க்ஸ்…”
“கதவை தாள் போட்டுக்கோ அக்ஷும்மா, எங்காத்துல அஞ்சு படிக்கற விஷயத்தை அம்மாட்ட சொல்லிடு, வரேன்.” ஒரு கையில் அஞ்சுவை கெட்டியாக பிடித்துக் கொண்டு வெளியே வந்தவன், பக்கத்து ஓட்டு வீட்டினுள் நுழைந்தான்.
அங்கே இரு வீடுகளுக்கும் இடையே இருந்த குறுகலான படிகட்டின் பக்கமாக ஒளிந்திருந்த சந்துவை கண்டவன், “நீயும் புக்ஸ் எடுத்துட்டு வாடா, ஹோம் வர்க் முடிச்சா தான் விளையாட்டு” கண்டிப்பாக சொல்லி விட்டு, வீட்டினுள் நுழைய...
“என்ன அஞ்சு, இப்படி சேட்டை பண்ற? அப்போத்துல இருந்து உன் தாத்தா கத்திண்டு இருந்தார்,” மைதிலி மாமி ஆரம்பிக்கவும்…
“ம்மா, இப்போ தான் பாட்டி திட்டி முடிச்சாங்க. முதல்ல குடிக்க ஏதானும் கொண்டு வாங்க அவளுக்கு,” பெற்றவளை விரட்டியவன், அமைதியாக தன் புத்தக பையோடு வந்தமர்ந்த சந்துவை பார்த்து சிரித்தான்.
இருவருக்கும் அன்றைய வீட்டு பாடத்தை செக் செய்து, செய்ய சொல்லிக் கொடுத்தான். அஞ்சுவும், சந்துவும் படிப்பில் ஆழ… தானும் தன் இன்ஜினீயரிங் புத்தகத்தில் ஆழ்ந்தான் முகுந்த். அவர்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, மாடி ஏறிய மைதிலி,
“மாமா, சின்னவ ஹோம்வர்க் பண்ணிண்டு இருக்கா. சந்து படிச்சுட்டு இருக்கான் சூர்யாம்மா” இரண்டு பக்க மாடியிலும் இருந்த வாண்டுகளின் வீட்டாட்களுக்கு குரல் கொடுத்து, அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தார்.
கொய்த நித்திமல்லியில் சிறிதை மைதிலி மாமியிடம் கொடுத்து விட்டு, “உங்க முகுந்துக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் மாமி” என்ற சந்து, சூர்யாவின் அம்மா கௌரி, படி இறங்கினார்.
பாடத்தில் தோன்றிய சந்தேகங்களை பொறுமையாக, இன்முகமாக முகுந்த் தீர்க்க… மேலும் பிரச்சனை செய்யாமல் படித்து முடித்து அஞ்சு நிமிர்ந்த போது, மணி இரவு எட்டரையை கடந்து இருந்தது.
“சமத்து தங்கம்… இப்படி தினமும் படிக்கறதுக்கு என்ன அஞ்சும்மா?” தணிவாக கேட்ட முகுந்திடம்…
“நீயும் தினமும் சொல்லித் தரதுக்கென்ன முகுந்த் அண்ணா?” அவனை போலவே ராகமாக கேட்டவளிடம்…
“டைம் இருக்க அன்னிக்கு தானே சொல்லித் தர முடியும் அஞ்சு. வீட்டு பெரியவா திட்டும் படியாவா நடந்துப்பே?” முகுந்த் கண்டிப்பாக கேட்க
“ப்ச்… எப்போ பாரு படி படின்னு கத்தறது தவிர வேற ஒண்ணும் தெரியாது அவங்களுக்கு” அஞ்சு சலிக்க…
“உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க அஞ்சுமா? நீயும் அபி அண்ணா, போல படிச்சு, பெரிய ஆள் ஆகணும் தானே?”
“நோ வே… ராகவன் தாத்தா போல பெரிய மேஜிஷியன் ஆகப் போறேன் நான்” கண்கள் மின்ன சொன்ன சின்னவளை பார்த்து பூரித்தனர் மைதிலி மாமியும், முகுந்தனும். ஆனால், படிப்பின் அவசியம் புரிந்தவர்களாக, அவளுக்கும் அதன் முக்கியத்துவத்தை புரிய வைக்கும் நோக்கோடு,
“ராகவன் தாத்தா, அந்த காலத்து எம்.காம்., பேங்க்ல நல்ல பொசிஷன்ல இருந்தவர். சும்மா பொழுதுபோக்கா தான் மேஜிக் பண்ணிட்டு இருக்கார்.” மாமனாரின் ஹாபியை பற்றி சொல்லி, “நீயும் நல்லா படிக்கணும், பெரிய வேலையில சேரணும் ராஜாத்தி. இந்த மேஜிக் எல்லாம் சும்மா ஜாலிக்காக மட்டும் தான்,” தன்னால் முடிந்த மட்டும் புத்தி சொன்னார் மைதிலி.
இதற்கு முன்னும் பல முறைகள் இதே விஷயத்தை பல்வேறு விதங்களில் மைதிலி மாமியின் வாயால் சொல்ல கேட்ட அலுப்பில், “மாமி… எனக்கு மத்தவங்களை சிரிக்க வைக்கற, என்டர்டெயின் பண்ணற வேலை தான் வேணும். ஐ லைக் மேஜிக் ட்ரிக்ஸ். நான் மேஜிஷியன் தான் ஆகப் போறேன்.” தெள்ளத் தெளிவாக தெரிவித்த இளையவளின் திடத்தை எப்போதும் போல மெச்சவே தோன்றியது மைதிலிக்கு.
அவள் வயதுக்கு உரிய விளையாட்டு குணம் மேலோங்கினாலும், இது போல சில விஷயங்களில் மிக உறுதியான அழுத்தத்தை சின்னவள் கொண்டிருப்பதை அறிந்தவராக, “பெருமாளே, இந்த கொழந்த நன்னா இருக்கணும்” ஒரு வேண்டுதலை வைத்தவர், “உங்கம்மா அப்போவே வந்துட்டா… வா நான் சொல்லி விட்டுட்டு வரேன்” என சின்னவளை கிளப்பினார்.
நாளெல்லாம் தொண்டை வற்ற பாடம் நடத்தி முடித்து, மாலை வீட்டுக்கு வந்த நிமிடமாக ஓய்வில்லாமல் டியூஷனில் ஆழ்ந்து விட்டு, இப்போது அடுப்படியில் உப்புமா கிளறிக் கொண்டிருந்த சுலோ, மகளை கண்டவுடன்… “ஏய் அஞ்சு” அதட்டலாக அழைக்க, அதை காதில் வாங்காமல் சிட்டாக பறந்து அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
உப்புமா கட்டி தட்டி விடுமே என்ற பயத்தில் மகள் பின்னோடு செல்லாமல் வேலையை பார்த்தவரிடம் வந்த மைதிலி, மேடையில் ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு, “கொழந்தைய திட்டாதே சுலோ. இந்நேரம் எங்க முகுந்த் சொல்லித் தர நன்னா படிச்சா… கற்பூரமா புத்தி இருக்கு. கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்.”
“ப்ச்… நீங்க தான் அவ மூளையை மெச்சிக்கணும் மாமி. என் மானம் போகுது. வாத்தியார் பிள்ள மக்குன்னு எங்க பக்கம் சொல்லுவாங்க. அபியும், அக்ஷுவும் அப்படியெல்லாம் இல்லைன்னு நிரூபிக்க பிறந்தா, இல்ல அந்த சொலவடை நிஜம்னு நிருபிச்சுட்டுத் தான் இவ ஓய்வா போல.”
“சின்ன கொழந்த அவ. இத்தனை சூட்டிகை கூட இல்லன்னா எப்படி சுலோ?”
“அபியும், அக்ஷுவும் ஒரு நாளும் இப்படி இருந்ததே இல்லையே மாமி. தட்டுல என்ன போட்டாலும் சாப்பிட்டுடுவாங்க. உங்களுக்கு தான் தெரியுமே, இதுவரை ஓர் டீச்சர்ட்ட சின்ன திட்டு வாங்கினது இல்ல அவங்க ரெண்டு பேரும். ஓபன் டே போனா, பிள்ளைங்களை அப்படி பாராட்டுவாங்க கிளாஸ் டீச்சர்ஸ். ஆனா இவ? ஹனுமார் வால் நீளத்துக்கு புகார் வாசிக்கறாங்க எல்லா டீச்சர்சும். எல்லாருக்கும் ஸ்கூல் டாப் ஸ்டூடன்ட்டா மட்டுமே எங்க அக்ஷுவை தெரியும். இப்போ என்னடான்னா, இந்த ரவுடியோட அக்கா தான் அக்ஷுன்னு சொல்லற மாதிரி இருக்கு நிலைமை.”
“எல்லாத்துக்கு வாக்குவாதம் பண்றா. எங்க பேச்சுக்கு ஒரு நாளும் மறுபேச்சு என்ன, சின்னதா ஒரு மறுப்பு பார்வை கூட பார்த்ததில்ல அபிஷேக். இன்னைக்கு ஐ.ஐ.டியில படிப்பை முடிக்க போறான்! மெரிட்ல மெடிசன் வாங்க, ராப் பகலா படிக்கறா அக்க்ஷயா… இவங்களுக்காக தானே, நாங்க ரெண்டு பேரும் அப்படி ஓடி உழைக்கறோம்? எங்க பேச்சைக் கேட்கறதால மூத்த ரெண்டு குழந்தையும் நல்லா எல்லாரும் பாராட்டும் அளவுக்கு ஷைன் ஆகலையா என்ன? இந்த வானரத்துக்கு மட்டும் ஏன் புத்தி இப்படி கோணலா இருக்கோ? எங்க போய் முடியப் போகுதோ? எனக்கு ஒண்ணும் புரியலை… இவ கவலையே எங்க ரெண்டு பேருக்கும் ஜாஸ்தியா இருக்கு. வரவர படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது.”
“அட என்ன சுலோ நீ? அவ சின்னக் கொழந்த… எல்லாம் போகப் போக புரிஞ்சுப்பா,”
“புரிஞ்சா சரி மாமி…” சுலோ சொல்லிக் கொண்டிருக்க, ஹாலில் டிவி அலறும் ஒலியில், “அஞ்சு டிவியை நிறுத்து” என அக்ஷு ஒரு பக்கம் கத்த… “ம்மா… அஞ்சுவை பாருங்க… டிவியை ஆஃப் பண்ண சொல்லுங்க…” மூத்தவன் அபியும் குரல் தர…
“பாருங்க மாமி…” என்றவர், விறுவிறுவென வெளியே சென்றார். அக்கா, அண்ணாவின் மறுப்புகள் காதில் விழாமல், தன்னை மறந்து சினிமா பாட்டுக்கு நடமாடிக் கொண்டிருந்த அஞ்சுவின் முதுகில் பொலீரென அடி வைத்து, பிஞ்சின் மனதையும் சேர்த்தே பதம் பார்த்தார்.
“அய்யோ அம்மா…” அஞ்சு அலற, படபடவென அடிக்கும் சுலோவை தடுத்தார் மைதிலி.
“அந்தக் காலை ஓடிச்சு அடுப்புல வைன்னு அன்னைக்கே சொன்னேன். என் பேச்சைக் கேட்டா தானே? எந்நேரமும் டிவியை போட்டுட்டு தங்கு தங்குன்னு குதிக்க வேண்டியது. ஒரு எடத்துல நிக்குதா அந்தக் காலு? பெரியவ வந்து கொஞ்ச நேரம் வீணை பிராக்டிஸ் செஞ்சுட்டு தான் புஸ்தகத்தை எடுத்தா, அவ குழந்தை. இந்த ராங்கி, வீணையை தொட்டு வாரக் கணக்காகுது.”
வசந்தா திட்டத் துவங்கியதில் கண்களை கசக்கிக் கொண்டு நின்ற அஞ்சுவைக் காணவே வருத்தமாகியது மைதிலிக்கு.
“வெவ்வெவ்வே வீணையாம்! கிடார் க்ளாஸ் அனுப்புங்கன்னு கேட்ட என் ஆசையை நிறைவேத்தாம, டொய்ங் டொய்ங்ன்னு அந்த கனமான வீணையை மீட்ட சொல்றாங்க,” அழுகையினூடே அஞ்சுவின் முனகல் காதில் விழவும்,
“ஆமாண்டி, சுட்டு போட்டாலும் படிப்பு ஏறாத உன்னை, நல்ல கான்வென்ட்ல சேர்த்ததும் இல்லாம, ஒவ்வொரு டெர்மும் உனக்காக ஏற்கனவே என் பையன் தண்டம் அழறது போறாதுன்னு, இன்னும் ஒண்ணுத்துக்கும் உதவாத கிடார் க்ளாஸுக்கும் பணம் கட்ட அவன் வாயையும் வயத்தையும் கட்டிட்டு திரியணும்.”
“மொதல்ல வீட்ல இருக்க வீணையை தொடறியா நீ? சொல்லி தர்ற எனக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்கறியா?” பிலுபிலுவென வசந்தா பிடித்துக் கொள்ள, இந்த காரணத்துக்காகவும், மகளை இரண்டு அடி பட்டென போட்டார் சுலோச்சனா.
வசந்தாவின் குணமே இது தான். பேத்தி என்ற பாசம் அறவே இல்லாதவர். மாறாக, இந்த குழந்தை பிறந்ததால் தான், நான் கும்பகோணத்தை விட்டு இடம் பெயர வேண்டி வந்தது என்ற வன்மம் அதிகம். அதனால், அஞ்சுவை குறித்த குறைகளை அடுக்கி பேசியே, மகன் மற்றும் மருமகளின் எண்ணப்போக்கை கூட அவர்களின் மகள் மீது ஒரு வகை வெறுப்பாக மாற்றி விட்டிருந்தார். மருமகள் வீட்டினுள் நுழையும் போதே சின்னவள் மீது புகார் பட்டியல் வாசிப்பது அவரின் தினசரி வாடிக்கை.
வேலை செய்து வந்த களைப்பு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்த எரிச்சல், மாமியாரின் அங்கலாய்ப்பு எல்லாம் சேர சுலோவுக்கு ரத்தம் கொதி நிலை அடைந்து, அஞ்சுவின் முதுகு அடிக்கடி பழுக்கும் பாட்டியின் உபாயத்தில். அன்றும் அப்படியான நாளாகி போனது.
வசந்தா பாட்டியின் குணமறிந்தவராக, ‘பாவம் குழந்தை! அவ இஷ்டத்துக்கு வாத்ய பயிற்சி தராம, இவங்க விருப்பத்தை அவ மேல திணிக்கறாங்களே’ என மனதில் நொந்தவராக, ஒரு வழியாக இரு மூத்த பெண்மணிகளையும் மலையிறக்கிய மைத்தி, தன் வீட்டுக்கு வந்தார்.
“என்ன மைத்தி, வழக்கம் போல பஞ்சாயத்தா?” கேட்ட கணவன் நந்தகோபாலனிடம்,
அன்றையை விஷயத்தை சொல்லி, “செத்த பொறுமையா டீல் பண்றதை விட்டுட்டு, ஆளாளுக்கு யோசிக்காம அஞ்சுவை திட்டி தீர்க்கறா! பெரியவா மறுப்பை மீறி பிடிவாதமா நாகேஸ்வரத்தை விட்டு இங்கே சென்னையிலயே ஒரே குடும்பமா இருக்காப்பல மாத்திண்டது சுத்தமா பிடிக்காத வசந்தா மாமிக்கு, எல்லாத்துக்கும் அஞ்சுவோட பொறப்பு தான் காரணங்கற கோவம், இத்தனை வருஷம் கடந்தும் குறையலை பாருங்கோ. பேத்தின்னு பார்க்காம, எந்நேரமும் கொழந்தையை கரிச்சு கொட்டறா! கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குன்னா.”
“நீயும் தான் சொல்லி பார்த்தாச்சு, அவா காதுல வாங்கிக்கலையே மைத்தி, நாம என்ன பண்ண முடியும்?”
“பேரு தான் ஹையர் செகண்டரி டீச்சர்னு… இந்த சுலோவுக்கு கொழந்தை மனசு கொஞ்சமும் புரியலையே? ஒண்ணைப் போல இன்னொரு கொழந்தை இருக்கும்மான்னா? ஒருத்தருக்கு ஒரு திறமை இருக்கும் தானே! இந்த சின்ன விஷயம் புரிஞ்சுக்காம எந்நேரமும் அஞ்சுட்ட இருக்க குறையை ஊதி பெருசு பண்ணிடறா.”
“அதை சொல்லு, கண் பார்த்ததை அஞ்சுவோட கை என்னமா பிரமாதமா பண்றது? அதெல்லாம் ஒரு வரம்… அஞ்சுட்ட இருக்க மத்த திறமையை வளர விட்டாலே, அவ நன்னா வருவான்னு, வெங்கட்ட எத்தனையோ சொல்லி பார்த்துட்டேன். என் பேச்சை காதுலயே போட்டுக்கறதில்ல அவன். லோகத்துல இன்ஜினியர், டாக்டர் இது ரெண்டும் தான் ஒஸ்தின்னு யாரு சொன்னாங்களோ இவாளுக்கு! அவளோட இயற்கையான ப்ளஸ் பாயிண்ட்ஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணாம, படி படின்னு படுத்தறா.” நந்தகோபாலனின் அப்பா ராகவன் தன் பங்குக்கு அவரின் பிரியமான அஞ்சுவுக்கு சப்போர்ட்டாக பேசினார்.
“ஆமாப்பா, டீ.வியில பாக்குற டான்சை அப்படியே என்னமா ஆடுறாங்கறீங்க? பாவம் கொழந்தே… டான்ஸ் கத்துக்கணும், கிடார் வாசிக்க பழகணும்னு ரொம்ப ஆசைப்படறா. எங்க, அந்த வசந்தா மாமி முடியாதுன்னுட்டா. ‘எங்காத்துல பெண் பிள்ளைங்களுக்கு வீணை சொல்லித் தரது தான் வழக்கம்… அக்ஷு கத்துக்கலையா? ஒழுங்கா என்ட்ட வீணை படிச்சாலே போதும்’னு சின்னவ ஆசைக்கு தடா போட்டுட்டா.”
“ப்ச்… இதான் இந்த கம்பேரிசன் செய்யறது தப்புன்னு ஏன் இவாளுக்கு புரியலை?” கோபமாக கேட்டான் முகுந்த். ஒற்றை குழந்தையான அவனுக்கு, அக்கம் பக்கத்து பிள்ளைகளான சூர்யா, சந்து, அபி, அக்ஷு, அஞ்சு மேல் அலாதி பாசம். அந்த அன்பில் எல்லோரையும் விட அஞ்சு மேல் ஒரு கல் கூடுதல் பரிவு உண்டு. இளையவள் என்பதால் மட்டுமல்ல, மற்ற எல்லோரையும் விட குறும்புக்காரி என்பதாலும் வந்த பிரியம் அது.
அஞ்சனா அடுத்த ஜெனெரேஷன் குழந்தை என்ற புரிதல் இளையவனான முகுந்தனுக்கு இருந்தது. அபியை போலவோ, தன்னை போலவோ பெற்றவர் சொல்லை தட்டாமல், மறு கேள்வி எழுப்பாமல் நடக்கும் சந்ததியை சேர்ந்தவர்கள் அல்ல அஞ்சுவும், சந்துவும்.
எல்லாவற்றுக்கும் ஏன், எதற்கு என்ற காரண காரியத்தோடு தக்க விளக்கங்களை, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தந்தாலே போதும், பெரியவர்களின் கூற்றில் இருக்கும் நியாயத்தை மறுக்காமல் ஏற்பார்கள் இளையவர்கள் என்ற புரிதல் இருந்தது முகுந்தனிடம்.
அந்தோ, அவனுக்கு புரிந்தது அஞ்சுவின் பெற்றவர்களுக்கு கிஞ்சித்தும் புரியவில்லை என்பதை விட… அவர்கள் பெரியவர்கள் என்ற ஈகோ… ‘நாங்கெல்லாம் பெத்தவங்களை எதிர்த்து பேசி இருப்போமா? இப்போ நல்லா இல்லையா என்ன’ என்ற மனோபாவம் மேலோங்கியது. படிப்பு அவசியம் தான்… அதே போல தனித்திறமைகளை ஊக்குவிப்பதும், அந்த குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து கொள்ள தவறினர்.
அஞ்சனா அவர்கள் வீட்டு வாரிசு… அவர்களுக்கு இருக்கும் அதே வீம்பும், பிடிவாதமும் அவளுக்கு நிறையவே இருந்தது. கூடவே தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்ற தெளிவும் பதினோரு வயதிலேயே அபரிமிதமாக இருந்ததில் சிக்கல் தான் ஏற்பட்டது. மூத்தவர்கள் அடுத்த தலைமுறையான அஞ்சுவின் மாறுபட்ட எண்ணவோட்டங்களை சரி வர புரிந்துக் கொள்ளாமல், அதற்கான பிரத்யோக முயற்சியும் செய்யாமல் இருப்பதால், எந்நேரமும் உன்னை பிடி என்னை பிடி என பிரச்சனைகள் தாம்.
Комментарии