top of page

இணை கோடுகள் தொடக்கவுரை 2 (Prologue2)

இணை கோடுகள் தொடக்கவுரை 2 (Prologue2)


கோடு - 2

“அப்போ விக்க வேணாம்னு சொல்றீங்களா நந்தா சார்?”


“வேற நல்ல ஆஃபர் வருதான்னு பார்க்கலாம் கேசவா. இப்போ உனக்கு உடனே பணத் தட்டுப்பாடு இருக்கா?”


“உடனே இல்ல சார். உங்களுக்கே தெரியும் அபி, மேல் படிப்புக்கு அமெரிக்கா போக விருப்பப்படறான். அக்ஷுவும் நிச்சயம் மெரிட்ல மெடிசின் சேர்ந்துடுவா. இந்த செலவுகளை சமாளிக்க முன்னேற்பாடா இருக்கலாம்னு யோசனை.”


“அபிஷேக் தான் கேம்பஸ்ல செலெக்ட் ஆகிட்டானே? நல்ல கம்பெனி ஆச்சே…”


“ரெண்டு வருஷம் வேலை செஞ்சு எக்ஸ்பீரியன்ஸ் வரட்டும், அப்புறம் அமெரிக்கா போறேன்னு தான் அபி சொல்றான். நான் தான் கையோட படிப்பை முடிக்கட்டும்னு நினைக்கறேன்.”


“அபி சொல்றது எனக்கு சரின்னு படுது. வெளியுலக எக்ஸ்போஷர் கொஞ்சம் கிடைக்கறது நல்லது. இங்க உள்ளூர்ல முதல்ல தனியா சமாளிச்சுட்டா, அப்புறம் அமெரிக்கா என்ன உலகத்துல எங்க வேணா ஜாம் ஜாம்னு நம்ம அபி ஷைன் ஆகிடுவான்.”


“அப்பாவும் இதை தான் சொல்றார்.”


“இந்த பில்டர் நமக்கு தோதா ஒத்து வரலை. இருக்கற வீட்டை வித்துட்டு, வாடகை வீட்டுக்கு போய், அதுவும் அஞ்சு இன்னும் ஸ்கூல்ல இருக்கறா, வயசானவாளுக்கு சின்னதா இருந்தாலும் இந்த தனி வீடே இன்னைய வரை செட்டாகலை. இதுல ஃபிளாட், அவாளுக்கு சுத்தமா ஒத்து வராது. வேணாம் கேசவா, அவசர படாதே. பக்கத்து ஆத்து முரளி, மூணாவது வீட்டு தாமோதர் எல்லாருமே ஒண்ணா ஜாயிண்ட்டா விக்கலாம்னு சொல்றா. நாம எல்லோருமே ஒருத்தருக்கே கொடுத்தா, அவங்களும் பெரிய ப்ராஜக்ட் போடுவா… நல்ல டீல் வரும்.”


“முரளி சாரும், தாமு சாரும் கூட சேர்ந்துட்டாங்களா? எப்போ?”


“ஆமா கேசவா, வாக்கிங் பண்றச்சே அப்பா பேச்சு வாக்குல சொல்லியிருக்கார். நேத்து சாயங்காலம் தான், அவா வந்து விசாரிச்சுட்டு போனா. தாமு, சிஎம்.டி.ஏ.ல வேலை பண்றானோன்னா, இப்போ உள்ள ஆஃபர் அடி மாட்டு விலைன்னு சொல்றான். செகண்ட் க்ராஸ் ஸ்ட்ரீட்ல புது ப்ராஜக்ட் ஆரம்பிச்சுருக்காளாம் அவனுக்கு தெரிஞ்ச பில்டர். அந்த ரேட் விசாரிச்சு சொன்னான். அதுக்கப்புறம் தான் வேணாம்னு முடிவு செய்யலாம்னு தோணுச்சு. உனக்கு அவசரமான்னு தெரிஞ்சுக்கிட்டு எது ஒண்ணும் பண்ணலாம்னு அப்பா சொன்னார்.”


“நீங்க சொன்னா சரியா இருக்கும் நந்தா சார். நமக்கு ஜூனியர் தானேன்னு நினைக்காம, உங்க பக்கத்து வீடு விலைக்கு வந்தப்ப, நல்ல லொகேஷன், யோசிக்காம லோன் போட்டு வாங்குன்னு அப்போ நீங்க தைரியம் சொல்லி என்னை தூண்டலைன்னா, நான் இன்னும் வாடகை வீட்ல தான் குப்பை கொட்டியிருப்பேன் சார்.”


“சரிப்பா, தாமு இதை எல்லாம் சின்சியரா செய்வான். அவன்கிட்ட பொறுப்பை கொடுப்போம். நமக்கு லாபம் வர மாதிரி பார்த்துப்போம்.”


“சரி” என்று அதே தரமணி பொதுப்பணி துறை அலுவலகத்தில் இணை இயக்குனராக இருக்கும், நல்ல வழிகாட்டியான பக்கத்துக்கு வீட்டுக்காரரான நந்தகோபாலனின் அறையில் இருந்து வந்த ஆதிகேசவனுக்கு, பிள்ளைகளை எப்படியானும் டாக்டர், பொறியாளர் ஆக்குவது ஒன்றே குறியாக இருந்தது.


***************************************************


அன்று மாலை


“அம்மா… ஸ்போர்ட்ஸ் டே ட்ரில்லுக்கு புது வெள்ளை ஸ்கர்ட் வாங்கி தாங்க. என் ஸ்கர்ட் ஷார்ட்டா இருக்காம். ‘இது வைட் ஸ்கர்ட்டா இல்ல ஹால்ஃப் வைட் ஸ்கர்ட்டா’ன்னு கேட்டு பி.டி., மிஸ் இன்னைக்கு திட்டினாங்க.”


மாத கடைசியில் புது உடுப்பு கேட்கும் இளைய மகளை முறைத்த சுலோச்சனா, அக்க்ஷயாவின் பழைய நல்ல நிலையில் இருந்த வெள்ளை அரை பாவாடையை எடுத்து அஞ்சுவிடம் நீட்டினார்.


“இது அக்காவோடதும்மா!”


“அக்ஷுவுக்கு நீளம் ஜாஸ்தியா இருக்கு. நீ தான் பதினோரு வயசுலயே ஒட்டகம் போல அவளையும் மிஞ்சி வளர்ந்துட்டயே. உனக்கு சரியா இருக்கும். கௌரி ஆன்ட்டி கூட சேர்ந்து எம்ப்ராய்டரி போடுற இல்ல, ஒரு எக்ஸ்டரா பட்டன் வெச்சா, இடுப்பும் நல்லா ஃபிட் ஆகிடும்.”


“அம்மா… நீங்க செய்யறது நல்லாவே இல்ல. டக் வெச்சு அக்காவுக்கு இதை ஷார்ட் பண்ணி குடுங்க. எனக்கு புது ஸ்கர்ட் தான் வேணும். மிஸ் திட்டுவாங்க.”


“ப்ச்… வீண் பிடிவாதம் பிடிக்காதே அஞ்சு. இந்த வருஷத்தோட அக்ஷு ஸ்கூல் முடிக்கறா. பப்லிக் எக்ஸாம் வர்றதால இனி அவளுக்கு பி.டி. ஹவர் எல்லாம் ரிவிஷன் க்ளாஸ் ஆக்கிட்டதால, இந்த ஸ்கர்ட் அவளுக்கு வேணாம். சும்மா காசை கரியாக்குவானேன்? அடுத்த வாரம் தானே உனக்கு ஸ்போர்ட்ஸ் டே. நீ இன்னைக்கே ஆல்டர் செஞ்சு முடி. நாளைக்கு சலவைக்காரன்கிட்ட குடுத்து, இதையே நல்லா பளிச்சுன்னு தோய்ச்சு கொண்டு வர சொல்றேன். பத்து ரூபாவோட செலவு முடிஞ்சுது.”


அம்மா இனி அசைய மாட்டார் என புரிந்தவளாக, இரவு தன் அறையில் ஏதோ ஆஃபிஸ் ஃபைலை பார்த்துக் கொண்டிருந்த கேசவனிடம், “அப்பா…” என ராகமாக இழுத்தவள், தன் கோரிக்கையை முன் வைத்தாள்.


“சரி அம்மாட்ட சொல்றேன்” என்றவரை இடை மறித்தார் மகனிடம் பேச வந்த வசந்தா.


“கழுதை… சாயங்காலம் உன் அம்மா என்ன சொன்னா? இப்போ எதுக்கு என் மகன் பணத்துக்கு தண்டமா வேட்டு வைக்கற?”


“என்னம்மா ஆச்சு?” என்ற கேசவனிடம், மருமகள் சொன்னதை வார்த்தை பிசகாமல் ஒப்பித்தார் வசந்தா.


“அதான் அம்மா சொல்லிட்டாளே, அப்புறம் என்ன அஞ்சு? படிக்கறது தான் இல்ல… உன் ஸ்கர்ட்டையாவது ஆல்டர் பண்ணு போ…”


“அது என் ஸ்கர்ட் இல்ல… அக்ஷு அக்காவுது.”


“எல்லாம் நீ படிக்கற லட்சணத்துக்கு இது போதும்…” மூன்று குரல்கள் ஒன்றாக ஒரே வரியை சொல்லி வைத்தது போல ஒப்பிக்க… தன் தந்தை, பாட்டி, தாத்தா மூவரையும் உர்ரென பார்த்தவள், முகம் வாடி அக்ஷயாவோடு ஷேர் செய்யும் அறைக்குள் நுழைந்தாள்.


வெளியே இடியே விழுந்தாலும் எனக்கென்ன என்று அந்த குட்டி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, இயற்பியல் பாடத்தை படித்து கொண்டிருந்த அக்காவின் மேல் கொலை வெறி கிளர்ந்தது சின்னவளுக்கு.


“எல்லாம் இவளால, யார் இவளை எனக்கு முன்னாடி பொறக்க சொன்னா? யூனிஃபார்ம், ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில் முதல் படிக்கற புஸ்தகம் வரை எல்லாம் அக்ஷயாவோடது. எல்லாமே செகண்ட் ஹேன்ட்! ஐ ஹேட் செகண்ட் ஹேன்ட் திங்க்ஸ்!” புருபுருவென அஞ்சு புலம்ப, எதுவுமே அக்ஷயாவின் காதில் விழவேயில்லை. அவள் கவனமெல்லாம் இயற்பியலில் இருக்க, தன் இயல்பை தொலைக்கும் எல்லைக்கு அழுத்தப்பட்டிருந்தாள் அஞ்சு.


அந்த வெள்ளை ஸ்கர்ட்டை அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் அளவுக்கு மாற்றி அமைத்தவள், முத்தாய்ப்பாக, அவளின் ஹவுஸ் நிறமான இள மஞ்சளில் ஒரு குட்டி ரோஜாவை இடுப்பு பட்டையில் எம்ப்ராய்டரி செய்தாள்.


தன் வேலையை தானே மெச்சி கொண்டிருந்த அஞ்சுவின் தலையில் நொங்கென சுலோ குட்டவும், ஸ்ஸ்ஸ்…. வலி பொறுக்காமல் தலையை தடவி கொண்டு நிமிர்ந்தவளை எரித்திருப்பார் சுலோ, அவர் பார்வைக்கு மட்டும் அந்த ஷக்தி இருந்திருந்தாள்.


“போனா போன இடம், வந்தா வந்த இடம்! ஏண்டி, எத்தனை நேரம் அந்த ஸ்கர்ட்டை கட்டிட்டு அழுவ? போ, ஹோம்வர்க் கொண்டு வா…”


அதன் பின் சில பல குட்டுகள், கிள்ளுகளுக்கு இடையே அன்றைய வீட்டு பாடத்தை அம்மாவின் நேரடி கண்காணிப்பில் கண்ணில் நீரோடு முடித்த அஞ்சனா, இரவு அக்காவோடு பகிர்ந்து படுக்கும் அந்த கட்டிலில் கண்களை இறுக மூடி… ‘பெரிய பொண்ணானதும், டெய்லி புது டிரஸ்… எனக்கே எனக்கா வாங்கினது போடணும். ஹே தொந்தி பிள்ளையார்… இந்த அக்ஷுவுக்கு ஹாஸ்டல் போற மாதிரி அட்மிஷன் வாங்கி கொடு. அப்போ தான், இந்த பெட் எனக்கு மட்டும் பெட்டா மாறும். ப்ளீஸ் கணேஷா… இந்த ஆசையை நிறைவேத்தி குடுத்தா, இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு, நானே உன்னை களிமண்ல செஞ்சு கும்பிடறேன்.” கடவுளுக்கு விண்ணப்பம் வைத்த பின்பே உறங்கினாள்.

**************************************************************

அவர்கள் அறையில் பணியிடத்தில் நந்தகோபாலனோடு நடந்த சம்பாஷணையை மனைவி சுலோவிடம் மறுஒலிபரப்பினார் கேசவன்.


“அவங்க சொல்படி கேட்டு நடங்க… அண்ணா தான் என் பங்குக்கு ஒரு தொகை கொடுக்கறேன்னு சொல்றானே, அதை இப்போ முடிச்சுக்கலாம். அப்படியே அபி மனசு மாறி அமெரிக்கா போறதானாலும், அந்த காசு, கொஞ்சம் லோன் எல்லாம் வெச்சு அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம் அபிப்பா.”


“பூர்வீக வீட்டை உன் அண்ணாவுக்கே வித்துடறதுல உனக்கு கஷ்டமில்லையா?”


“இங்கேயே நமக்கு நேரம் போதலை… யாரு திம்மக்குடிக்கு போய் பார்த்துக்கறது? அண்ணா, சொல்றது நல்ல ரேட்டான்னு மாமாவை விசாரிக்க சொல்லுங்க. விலை சரியா இருந்தா வித்து, டெபாசிட் போட்டு, தயாரா வெச்சுக்கலாம்.”


“சரி சுலோ…” இப்படியாக ஒரு பிளான் பி கைவசம் தயாராக வைத்திருந்தனர் இந்த தம்பதியர்.


பதினைந்தாண்டுகளுக்கு முன் இந்த வீட்டை வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விட்டது கேசவன் தம்பதிக்கு. இருவருமே லோன் போட்டு, சுலோவின் நகைகளை அடகு வைத்து, கையில் இருந்த சேமிப்பு மொத்தமும் போட்டு தான் இந்த முக்கால் கிரவுண்ட் வீட்டை வாங்கினர். நல்ல முதலீடாகவே அது மாறியிருந்தது. அஞ்சனா பிறந்ததே இந்த வீட்டில் தான்.


********************************


அதே நேரம் மைதிலி கணவனிடம் பேசி கொண்டிருந்தார். “ஏன்னா… கேசவன் ஒத்துக்கிட்டாரா? நாளை பின்ன, உங்களால தான் நல்ல சேல் கெட்டுடுச்சுன்னு சொல்லிடப் போறார்! சும்மாவே அந்த வசந்தா மாமி, அஞ்சுவோட குணம் கெட்டதுக்கு நாமெல்லாம் செல்லம் கொடுக்கறது காரணம்னு பழி போடுறா… இப்போ, வீடு விக்கறதுல நம்ம அபிப்ராயம் சொன்னதால, அதுக்கும் எதானும் நம்மை குத்தம் சொல்ல போறா!”


“கேசவன் ரொம்ப கெட்டிக்காரன். யோசிக்காம, நாம சொன்னதை கேட்டு பண்ண கூடியவன் இல்ல. அந்த மாமிக்கு நாகேஸ்வரம் தவிர்த்து எல்லாமே நரகம் தான். அந்த கொழந்தைய எதானும் பேசலைன்னா ராத் தூக்கம் வராது அவங்களுக்கு. விக்கணும்னு முடிவெடுத்தா நாம தடுக்க போறதில்லை. நாம எல்லோரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஏழரை கிரவுண்ட் நிலத்தை விப்போம். பெரிய ப்ராஜக்ட்… ஆளுக்கு ஒரு ஃபிளாட், கூடவே கொஞ்சம் பணம்னு கிடைக்க வாய்ப்பிருக்குன்னு தாமு சொல்றான். எப்படியும் ப்ராஜக்ட் முடியறவரை வாடகைக்கு குடி போகணும். அது ஒரு கூடுதல் செலவு… இப்படி லாப நஷ்டத்தை யோசிக்காம கேசவன் தடால்னு செய்ய மாட்டான்.”


எதிர்பாராமல் மூன்றாம் பிள்ளை பிறக்கவும், சுலோவுக்கு அப்பிள்ளையின் வளர்ப்புக்கு உதவ, அவரின் அம்மா அப்போது அருகே இல்லை. அந்த இக்கட்டான நேரத்தில் பெரிதும் கை கொடுத்து உதவியது, அப்போது உயிரோடு இருந்த ராகவன் தாத்தாவின் மனைவி வத்சலா. பேத்தி இல்லா குறையை போக்க வந்தவள் அஞ்சனா என அவளை ஆசையாக வளர்த்தவரும் அவரே.


மைதிலி, போஸ்ட் ஆஃபீசில் வேலை செய்கிறார். முன்பெல்லாம் மாலையில் சுலோ டியூஷன் எடுக்கும் நேரம், சின்னவளை இவர்கள் வீட்டில் தான் விட்டு வைப்பார்கள்.


ஒரு டெயிலரிங் யூனிட்டில் வேலை பார்க்கும் கௌரிக்கும் இரண்டும் ஆண்மக்களாகி போக, குட்டி அஞ்சனாவென்றால் அவருக்கும் பிரியம் அதிகம். அதிலும் அஞ்சுவும் சந்துவும் நட்பானதில், அவர்கள் வீட்டிலும் அதிகம் இருப்பாள்.


இந்த மூன்று பெண்களோடு பெருவாரி நேரத்தை கழித்ததால் தான் அவர்கள் பொழுதுபோக்கான பாட்டு, கைவினை செய்வது, தையல் கலை ஆகியவை மீது அஞ்சுவுக்கு ஈடுபாடு வந்தது.


வசந்தா பாட்டியின் வருகைக்கு முன் வரை சுலோ, மகளை அதட்டுவாரே ஒழிய, இந்த அடிப்பது கரித்து கொட்டுவதெல்லாம் கிடையாது. காரணம், அவரை விட மற்ற மூவரோடே அஞ்சு நெருக்கம் கொண்டிருந்தாள்.


வசந்தா வந்த பின் தான், “அதென்ன எப்போவும் அக்கம் பக்கம் வீட்ல இருக்கா? வேலைக்கு போறேன்னு சின்னவளை குட்டிசுவராக்கி வெச்சுருக்க,” வழமையான மாமியார்த்தனமான பேச்சுக்கள் பெருகி, சுலோவுக்கும் கடுப்பு கூடி அதை மகள் மீதே காட்டினாள்.


“பெரியவங்களா அவளை கண்டிக்காம, செல்லம் கொடுத்து தான் அந்த ராங்கிக்கு வாய் கூடி போச்சு. உங்க குழந்தையா இருந்தா இப்படி வளர்ப்பீங்களா?” போன்ற வசந்தாவின் கடின பேச்சுக்கு பின்பே, வத்சலா, மைதிலி, கௌரி ஒதுங்க துவங்கினர். இதை எல்லாம் யோசித்து கொண்டே கண் துஞ்சினார் மைதிலி.

****************************


அடுத்த வாரத்தில் ஒரு நாள்…


என்றும் இல்லாத அதிசயமாக காலை ஐந்துக்கெல்லாம் அஞ்சு துயில் களையவும் அக்ஷு மட்டுமல்ல மொத்த வீடும் அதிசயத்தை கண்டதை போல வாயை பிளக்க, புத்தகத்துக்கு பதிலாக ஸ்ருதி பெட்டியை அவள் கையில் எடுக்கவும், ‘இதை ஏன் இப்போ எடுக்கறா’ கேசவன் யோசிக்கும் நேரத்தில், மாடிக்கு போய் விட்ட இளைய மகளின் பின்னே தகப்பனும் சென்றார்.


“ச… பா… சா…” மகள் பயிற்சி துவக்கவும், பிறகு பேசுவோம் என அமைதியாக இறங்கி வந்து விட்டார்.


பாரதியார் பாடல்களை மெட்லியாக விடாது பயிற்சி செய்தவள், அக்ஷு நேரமாகிறதென வந்து சொல்லவும் தான் இறங்கி வந்தாள். அடுத்து வந்த சில நாட்கள் அஞ்சு இவ்வாறு தொடர் பயிற்சி செய்ய, மகளின் பொறுப்பை கண்டு மகிழாமல், ‘இப்போ எதுக்கு தினமும் இப்படி பாடுறா? அந்நேரத்துக்கு படிச்சாலாவது உருப்படலாம்’ வீட்டு பெரியவர்கள் முணுமுணுக்க, அக்ஷுவின் மூலம் பள்ளியில் நடக்கவிருக்கும் பாட்டு போட்டி விவரம் வெளியே வந்தது.


காலை டிஃபன் உண்ண அஞ்சு உட்காரவும், “நீ ஒண்ணும் பாட்டு போட்டியில கலந்துக்க வேணாம். அதான் இப்போ தினமும் காலையில கண்ணு முழிக்கற இல்ல, இனி டெய்லி தாத்தா உனக்கு மட்டும் தனியா டியூஷன் எடுப்பார்,” நலுங்காமல் புது குண்டை போட்டார் சுலோ.


உண்மையில் அஞ்சுவுக்கு நாட்டியம் கற்க தான் இஷ்டம். குடும்ப பெண்கள் நாட்டியம் ஆட கூடாது என்று வசந்தா போட்ட தடைக்கு சுலோவும் ஓத்தூத, அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் அம்மாவின் வற்புறுத்தலில், அக்காவோடு முறையாக பாட்டு கற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.


இப்படி பெரியவர்கள் வடக்கு என்றால், இவள் தெற்கு என வாக்குவாதம் செய்து… எல்லாவற்றிலும் எதிரெதிர் திசையில் முட்டிக் கொண்டு இறுதியில் பல திட்டுக்களை வாங்கி, அம்மாவின் விருப்பம் போலவே அவர் அனுப்பும் வகுப்புக்கு சென்ற அஞ்சுவின் அதே பாடும் திறமைக்கு இன்று முட்டுக்கட்டை போடுவதும் அவளை பெற்ற சுலோ தான்.


ஏற்கனவே உப்புமா தொண்டையில் சிக்கி அவதியாக இருக்க, அம்மாவின் பேச்சில் நொந்த அஞ்சு எதுவும் பேசாமல் தண்ணீரோடு உணவை விழுங்கி வைத்தாள்.


அம்மாவின் சொல்லை தட்டவில்லையென்றால் அஞ்சுவுக்கு தூக்கம் வராதே. அதனால் பள்ளியில் பாட்டு டீச்சரிடம் சென்றவள், “மிஸ், இந்த காம்படீஷன்ல நான் பார்ட்டிசிபேட் பண்ண கூடாதுன்னு அம்மா தடை போட்டுட்டா” பற்ற வைத்தாள்.


மற்ற ஆசிரியர்களுக்கு எப்படியோ பி.டி மிஸ், பாட்டு டீச்சர், ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் டீச்சருக்கெல்லாம் இவள் பெட் ஸ்டூடெண்ட் ஆயிற்றே! அன்று மாலையே சுலோவை அழைத்து பேசி, அவர் சம்மதிக்கும் வரை விடாமல் நச்சரித்து, அஞ்சு பாட்டு போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து விட்டார் அந்த இசையாசிரியை.


இதெல்லாம் அஞ்சுவின் வேலை என்று சுலோவுக்கு புரியாமல் இல்லை. செம கடுப்பில் இருந்தவர், மகளை ஒரு கை பார்க்க நேரம் பார்த்து காத்திருந்தார்.


பள்ளியில் நடந்த போட்டியில் அஞ்சு வெல்ல, மாவட்ட அளவில் நடக்கும் போட்டிக்கு முன்னேறினாள்.


“ம்மா, டிஸ்ட்ரிக்ட் சிங்கிங் காம்படீஷனுக்கு நான் பாவாடை சட்டையில் போகணும். இந்த வீக் எனக்கு ஒரு ட்ரெஸ் மெட்டீரியல் வாங்கி தாங்கம்மா. கௌரி ஆன்ட்டி ஒரே நாள்ல ஸ்டிச் செஞ்சு தந்துடறதா சொல்லியிருக்காங்க.” நல்ல பிள்ளையாக விண்ணப்பம் வைத்தாள்.


“அதெல்லாம் புதுசு வாங்க முடியாது. அக்ஷுவோட ஸ்கர்ட் அண்ட் பிளவுஸ் இருக்கு, டக்கு பிரிச்சு போடு.”


“ம்மா… அதை தான், நான் லாஸ்ட் இயர் காம்படீஷனுக்கும் போட்டேன்.”


“அது வேணாம்னா, ஹரிணிது காப்பி கலர் பாவடை இருக்கே.”


“அம்… ம்ம்மா… போன டீச்சர்ஸ் டே, அப்புறம் சில்ட்ரன்ஸ் டே அன்னிக்கும் அந்த பாவாடைங்களை தான் நான் கட்டினேன். ப்ளீஸ் ம்மா, போன வாட்டியே என் க்ளாஸ் மேட்ஸ் ‘பாவாடைன்னா காலை மறைக்கணும். இப்படி குட்டையா இருக்க கூடாது’ன்னு ரொம்ப கிண்டல் பண்ணாங்க. ‘இதே ஸ்கர்ட்டை எத்தனை வாட்டி போடுவேன்’னு கேலி செஞ்சாங்க.” இரு ஆண்டுகளாக பாரம்பரிய உடைகள் அணிய வேண்டிய போதெல்லாம் இதே இரு ஆடைகளை அணிவதால் கிளம்பும் வகுப்பு தோழிகளின் வம்பு கேலி பேச்சுக்களை நினைத்து அஞ்சு சுணங்கி போனாள்.


“ஒரு சாதாரண ட்ரெஸுக்கு இவ்வளவு யோசிக்கறவ, படிக்கறதுல அந்த ஆர்வத்தை காமிக்கலாம்ல? என்னை கூட தான், உங்க சின்ன மக எத்தனாவது ரேங்க் வாங்கறான்னு கேட்டு, என் கொலீக்ஸ் கேலி பண்றாங்க!”


“உங்களை யாரு என்னை பத்தி மத்தவங்ககிட்ட பேச சொன்னது?” அஞ்சுவினது நியாயமான கேள்வி. மகளின் படிப்பின் மீதான ஆர்வமின்மையை நினைத்து வெகுண்டவர்,


“எல்லாம் என் தலையெழுத்து, மனசு தாங்காம புலம்பினேன். பெத்தவ படர வேதனை கொஞ்சமாவது புரியுதா உனக்கு?”


டாபிக் தடம் மாறி வழக்கம் போல படிப்புக்கு வரவும், பொறுமை இழந்த அஞ்சு… “என் பொண்ணை போல சூப்பர் சிங்கர் யாருன்னு பதிலுக்கு கேட்கறதை விட்டுட்டு…” அஞ்சு முடிக்கும் முன்பாக…


“ஆமாம்டி… நீ பாடுறதை வெச்சு என்ன பண்ண? இந்த நம்ம பிள்ளையார் கோவில் வாசல்ல நின்னு பிச்சை தான் எடுக்கணும்.”


“ம்மா…”


“என்ன, ம்மா? நீ படிக்கற லட்சணத்துக்கு பிச்சை எடுக்க தான் போற…” பெற்றவளே பிள்ளையை கரித்து கொட்ட, அதை கண்டிக்காமல் தன் பங்குக்கு வசந்தாவும் இணைந்து கொண்டார்.


“தண்ட செலவை இழுத்து விடுறதுல குறைச்சல் இல்ல. படிப்பு ஏறாதவளுக்கு எதுக்கு கான்வென்ட்? சாதா ஸ்கூலுக்கு மாத்திடு கேசவான்னு அன்னைக்கே சொன்னேன். என் பேச்சுக்கு இந்த வீட்ல எங்க மதிப்பு? இவளுக்கு டெர்முக்கு டெர்முக்கும் சொளையா ஃபீஸ் அழ, என்னை இங்க கொண்டாந்து சேர்த்துட்டான். ஒரு கோயில் குளம் போக முடியுதா? மொத ரேங்க் வாங்குற அக்ஷு எதுக்கும் வாய் திறக்கறதில்ல. முக்கி முனங்கி பாஸாகிட்டு, இதை வாங்கி கொடு, அது வேணும்னு எந்நேரமும் செலவு வெக்கறது குட்டி சாத்தான்.”


அஞ்சுவின் முகம் சிறுத்து விட்டது. அக்ஷு, அபி எதையும் கேட்கும் முன்பாக அதை வாங்கி தந்து விடுகின்றனர் பெற்றோர் என்பதை அறிவாள். இவள் தொடர்பான எல்லாவற்றையும் படிப்போடு முடிச்சு போட்டு விடுவர்.


அஞ்சு புது பென்சில் பாக்ஸ் வேண்டுமென்றால் கூட “நீ வாங்கற மார்க்குக்கு அபியோட இந்த பழைய பாக்ஸ் போதும் போ!” என்றோ, ஒரு எக்ஸ்கர்ஷன் செல்ல வேண்டுமா? “இந்த ஆர்வம் படிப்புல காணோம், அதெல்லாம் ஊர் சுத்த போக வேணாம்” என்றும், “கேம்ஸ் ஆடாதே, அந்த நேரத்துக்கு சயின்ஸ் வர்க் பண்ணலாம்.” இப்படியே இவளின் சின்ன விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை.


ஹேண்ட் மீ டவுன்ஸ் என்பார்களே… ஒருவர் உபயோகித்தவற்றை மறுசுழற்சி செய்வது, அஞ்சு விஷயத்தில் பெரும்பான்மை ரீசைக்கிள் செய்து ரீயூஸ் செய்யப்படுகிறது. இந்த அபியின் ஷார்ட்ஸ் முதல் அஃஷூவின் அனைத்தும், போறாததற்கு சுலோவின் அண்ணா மகள் ஹரிணியின் பொருட்கள், உடைகள் இவையே மறு சுழற்சி முறையில் அஞ்சுவுக்கு வழங்க பட்டன.


பிறந்த நாளுக்கு, பண்டிகை நாளுக்கு கூட சில நேரங்களில் அக்ஷு அல்லது ஹரிணிக்கு வாங்கப்பட்டு, அவர்கள் ஏதோ காரணத்துக்கு உபயோகிக்காமல் விட்ட உடைகளை, “போடாத புது ட்ரெஸ், இதுக்கென்ன குறைச்சல்? உனக்கு இது போதும்!” என்று இளைய மகளுக்கு சுலோ தந்திருக்கிறார்.


மறுசுழற்சி, சுற்றுப்புறத்துக்கு நன்மை தான், மறுப்பதற்கில்லை. இல்லாதபட்டவர்களுக்கு கொடுத்து புண்யம் தேடுவதை விடுத்து, பொருளாதார நெருக்கடி இருக்கிறதோ இல்லையோ, படிக்காதவளுக்கு எதுக்கு புதுசு என்ற மனோபாவத்தோடு நடந்தனர் கேசவன் தம்பதியர். அஞ்சுவின் மறுப்பு, எதிர்ப்பு இந்த விஷயத்தில் கண்டு கொள்ள படாமல், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க பட்டதே இல்லை.


இவ்வளவு ஏன், அஞ்சுவின் குடும்பத்தை விட பொருளாதார நிலையில் குறைந்த கலை, சந்து… இவர்கள் யாருக்கும் கூட இந்த நிலை இல்லை. நல்ல நாளில் கடனை வாங்கியாவது குறைந்த விலையில் புத்தாடை அணிவர்.


வீட்டு பெரியவர்களின் பேச்சு மற்றும் இது போன்ற செய்கைகளால், சில நேரங்களில் நாம் உண்மையாகவே இவ்வீட்டு பிள்ளை தானா என்றெல்லாம் அஞ்சுவுக்கு சந்தேகம் முளைத்திருக்கிறது.


அன்றிரவு உறங்கும் முன் மீண்டும் பிள்ளையாரப்பாவின் காதை கடித்தாள். “நீயும் உங்கப்பாம்மாவுக்கு மொதல் குழந்தையில்ல! ஓ… அதான் என் ப்ரேயர்ஸ் உன் காதுல விழலையா? யு ஆல் சேம் குட்டை… ஒரு புது பாவாடைக்கு வழி பண்ண மாட்டியா? அந்த விதுஷா சுமாரா படுவா. ஆனா, என்னவோ பெரிய எம்.எஸ் சுப்புலக்ஷ்மி ரேஞ்சுக்கு புது பாவாடை சட்டையில வருவா. அவ அம்மா வேற கையில ஒரு கேமரா வெச்சு போட்டோவா எடுப்பா. இவங்க யாரும் காம்பெடிஷன் அன்னைக்கு எட்டி கூட பாக்க மாட்டாங்க. வொய் பிள்ளையாரப்பா நான் இந்த வீட்ல பொறந்தேன்?” புலம்பி கொண்டே, உடன் படிக்கும் தோழிகளின் கேலியை எண்ணி கலங்கி கொண்டே உறங்கினாள்.


அந்த பாட்டு போட்டியில் அஞ்சு தான் முதல் பரிசு வாங்கினாள். அக்ஷு பப்லிக் எக்ஸாம் எழுத போவதால் ஏற்கனவே அவளுக்கு பாட்டு வகுப்புகளை நிறுத்தி இருந்தனர். அஞ்சு மட்டுமே போய் வந்து கொண்டிருக்க, “இவளுக்கு விளையாட்டு குணம் ஜாஸ்தி ஆகிடுச்சு… இனி கிளாசுக்கு அனுப்ப போறதில்லை மிஸ். அந்த நேரம் படிக்கட்டும் அவ…” அந்த பாட்டு வகுப்புக்கு சுலோ மூடு விழா நடத்த, அஞ்சுவின் அழுகைக்கு பெற்றோர் செவி மறுக்கவே இல்லை.


விளையாட்டு குணம் ஜாஸ்த்தி என்ற அம்மாவின் கூற்றை மெய்யாக்க, பள்ளியில் கோக்கோ மற்றும் கூடை பந்தில் தன் பேரை கொடுத்து விட்டாள். வாரத்தில் நான்கு நாட்கள் மாலையில் அதற்கு பயிற்சி இருக்க… சுலோ முடியாது என்று மறுக்க, இம்முறை பி.டி ஆசிரியையின் முறை.


“அஞ்சுவோட ஹைட் அவளுக்கு பெரிய ப்ளஸ். சூப்பரா விளையாடுறா… ட்ரெயின் செஞ்சா டிஸ்ட்ரிக்ட் லெவல்ல விளையாடுவா. ஸ்கூல் பஸ்ல வீட்டுக்கு வருவா…”


“மேடம் பஸ் என்ன ஃப்ரீ சர்வீஸா? அதுக்கும் ஃபீஸ் உண்டுல்ல?” சுலோ சுள்ளென கேட்டிட…


“பஸ் சார்ஜுல கன்ஸக்ஷன் வாங்கி தரேன். ட்ரெயினிங்குக்கு அனுப்புங்க மேடம்.” ஆசிரியை இறங்கி வர, இப்படியாக இரு விளையாட்டிலும் பயிற்சி துவங்க… அதற்காக பிரத்யோக சீருடை, காலணி முதலியனவற்றை மூக்கால் அழுது கொண்டே வாங்கி தந்தார் கேசவன்.


அவள் விரும்பியது போல அவளுக்கு மட்டுமேயான அந்த சீருடைகள் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் ஆகின அஞ்சுவுக்கு. இயல்பாக விளையாட்டில் இருந்த ஆர்வத்தில் சீக்கிரமே டீமில் முக்கிய வீராங்கனை ஆகியும் போனாள்.


ஆனால் இங்கே வீட்டில் பெற்றவர்களின் பொருமல் கூடி போனது. படிப்பில் நாட்டமில்லாதவள் என்று இவர்களே முத்திரை குத்தி, வார்த்தைகளால் அவளை குதறியதில், ஆஸ் யூ விஷ் என்று அஞ்சுவும் புத்தகத்தை ஆர்வமில்லாது, கடனே என்று தொட, கவனக்குறைவும் சேர்ந்து, முன்பு இருந்ததற்கும் இன்னமும் குறைந்த மதிப்பெண்களை பெற்றாள்.


இது ஒரு முடிவற்ற சுழலானது… படிப்பின் மீதான வெறுப்புக்கு தங்களின் நடத்தையே காரணம் என்பதை உணராது, இளையவளின் மனோபாவத்துக்கு மேலும் எண்ணெய் வார்த்து, அஞ்சனா என்கிற புத்திசாலி குழந்தையை, தேறாத கேஸாக முத்திரை குத்தி விட்டனர்.


அதிலும் அஞ்சுவுக்கு வயது ஏற ஏற, செய்யாதே என்றால் செய்யும் பிடிவாதம் அதிகரித்தது. அப்பாவோ, அம்மாவோ மறுப்பவற்றை வேண்டுமென்றே அவர்களை வெருப்பேற்றவென்றே செய்ய துவங்கி, வீண் பிரச்சனைகளையும் இழுத்து விட்டு கொண்டு அவஸ்தையும் பட்டாள் அஞ்சு.


சர்வ சாதாரணமாக பெற்றோர் மற்றும் இரு பக்க நெருங்கிய உறவுகளால் அடிக்கடி முட்டாள், சோம்பேறி, உருப்படாதவ, தண்ட செலவு, காசுக்கு பிடிச்ச கேடு, போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப் பெற்ற அஞ்சனா, எவ்ரி ஆக்ஷன் ஹாஸ் அன் எக்வல் அண்ட் ஆப்போஸிட் ரியாக்ஷன் என்ற அறிவியல் கூற்றுக்கு ஏற்ப, குடும்பத்தினரிடம் எதிர்வினையாற்றியதில் அவ்வப்போது சின்னதும் பெரியதுமாக சிக்கல்களில் மாட்டி கொள்வது வாடிக்கையானது.


அப்படிப்பட்ட அஞ்சனா ஆதிகேசவனின் கதை தான் இந்த இணை(ந்த) கோடுகள்.
Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page