இணைக் கோடுகள்
கோடு 8
வெளியே இருக்கும் வெயிலின் தாக்கம் கிஞ்சித்தும் தெரியா வண்ணம் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்த படுக்கையறையில் முகத்தில் வியர்வை துளிர்த்து, விரல்களில் லேசாகவும், மனதிலோ பெரிதளவிலும் ஏற்பட்டிருந்த நடுக்கத்தை அடக்க வழி புரியாது, அடித்துக் கொண்டிருக்கும் கைப்பேசியை எடுக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த ஷன்மதி, நல்ல வேளை இவர் இங்கில்ல என்று கணவர் ரானா சிங் ராத்தோர் அந்நேரம் அருகே இல்லாததை நினைத்து நிம்மதி கொண்டாள்.
மீண்டும் மீண்டும் கைப்பேசி அடித்து ஓய, ஐந்தாம் முறை ஒலித்த போது இனி பேசி விடுவது மேல் என எடுத்தவள், “ஸ்டாப் டார்ச்சரிங் மீ ஹரிஷ்.” டென்ஷன் தாளாமல் கத்தி விட்டாள்.
காது கொடுத்து கேள முடியாத கெட்ட வாக்கியத்தால் ஷன்மதியை திட்டியவன், “என்னை நடுத் தெருவுல நிறுத்திட்டு, நீ மட்டும் அங்க ராஜ வம்சத்துல கல்யாணம் பண்ணி, நிம்மதியா இருக்கறியா?”
“லுக் ஹரீஷ், உன் மேல வெச்ச முட்டாள்தனத்தனமான பிரியத்தால, அமைஞ்ச நல்ல வாழ்க்கையை ஒரு முறை நான் இழந்தது போதும். இன்னொரு வாட்டி, இப்படி அனாவசியமா கால் பண்ணினா, அப்புறம் பேச உனக்கு நாக்கு இருக்காது. நடந்ததை ரானாட்ட முதல்லயே சொல்லிட்டேன். அவரும், பழசை பெரிசுப்படுத்தற ரகம் இல்ல. முடிஞ்சதை கிளறி, எனக்கு பிரச்சனை பண்ணனும்னு நீ நினைச்சா, அப்புறம் உனக்கு நடக்கற எதுக்கும், நானோ, ரானாவோ பொறுப்பில்ல.” பட்டென்று பொரிந்து விட்டு வைத்தவளின் உடலோ இப்போது வெளிப்படையாகவே உதறி நடுங்கியது.
நெஞ்சை நீவி தன்னை ஆசுவாசப்படுத்தி, குளிர்ந்த நீரில் முகம் கழுவி, ஐஸ் வாட்டரை தொண்டையில் சரித்து விழுங்கிய பின் சற்றே நிலைப்பட்டவள், ஹரிஷின் குணம் மட்டுமல்ல கணவனின் கோபமும் அறிந்தவளாக, அவள் பொய்யை நம்பி கேடுகெட்டவன் ஒதுங்கினால் பரவாயில்லை. ஆனால்… விடாது பிரச்சனை செய்தானேயானால், நினைக்கவே மனம் பதற, கையோடு தந்தைக்கு அழைத்து விஷயத்தை படபடவென கொட்டி தீர்த்தாள்.
“எப்போல இருந்து அவன் தொல்லை பண்றான்?” மகளிடம் ஹிந்தியில் கேட்டார் ராஜ் சிங்.
“நேத்து ரெண்டு வாட்டி பண்ணான் பப்பா, நான் சைலென்ட்ல போட்டதால கவனிக்கலை. இன்னைக்கு விடாம பண்ணிட்டே இருந்தான்.
“சரி, இனி அவன்ட்ட பேச்சு வெச்சுக்காதே. ராணா மாப்பிள்ளைக்கு?” மேலே கேட்க முடியாமல் அவர் மெளனமாக,
“நோ பப்பா… எக்காரணம் கொண்டும் ஹரீஷ்ஷோட இருந்த உறவு பத்தி ராணாவுக்கு தெரிய வரக் கூடாது.”
“டோன்ட் வொர்ரி ஷனு… பப்பா வில் டேக் கேர்.”
“ப்ளீஸ் பப்பா…” என்று பேசியை வைத்தாள்.
மகளிடம் தைரியமாக இருக்க சொல்லி விட்டாலும், இதென்ன பறித்தெறிந்த களை மீண்டும் திடீரென முளைத்திருக்கிறது என குழம்பி நின்ற ராஜ் சிங் தாகூர், ஒரு காலத்தில் துபாயில் முன்னணி பிசினெஸ்மேனாக இருந்தவர்.
இப்போது ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருப்பவருக்கு, மூன்றரை ஆண்டுகளுக்கு முன் உற்றார், உறவினர் முன் மானம், மரியாதை, செல்வாக்கு எல்லாம் இழந்து நின்றிருந்த நிலை கண் முன் நினைவிலாடி அச்சுறுத்தியது. இன்னொரு முறை குழப்பங்கள் நிகழ்ந்து அவர்களுடைய தற்போதைய அமைதியான வாழ்க்கை சிக்கலாவதில் விருப்பம் இல்லை. என்ன செய்யலாம் என யோசிக்க துவங்கினார்.
*************************************
இங்கே அபோட் ஹோட்டலில்,
அறைக்குள் சென்றவுடன், “ரெஸ்ட் ரூம் அங்க லெஃப்ட்ல இருக்கு மிஸ்.அஞ்சனா, ப்ளீஸ் ரெஃப்ரெஷ் பண்ணிக்கோங்க” என்ற சிவா, திசையை கை காட்டி விட்டு, மேஜை இழுப்பறையில் இருந்து ஒரு சின்ன கவரை எடுத்து நீட்டினான்.
அழுததால் வீங்கி இருந்த இமைகளை மெல்ல உயர்த்தி, என்ன என்பதாக கண்களை சுருக்கியவளிடம், “ஃபேஸ் டவல் அண்ட் காம்ப்ளிமெண்டரி டாயலட்டரிஸ், தேவைப்படும் உங்களுக்கு!”
“தேங்க்ஸ் சார்.” அதை வாங்கிக் கொண்டு, ரெஸ்ட் ரூமுக்கு சென்றவளின் வாடி வதங்கிய தோற்றம் கண்டு சிவாவுக்கு பதறியது.
நேற்று முதல் கைப்பேசியில் கேட்ட துள்ளலும், விளையாட்டுத்தனமும் பொங்கிய அஞ்சுவின் குரலே முகமறியாவிட்டாலும் ஒரு வித பந்தத்தை ஏற்படுத்தி இருக்க, என்ன தான் ‘வேலையில் சேர விரும்புகிறாள்’ என்று சின்னவர் சொன்னாலும், அதற்கான உற்சாகம் அவள் முகத்தில் பிரதிபலிக்கவில்லை, என்பது கண் கூடாக விளங்கியது.
ஏன் காலையில் பார்த்த அஞ்சனாவின் உயிர்ப்பான சிரித்த முகமும், இப்போது இருக்கும் அழுத தோற்றம் எங்கே? அவியை அறிவான் தான்… ஆனால் ஓரளவுக்கே! யாரும் சுலபத்தில் எடை போட முடியா வண்ணமே எப்போதும் அவன் செயல்கள் இருக்கும். ‘என்ன செய்து, இப்பெண்னை பணிய வைத்தார்?’ ஒரு பக்கம் யோசனை ஓடினாலும், முதலாளி இட்ட வேலையை பார்க்க தவறவில்லை.
கைகள் பாட்டில் அந்த காண்ட்ராக்டை ஸ்கேன் செய்து முடித்தவுடன், “மலர், உங்களுக்கு ஒரு டாக்கை மெயில்ல அனுப்பி இருக்கேன் பாருங்க. இந்த காண்ட்ராக்ட்ல ஸ்வர்ணகீர்த்தி டெர்ம்ஸ் போட்டு, புது காண்ட்ராக்ட்டா மாத்தி உடனே கொண்டு வாங்க. க்விக்…”
தன் செயலாளருக்கு உத்தரவிட்டவன், எச்.ஆருக்கு அழைத்து, விவரம் பகிர்ந்து, அவர்கள் பக்கம் செய்ய வேண்டியதை உடனே கவனிக்க பணித்தான்.
எத்தனை நேரம் தான் அந்நிய ஆடவனின் ரெஸ்ட் ரூமில் ஒளிந்துக் கொள்ள முடியும்? அஞ்சனா எவ்வளவோ முறை முகம் கழுவியும், உடலில் தோன்றிய தீயிலிட்ட எரிச்சலை அடக்க முடியாமல் போக, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
நிமிர்ந்து அவளை பார்த்த சிவா, “டீ ஆர் காப்பி? அங்க மெஷின் இருக்கு பாருங்க… ப்ளீஸ் ஹெல்ப் யுவர்செல்ஃப் மிஸ்.” நைந்த அவள் முகத்தை பார்க்க கஷ்டமாக இருக்க, அவளுக்கும் அப்படியே என புரிய, அஞ்சனாவை சகஜமாக்கும் பொருட்டு சாதாரணம் போல நடந்தான்.
சூடாக ஏதானும் உள்ளே போனால், கொஞ்சம் தெம்பு வரும் போல இருக்க, ஒரு டீயை போட்டுக் கொண்டு, நிறைய சர்க்கரை சேர்த்து கலந்து ஒரு வாய் பருகியவள், டீயை அருந்தி முடித்த சிறு அவகாசத்தில் ஓரளவுக்கு மீண்டும் விட்டாள்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக உள்ளத்தை கிழிக்கும் இந்த அழுத்தத்தை தனியே சமாளிப்பவளால், சட்டென்று ஓரளவுக்கு சுதாரிக்க முடிந்ததில் ஆச்சரியமில்லை. மீண்டும் அந்த ராட்சஷனை நேரில் சந்தித்தால், தான் உடைவோம் என்பதும் தெளிவாக… ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,’ தனக்கே சொல்லிக் கொண்டவள், ‘இந்த முறை நான் தோற்க கூடாது. இந்த வேலையை ஏற்பதால் என்னை அடிபணிய செய்ததாக அவன் நினைப்பது வெறும் மாயை என்பதை உணரும் முன், இந்த வேலையை கொண்டே தான் நிமிர்ந்து நிற்க வேண்டும்,’ முடிவு செய்தவளாக சிவாவின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
ஏதோ எழுதிக் கொண்டிருந்தவனுக்கு சற்று ஆச்சரியம் கூட! அவளை ஏறிட்டவனிடம், “உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா மிஸ்டர்…”
“சிவா…” தன் பெயரை அஞ்சுவிடம் தெரிவித்தவன், “வெறும் சிவா போதும் மிஸ். அஞ்சனா,” என்பதையும் சேர்த்தே சொன்னான்.
“இல்ல… நீங்க வயசுல பெரியவர்… சிவா சார்.”
“ஓகே மிஸ்…” அவள் மீண்டுக் கொண்டிருப்பது அவனுக்கும் புரிந்தது.
“கால் மீ அஞ்சு… என் நண்பர்கள் அப்படி தான் கூப்பிடுவாங்க.”
“ஓகே அஞ்சு…” நானும் உனக்கு நண்பன் தான் என்பதை சொல்லாமல் சொன்னான்.
“ஏதோ கேட்க வந்தீங்களே அஞ்சு?”
“ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய போலாமா?”
சிவாவின் முக மாறுதலை கண்டு… “எங்கேயும் ஓடி, ஒளிஞ்சுக்க மாட்டேன் சிவா சார். திடீர்னு இங்க வேலையில் சேருற பெரிய முடிவை அட்லீஸ்ட் என் வீட்ல ஒரு வார்த்தை சொல்லணும்ல நான்.”
“ஓ… ஷூர்… வெளிய இதே ஃப்ளோர்ல எம்ப்ளாயிஸ் கஃபே இருக்கு. அங்க போய் பேசுங்க, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. பேப்பர் வர்க் தயாரான உடனே, நான் அங்கேயே வரேன் அஞ்சு.”
மெதுவே தலையசைத்தவள், சிவாவின் அறையை விட்டு வெளியே வர, அவள் பின்னோடு வந்தவன், அங்கே வெராண்டாவில் இட்ட பணியை செய்ய காத்திருந்த பணியாளிடம், “இவங்களை ஸ்டாப் கஃபே அழைச்சுட்டு போங்க.” உத்தரவிட, திடீரென்று தன் பின்னால் ஒலித்த அவன் குரலைக் கேட்டு, அஞ்சு ஒரு நொடி அதிர்ந்தாள்.
ஆக… இது ஒரு புதைகுழி, உள்ளே அமிழ்ந்து போவது தவிர வேறு மார்க்கம் இல்லை. உள்ளம் கனக்க, அந்த நபர் காட்டிய அறையுள் நுழைந்தவளை அங்கே இருக்கும் படி சிவா சொன்னதை கஃபே இன்சார்ஜிடம் சொல்லி விட்டே நகர்ந்தார்.
“என்ன சாப்பிடறீங்க மேம்?”
“நோ தேங்க்ஸ்… ஐம் ஓகே…” மறுத்தவள், கைப்பேசியை எடுத்து வாட்சப் பார்க்க… காலையில் வீட்டில் டிஃபன் சாப்பிடும் போது சந்துவை அழைத்திருந்தாள். அப்போது அழைப்பை ஏற்காதவன், பதிலாக… “இன் அன் ஆல் டே மீட்… வில் கால் டுனைட்… டேக் கேர்… லவ் யூ, மிஸ் யூ பஞ்சு மிட்டாய்.” சில சிரிக்கும் ஸ்மைலிகளை தட்டி இருந்தான்.
சட்டென்று கண்கள் கலங்கியதை தவிர்க்க முடியாமல், சில நொடிகள் பேசியின் ஸ்க்ரீனை வெறித்தவள், ‘இவனிடம் கூட மனம் திறந்து சொல்ல முடிந்ததில்லை’ என பல நாட்கள் வருந்தியது போல இன்றும், இதயம் வலிக்க… “மிஸ் யூ சந்து… நீ இங்க இருந்துருந்தா எனக்கு இது போல நடந்து இருக்காது.” மெல்ல முனகியவள், கலைக்கு அழைத்து முயன்று குரலை சமன்படுத்தி, மொட்டையாக… மறுத்து கூற முடியாத வேலை ஆஃப்பர் வந்திருப்பதாக கூறினாள்.
கலைவாணி உற்சாகமாக, “சூரி அண்ணனுக்கு தான் நாம தேங்க்ஸ் சொல்லணும்! ஹப்பா, எப்படியோ இனி இந்த அமெரிக்க பேச்சை நீ மூட்டை கட்டிடுவே! எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?”
எதிர்வினையாற்றாது “இங்க பேப்பர்வர்க் முடிய நேரமாகும் போல கலை, நான் நேரே வீட்டுக்கு போயிடறேன்.”
“சரி குரங்கு, இந்த சண்டே பிரியாணி உன் கணக்கு!” வெளிநாடு போகாமலேயே இங்கேயே உயிர் தோழிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்ட நிம்மதியில் உற்சாகமாக விடை தந்த கலை, தோழியின் குரல் மாறுபாட்டை, அவளின் உண்மையான மனவலியை அறியாது போனாள்.
இப்போதைக்கு அம்மா, அப்பாவிடம் மூச்சு விடக் கூடாது. எப்படியும் அவர்கள் சென்னை திரும்ப இன்னும் அவகாசம் இருக்கிறது. வெளிநாட்டு டாலர் மோகத்தில் இருப்பவர்களிடம், இங்கேயே அதுவும் அவர்களுக்கு பிடிக்காத துறையில் வேலையில் சேர்ந்து விட்டதை சொன்னால் ஆகாயத்துக்கும், பூமிக்குமாக குதிப்பவர்களை சமாளிப்பது பெரும் பாடு தான்.
பெற்றவர்களின் கோபத்தை நினைக்கவே மலைப்பாக இருக்க, ‘அவங்களை அப்புறம் சமாளி… இவன்! இந்த அவ்யுக்தை முதலில் சமாளிக்க வேண்டும். தினம் தினம் அவனின் முகத்தில் விழிக்க உனக்கு சம்மதமா அஞ்சு?’ கேள்வி எழுப்பிய மனசாட்சியிடம்…
‘இப்போதைக்கு வேற வழி இல்ல, இவன் கிடக்கிறான். என்னை துச்சமா மிதிக்கறவனுக்கு நான் கழுத்தை சுத்தின அனகோன்டான்னு புரிய வைக்கறேன். முதல்ல சந்துட்ட என்னன்னு சொல்ல? அவன்ட்ட அட்வைஸ் கேட்கணும்னா, முன்னாடி நடந்ததை சொல்லணும்! ச்சே…’ அந்த கொடுரமான நாளை நினைக்க விரும்பாமல் இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவள் முன் வந்து அமர்ந்தான் சூரஜ்.
யாரோ அமர்வது கண்டு யோசனையில் இருந்து விடுபட்டவள், சூரஜை பார்த்து, முயன்று முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாள்.
“என்ன அஞ்சு, நீ இன்னும் இங்க இருக்க? மீட்டிங் ஓகே தானே? சாரி, சார் ஆர்டரை மீறி நான் அங்க நிக்க முடியாது.”
“ம்ம்ம்… அது பரவாயில்ல ண்ணா, மொதல்ல எனக்கு ஒரு விஷயம் கிளியர் பண்ணுங்க!”
“என்னம்மா?”
“இங்க… உங்க... அந்த… அதான் அந்த அவ்யுக்த்… இங்க அதிகம் வருவானா?”
“என்ன?” ஒரு முறை அவசரமாக சுற்றி பார்த்து அருகில் யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி, மூச்சை இழுத்து விட்டவன், “ப்ளீஸ் அஞ்சு… இப்போ தான் பெரிய கண்டத்துல இருந்து தப்பி இருக்கேன். திரும்ப அவர் பேச்சு, அதுவும் இப்படி மரியாதை இல்லாம வேணாம்மா. ஆமா, சின்னவர் பத்தி நீ ஏன் கேக்குற?”
“அது… விட்டல் சார்ட்ட நான் போட்ட காண்ட்ராக்ட்ட முறிக்க முடியாதாம். கண்டிப்பா வேலை பண்ணனும்னு அந்த கடன்கார தடியன் உத்தரவு போட்டுட்டான்.”
“ஐயோ அஞ்சு… உனக்கு பெரிய கும்மிடு. இன்னொரு வாட்டி இப்படி பேசாதே… இங்க எல்லா இடத்துக்கும் கண், காது, மூக்கு இருக்கு.” என்றவனுக்கு லேசாக வியர்க்க துவங்கியது.
சூரஜின் பதட்டத்தை கண்டு, “ஆ… என்ன சொல்றீங்க ண்ணா?” புரியாதவளாக சுற்றும் முற்றும் அவளுமே பார்வையை ஓட்டினாள்.
“ஸி.ஸி.டி.வி இருக்கு பாரு,” மெல்ல அவன் சுட்டிய திசையில் பார்த்தவள்…
“ஓ! இந்த இம்சை எல்லாம் வேறயா? சரி... எனக்கு பதில் சொல்லுங்கண்ணா.”
“புதுசா டேக்கோவர் செஞ்சு இருக்கறதாலயும், இங்க ரீஃபர்பிஷ்மென்ட் வேலை முடியற வரைக்கும் தினமுமே சின்னவர் வந்துட்டு, போயிட்டு தான் இருப்பார். மத்தபடி மெயின் ஆபரேஷன்ஸ் ஹெட் சிவா சார் வீக்லி ஒன்ஸ் சின்னவர்ட்ட ரிப்போர்ட் செஞ்சா போதுங்கறது போல தான் பேச்சு உலவுது.”
“ஓ…”
“விட்டல் சார்ட்ட வேலை பண்றப்ப, சார் கூட எனக்கு எப்போவும் நேரடி காண்டாக்ட் இருக்கும். இப்போ இங்க எல்லாம் மாறிடுச்சு! சிவா சார் மூலம் தான், எல்லா தகவலும் சின்னவர் பார்வைக்கு போகுது. சிவா சாரையும் சுலபத்துல அப்ரோச் செய்ய முடியாது. அவர் செக்கரட்டரியான மலரை தாண்டி தான் போகணும். ஆனா, எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்ல.”
ஏன் என்பதாக புருவத்தை சுருக்கிய அஞ்சுவிடம், “நான் சொல்லி தான் மலருக்கு வேலை தந்தார் விட்டல் சார். அந்த பாசத்தை விடாம, எனக்கு நல்லா உதவும் அந்த பொண்ணு. மத்த படி நான் இந்த ரெண்டு நாளா தான், சின்னவரை நேரடியா பார்க்கிறதே. இப்போதைக்கு இங்க ஆஃபீஸ் நேரம் முடிஞ்ச பின்னே, மெதுவா ராத்திரி வீட்டுக்கு, இல்ல காலையில அவரோட ஸ்வர்ணகீர்த்திக்கு போற வழியில வந்து கொஞ்சம் தலை காமிச்சுட்டு போறார்.”
“ஓ அப்படியா? தேங்க்ஸ் சூரி அண்ணா.”
“ஆமா, இதையெல்லாம் நீ ஏன் கேட்கற அஞ்சு?”
“சும்மா தான் அண்ணா.”
“கிடைச்ச நல்ல வேலையை விட்டுடாதே அஞ்சு.”
சூரஜின் கூற்றை அலசியவள், ‘ஆக, தினம் தினம் அவன் முகத்தை காணும் கொடுமை இல்லை. பார்ப்போம்… இப்போதைக்கு ஆட்டத்தை அவன் விதிகளுக்கு உட்பட்டு துவங்குவோம். ஆனால், முடிவு என் விருப்பம் போல தான்!’ ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் சிவா நீட்டிய பத்திரத்தை படித்து பார்த்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அவளுக்கும் அனுகூலமான விதமாக டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் சில மாற்றி, இதோ மீண்டும் ஒரு காண்ட்ராக்டில் கையெழுத்திட்டு விட்டாள்.
“சார்…” மெதுவே அழைத்த பெண்ணிடம்,...
“வாங்க மாதங்கி… மீட் மிஸ்.அஞ்சனா, இவங்களும் நம்ம டீமில் ஜாயின் பண்றாங்க.” சுருக்கமாக உரைத்த சிவா… “உங்க வர்க்பிளேஸ் காமிச்சுட்டு, மத்தவங்களை அறிமுகப்படுத்துங்க. லஞ்ச் முடிஞ்சப்புறம் எச். ஆர் மீட் செஞ்சு மத்த ஃபார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு நீங்க கிளம்பலாம் அஞ்சு. நாளைக்கு ஷார்ப் நைன்ல இருந்து உங்க டியுட்டி ஸ்டார்ட்ஸ்,” என்றவன் அர்த்தத்தோடு சிரிக்க…
வெகுவாக மீண்டு விட்ட அஞ்சு, “டோன்ட் வொர்ரி சார், ஃபுல்லா சென்ட்ரலைஸ்ட் ஏசி வேற ஜம்முன்னு போட்டு விட்டுருக்கீங்க. என்ன பெட் இருக்காது… பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணி, விட்ட தூக்கத்தை வேலையில கண்டினியூ செஞ்சுக்கறேன்.”
அஞ்சுவின் அடாவடி பேச்சில் மாதங்கி அரண்டு சிவாவை பார்க்க, தன் காப்பியை உறிந்துக் கொண்டிருந்த சூரஜுக்கோ புரை ஏற, சிவாவை ஏறிட்டு திருதிருவென விழித்தான்.
இருவரையும் முறைத்த சிவா, “எங்க இருந்து எனக்குன்னு வந்து வாய்க்கறீங்களோ!” தலையில் தட்டிக் கொண்டு வெளியேறியவனுக்கு, அஞ்சுவின் குறும்புத்தனம் மீண்டது கண்டு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
“ஹே அஞ்சு… என்ன அவர்ட்ட இப்படி பேசிட்ட?” சூரஜ் டென்ஷனாக…
“கூல் சூரி அண்ணா…” அமைதியின் சொருபமாக காட்சியளித்த அஞ்சனாவிடம்,
“ஒரு உரையில ஒரு வால் தான் இருக்க முடியும். நானே ஓபியடிச்சுட்டு இருக்கேன். எனக்கு போட்டியா இன்னொருத்தரா? நோ… நெவர்.”
மறுநாள் சேரும் போது, இதுவரை அவள் ஒருங்கிணைத்த விழாக்களின் படங்கள், ஏதேனும் ரெஃபரென்ஸ், ரிவியூக்கள் வந்திருந்தால், அவற்றை ஒரு ஃபோல்டராகி சமர்ப்பிக்க சொல்லி, அஞ்சுவிடம் தெரிவிக்கும் பொருட்டு மீண்டும் அங்கே வந்த சிவாவின் காதில் சூரஜின் பேச்சு விழவும், கடு கடுவென்ற முகத்தோடு, “சூரஜ், கம் டு மை ரூம்…” ஆர்டரிட்டவன் தான் சொல்ல வந்ததையும் சொல்லி விட்டு நகர்ந்தான்.
“ஆஹா… இவர்ட்ட சிக்கிட்டோமே!” சூரஜ் முழிக்க…
“என்ன சூரி அண்ணா, உங்க கெத்து இவ்வளோ தானா?” கேலியாக அஞ்சு சிரிக்க…
“என்னை விடு ஆத்தா… இப்போ சாமியாட்டம் ஆட போறார்… நான் ஜூட்” என சிவாவை காண விரைந்தான்.
“நாம போலாமா அஞ்சனா…” சுதாரித்த மாதங்கி மெதுவே கேட்க, பெரிதாக தலையை உருட்டி, அவளோடு சென்ற அஞ்சுவுக்கு படபடப்பாக இருந்தது.
அவள் வேண்டும் என நினைத்த போது… நடவாத ஒன்று, இந்த தொழிலுக்கே முழுக்கு போட்ட பின் தானாக அவளை தேடி வரும் போது, எப்படி எடுக்க என புரியாமல் சிறு குழப்பத்தோடு மாதங்கியின் பின் சென்றாள்.
*********************************************
“சார்… சும்மா விளையாட்டுக்கு பேசிட்டு…” சூரஜ் முடிக்கும் முன்பாக முறைத்த சிவா,
“அஞ்சுட்ட சொல்லி வை சூரஜ். சின்னவர் ரொம்ப கோபக்காரர். இன்னைக்கு அவங்க பேசினது போல, இதுவரை அவர் முகத்துக்கு நேரா வேற யாரும் பேசினதில்லை.”
“ஐயோ… என்னாச்சு சார்?”
“ஹரீஷ் சார்னு தப்பா நெனைச்சு, விட்டல் சாரை கவனிக்காததுக்கு நம்ம சின்னவரை காட்டாம பேசிட்டாங்க. நிச்சயம் சின்னவர் ஏதோ நல்ல மூட்ல இருந்திருக்கணும். இல்லைன்னா அஞ்சனாவோட துடுக்கு வாய்க்கு? ப்ச்… உன் வாலையும் கொஞ்சம் சுருட்டிக்கோ. அப்படியே அந்த பொண்ணையும் வார்ன் பண்ணு.”
“சரி சார்…” என்றவன், வெளியே வர… ஏற்கனவே இருவரிடையே நிலவிய பழைய கணக்கு பற்றிய தகவல் அறியாத இவ்விருவருமே, ஹரீஷ் என்று எண்ணியதால் நடந்த வாக்குவாதம் என்று தவறாக கணக்கு போட்டுவிட்டனர்.
***************************
மாதங்கியோடு, இவன்ட்ஸ் டீம் வேலை செய்யும் பகுதிக்கு சென்றவளுக்கு பெரிய ஆனந்த ஆச்சரியம் காத்திருந்தது. இந்தியாவின் முன்னணி நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும் கம்பெனியான பினாக்கலை நடத்தும் ஜாய் மல்ஹோத்ரா தான் அவர்களுக்கு தலைமை (டைரக்டர் ) என்ற செய்தி கேட்டு, துள்ளி குதிக்க தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிய அஞ்சனா, அந்த நொடி மற்ற மனவருத்தங்களை புறம் தள்ளி, சந்தோஷித்தாள்.
பின்னே, பாலிவுட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் மிக பிரபலமான, ஆக சிறந்த இவன்ட் கோவார்டினேட்டரான ஜாய்யிடம் பயிற்சி பெறுவது எல்லாம் கனவில் கூட கற்பனை செய்ய முடியாததாயிற்றே. அப்படியிருக்க, கத்துக்குட்டி அஞ்சுவுக்கு அவரிடம் நேரடியாக பணி செய்ய, அதுவும் நேர்காணல் ஏதும் இன்றி அமைவதென்றால் சும்மா இல்லையே. ஜாக்பாட் அடித்த அதிருஷ்டம் போல் அல்லவா? புது உற்சாகம் குமிழிலிட, குழுவில் இருந்தோரோடு ஆர்வமாக பேச துவங்கினாள்.
“இவங்க அஞ்சனா, நம்ம டீம்ல புதுசா ஜாயின் செஞ்சுருக்காங்க.” மாதங்கி தொடங்கியதை தொடர்ந்து, “வெல்கம் அஞ்சனா…” எல்லோரும் கோரசாக வரவேற்பளித்தனர்.
“ஐம் லாரன்ஸ்…” “ஹாய், அம் வினிதா,” “ஐ ஆம் ஷக்தி,” “நான் நிவேதா, க்லாட் டு மீட் யூ…” அறிமுகப்படலம் முடிவுற,
“நாங்களும் இங்க நியூ என்ட்ரன்ட்ஸ் தான் அஞ்சனா.”
“என்னை அஞ்சுன்னே கூப்பிடுங்க… அப்போ, இதுக்கு முன்ன இருந்த டீம் என்னாச்சு?”
“மொத்த டீமுக்கும் சின்ன முதலாளி கல்தா கொடுத்துட்டதா கேள்விப்பட்டோம்.”
“ஜாய் சார் தலைமையில இங்க சென்னையில ஒரு புது குழு அமைச்சுட்டு இருக்காங்க. எல்லா போஸ்டுக்கும் இப்போ தான் ரெக்ரூட்மெண்ட் நடக்குது. நாங்க சேர்ந்து ரெண்டு வாரம் ஆகுது.”
“நமக்கு நம்ரதான்னு ஒரு கோவோர்டினேட்டர் இன்ச்சார்ஜா இருக்காங்க. அவங்க தான் எங்களை இன்டர்வியூ செஞ்சாங்க. ஜாய் சார் வரும் போது வருவாங்க… இங்க இவன்ட்ஸ் புக் ஆக ஆரம்பிக்கவும், முழு நேரமும் நம்ம கூடவே இருப்பாங்களாம்.”
இவ்விவரங்களை கொடுத்தவர்கள் கூற்றிலிருந்து, “என்ன இப்போ இவன்ட்ஸ் புக் ஆகலையா? ஏன்? இது ஆடி மாசம் கூட இல்லையே!” அஞ்சு வினவ,
“இங்க இருக்க பார்ட்டி ஹால்ஸ் எல்லாம் ரிப்பேர் அண்ட் ரீவேம்ப் செஞ்சுட்டு இருக்காங்க. சோ அது முடியறவரை புது விசேஷங்களை புக் செய்யாம தற்காலிகமா நிறுத்தி வெச்சிருக்காங்க.”
“நெக்ஸ்ட் வீக் ஜாய் சார் வரார்.”
“அப்ப, அதுவரை நாம என்ன செய்ய?” அவளின் சந்தேகத்துக்கு…
“இப்போதைக்கு நம்ம ஸ்ட்ரெங்த்ஸ் என்னென்னன்னு தெரிஞ்சுக்க, சின்ன சின்ன சிமுலேஷன்ஸ் பண்ண வைக்கறார்.”
எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டிருந்த அஞ்சனாவுக்கு அவர்களின் ஆர்வம் தன்னையும் அறியாமல் தொற்றியது. “சிமுலேஷன்ஸ்ஸா?”
“ம்ம்… வேற வேற கிளையண்ட் சினாரியோஸ், பட்ஜெட்ஸ், ரிகுவையர்மென்ட்ஸ் உள்ள ஃபங்க்ஷன்ஸ் பத்தி ஜாய் சார் மெயில்ல ஒரு அவுட்லைன் அனுப்பிடறார். அவங்க சொல்லறதை புரிஞ்சு நாம எப்படி ஆர்கனைஸ், கோவார்டினேட் பண்ணுவோம்னு நம்ம பிளானிங் அண்ட் எக்சிகியூஷன் ஸ்கெடியுள், டைம்லைன்ஸ் ப்ரிபேர் செஞ்சு நாம மெயில் பண்ணனும். ஜாய் சார், அதை படிச்சுட்டு, நம்மை கேள்வி கேட்டு… நாம தக்க பதில் சொல்லின்னு, இந்த ரெண்டு வாரத்துல ரெண்டு மாக் (mock) இவன்ட்ஸ் செஞ்சுருக்கோம்.”
இதென்னடா இது கூடவா (மெய்நிகராக) வர்ச்சுவலாக செய்ய வைப்பார்கள் என அஞ்சு ஆச்சரியப்பட்டாள்.
சக்திக்கு கார்ப்பரேட் இவன்ட் கோவார்டினேஷன் முன் அனுபவம் உள்ளதாகவும், லாரென்சு திரைப்படக் கல்லூரியில் படித்தவன், புகைப்படத்துறையில் ஆர்வம் என்றும், ஃபைனான்ஸ் பின்னணி கொண்ட மாதங்கி காஸ்டிங், பட்ஜெட்டிங் அனுபவம் உள்ளவர் எனவும், வினிதா டிஜிட்டல் க்ரியேடிவ் டெக்னாலஜியில் பயிற்சி பெற்றவள், நிவேதா இவன்ட்ஸ் போர்ட்ஃபோலியோ க்ரியேட்டர் என அவர்களை பற்றிய விவரங்களை உள் வாங்கியவளுக்கு தன் திறமைக்கு இங்கே சவால் மட்டுமல்ல, நல்ல தீனியும் கிடைக்கும் என புரிந்தது.
இப்போதைக்கு மாதங்கி, ஷக்தி மற்றும் நிவேதா தவிர்த்து மீதி இருவரும் அதிக முன் அனுபவம் இல்லாதவர்கள். தன்னை பற்றி சிறிது சொன்னவளுக்கு, அவர்கள் அனைவருடனும் சுலபமாக பேச முடிந்தது.
“வென்யூ நம்மோடதுங்கறதால, செக்யூரிட்டி அண்ட் கேட்டரிங் இன்ஹவுஸ். நோ, காம்ப்ரமைஸ் இன் திஸ். ஹோட்டல் கேட்ல நுழையற ஒவ்வொரு கெஸ்ட்டும் நம்ம கேட் தாண்டி போகும் வரை அவங்க பாதுகாப்பு ஏற்கனவே இங்க உள்ள டீமோட பொறுப்பு.”
‘ஓ நம்ம டி.சி.பி., ராகவன் தான் இதுக்கு ஹெட் போல,’ மனதில் எண்ணிக் கொண்டால் அஞ்சு.
“நம்ம இவன்ட்ஸ் டீமோட எக்ஸ்க்ளூசிவ் பாங்க்வெட் மேனேஜர் மிஸ்டர். ராஹுல், பெவெரேஜ் மேனேஜர் ஷரத், எக்சிக்யூட்டிவ் செஃப் மிஸ்டர். ஷ்யாம். வெல்கம் ட்ரிங்க் முதல், கடைசியா போடுற பீடா வரை க்ளையண்ட்டோட விருப்பம் போல மெனு பிளானிங் அண்ட் எக்சிக்யூஷன் இவங்க மூணு பேரோட பொறுப்பு.”
“இதுக்காக மெயின் கிச்சன்ல மொத்த கேட்டரிங் டீமுக்கும் ஸ்பெஷல் ட்ரெயினிங் நடந்துட்டு இருக்கு. வர்ற விருந்தினரை எந்த குறையும் இல்லாம கவனிக்க ஹாஸ்ப்பிட்டாலிட்டி ப்ரோவைடர்ஸ், அவங்களுக்கு தேவையான பயிற்சி கொடுக்கன்னு, புதுசா ஒரு ஏஜென்சி கூட ஆரம்பிச்சு இருக்காங்க.
“அப்ப ஃபிளவர் அரேஞ்மெண்ட்ஸ், போட்டோகிராஃபி, லைட்டிங், டி.ஜே, ஆடியோ விஷுவல், எக்விப்மென்ட்ஸ் இதை எல்லாம் யார் பார்த்துக்க போறா?” அஞ்சுவின் வினாவுக்கு,
“ஹோட்டலோட ஃபிளாரிஸ்ட் டீம்ல இருந்து சில ஊழியர்கள் எடுத்து இருக்காங்க. ஃபிளாரிஸ்ட்ரி தலைமை பொறுப்பு முன்னனுபவம் உள்ளவங்க வேணும்னு தேடிட்டு இருக்காங்க. டெக்கர் அண்ட் டிசைனுக்கு மல்ஹோத்ரா சார் டீம்ல இருந்து வரப் போறாங்க. பட்ஜெட்டிங், கிரியேட்டிவ் ஹெட்ஸ், சவுண்ட் இஞ்சினியர், மார்க்கெட்டிங், அட்வெர்டைசிங், எல்லா விங்ஸ் கோவார்டினேட்டர்ஸ்னு மெகா டீம் ரெடி ஆகிட்டு இருக்காங்க.” என்றார் மாதங்கி.
“ஏற்கனவே இங்க உள்ள லைவ் ஆர்கெஸ்டரால இருக்க மியூசிஷியன்ஸ் சிலர் செலக்ட் ஆகிட்டாங்க. அப்புறம் டி.ஜே., பத்தி முழு விவரம் இன்னும் எங்களுக்கு தெரியாது அஞ்சு.” என்றார் நிவேதா.
காதில் விழுந்த எல்லா விவரங்களையும் பிளாட்டிங் பேப்பர் போல உள்வாங்கி மனதிலேற்றி, அவர்களோடு உணவு உண்டு, மேலும் சில விஷயங்களை கலந்துரையாடி, எச்.ஆருக்கு சென்று, அடையாள அட்டை, இத்யாதி விஷயங்களை முடித்து, அஞ்சு வீடு வந்து சேர மாலை ஆறாகி விட்டது.
வரும் போதே கலை அழைத்து விட, வேலை விவரங்களை சொல்லி விட்டு, அப்படியே சந்துவை அழைத்தவள், அவனிடம் சொல்லி முடிக்கும் முன்பாக, லேசாக உடைந்து விட்டாள்.
“ஹே அஞ்சு, என்னடா? ப்ச்… இப்போன்னு உன் கூட இல்லாம போயிட்டேன் பாரு!”
நண்பன் அவ்வாறு சொல்லவும், தன்னை சுதாரித்தவள், சிங்கப்பூர் பற்றி பேச்சை திசை திருப்ப, தக்க பதில்களை தந்தவன், தோழி சமன் பட அவகாசம் தந்தான்.
“இப்போ சொல்லு பஞ்சு மிட்டாய், திடீர்னு வேலைக்கு சேர ஏன் ஒப்புக்கிட்ட?”
“அ அது வந்து…” என்னவென்று சொல்லுவாள்?
“அஞ்சு, என்ன ஆச்சு? ஆர் யூ ஓகே?”
“ஹா… ம்ம்ம்…”
“உனக்கு பிடிச்ச துறை தான்னாலும், அமெரிக்கா போறேன்னு படிக்க ஆரம்பிச்சவ, இப்படி திரும்ப ஏன் யூ டர்ன் அடிச்ச? மொதல்ல சூரி அண்ணா நம்பர் குடு. அவர்ட்ட நான் சில விவரம் கேட்டு தெளிஞ்சுக்கறேன்.”
‘ஐயோ, காரியம் கெட்டது! அவ்யுக்தின் மிரட்டல்களை பற்றியும், அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை குறித்தும் அந்த அண்ணா, ஒன்று விடாமல் விலாவரியாக உளறி வைப்பாரே! அதைக் கேட்டு, சந்து யோசிப்பான். இங்கே வேலை வேண்டாம் என்று நிச்சயம் சொல்லி விடுவான். ஐயமே இல்லை. சந்துவை மறுத்து அங்கே வேலைக்கு சென்றாலும் ஏன் என்று கேள்வி எழுப்புவான். வேலையில் சேராமல் தப்பிக்கவும் முடியாது. அவ்யுக்த் மிரட்டுகிறானே!’ பலதும் சிந்தித்த அஞ்சு, மௌனம் சாதித்தாள்.
“என்னடா? நான் வீடியோ கால் போடுறேன்.”
“இல்ல வேணாம்… அழுதிருக்கேன்… என் முகம் பார்த்து கேலி பண்ணுவ நீ!”
“ஹேய்… எதுக்கு அழுத? என்னாச்சு? இரு நான் மாமிகிட்ட…” அவனை முடிக்க விடாமல்…
“ஜண்டு, ஏன்டா இப்படி எனக்கு எல்லாமும் ஏறுக்குமாறா நடக்குது? நானே வேணாம்னாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை தானா தேடி வருது. பெத்தவங்களை யோசிச்சு மறுக்கணும்னு நினைச்சாலும், என் நாக்கு நோ சொல்ல மாட்டேன்னுடுச்சு! அப்போ நல்லா தஞ்சாவூர் பொம்மையாட்டும் தலையாட்டி ஒத்துக்கிட்டேன். இப்போ அவங்களை எப்படி டீல் செய்யன்னு டென்க்ஷனா இருக்கு.” சரியான சமாளிப்பை நண்பனின் முன் வைத்தாள்.
“சுலோ ஆன்ட்டி, அண்ட் அங்கிளை நினைச்சா எனக்கும் வயறு கலக்குது. விடு பிடிச்ச வேலைக்காக நாலு திட்டு வாங்கிக்கலாம்.” அவள் போட்ட கோட்டில் திசை மாறி பயணித்தவன், வேறு கேட்க துவங்கினான்.
“எங்க இவன்ட்ஸ் டீம் ஹெட் மிஸ்டர். ஜாய் மல்ஹோத்ரான்னு சொன்னாங்களா?”
“வாட்… நிஜமாவா அஞ்சு?” இத்தனை ஆண்டுகள் அவளோடு சுற்றும் சகவாச தோஷத்தில், ஜாய் மல்ஹோத்ராவின் உயரம் அறிவான்.
“ம்ம்… அப்புறம் அந்த அமெரிக்கா எல்லாம் அண்டார்டிக்கா தொலைவுக்கு ஓடியே போச்சுடா ஜண்டு.” எப்படி சொன்னால், மேலும் கேள்வி எழுப்ப மாட்டான் நண்பன் என்பது அஞ்சு அறிவாளே! அந்த வலையில் மிக சரியாக வீழ்ந்தவன்,
“ஹே பஞ்சு மிட்டாய், நிஜமாவா? யூ லக்கி கேர்ள்… அன்பிலீவபில் குரங்கே! ஓ மை காட்… ஆம் சோ ஹாப்பி ஃபார் யூ…” சந்து சந்தோஷ மிகுதியில் கத்த, நண்பனின் உண்மையான குதூகல ரியாக்ஷனில், தான் எந்த சூழலில் வேலையில் சேர வற்புறுத்தபட்டோம் என்பதே அஞ்சுவுக்கு மறந்து விட்டது எனலாம்.
“ஐ நோ டா ஜண்டு.”
“சான்ஸே இல்ல, இந்த நல்ல வாய்ப்பை விட கூடாது. இப்ப இந்த அங்கிள், ஆன்டியை சமாளிக்க சூப்பர் ஸ்கெட்ச் போடறோம் கொரங்கு?” அவள் பிரச்சனையை தனதாக எடுத்து கொண்டான் அந்த ஆத்ம நண்பன்.
“இப்போதைக்கு சொல்ல போறதில்ல சந்து… சென்னை திரும்பட்டும், அப்போ பார்த்துக்கலாம்.”
“அதான் சரி அஞ்சு. ஹப்பா… நல்ல வேளை நான் ஊர்ல இல்ல! இல்லைன்னு வை, உன்னை பிடிக்க முடியாதப்ப, எனக்கு போனை போட்டு, நீ ஒழுங்கா படிக்கறியா இல்லையான்னு பேசியே இந்த விஷயத்தை வெளிய வர வெச்சாலும் வைப்பார் கேசவன் அங்கிள். நான் எஸ்கேப்…”
“போடா எரும, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.” குரல் கலங்கி விட்டது பெண்ணவளுக்கு.
அதை உணர்ந்தாலும், அவளை மீட்க வேண்டி, “ஏன் மிஸ் பண்ண மாட்ட? உனக்கு வேலை, அதுவும் இஷ்டமான ஜாப் கிடைச்சதுக்கு, ட்ரீட்டுங்கற பேர்ல, இந்நேரம் என் பாக்கெட்டை இல்ல மொட்டை அடிச்சு இருப்பே. நிஜமாவே கிரேட் எஸ்கேப் சந்து உனக்கு. ஆண்டவா உன் கருணையே கருணை.”
அவ்வளவு தான், பொங்கி விட்டாள் அஞ்சனா. அவளை சமாதானம் செய்து, மேலும் சிறிது நேரம் பேசியவன், பொறுப்புள்ளவனாக… “ஆமா, “அங்க வேலை பண்ற இடம் எப்படி? நேரம் காலம் இல்லாம சுத்த வேண்டி வருமே? எப்படி மேனேஜ் பண்ணுவ?” விடாமல் துருவி கேள்வி எழுப்பினான் சந்திரபிரகாஷ்
“அதெல்லாம் பிரச்சனையில்ல சந்து. ஹோட்டல் கார் இருக்கு. காலையில பிக்கப், டிராப் எல்லாம் உண்டுடா.”
தனியே கேபில் பயணிக்க நேரும் போது எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி காது தீய பாடம் எடுத்தான்.
“போதும் உன் அட்வைஸ்… போனை வைடா” என கத்தினாலும், தன் மீது, அவனுக்கிருக்கும் அன்பு, அக்கறை நினைத்து உள்ளம் பாகாய் கரைந்தது.
“அலாரம் வை, நந்து மாமாவை எதுக்கும் பெல் அடிச்சு எழுப்ப சொல்லு. கிளம்பும் போதும், வேலையில் எங்க எதுக்கு கேப் எடுத்தாலும், எனக்கு லொகேஷன் ஷேர் பண்ற, ஒரு மெசேஜ் போடுற… முக்கியமா, உன் எக்ஸைட்மென்ட் பால்டிமோர்வாசிகளுக்கு இப்போதைக்கு தெரிஞ்சுட கூடாது. அடக்கிவாசி ஆதிவாசி.”
“சரிடா …” என பேசியை அணைத்தாள்.
சந்துவோடு பேசும் போது இருந்த உற்சாகம், பேசியை வைத்தவுடன் இருந்த இடம் தெரியாமல் மறைய, மைத்தி மாமியும் இல்லை என்பதால், சோர்ந்தவள்… உணவு உண்ணக் கூட தோன்றாமல் கட்டிலில் விழுந்தாள்.
மூன்றரை ஆண்டுகள்… வாழ்க்கை தடம் புரண்ட நாட்களை எண்ணிய அஞ்சுவுக்கு கண்கள் உடைப்பெடுத்தன.
அதே நேரம், மிதமான ஏசியின் குளிரில் படுக்கையறையின் லெதர் சோஃபாவில் சாய்ந்திருந்த அவ்யுக்த்தும் தன் வாழ்க்கையின் ஒரே பெரிய சறுக்கலை பற்றித் தான் எண்ணிக் கொண்டிருந்தான்.
ஜெய்சல்மர்ரில் கணவன் ராணாவுடன், அவனின் குடும்ப விருந்தில் கலந்து கொண்டிருந்தாலும், கணவனிடம் மறைத்திருக்கும் கடந்த காலம் அம்பலமாகி விடுமோ என்றெண்ணி அனைவரோடும் பெயருக்கு உரையாடிக் கொண்டிருந்த ஷன்மதிக்கு உள்ளுக்குள் உதறலாக இருந்தது!
இவர்கள் எல்லோர் வாழ்க்கையிலும் குழப்பத்தை துவக்கிய ஹரீஷ்… தன் பெண்ட்ஹவுஸில், தனிமையில், குடி போதையில் தன்னிலை மறந்து “உன்னை கொல்வேன்டா அவி! ஷனு மை லவ்… மிஸ் யூ ஷன் பேப்” பிதற்றிக் கொண்டிருந்தான்.
Comments