top of page

ஆருயிர் ஆதிரா 18



அறிவு ஆதிராவிடம் அலைபேசியில் திருமணப் பத்திரிக்கை அஞ்சலில் வருமென்று கூறிய நாளன்று மதிய வேளையில் விக்னேஷ் டியூட்டி முடித்துத் தனது க்வாட்டர்ஸ் இல்லத்திற்கு சென்றான்.


முதல் தளத்தில் இருக்கும் வினோத்தின் வீட்டினை தாண்டி தான் அவன் அத்தளத்திலேயே இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல வேண்டும்.


அவனின் வீட்டை கடந்து சென்ற நேரம், வினோத் ஆதிரா என ஏதோ கூறுவது விக்னேஷின் காதில் விழ, அப்படியே நகராமல் நின்றவன், அவ்வீட்டின் ஜன்னல் பக்கம் பார்க்க, உள்ளே முத்துவும் வினோத்தும் மது அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.


"ம்ப்ச் பகல்லயே ஆரம்பிச்சிட்டாங்களா இவங்க?" எனச் சலித்தவாறு அங்கிருந்து விக்னேஷ் நகர முற்பட்ட சமயம்,


"ஆதிரா தான்டா அந்தத் தொடரை எழுதிட்டு இருக்கா... நான் கண்டுபிடிச்சிட்டேன்டா! என்னா தெனாவட்டு திமிரு இருக்கனும் அவளுக்கு! சரியான ராங்கிகாரி! புதுசா ஒருத்தன் கூடச் சுத்திட்டு இருக்காளே... அவன் கொடுக்கிற தைரியம் எல்லாம்" எனக் கடுப்புடன் கூடிய கோபத்தில் வினோத் கூற,


வினோத்தின் கூற்றில் வெளியில் நின்று இதைக் கேட்டிருந்த விக்னேஷிற்கும், வினோத்தின் அருகில் மது அருந்திக் கொண்டே கேட்டிருந்த முத்துவிற்கும் அதிர்ச்சியாய் இருந்தது.


"என்னது ஆதிராவாஆஆ! அவளா அதை எழுதுறது?" எனச் சந்தேகமாய் மீண்டும் முத்து கேட்க,


"ஆமாம்டா! நான் அந்தப் பத்திரிக்கை உள்ளே வேலை செய்ற ஆட்கள் மூலம் தெரிஞ்சிக்கிட்டேன். நம்பகமான ஆட்கள் கிட்டயிருந்து தான் இந்த விஷயம் தெரிஞ்சிது. 'ஆரான்ற பேர்ல இதை எழுதுறது ஆதிரான்ற பொண்ணு! வாரா வாரம் எழுதி மெயில் பண்ணிடும் அந்தப் பொண்ணு. எங்க எடிட்டர் பார்த்துக் கரெக்ட் செஞ்சி ப்பளிஷ் செய்றாருனு' அங்குள்ள ஆளு சொன்னாரு" என்றவன் மேலும் தொடர்ந்து,


"அவளை ஏதாவது பண்ணனும்டா! இந்தத் தொடரை தொடர விடாம செய்யனும். ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ்னால கெட்டவங்கன்ற மாதிரி தானே எண்ணம் வரும் படிக்கிறவங்களுக்கு" என ஏதேதோ சிந்தனையில் உழன்றவாறு அவனிடம் உரைத்திருந்த வினோத்தின் கூற்றில்,


'இவனுக்கு வேற வேலை இல்ல' என மனதினுள் எண்ணியவாறு விக்னேஷ் அந்த இடத்தில் இருந்து அகன்றான்.


தனது வீட்டிற்கு சென்றதும் குளித்து முடித்துப் படுத்த விக்னேஷிற்கு இந்தத் தொடரை யார் எழுதுவது எனத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆவல் மேலிட அறிவுக்குக் கைபேசியில் அழைப்பு விடுத்தான்.


அறிவு அங்கு அலுவலக வேலையில் பிசியாக இருந்ததால் அழைப்பை ஏற்காது இருந்தான். விக்னேஷ் அப்படியே உறங்கி விட, மாலை அறிவு விக்னேஷை அழைத்த சமயம் அவன் உறக்கத்தில் இருந்தான்.


இரவு நெடு நேரம் கழித்து எழுந்த விக்னேஷ், 'அய்யோ டியூட்டிக்கு போகனும் டைம் ஆயிடுச்சே' என அவசரமாய்க் கிளம்பி செக் போஸ்ட்டிற்கு சென்ற சமயம் தான் ஆதிரா காணவில்லை என்ற செய்தி கிடைத்தது.


அன்று இரவு சந்திரனுடன் இணைந்து தேடலில் ஈடுபட்ட விக்னேஷ், ஆதிரா சென்றிருந்த இடத்தின் அருகிலிருந்த காமிரா வீடியோவெல்லாம் ஓட்டி பார்க்க, ஒருவரை புலி துரத்தும் வீடியோ சிக்க, அதன் மூலமாய் தான் அவள் புலியால் தான் எங்கோ அடித்துக் கொல்லப்பட்டிக்கிறாள் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது.


ஆனாலும் இதனை முழுதாய் ஏற்றுக் கொள்ள இயலாமல் விக்னேஷ், மறுநாள் காலை சென்னையில் இருந்து அறிவு வந்ததும் அவனுடன் இணைந்து காட்டினுள் தேடலை துவங்கினான்.


இரவு தாண்டிய நேரம் வரையிலும் அறிவும் விக்னேஷூமாய் ஆதிராவை பல இடங்களில் தேடியும் அவள் கிடைக்காமல் இருக்க, இருவருமாய் காட்டிற்குள் ஒரு இடத்தில் சோர்ந்து அமர்ந்திருந்த சமயம் வினோத்தின் ஞாபகம் விக்னேஷிற்கு வந்த நொடி, "இதோ வந்துடுறேன்" என அறிவிடம் கூறி அவசரமாய் செக் போஸ்ட் நோக்கி சென்றவன்,


அங்கு வினோத்தை பார்த்ததும், "ஆதிராவை என்னடா பண்ண?" என ஆங்காரமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து அடித்தான்.


"நான் என்னடா பண்ணேன்? அவளைப் புலி தானே அடிச்சி கொன்னுருச்சு?" என விக்னேஷ் அவன் அடியிலிருந்து தப்பியவாறு உரைக்க, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு விக்னேஷை வெகுவாய் தாக்கிவிட்டு சென்று விட்டான் வினோத்.


------


அன்று காலை ஆருத்ராவை எழுப்பி, தான் கோயம்பேடு சென்று விட்டு வருவதாய் கவின் உரைத்து விட்டு சென்ற பிறகு, சற்று நேரம் படுத்திருந்த ஆருவிற்கு மனம் பாரமாய் இருந்தது.


எந்த விஷயமும் தெரியாமலேயே பாக்கியமும் இலக்கியாவும் இவளிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார்களே, தான் ஒருவனை நம்பி பழகி ஏமாற்றப்பட்டது தெரிந்தால், இவர்களின் வாய் மொழியும் தன் மீதான பார்வையும் என்னவாய் இருக்கும் என்கின்ற சிந்தனையே இவளின் அடி வயிறு வரை கதிகலங்க செய்ய, அதற்கு மேலும் யோசிக்க இயலாது எழுந்து அமர்ந்து விட்டாள்.


தலை வலி தலையைத் தெறிக்க விட்டுக் கொண்டிருக்க, குளியலறை சென்று ரிஃப்ரெஷாகி வந்தவளுக்கு சூடான தேநீர் மட்டுமே தலைவலியை மட்டுப்படுத்தும் எனத் தோன்ற, தைரியத்தை வர வழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.


அங்குப் பாக்கியமும் இலக்கியாவும் இவள் அறை வாயினுள் நுழையும் போதே ஏளன பார்வை பார்த்து வைக்க, வந்திருந்த தைரியம் அனைத்தும் வடிந்து போக, மன உதறலுடனேயே சமையலறை சென்றவளை சற்றும் கண்டு கொள்ளாது இலக்கியா தன் வேலையில் மும்முரமாய் இருந்தாள்.


பத்து நிமிடங்களாய் சமையல் அறையில் ஆரு நின்றிருந்தும் அவளைக் கவனியாதது போல் தன் வேலையில் ஈடுபட்டிருந்த இலக்கியாவிடம் இரண்டு மூன்று முறை ஆரு பேச முற்பட்டும், அவள் செவி கேளாதவளாய் அங்கு இங்குமாய் சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் நடந்து சென்று அவளை அவமதிப்பது போல் நடக்க, மனமும் உடலும் சோர்ந்து போய் தனதறைக்கு வந்து சேர்ந்தாள் ஆரு.


ஏனோ அந்த இடத்தை விட்டே எங்கேனும் செல்ல வேண்டுமெனும் அளவு ஆத்திரம் அவளைச் சூழ, சரியாய் அச்சமயம் அவளை அழைத்திருந்தாள் அவளின் தோழி ராதா.


அழைப்பை ஏற்ற ஆரு, மன உளைச்சல் தாங்காது நடந்த அனைத்தையும் ராதாவிடம் கூற, "உன்னை என்கூட கூப்பிட்டுட்டு போகலாம்னு தான் ஃபோன் பண்ணேன் ஆரு! உன் புருஷன்கிட்ட பேசிட்டு உன்னை என் கூடப் பாபநாசம் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன். ஆனா அங்க அவங்க நடந்துக்கிறதுலாம் பார்த்தா..." என்றவள்,


"நீ யார்கிட்டயும் எதுவும் சொல்லாம என்கூட வந்துடு. அவங்க நீயில்லாம கஷ்டபடட்டும். அப்ப புரியும் உன் அருமை அவங்களுக்கு!" என்றாள் கோபமாய்.


"அய்யோ இல்ல ராதா! அவரால என்னைய விட்டு இருக்க முடியாது!" என்றவள் சற்று தேய்ந்து போன குரலில், "என்னாலயும் அவரை விட்டு இருக்க முடியாது" என்றாள்.


"உன் அவரை விட்டு நான் எங்க வர சொன்னேன்? இன்னிக்கு மட்டும் நீ எங்க போற என்ன செய்றனு எதுவும் சொல்லாம என் கூடக் கிளம்பு போதும். நாளைக்கு உன் புருஷனுக்கு ஃபோன் செஞ்சு சொல்லிக்கலாம். உன் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்போம். அவங்களால தான் நீ காணாம போய்ட்டனு அவங்க மனசு உறுத்தனும். இனி என்னிக்கும் உன்கிட்ட இப்படி நடந்துக்காம இருக்க இது தான் வழி" என மேலும் பலவிதமாய் பேசி ஆருவை சம்மதிக்க வைத்திருந்தாள் ராதா.


எப்பொழுதுமே பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டுமே தவிரப் அதை பார்த்து பயந்து விலகி ஓட கூடாது. அவ்வாறு ஓடி ஒளிந்தால் அப்பிரச்சனை என்று வெடித்துப் பெரியதாகுமோ என்ற அச்சத்தில் நாம் தான் நிம்மதியை இழந்து தவிக்குமாறு ஆகிவிடும். நாம் விலகி ஓடினாலும் அப்பிரச்சனை தீர்க்கப்படாத வரையில் அது நம் பின்னேயே பயணித்துக் கொண்டு தான் இருக்கும். ஆக என்றைக்குமே பிரச்சனையை எதிர் கொண்டு தீர்வினை கண்டறிய வேண்டும்.


ஆரு பிரச்சனையை எதிர்கொள்ளத் தைரியமற்றுப் பெங்களூரில் இருந்து சென்னை ஓடி வந்தாள். இன்று அந்தப் பிரச்சனையே அவளை வேறோர் விதத்தில் தாக்கி நிலைக்குலைய செய்ய, மீண்டும் இதிலிருந்து தப்பிப்பதாய் எண்ணி ஓடி வேறோர் இடத்திற்கு சென்று ஒளிய பார்க்கிறாள்.


அவள் எடுத்த முடிவு தவறென்பதை பின்னாளில் கவின் அவளுக்கு வலிக்க உரைக்க வைக்கப் போவதை அறியாது ராதாவுடன் கிளம்பும் முடிவை எடுத்திருந்தாள் ஆருத்ரா.


இரு மனசாய் வீட்டிலிருந்து கிளம்பிய ஆரு, கவினுக்கு ஒரு சின்னச் செய்தியாவது விட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன், 'என்னைய தேடாதீங்க! மனசு சரியானதும் நானே உங்ககிட்ட வந்துடுவேன்' எனக் காகிதத்தில் எழுதி அவன் கண்படும் இடத்தில் வைத்துவிட்டு, இரண்டு நாட்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு கோதை இல்லத்திற்குக் கிளம்பினாள்.


கோதை இல்லம் சென்ற பிறகு காலை வேளையில் கவின் அழைத்து அவள் உண்ணாததை அறிந்து அவளைக் கெஞ்சி கொஞ்சி உண்ண வைக்க, 'இவ்வாறு ஒருவனைத் தவிக்க விட்டு செல்கிறாயே நீ' என அவளின் மனசாட்சி கேள்வி எழுப்ப, குற்றவுணர்வு நெஞ்சை குறுகுறுக்கச் செய்ய, ராதா வந்ததும் அவளிடம் பேசி, தான் அவளுடன் வரவில்லை என உரைத்து விடலாம் என்ற முடிவெடுத்து அவளின் பணியில் அவள் மூழ்கியிருந்த சமயம், மதிய உணவு வேளையில் அவளின் மாமியார் பாக்கியத்திடம் இருந்து அழைப்பு வந்தது ஆருவிற்கு.


"என்ன சொல்லி வச்ச என் பையன்கிட்ட? இது வரைக்கும் அவன் என்கிட்டயோ இல்ல அவன் தங்கச்சி கிட்டயோ கோபப்பட்டுப் பேசாம இருந்ததே இல்ல! ஆனா இன்னிக்கு அவன் பாட்டுக்கு வந்தான் சாப்பாடு போட்டுக் கொடுத்தான் ஆனா ஒரு வார்த்தை பேசலை. எல்லாம் உன்னால தான். நீ செஞ்ச தப்பை என் மகன் கேட்க கூடாதுனு அவனை மயக்கி நீதான் எங்ககிட்ட இருந்து அவனைப் பிரிச்சிட்ட! உன்னை எவ்ளோ நல்லவனு நம்பி என் மகனுக்குக் கட்டி வச்சேன்! எங்க பரம்பரைக்கே கலங்கம் நீ" என வாய்க்கு வந்தவாறு அவர் திட்டிக் கொண்டே போக, கண்களில் நீர் பெருக மன வலியுடன் அப்படியே அமர்ந்து விட்டாள் ஆரு.


எப்படி நான் இவர்களுக்குச் சொல்லி புரிய வைப்பேன்! இவர்களின் இந்தக் கடின சொற்களை தினம் தினம் கேட்டு கொண்டும், அன்பற்ற முகத்தினைப் பார்த்து கொண்டும் எவ்வாறு நான் அவருடன் உறவாடுவேன் என எண்ணியவாறு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.


அச்சமயம் ராதா தனது காரினில் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து விட்டதாய் குறுஞ்செய்தி அனுப்பியவள் அவளை வெளியே வருமாறு பணித்தாள்.


தற்சமயம் இந்தத் துன்பத்திலிருந்து இருந்து தூரமாய் சென்றே ஆக வேண்டும் என வலி கொண்ட இதயம் கூக்குரலிட, ராதாவுடன் செல்வது என முடிவெடுத்து, தான் அன்று அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்வதாய் தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு கிளம்பி விட்டாள் ஆரு.


ஆருவிற்கு மனம் அலைக்கடலாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ராதா விடாமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்த போதிலும் அது எதுவும் ஆருவின் சிந்தையைத் துளியும் சீண்டாது இருந்தது.


மதுரையை அடைந்ததும் அங்கு சற்று நேரம் இளைபாற ஒரு கடையினில் நிறுத்திய ராதா, "எனக்கு ஒரு மாதிரி வயிறு முறுக்கிட்டு வலிக்குது ஆரு!" என முகத்தில் வலியை தேக்கி அவள் கூறிய சமயம் தான் நிகழுலகிற்கு வந்தாள் ஆரு.


"என்ன ராதா? என்ன செய்யுது? மதியம் சாப்பிட்டியா? சாப்பிடாம தான் வயிறு இப்படி வலிக்குதோ!" என அவள் வயிற்றில் கை வைத்தவாறு ஆரு கேட்க,


"என்னடி விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பானு சொல்ற?" என வலியில் முகத்தை சுருக்கியவாறு அலுத்துக் கொள்ள,


"ஏன்டி? என்கிட்ட எதுவும் சொன்னியா நீ?" எனக் கேட்டாள்.


அவளின் இந்தக் கேள்வியில் ராதாவுக்கு மயக்கம் வராத குறை தான்.


"அடியேய் இப்படியா நீ உன் புருஷன் நினைப்புல உலாதிட்டு இருப்ப! நாம எதுக்குப் பாபநாசம் போறோம்? அங்க யாரை பார்க்க போறோம்னு உனக்கு ஆதி முதல் அந்தம் வரை தொண்டை தண்ணீ வத்த சொன்னேனேடி" என அவள் கூற, அப்படி எந்த செய்தியும் தன் செவியில் விழுந்தவாறு நினைவில்லையே எனத் தன் சிந்தையை சீண்டி பார்த்தாள் ஆரு.


அங்கிருந்த உணவகத்தின் கழிவறைக்கு சென்று விட்டு வந்து உணவு மேஜையில் அமர்ந்த ராதா, "ஆரு! எனக்குப் பீரியட்ஸ்டி! வலி தாங்க முடியலை" என முகத்தைச் சுருக்கியவாறு கூற,


"பேட் இருக்காடி? எதுவும் வாங்கனுமா? நீ யூஸ்வலா இந்த டைம்ல டாப்லேட் போடுவ தானே?" எனக் கேட்டாள்.


"ஆமாம் ஆரு! எல்லாம் பேக்ல இருக்கு! ஆனா டேப்லெட் போட்டா அடிச்சு போட்ட மாதிரி தூங்கிடுவேன்டி! என்னால கண்டிப்பா இதுக்கு மேல வண்டியை ஓட்டவே முடியாதுடி" என்றாள்.


"அய்யய்யோ" என்றவள், "அப்ப திரும்ப சென்னைக்கே போய்டலாம் ராதா" என்றாள் பதட்டத்துடன்.


அவளை முடிந்த வரை முறைத்து பார்த்த ராதா, "நம்ம மதுரைல இருக்கோம். திரும்பி சென்னைக்குப் போறதை விடத் திருநெல்வேலி தூரம் கம்மி! சென்னைக்கே போகனும்னாலும் நீ தான் ஓட்டனும். அதுக்கு நீ பாபநாசம் வரைக்குமே ஓட்டிடலாம்" என்றாள்.


ஆருவின் மனது படபடவென அடிக்க ஆரம்பித்தது. "இப்ப என்ன பண்றதுடி?" பதட்டத்துடன் கேட்டாள்.


"உனக்குக் கார் ஓட்ட தெரியுமா? தெரியாதா?" எனக் கேட்டாள் ராதா.


"தெரிஈஈஈஈஈஈயும்" என 'வரும் ஆனா வராது' என்பது போல் உள்ளே போன குரலில் கூறியவள் மேலும் தொடர்ந்து,


"இப்ப தான் கார் ஓட்ட கத்துக்கிட்டு ஆறு மாசம் ஆகுது ராதா!" என்றவள் கூறவும்,


"எப்படியோ ஓட்ட தெரியும்ல! நான் பக்கத்துல இருந்து கைட் பண்றேன் கொஞ்சம் தூரம்" என்றவள் வலி தாளாமல் அந்த மேஜை மீதே தலையை வைத்து சாய்க்க, அவளுக்கு சூடான ஆகாரத்தை அளித்து சற்று தெம்பாக்கிய ஆரு, ராதாவை ஓட்டுனர் இருக்கையின் அருகில் அமர வைத்து விட்டு, தான் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டு வண்டியை இயக்க தொடங்கினாள்.


விருது நகர் வரையிலுமே ராதா ஆருவை கைட் செய்து வண்டியை ஓட்ட வைத்தவள், அதற்கு மேல் வலியை பொறுக்க இயலாது மாத்திரை போட்டுக் கொண்டு பின் சீட்டில் படுத்துக் கொண்டாள்.


ராதா அருகில் இருந்து பேசி கொண்டிருந்த வரை, மனதின் அடி ஆழத்தில் பொதிந்திருந்த பிரச்சனை யாவும் தற்போது தனியாய் வண்டியை இயக்கி சென்று கொண்டிருந்த சமயம் கண் முன் விஸ்வரூபம் எடுத்து விழி நீரை பெருக செய்தது.


'கவினிடம் கூறி விட்டு வந்திருக்கலாம்! இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான்? தான் இல்லாததை அறிந்து எங்கெல்லாம் தேடினானோ?' என அவனைப் பற்றிய எண்ணங்களில் உழன்றவளுக்கு அவனுக்கு அழைக்க வேண்டுமென மனம் பரபரக்க, தனது கைபேசியை எடுத்து பார்த்த போது தான், இவள் சென்னையில் கிளம்பிய பொழுதே அது சார்ஜ் இல்லாது அணைந்து போனது நினைவில் வந்தது.


அப்பொழுது தான் அவளை ஒரு டோல் கேட்டில் இருவர் கண்டு விட்டுப் பின் தொடர்ந்தனர். ராதா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, அவளை இவள் எவ்வளவு எழுப்பியும் அவள் எழாமல் இருக்க, ராதா ஏற்கனவே அவளின் அலைபேசியில் சென்று சேர வேண்டிய இடத்திற்குக் கூகுள் மேப் போட்டு வைத்துவிட்டு, அதனுடன் ஏதேனும் பிரச்சனை என்றால் எவ்வாறு காவலன் செயலியை உபயோகிக்க வேண்டும் என்று ஆருவிடம் உரைத்திருந்தாள். ஆக அந்த ஆடவர்கள் தன்னை நெருங்கி வந்து தொந்தரவு செய்தால் அந்த செயலி மூலமாய் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்திட வேண்டுமென எண்ணிக் கொண்டே, கூகுள் மேப் கூறிய வழிதடத்தின் வாயிலாய் பாபநாசம் நோக்கி சென்றாள் ஆரு.


பாபநாசம் செக் போஸ்ட்டை அடைந்த ஆருவிற்கு செக் போஸ்ட் பூத் பார்த்ததும் அங்கு ஏதேனும் காவலர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் முதலில் உள் சென்று பார்த்தாள். ஆனால் அங்கு எவரும் இல்லாமல் இருக்க, வெளியே சற்று தூரத்தில் மலை வழி பாதையின் ஆரம்பத்தில் ஒருவன் தரையில் படுத்திருப்பது போல் தெரியவும் அங்கு சென்று பார்த்தாள். 


அங்கு அடிபட்டுத் தரையில் கிடந்த விக்னேஷை காணவும், முதலில் அவனை எங்கோ கண்ட நினைவு எழ, இவள் கல்லூரியில் பயிலும் போது இவளிருந்த அறையில் தங்கியிருந்த அறைத்தோழியின் அண்ணன் இவன் என்ற நினைவு வர, அவனுக்கு என்னவாகிற்றோ என்ற பதட்டம் மீதூற, அவனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னையும் மீறி அவனை இழுத்து கதறியிருந்தாள் ஆரு.


அச்சமயம் இவளை துரத்தி வந்த அவ்விரு ஆடவர்களும் இவளை நோக்கி வருவதை பார்த்தவளுக்கு பதட்டம் அதிகரிக்க, கையிலும் கைபேசி இல்லாத நிலையில்,  அவசரமாய் வண்டியை இயக்கியவள், பதட்டத்தில் காரை தாறுமாறாய் ஓட்டிக் கொண்டு மலை பாதையில் ஏறி காட்டினுள் விட்டிருந்தாள்.


காரில் அத்தனை களேபரத்திலும் உறங்கி கொண்டிருந்த ராதாவிற்கு, ஆரு வண்டியை காட்டிற்குள் தாறுமாறாய் ஓட்டிச் சென்று மரத்தில் இடித்து நிறத்திய சமயம் தான் சற்றாய் விழிப்புத் தட்டியது.


கண் விழித்துச் சுற்றிலும் இருட்டினை பார்த்துக் கண்களைக் கசக்கி கொண்டிருந்த சமயம் தான், அறிவு மயங்கி இருந்த ஆருவை முன்னிருக்கையில் அமர வைத்து, அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்கினான். யாரோ தங்களைக் கடத்தி செல்வதாய் நினைத்து ராதா அறிவை அடித்துக் கொண்டே வசைப்பாட, அறிவு தான் ஆரு காரை காட்டிற்குள் விட்டதைக் கூறி ராதாவை தெளிய வைத்தான். வண்டியை ஓட்ட தெரியாமல் பதட்டத்தில் அவள் காட்டிற்குள் விட்டுவிட்டாள் என எண்ணிக் கொண்டாள் ராதா. பயத்தில் மயங்கி இருக்கிறாள் எனவும் புரிந்தது அவளுக்கு. அவ்வாறு தான் அறிவும் எண்ணினான். அங்கிருந்த இருட்டில் அவனுக்கு அவர்கள் இருவரின் முகங்களும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ராதாவிற்கு, 'இது அறிவு அண்ணாவோட குரல் மாதிரி இருக்கே' என்ற சந்தேகம் வந்தது.


வண்டியை அவன் சற்று வெளிச்சமான பாதைக்கு இயக்கி கொண்டு வந்திருந்த போதே அவன் அறிவு தான் எனக் கண்டு கொண்ட ராதா ஆச்சரிய அதிர்ச்சி தொனியில், "அறிவு அண்ணா! நீங்க எப்படி இங்க? ஏதோ பிராஜக்ட் விஷயமா மலை கிராமத்துக்குப் போறேன், அங்கே டவர் கிடைக்காதுனு தானே என்கிட்ட சொன்னீங்க!" எனக் கேட்டாள்.


அவளின் குரலில் அதிர்ந்து பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ராதாவை பார்த்தவன், "அந்த ப்ராஜக்ட் வேலை இங்க தான்மா! ஆமா நீ எப்படி இங்க? இந்தப் பொண்ணு யாரு?" எனக் கேட்டவாறு வண்டியை ஓட்டினான்.


அவள் பதில் கூறும் முன்பே வண்டி சந்திரன் இல்லத்தை அடைந்திருந்தது.


ஆரு மயக்கத்தில் படுக்க வைக்கப்பட்டிருக்க, ராதா வண்டியில் இருந்து இறங்கியதும் சந்திரனின் வீட்டிற்குள் குளியலறைக்கு சென்று விட்டாள்.


சந்திரன் இல்லத்தில் ஆருவை படுக்க வைத்த சமயம் தான் முகத்தினைக் கண்டான் அறிவு.


கண்டதும் அன்னம்மாளும் சந்திரனும் ஆதிரா கிடைத்து விட்டாளென எண்ணி ஆசுவாசமடைய இவன் குழப்பத்திற்குள்ளானான். ஆருவையும் ஆதிராவையும் பல முறை நேரில் கண்டிருந்த அறிவுக்கு இருவருக்குமான வித்தியாசங்கள் தெரிந்திருந்தன. இவளை கண்டதும் இது ஆரு தான் என அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. ஆகையால் தான் இவள் ஆதிரா இல்லை என உரைத்தான்.


ஆரு கண் திறந்த நொடி சரியாய் அவளை விரட்டிய இரு ஆடவர்களும் இவர்களின் வீட்டினுள் நுழைந்து இவள் முன்னே வந்து நிற்க, அவர்களைக் கண்ட நொடி அதீத பயத்தில் அலறிக்கொண்டே மீண்டுமாய் மயங்கி இருந்தாள் ஆரு.


அதுவரை குளியலறையில் இருந்து வந்தும் வெளி வராது வீட்டினுள் மீண்டுமாய் வயிற்றைச் சுருக்கி படுத்திருந்த ராதா, ஆருவின் அலறலில் ஓடி வந்து பார்க்க, அன்னம்மாள் அவளருகில் நின்று முதலுதவி செய்து கொண்டிருந்தார்.


மயக்கத்திலிருந்து அவள் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றதை கண்ணுற்ற அன்னம்மாள், "அவ தூங்கி எழுந்திரிக்கட்டும்" எனக் கூறி அனைவரையும் கலைந்து போகச் சொன்னார். அவளைத் தனித்து இருக்க விட்டு அனைவரும் வீட்டின் வாசலுக்கு வந்திருந்தனர்.


அந்த வீட்டினுள் நுழைந்த ஆடவர்கள் இருவரும், ஆருவை அவர்கள் தொடர்ந்து வந்ததை உரைத்தார்கள். "ஆதி புலி அடிச்சி இறந்துட்டதா சொன்னாங்களே! அப்ப இவங்க யாருனு தெரிஞ்சிக்கப் பின்னாடி வந்தோம். எங்களைப் பார்த்து பயந்துட்டாங்க போல" என்றார்கள்.


இதைக் கேட்ட ராதா, "என்னது ஆதிராவை புலி அடிச்சி கொன்னுடுச்சா?" என அதிர்ச்சியாய் கேட்டவள், 'ஆருகிட்ட அவளை மாதிரியே இருக்க ஆதிராவை காமிக்கத் தான் நான் இங்க கூட்டிட்டு வந்ததே' என மனதோடு நினைத்து கொண்டாள்.


"இல்ல ராதாமா என் ஆதிக்கு ஒன்னும் ஆகிருக்காது! அவ எங்கயாவது உயிரோட தான் இருப்பா!" வலி மிகுந்த முகப் பாவனையில் அறிவு உரைக்க,


அவனின் இந்தப் பதிலில் நெற்றி சுருங்க, 'ஆதிராவை அண்ணா காதலிக்கிறாங்களா?' என்ற யோசனையில் ஆழ்ந்தாள் ராதா.


"ஆமா நீ ஏன் இங்க வந்த?"  என ராதாவை நோக்கி அறிவு கேட்டிருந்த சமயம்,


"விக்னேஷ் அண்ணாவை யாரோ அடிச்சி போட்டிருந்தாங்க! நாங்க தான் இப்போ ஹாஸ்பிட்டல்ல சேர்த்திட்டு வந்திருக்கோம்ணா" என்றார்கள் அந்த ஆடவர்கள்.


இவர்கள் இருவரும் அருணின் நண்பர்கள். இவர்களை அறிவுமே அந்தத் தேநீர் கடையில் அருணிடம் ஆதி சண்டையிடும் போது தான் கண்டிருக்கிறான். ஆனால் தற்போது அந்த ஆடவர்களின் பேச்சிலேயே அவர்களுக்கு அறிவு மீதான மதிப்பு மரியாதை இருப்பதை அறிந்து கொண்டவன் அவர்களை சந்தேகக் கண் கொண்டு காணாது தோழமையாய் தான் பேசினான்.


விக்னேஷ் இவனிடம் அவசரமாய் வருவதாய் உரைத்து சென்று பல மணி நேரம் ஆன பிறகும் வராது இருக்க, அறிவு காட்டிற்குள்ளேயே தான் உலவி கொண்டிருந்தான். இவனால் புலியால் ஆதி அடிக்கப்பட்டிருப்பாள் என்பதை நம்ப முடியவில்லை. அத்தனை சுலபமாய் மரம் ஏறுபவள் எப்படிப் புலியிடம் சிக்கியிருக்கக் கூடுமென்றே எண்ணினான். ஆகையால் தான் ஏதும் தடயம் சிக்குமோ என அங்கேயே உலவி கொண்டிருந்தான்.


மருத்துவமனை சென்ற அறிவிடம் விக்னேஷ், வினோத் முத்துவிடம் பேசியதை உரைத்து நடந்ததைக் கூற, வினோத்திடம் இருந்து எவ்விதம் உண்மையை வரவழைப்பது என்ற திட்டமிடலில் இருந்தான் அறிவு.


அறிவு அவள் ஆதிரா இல்லை எனக் கூறியதும் அது ஆரு தான் எனப் புரிந்தது சந்திரனுக்கு. ஏற்கனவே கோதையம்மாள் சந்திரனை அழைத்து ஆரு காணாமல் போயிருந்ததைத் தெரிவித்திருந்ததால் கண்டு கொண்டார் அவர். கவின் இவளை தேடி அலைவது கோதையம்மாள் மூலமாய் தெரிந்து வைத்திருந்ததினால் உடனே அவனுக்கு இவளின் நலனை குறித்துத் தெரிவிக்க விரும்பினார். ஆனால் அலைபேசியில் சிக்னல் இல்லாமல் சதி செய்ய மறுநாள் காலை உரைத்திருந்தார்.


-----------


கவின் அந்த வண்டியில் ஆரு போன்ற பெண் இருப்பதைப் பார்த்ததும், அவனைத் துரத்தி செல்ல முடியா தொலைவிற்கு அவன் சென்றதை பார்த்து அப்படியே சாலை ஓரத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கோதையம்மாளுக்கு அழைத்துத் தான் கண்டதை உரைத்தான்.


அந்த வண்டியை ஓட்டி சென்று கொண்டிருந்தவனோ, அருகில் மயக்கத்தில் இருந்த ஆதிராவை பார்த்தவாறே தனது கைபேசியில் தன் நண்பனிடம், "மச்சான் நானும் ஆதியும் கல்யாணம் செஞ்சிக்கப் போறோம்டா! நான் அவளைக் கடத்திட்டு வந்துட்டேன்டா" ஏதோ பெரிதாய் சாதனை புரிந்தது போன்ற பெருமிதத்துடன் உரைத்திருந்தான் முத்து.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page