அன்னை வளர்ப்பதிலே!
புவனா முதுகலை பட்டம் பெற்ற ஒரு குடும்பத்தலைவி. அவள் கணவர் கார்த்திகேயன்- சென்னையிலேயே பிரபல ஆடிட்டர். சொந்தமாக ஆடிட்டிங் நிறுவனம் வைத்து லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்.
இவர்களின் ஒரே செல்வமகன் புவியரசன் இந்த வருடம்தான் எரோனாட்டிகல் இன்சினியரிங் படிப்பில் முதலாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கிறான்.
காலை பள்ளி சென்றது முதல் வீடு திரும்பும் வரை நடந்த அத்தனை விஷயங்களையும் தொணதொணவென கொட்டும் மகன்!
அவனுக்காகவே பார்த்துப் பார்த்து சமைக்கும் உணவை கதையளந்துகொண்டே உண்டுமுடிக்கும் மகன்!
பள்ளி செல்லும் நேரம் தவிர அம்மா! அம்மா! என்று பூனைக்குட்டி போல் தன்னையே சுற்றி வரும் மகன்!
படிப்பில் புலிபோன்று பள்ளியிலேயே முதலாவதாக வந்த மகன்!
சமீபகாலமாக தன் இயல்பு மாறிப்போனதுதான் அந்தத் தாயின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
கல்லூரியில் அடியெடுத்து வைத்தபிறகு விலையுயர்ந்த கைப்பேசி பைக் என அவன் கேட்கக் கேட்க அவனுடைய அன்னை தடுத்தும் கேளாமல் அவனுடைய தந்தை மனமகிழ்ந்து வாங்கிக் கொடுக்க அன்றிலிருந்து தொடங்கியது பிரச்சினை.
தினமும் கால தாமதமாக வீடு திரும்பும் மகன்!
‘மா! நான் வெளியிலேயே என் ஃபிரண்ட்ஸ் கூடசாப்பிட்டுட்டு வந்துட்டேன்’ எனும் மகன்!
அதிகமாக சமுக வலைதளங்களில் நேரம் செலவிட்டு தாமதமாக துங்கி, தாமதமாக விழித்து, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்க வழக்கங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் மகன்!
இப்படியாக மாறிப்போனான்.
அனைத்தையும் தடையிடும் அன்னையின்மேல் மகனுக்கு ஏற்பட்ட அதிருப்தி, அவள் தடுத்தும் அவளது வார்த்தைகளை பொருட்படுத்தாது ஒரே செல்வமகனின் ஆசைக்காக அவன் தந்தை கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுப்பதால் ஏற்படும் பெருமிதம் ஆகியவற்றால் அவனுக்கு தன் அன்னைமேல் கொண்ட மதிப்புக் குறையத்தொடங்க அது அவன் வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்படத் தொடங்கியது.
மகனின் அலட்சியப் போக்கு சதா வேலை வேலை என்று அதிலேயே தன்னை புதைத்துக்கொண்டு மகனின் செயல்களை கண்டிக்காத தன் கணவரின் பாராமுகம் அவற்றுடன் அன்னையவளின் தன் நாற்பதுகளில், மெனோபாஸ் நிலையில் ஏற்படும் மன அழுத்தமும் சேர்ந்து அவளுக்கு துன்பத்தை தந்தது.
‘எங்கே தவறு செய்தேன்? நல்லபடியாகத்தானே அவனை வழிநடத்திக்கொண்டிருக்கிறேன்? எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுத்துத்தானே அவனை இந்த நிலையில் வளர்த்திருக்கிறேன்? சமீப காலமாக அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டனவே. அன்பாக தொடங்கும் பேச்சு கடைசியில் கோபமும் சண்டையுமாக முடிகிறதே. இதை எப்படி சரிசெய்வது?’ என்று தன் சிந்தனையில் மூழ்கி இருந்தாள் சிறுவனிலிருந்து இளைஞனாக மாறிக்கொண்டிருக்கும் புவியரசனின் அன்னை புவனா.
இருந்தும் மகனுக்கு தன் அறிவுரைகளையும் நல்லவார்த்தைகளையும் நிலைமைக்குத் தகுந்தபடி மென்மையாகவோ அல்லது கடினமாகவோ சொல்லத் தவறவில்லை.
புவனா, எர்த்-அரஸ் என்ற பெயரில் உள்ள தன் மகனுடைய முகநூல் பதிவுகளை கவனிப்பதை வழக்கமாக் கொண்டுருந்தாள். அதில் அவன் போடும் படங்கள் அவன் டேகி செய்யப்படும் பதிவுகள் அனைத்தையும் பார்வையிடுவாள்.
அவனது நண்பர்களையும் தெரிந்தே வைத்திருந்தாள். அவன் நண்பர்களும் அவனைப்போன்றே மேல்தட்டு வர்கத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
ஒருநாள் புவனா அவள் தோழி நடத்தும் அழகு நிலையத்திற்கு சென்றிருந்தாள். அங்கு வரவேற்பு பகுதியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைப்பார்த்து இவளை முகநூலில் பார்த்திருக்கிறோமே என்று யோசித்தவாறே, “ ஹேய்! நீ பேர்ல்தான” என்று கேட்க, அதற்குள், “அய்ய… அது எப்.பீல அவ அப்படி வெச்சிருக்கா. அவ பேரு முத்துச்சுடரொளி. நாங்க முத்துனு கூப்பிடுவோம்” என்றார் அருகில் அமர்ந்திருந்த அவள் அன்னை தமிழ்ச்செல்வி.
சற்று நெளிந்தவாறே பேச்சை மாற்ற எண்ணி “ நீங்க புவியோட அம்மாதானே?. நான் உங்க ஃபேஸ் புக் ப்ரொபைல் பார்த்திருக்கேன்” என்றாள் முத்து.
“நானும் உன்னை எப்.பீல பார்த்திருக்கேன்” என்று கூறிவிட்டு தமிழை நோக்கி, “உங்க பெண்ணோட பரதநாட்டிய போட்டோ வீடியோல்லாம் நான் பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும்.” என்று கூறினாள் புவனா.
உடனே தமிழ், “ரொம்ப தேங்ஸ்க்கா! இன்னிக்குக்கூட ஒரு ப்ரோக்ராம் இருக்குக்கா. அதுக்கு அலங்காரம் பண்ணத்தான் வந்தேன். நாங்க இருக்கிறது செங்கல்பட்டுகிட்ட இருக்கிற ஒரு கிராமம். எங்களோடது விவசாய குடும்பம். இவங்க அப்பா அங்கே ரைஸ் மில் வச்சிருக்காங்க. எங்க அம்மா வீடு இங்கதான் இருக்கு. இவ இங்க இருந்துதான் காலேஜ் போறா” என்று வெள்ளந்தியாய் சொன்னாள்.
புவனா, “சுடர்! நீ அரசனோட காலேஜ்ல படிக்கறியாமா?” என்று கேட்க. “இல்லை ஆன்ட்டி என் ஸ்கூல் ப்ரண்ட் சந்தியாதான் அவனோட காலேஜ்லபடிக்கறா. அவளாலதான் அவன் எனக்கு ப்ரண்ட். நான் பி.பி.ஏ படிக்கறேன்” என்று சொன்னாள் முத்து.
அதற்குள் புவனாவின் பெயர் அழைக்கப்படவே “சரி சுடர்! பை” என்று சொல்ல, “ஆன்ட்டி என்னை முத்துன்னே கூப்பிடுங்க. சுடர்னு கூப்பிட்டா என்னவோ எனக்கு பிடிக்கலை” என்றாள் அவள்.
அதற்கு புவனா அவளிடம் புன்னகைத்தவாறு, “முத்துன்னு கூப்பிடுவதை விட சுடர்னு கூப்பிடத்தான் எனக்கு பிடிச்சிருக்கு.
ஏன்னு தெரியுமா?” என நிறுத்தியவள் தானே தொடர்ந்து, “பெண் என்பவள் இருளில் ஒளி கொடுக்கும் விளக்கின் முத்துச் சுடர் ஒளியாகவும் இருக்கணும் அதே சமயம் தீமையை அழிக்கும் தீச்சுடராவும் இருக்கணும் அதனாலதான்” என்றுவிட்டு, “நீ எதுக்கும் சோஷியல் மீடியாலல்லாம் கொஞ்சம் கவனமாகவே இருக்கணும்” என கூறிச்சென்றாள்.
அடுத்த நாள் புவனா முகநூலை திறக்க அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ‘பேர்ள்’ என்ற முத்துச்சுடரொளியின் பெயர் ‘சுடர் (த ஃப்ளேம்)’ என்று மாற்றப்பட்டு அதில் அவளிடமிருந்து ஒரு நட்பு அழைப்பு வேறு வந்திருந்தது. அதை அவள் அனுமதிக்க சில தினங்களில் தமிழ்ச்செல்வியும் அவளது முகநூல் தோழியானாள்.
இதற்கிடையில் புவியரசன் முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மதிப்பெண்ள் குறைவாகவே பெற்றிருந்தான். அதனால் கார்த்திகேயன் தன் மகனை கூப்பிட்டுக் கண்டித்தார். “கண்ணா! நீ ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் அம்மா வேண்டாம்னு சொன்னாலும் கேட்க்காம நான் வாங்கிக் கொடுத்தது நீ எல்லாத்தையும் பேலன்ஸ்செய்து போவேன்னுதான். உன்மேல எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நீ கெடுத்துடாத. சிறந்த விஞ்ஞானி ஆகனும் என்கிற உன் கனவை மறந்துடாத. எல்லாத்தையும் குறைத்துக் கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்து” என்று அறிவுறுத்தினார். இதைக்கேட்ட புவனா சற்று மனம் நிம்மதியுற்றாள்.
அதன்பின் புவியரசனிடமும் மாற்றங்கள் உண்டானது. தன் தவறை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினான். காலம் இப்படியே செல்ல, அவர்கள் மனதை கலங்கடிக்கவென்றே அந்த நாளும் வந்து சேர்ந்தது.
புவனா தனது ஓய்வு நேரங்களில் அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கெல்லாம் நீதிக்கதைகள் சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தாள். ஒரு மாலை நேரத்தில் இதுபோல் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது அவளுடைய கைப்பேசி அதிர்ந்தது. அவள் எடுத்து பேச,
“நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் பேசறேன்.
நீங்க மிசர்ஸ் கார்த்திகேயன்தானே?”
புவனா, ஆமாம் என்று சொல்ல,
“புவியரசன் உங்க மகனா?” விசாரணை தொனியுடன் அவர் கேட்கவும்,
புவனா அதிர்ச்சியுடன் ஆமாம் என்று சொல்ல, “அப்ப நீங்க உடனே சாகர் ஹாஸ்பிடலுக்கு வாங்க” என அந்த காவல்துறை ஆய்வாளர் கூற, “ஏன்? என்ன ஆச்சு?” என்று பதறினாள் புவனா.
“உங்க மகன் செஞ்சுவெச்சிருக்கற வேலை அப்படி. நான் நேரா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்கணும். கார்த்திகேயன் சார் மகன்கறதாலதான் பேசிட்டு முடிவு செய்யலாம்னு இங்க வர சொன்னேன்.
உங்க ஹஸ்பன்ட் போனை எடுக்கல.
அவருக்கு தெரியப்படுத்திட்டு உடனே இங்க வாந்துடுங்க” என்று கூறி கட் செய்தார் அவர்.
மனம் பதற புவனா மருத்துவமனை வர அதே நேரம் கார்த்திகேயனும் அங்கு வந்து சேர்ந்தார். அதற்குள் அங்கு பெரிய கும்பலே சேர்ந்து போயிருக்க இருவரது மனதிலும் பயப்பந்து உருண்டது. ஆனால் புவியரசனோ சிறிதும் சலனமின்றி கைப்பேசியில் மூழ்கியிருந்தான்.
அரசா! என்றவாறு அவனை நோக்கி ஓடிய புவனா, “கண்ணா! என்னப்பா பிரச்சனை? என்ன நடந்தது?” என்று கேட்க, அதற்குள் கார்த்திகேயனும், “எதுவா இருந்தாலும் சொல்லு. நான் பார்த்துக்கறேன்” என்றார் படபடப்புடன்.
அதற்குள் அங்கே அவர்களை முறைத்தபடி நின்றிருந்த பெண்மணி ஒருவர், “பிள்ளைய இப்படி வளர்த்து வச்சிட்டு, அவன் செஞ்ச காரியத்துக்கு என்ன ஏதுன்னு கேக்காம கொஞ்சிட்டு இருக்கீங்க. இதே எங்க பையன் மட்டும் இப்படி செஞ்சிருந்தா வெட்டி போட்டிருப்போம்” என்று ஆவேசமாக கூறினார்.
அதுவரை அமைதியாக உட்கார்ந்திருந்த புவியரசனோ, “ஆன்ட்டி தயவு செஞ்சு இந்த வார்த்தையை மறந்துடாதீங்க” என்றான் சீற்றத்துடன்.
“பார்த்தீங்களா? எப்படி பேசறான்னு?
ஏய் மரியாதையா உண்மையை ஒத்துக்க” என்று அந்த பெண்மணி எகிறவும்,
“நீங்க சும்மா இருங்க. அவங்க அப்பா அவங்கிட்ட பேசிப்பார்” என்று புவனா இடைபுகவும், அங்கிருந்த மற்றொருவர், “அவன் என்ன சொல்றது? நான் சொல்றேன் கேளுங்க.
உங்க மகனும் இதோ கூட இருக்கானே இந்த பவித்ரனும் சேர்ந்து கூடவே ஃப்ரண்டாக இருக்கும் பொண்ணோட போட்டோவை பேஸ்புக்ல இருந்து எடுத்து மார்பிங் செஞ்சு, அந்த பெண்ணை கேவலமா மிரட்டி இருக்காங்க.
அவ பெத்தவங்ககிட்ட சொல்ல பயந்துட்டு எங்க பசங்ககிட்ட உதவி கேட்டிருக்கா.
இவங்க சொன்ன இடத்துக்கு தனியா போகாம எங்க பசங்க துணைக்கு போயிருக்காங்க.
அந்த ஆத்திரத்துல அவங்கள பலமா தாக்கி இருக்கானுங்க இவனுங்க ரெண்டு பேரும்.
பாவம் அந்த பெண்ணுக்கு தலையில் அடிபட்டு மயக்கமா இருக்கு.
எங்க மகன் நிகிலுக்கு கைல ப்ராக்சர்.
இவங்க மகன் குணாவுக்கு தோளில் பலத்த காயம்.
இருங்க உங்க மகனை உள்ள தள்ளிட்டு நாங்க யாருன்னு காமிக்கறோம்” என்று மிரட்டலில் இறங்கினார்.
“நிச்சயமா எங்க மகன் எந்த தப்பும் செய்திருக்க மாட்டான். அதுவும் ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துட்டு இருக்க...வே மாட்டான்.
அவனை எங்களுக்கு நல்லாவே தெரியும்.
அங்க வேற ஏதோ நடந்திருக்கு” என்ற புவனா, மகனை நோக்கி, “அரசா! நீ சொல்லு. என்ன நடந்தது?” என்று கேட்க, புவியரசன் கண்கலங்க தன் தாயை நோக்கி, “என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கறதுக்கு தேங்ஸ் மா. ஆனாலும் சுடர் கண்விழித்து பேசறவரை நான் எதுவம் சொல்ல விரும்பல” என்று தெளிவாகக் கூற, அதற்கு நிகிலின் தந்தை, “என்ன தம்பி அவள மறுபடியும் மிரட்டலாம்னு பாக்கறியா?
இந்த தப்புக்கெல்லாம் என்ன தண்டனைனு தெரியுமா?” என்று கேட்க, “அரசனோ எனக்கு நல்லாவே தெரியும். சொல்லவா?” என்றான் நக்கலாக.
அதற்குள் புவனா, ‘ஐயோ…சுடர் இதுல பாதிக்கப்பட்டிருக்காளா? கடவுளே’ என்று எண்ணி, “அரசா சுடருக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க,
அரசனோ, “அம்மா அவ நாலுநாளா சரியா சாப்பிடல மா.
கிட்டத்தட்ட பட்டினி.
கீழ விழுந்து தலைல லேசா அடி பட்டிருக்கு.
மயக்கமா இருக்கா.
ட்ரிப்ஸ் ஏறிட்ருக்கு. பயப்பட ஒண்ணுமில்லை.
அவங்கம்மா கூடதான் இருக்காங்க.
நீங்க போய் பாருங்க” என்று கூறினான் தெளிவாக.
அங்கு உள்ளே தயக்கத்துடன் சென்ற புவனாவைப் பார்த்து செல்வி கண்ணீரைத் துடைத்தபடி, “அக்கா! என்ன நடந்ததுன்னு ஒண்ணுமே புரியல. நான் நேத்துதான் ஊருல இருந்து வந்தேன்.
அண்ணனும் வெளியூர் போயிருக்காங்க.
இவங்க அப்பா கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க.
எங்க குடும்பங்கள்ல பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டாங்க.
சின்னவயசுலயே கட்டி வச்சுடுவாங்க.
நான்தான் எங்கவீட்டுல கெஞ்சி இவ மேல படிக்க ஏற்பாடு செஞ்சேன்.
யார்மேல தப்போ தெரியல.
ஆனா இவளை இனி படிக்க விடுவாங்களான்னே தெரியல” என்று வருந்த,
“அப்படி எதுவும் ஆகாது. கவலைப்படாதிங்க செல்வி” எனும் பொழுதே சுடரிடம் அசைவு தெரிந்தது.
உடனே மருத்துவரை அழைக்கவும் அவர் வந்து பரிசோதித்தவுடன் சுடர் எழுந்து அமர்ந்தாள்.
சரியாக சாப்பிடாமல் உடல் பலகீனமும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும்தான் இவள் மயங்கக் காரணம் மற்றபடி ஒன்றுமில்லை என்று அரசன் கூறியதையே மருத்துவர் சொல்லவும் புவனாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
உடனே மருத்துவர் இன்ஸ்பெக்டரை அழைத்து விவரம் கூறவும் அவர் அங்கு வர, சுடரின் தந்தையும் வந்து சேர்ந்தார்.
உடன் வந்த பெண்காவலர் சுடரிடம் விசாரிக்கத் தொடங்க அவள் மிரண்டு முதலில் பேசத்தயங்கினாலும் பின் அனைவரும் புவியரசன்தான் குற்றவாளி என்று கூறுவதை அறிந்தவுடன் அவள் நடந்த உண்மைகளை கூறத்தொடங்கினாள்...
உண்மையிலேயே அவள் முகநூலில் பதிவிட்டிருந்த சில புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவளை மிரட்டியது நிகில் மற்றும் குணா இருவரும்தான்.
கிட்டதட்ட நான்கைந்து நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுடருக்கு வீட்டில் சொல்ல பயம்.
யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்த சமயம் அவள் தோழி சந்தியாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல நேர்ந்தது.
அங்கு புவியரசனைக் கண்டவுடன் அவன் கண்டிப்பாக உதவிசெய்வான், ஏனென்றால் அவர்களும் இவனது நண்பர்கள் என்று தோன்ற அவனிடம் நிலமையைக் கூறியவள் அன்று மாலை அவர்கள் அருகில் உள்ள குணாவின் தந்தைக்கு சொந்தமான கொடௌனுக்கு தனியாக வருமாறு வற்புறுத்துவதாகக் கூறி உதவி கோரினாள்.
சற்றும் தயங்காமல் புவியரசனும் அவளை அழத்துக்கொண்டு கிளம்ப, அவனுடன் தானும் வந்தால் உதவியாக இருக்கும் என பவித்ரனும் இணைந்து கொண்டான்.
ஏற்கனவே அங்கு வந்திருந்த நிகில் மற்றும் குணாவோ சுடருடன் வந்த இருவரையும் கண்டு அதிந்தனர்.
புவியரசன் இருவருமே நண்பர்கள்தானே என்ற நம்பிக்கையில், “ ஹேய், நீங்க செய்யறது ரொம்ப தப்பு. முதல்ல இந்த கரமத்த டெலீட் செஞ்சிருங்க.
நான் நம்ம பேரன்ஸ் கிட்டகூட சொல்லாம இங்க வந்திருக்கிறது சுடருக்காக மட்டுமில்ல உங்க படிப்பும் கரியரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும்தான்” என்று கூற அவர்களோ எதையுமே காதில் வாங்கக்கூடிய நிலையில் இல்லாமல், "இவனுங்களை துணைக்கு கூட்டிட்டு வந்தா... நாங்க பயந்துருவோமா?
உன் போட்டோஸ் எல்லாத்தையும் இப்பவே நெட்ல அப்லோட் பண்றோம் பாரு" என ஆத்திரத்தில் அறிவிழந்து சுடரை மேலும் மிரட்டவும், அவர்களுடன் பேசி பயனில்லை என்பதை அறிந்த புவியரசனும் பவித்ரனும் அவர்களுடைய கைபேசியை பறிக்கமுயல அப்பொழுது ஏற்பட்ட கைகலப்பில் அவர்கள் இருவருக்கும் பலத்த அடிபட்டு விட்டது.
ஒருவாராக கைப்பேசியை பறித்து மெமரி கார்டுடன் அதை சுக்குநூறாக உடைத்தெறித்த புவியரசன், மேலும் இவளை மிரட்ட முயற்சித்தால் என் அப்பாகிட்ட சொல்லி உங்கள கவனிக்க வேண்டி இருக்கும் என்று சொல்லிக்கொண்டே கிளம்பும்பொழுதுதான் அவர்களின் காயங்களை கவனித்தவன் மனம் வருந்தி அவர்களை மருத்துவமனையில் சேர்க்க எண்ணி ஆம்புலன்சுக்கு போன் செய்தான்.
அந்த நேரம் பார்த்து அங்கிருந்து கிளம்ப எத்தனித்த சுடரின் காலை நிகில் வேண்டுமென்றே தடுக்கிவிட அதை சமாளிக்க முடியாமல் அவள் சரிந்து கீழே விழவும் அவளுக்கு தலையில் அடிபட்டு விட்டது.
பிறகு அவர்களை இவ்விருவரும் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவரோ காவல்துறையில் புகார் அளித்துவிட பெற்றோருக்கு பயந்து நிகில் சுடரின் மயக்கத்தை சாதகமாக்கி குணாவுடன் சேர்ந்து நடந்ததை திரித்துக் கூறினான்.
அவர்களுக்கும் பலத்த அடிபட்டிருக்கவே நிலமை அவர்களுக்கு சாதகமானது.
இவ்வாறு நடந்ததை அறிந்து அனைவருமே அதிர்ந்தனர்.
அப்பொழுது புவியரசனோ, நிகில் மற்றும் குணாவின் பெற்றோரை நோக்கி, “கொஞ்ச நேரத்துல யார்மேல தப்புன்னு தெரியாம என்னலாம் பேசினிங்க? என்ன ஆன்ட்டி இப்ப உங்க மகன உங்களால வெட்டிபோட முடியுமா?
ஆங்.. அப்பறம் என்ன கேட்டீங்க இந்த குற்றத்துக்கு என்ன தண்டனைத் தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கங்க...
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 அதாவது IT ACT 2000 பிரிவு 44, 66 மற்றும் 67 படி 3 வருடம் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் 5 லட்சத்துக்கு மேல் அபராதமோ அல்லது இரணடும் சேர்ந்த தண்டனையோ கிடைக்கும்.
தெரியுமா? என்ன கம்ளைண்ட் பண்ணிடலாமா?” என்று கேட்டுவிட்டு.
“தயவுசெஞ்சு இப்படி பதிலுக்கு பதில் உங்களையெல்லாம் குத்திக்காட்டுவதுபோல் பேசினதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. ஆனால் எங்கப்பா அம்மாவை மத்தவங்க பேசறத பார்த்துட்டு நான் சும்மாயிருந்தா அது தப்பில்ல.
எப்பவுமே அப்பா எனக்கு நல்லது மட்டுமே சொல்லிக்கொடுத்திருக்கார்.
அம்மா, பெண்கள மதிக்கணும் அவர்களுக்கு பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லிக்கொடுத்திருக்காங்க.
அவங்களுக்கு தலைகுனிவு வரமாதிரி ஒரு செயல எப்பவுமே நான் செய்ய மாட்டேன்” என்று முடித்தான்.
உடனே புவனா கணவரை நோக்கி தன் பார்வையை செலுத்த அவரும் பேசு! என்பது போல் தலை அசைக்கவும் அவள் செல்வியை நோக்கி அவர் கணவருக்கும் பொதுவாக, “தயவு செஞ்சு இந்த பிரச்சனையை இத்தோட விட்டுங்க.
சுடரோட படிப்பு இதனால கெடக்கூடாது.
அந்த பசங்களுக்கும் நாம ஒரு சந்தர்ப்பம் கொடுத்துத்தான் ஆகணும்.
அவங்கள பெத்தவங்களும் அந்த பசங்ககிட்ட அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வச்சிருக்காங்க.
இனிமேல் அவங்களே கவனமா பார்த்துப்பாங்கட எனக் கூறிக்கொண்டிருந்தாள்.
அதை கேட்டவாறே சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த நிகிலும் குணாவும் கூசிப்போய் நின்றனர். பின்பு சுதாரித்தவாறு அனைவரையும் நோக்கி மன்னிப்பு வேண்டி இனி எந்தத்தவறும் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்துவோம் என உறுதி அளித்து பின் மேற்கொண்டு புகார் எதுவும் அளிக்காமல், சுடரின் படிப்பை எக்காரணம் கொண்டும் தடைசெய்ய மாட்டேன் என்ற சுடரின் தந்தை உறுதி அளிக்க, செல்வி- புவனாவிற்கு கண்களாலேயே நன்றியுரைத்தார்.
நிகிலின் தந்தை புவனா மற்றும் கார்த்திகேயனை நோக்கி, “ நீங்க உண்மையிலேயே உங்க மகனை நல்ல பண்புகளோட அருமையாக வளர்த்திருக்கீங்க. நாங்கதான் எங்க பிள்ளையை சரியா கவனிச்சு வளர்க்க தவறிட்டோம்” என்று கூறி அவர்களிடம் மன்னிப்பு வேண்டினார்.
அவர்களும் இனிமேல் எல்லாம் நன்றாக நடக்கும் என்று அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்ப, அங்கிருந்த அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு....
புவியரசன் அவன் இலட்சியப்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மிகச்சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்கிறான்.
பவித்ரன் விமான ஓட்டியாக உலகமெங்கும் பறந்து கொண்டிருக்கிறான்.
நிகில் சிறந்த கல்லூரிப் பேராசிரியராகவும், குணா அவன் தந்தையின் தொழிலை மேம்படுத்தியதுடன் இயற்கை விவசாயத்தில் கொடி கட்டி பறக்கிறான்.
முத்துச்சுடரொளி காவல்துறை அதிகாரியாக பதவியேற்று துடிப்புடன் பணிபுரியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி.
‘புவனாவின் பூந்தளிர் கதைகள்’ எனும் பெயரில் புவனா, தன் இனிய குரலாலும் அழகிய பாவங்களாலும் கூறும் குழந்தைகளுக்கான நீதிக்கதை வீடியோக்கள் முகநூல் மற்றும் யூடியூபில் மிகப்பிரபலம்.
இளைய தலைமுறையினரை தவறான திசையில் இட்டுச்செல்லும் சமூக வலைத்தளங்களில் தன்னாலான சிறிய நன்மையை செய்யும் எண்ணத்தில் புவனா தொடங்கிய இந்த செயல் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் இரசிகர்கள்களையும் அவளுக்கு இட்டுத்தந்துள்ளது.
இவர்கள் அனைவரின் முயற்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருந்த அந்த கட்டிடம் ‘தாய் மடி’ என்ற பெயர்ப் பலகையை தாங்கி, அழகிய தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அந்த அழகிய மாலை வேளையில் திறப்பு விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
வறுமை காரணமாக துன்பப்படும் குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவ உதவி இவற்றுடன் சட்ட உதவி மற்றும் மனநல ஆலோசனைகள், கல்வி பற்றிய ஆலோசனைகள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு போன்றவற்றில் உதவும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள தொண்டு நிருவனம்தான் இந்த தாய்மடி.
இதன் நிர்வாகப் பொறுப்பேற்றிருப்பவர் தன் மகளின் கல்விக்காக கலங்கிய தமிழ்ச்செல்வி. அவர் இன்று ஒரு பட்டதாரி. மேலும் தமிழ் இலக்கியத்தில் முதுகலை படித்துக்கொண்டிருக்கிறார். இனி அவர்களின் பணி சிறப்பாக தொடரும்...
மிகப் பழமை வாய்ந்த நம் தமிழ் கலாச்சாரம் இன்று நம் உணவு, உடை, நாம் வாழ்வியல் நடைமுறை அனைத்திலுமே முற்றிலும் மாறுபட்டிருந்தாலும் அதன் ஆணிவேராக நாம் தமிழர்கள் என்ற உணர்வு மாறாமல் அன்பு, அறம், ஒழுக்கம் போன்ற அடிப்படை பண்புகள் மாறாமல் நம் இளைய தலைமுறையை வழிநடத்திட இவ்வுலகை அவர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவருவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
** திருக்குறள்**
Comments