24. மனம் திறந்து
மல்லியின் வியந்த முகத்தைப் பார்த்து ஆதியின் புன்னகை மேலும் விரிய, “என்ன எம்.டி மேடம்! நான் சொல்றது சரிதான?” என்றான்.
“ஐயோ! எம்.டியா, நானா? சான்ஸே இல்ல! என்ன விளையாடறீங்களா?” என கொளுத்திப் போட்ட சரவெடி போல் படபடத்தாள்.
“நிஜமாத்தான் சொன்னேன், மல்லி. விளையாடணும்னா இப்படியா விளையாடுவேன்?” என கிறக்கமாக அவன் சொன்ன விதத்தில் எகிறிய இதயத்துடிப்பை மறைத்து, “மாம்ஸ், சீரியஸா பேசறப்ப கிண்டல் பண்ணாதீங்க!” என்று அவனை முறைத்தாள்.
“நானும் சீரியஸாதான் சொன்னேன். அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்துல எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிடுவேன், அதுவரைக்கும்தான் உனக்கு டைம். அதுக்கப்பறம் நீ ஆபீஸ் வந்துதான் ஆகணும் அதுவும் எம்.டியா. அதுக்கான எல்லா பேப்பர்சையும் தயார் பண்ணிட்டேன். அத்தோட இனிமே நம்ம கம்பெனில டிசைன் செய்யற எல்லாப் பட்டுப்புடவைகளோட பேட்டன்ட் ரைட்ஸ் உன் பேர்லதான் இருக்கும். புடவைகளை டிசைன் செய்யறதோட, நம்ம பட்டு கைத்தறி, மெஷின் தறி எல்லாமே உன்னோட பொறுப்புலதான் வரும். மொதல்ல கொஞ்சம் நானும் சசியும் உனக்கு ஹெல்ப் பண்ணுவோம். போகப்போக நீ தனியாத்தான் மேனேஜ் பண்ணனும்” எனச் சொல்லி முடித்தான் ஆதி.
அவன் அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், என்னதான் அவன் சொன்ன விஷயங்கள் சரியாக இருந்த பொழுதும், அனைத்துமே அவளது அறிவிற்கு எட்டியிருந்தாலும், மனம் அதை ஏற்க முரண்டு பிடித்தது.
அதற்குமேல் எதுவும் பேசாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று பால்கனி கூடை ஊஞ்சலில் கண்களை மூடி, இரண்டு கால்களையும் குறுக்காகக் கட்டியபடி சாய்ந்து கொண்டு உட்கார்ந்தாள் மல்லி.
திருமணம் முடிந்து வெறும் எட்டு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கிறது. அவளுக்கு என்னவோ எட்டு யுகங்களைக் கடந்த பிரமிப்பு தோன்றியது. ‘எப்பொழுது இவையெல்லாம் சரியாகி ஒரு நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமோ?!’ என்றிருந்தது மல்லிக்கு.
இரவு நேரக் கடல் காற்று சிலுசிலுவென்று முகத்தில் மோத சற்று நேரத்திலேயே அது தந்த புத்துணர்வில், ‘எது நடந்தாலும் கட்டாயம் ஆதி பார்த்துக் கொள்வான்!’ என்ற எண்ணம் தோன்றவே, மனம் கொஞ்சம் தெளிவடையவும் கண்களைத் திறந்தாள். அருகே போடப்பட்டிருந்த சோபாவில் கால்களை மடக்கி படுத்தவாறு கைப்பேசியைக் குடைந்து கொண்டிருந்த ஆதி அவளது பார்வையில் படவும் அவளின் மனம் கரைந்து போனது.
“மாம்ஸ்! ஏன் இங்க வந்து படுத்திருக்கீங்க! கொசு வேற புடிங்கி எடுக்குது”
“இந்த கொசுவெல்லாம் என்ன அவ்வளவாக் கடிக்காது?”
“ஆமாம், இந்த கொசுக்கெல்லாம் நீங்கதான் 'தி கிரேட் தேவாதிராஜன்னு' தெரிஞ்சு பயந்து உங்களக் கடிக்காம பறந்து ஓடிடும்!”
“நிஜம் மல்லி! நான் நெகடிவ் பிளட் க்ரூப். அதுவும் ரொம்ப ஸ்பெஷல் பிளட் க்ரூப். அதனால, என்ன அவ்வளவா கொசு கடிக்காது”
“மாம்ஸ்! அம்மு கூட ஒரு தடவ இந்தமாதிரி சொல்லியிருக்கா! அவளும் நீங்களும் ஒரே பிளட் கிரூப்பா?” .
“ஐயோ!” என தலையை பிடித்துக்கொண்டு, ஏம்மல்லி! எங்க போனாலும் திரும்பத் திரும்ப இங்கயே வந்து நிக்கற”
“சாரி மாம்ஸ்! ஏனோ என்னால இதுல இருந்து சட்டுனு வெளில வர முடியல! நானும் இதுபத்தியெல்லாம் பேசக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனால் ஆனா என்னையும் மீறிப் பேசி உங்கள டென்ஷன் பண்ணிடறேன்”
“பரவால்ல, வா. உள்ள போகலாம்!”
“இல்ல எனக்கு தூக்கம் வரல நீங்க போய் தூங்குங்க”
“என்னத்தான் மல்லி கொசு கடிக்காது. ஆனா உன்ன பிச்சி தின்னுடும்”
“பரவாயில்ல நான் நான் ஆதியின் பாதின்னு கொசுகிட்ட சொல்லிக்கறேன் அப்பறம் என்னயும் என்னையும் கடிக்காதுங்க” என்று அவள் பதிலுக்கு பதில் பேசவும்,அதில் கொஞ்சம் கடுப்பாகி, “கொசுவோட பாஷ உனக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனா அன்னைக்கு நடந்தமாதிரி பெரிய கத்திய தூக்கிட்டு எவனாவது வந்தா என்ன செய்வ மல்லி? இங்க தேரைங்க வேற அதிகம்” என்று சொல்லி அவளை மிரளவைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான் ஆதி.
பயத்தில் அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்த மல்லியின் பதட்டம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான்.
அவனது கேலியில் ஒரு நொடி மௌனித்தவள், ‘எப்படியும் வீட்டைச் சுற்றி பக்காவாக பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அதை மீறி கொசுவையும், தேரையையும் தவிர வேறு ஒருவரும் உள்ளே நுழைய முடியாது!’ என்பது அவள் மனத்திற்குப் புரிய சுறுசுறுவென்ற கோபத்துடன் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மல்லி தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு!
சில நிமிடங்களில் அவனது இடத்தில் ஆதி வந்து படுப்பதை உணர்ந்த மல்லியை தூக்கம் சுகமாகத் தழுவிக்கொண்டது.
ஆனால் அது சில நிமிடங்கள் கூடத் தொடரவில்லை. அம்மு தொடரவிடவில்லை.
க்ளக்… க்ளக்… கீங்… கீங்.. என்ற வினோத ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்க, அம்மு ஸ்ட்ரெக்சரில் மயக்க நிலையில் படுக்கவைக்கப் பட்டிருந்தாள். அவளது வலது கரம் கழுத்தில் அணிந்திருந்த அவளது செயினை இறுக்கப் பற்றியிருந்தது.
அவளது கையை பிடித்து, வலியப் பிய்த்து அந்த செயினை விடுவித்த ஒருவன், அதையும் அவளது கைகளில் போட்டிருந்த வளையல், மோதிரம், பின்பு சிறிய ஜிமிக்கி என ஒவொன்றாக கழற்றத் தொடங்கினான்.
“சீக்கிரம் உள்ள கொண்டு வா குணா!” என்ற அழைப்பில் அவசராவசரமாக கடைசியாக அவள் கால்களில் போட்டிருந்த கனத்த கொலுசைக் கழற்ற, அது கீறி அவளது காலில் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அந்த ஸ்ட்ரெக்ச்சரை தள்ளிக்கொண்டு, அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான் குணா.
முந்தைய நாளது கனவில் அவள் கண்ட அந்த இடத்தையே மறுபடி பார்க்கவும் பயத்தில் பதறிப்போய் எழுந்து உட்கார்ந்தாள் மல்லி.
ஆனாலும், அந்த க்ளக்.. க்ளக்.. ஓசைகள் தொடரவும் குழம்பியவள், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அருகில் பார்க்க, ஆதிதான் தன் கைப்பேசியில் எதோ விளையாடிக்கொண்டிருந்தான். அதிலிருந்து வந்த ஒலிதான் அது என்பது புரிந்தது. மணியைப் பார்க்க, ஒன்றாகி இருந்தது.
ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக்கொண்டு, “நீங்க இன்னும் தூங்கலையா?” என உரக்கக் கலக்கத்துடன் கேட்டாள் மல்லி.
ஏனோ அன்று அம்முவின் நினைவு அவனை அதிகம் ஆட்கொள்ள, அதைச் சொல்லாமல், “ஏனோ தூக்கம் வரல மல்லி நீ ஏன் முழிச்சிட்ட” என எதிர்க் கேள்வி கேட்டான் ஆதி.
அங்கே பாட்டிலில் இருந்த தண்ணீரை பருகியவாறே “ப்சு!” என்று அலுத்துக்கொண்டாள்.
“ஏன் என்ன ஆச்சு” என்று அவன் கேட்கவும், அவள் கண்ட கனவை விவரித்தவள், “அம்முவப் பத்தி பேசினா உங்களுக்கு பிடிக்கலனு தெரிஞ்சாலும், என்னால இந்த கனவப் பத்தி உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியல, சாரி!” என்றாள்.
“அம்முவ பத்தி பேசினாஎனக்குப் பிடிக்காதுன்னு நான் எப்ப உங்கிட்ட சொன்னேன்? நானே மறக்க நினைக்கற கசப்பான நாட்கள நினைவுபடுத்தறதாலதான், அவளப் பத்தி பேசறத ஆவாய்ட் பண்ணேன். முன்னயாவது அவ மேல எனக்கு கோவம் இருந்துது. இப்ப அதுகூடஇல்ல மல்லி! நீ எல்லா நேரமும் இந்தப் பிரச்சனைலயே மூழ்கி இருக்கறதுதான் காரணம்” என ஆதி சொல்லவும், “சரி விடுங்க” என்றவள் நினைவு வந்தவளாக, “ம்! கேட்கணும்னு நினைச்சேன். அந்த குணாவைப் பத்தி சொன்னேன் இல்ல? அவர் அந்த வனிதாவோட அப்பாதான் தெரியுமா?” என்று கேட்டாள்.
“ம்… அந்த நாய்” என்று வார்த்தையைப் பாதியிலேயே நிறுத்தியவனின் முகம் கோபத்தில் சிவந்தது.
“ப்சு மாம்ஸ்! கோவப்படாதீங்க. அவன் கையில அம்முவோட நகையெல்லாம் எப்படிப் போச்சுன்னு புரிஞ்சுதா?” என்று கேட்டாள்.
முகம் இறுக, “ஹ்ம்ம்! இப்படி இருக்கும்னு நான் கனவுல கூட நினைக்கல. அவன்தான் மல்லி, அம்மு இறந்ததும் முதல் முதலா பார்த்ததாவும், அவ தற்கொலைதான் பண்ணிக்கிட்டானும் போலிஸ்ல வாக்குமூலம் கொடுத்தது. நான் அப்பதான் அம்மு போட்டிருந்த நகைகளத் திருடினான்னு நினைச்சேன். உன்ன சொல்லிட்டு ஏனோ எனக்குமே இன்னைக்கு அம்முவ பத்தின நினைவு கொஞ்சம் அதிகமாவே வருது மல்லி. தூக்கம் கூட வரல” எனச் சொல்லிக்கொண்டிருக்க அவனுடைய கண்கள் பனித்திருந்தன.
அந்த கோபாலை சென்று சந்தித்தது முதலே, அவன் வினோத்திற்கு உடந்தையாக கீழ்த்தனமான செயல்களில் ஈடுபட்டிருப்பது புரியவும், அம்முவை நினைத்து ஆதி குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான்.
ஏனோ எல்லாவற்றையும் மல்லியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றவும், அதே எண்ணத்தில் அவளை நாடி வந்தவனுக்கு அவளது நிலை மனதை உறுத்த சொல்லாமலே விட்டுவிட்டான்.
ஆனால் மறுபடியும் அம்முவின் மரணத்தைப் பற்றிய பேச்சு எழவும், “மல்லி உங்கிட்ட கொஞ்சம் பேசணும். என்னோட செயல்பாடுகள் எதையுமே யார்கிட்டயும் இதுவர சொன்னதில்ல. அதேமாதிரி என்னோட எந்தச் செயலுக்கும் விளக்கங்கள் கொடுத்ததில்ல. ஏன் என் அம்மா அப்பாகிட்ட கூட சொன்னதில்ல. உணர்ச்சி வசப்படாம உன்னால கேட்கமுடியும்னா நடந்த விஷயங்கள உங்கிட்ட சொல்றேன்” என்றான் ஆதி.
உணர்வுகளின் தாக்கத்தில் பேச்சற்றுபோய் அவள் மௌனமாக தலை அசைக்கவும்,சொல்லத் தொடங்கினான் ஆதி.
“நான் என்னோட பதினாறு வயசுல இருந்தே அப்பாவோட சேர்ந்து தொழில்ல ஈடுபட ஆரம்பிச்சேன் மல்லி! அதுவும் தனியாத் தொழில் தொடங்கின பிறகு எனக்குக் கிடைச்ச தொடர் வெற்றிகள்ல கொஞ்சம் அதிகமாவே கர்வத்தோட இருந்துட்டேன். அம்முவோட மரணம் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி.
எந்த இடத்தில என்னோட கவனம் சிதறிப் போச்சுன்னுதான் புரியல. மனசு ரொம்ப வலிக்குது மல்லி. உங்கிட்ட சொல்லலாம்தான?” என ஆதி கேட்கவும், “மாம்ஸ், உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்னா எதுவா இருந்தாலும் மனசு விட்டு சொல்லுங்க. எனக்கும் தூக்கம் வரல. அதோட நிறையக் கேள்விகளும் என் மனசுல இருக்கு” என்றாள் மல்லி.
“அருளாளன்ற எங்க தாத்தாவோட பேரையும், பரமேஸ்வரிங்கற பாட்டியோட பேரையும் சேர்த்து 'அருள் பரமேஸ்வரி ஸ்டோர்ஸ்'ங்கற பேர்ல, தாத்தா ஆரம்பிச்ச கடைய அவரோட சேர்ந்து அப்பா கவனிச்சிட்டு இருந்தாரு” என அவர்களது குடும்பத்தைப் பற்றி சொல்லத்தொடங்கினான் ஆதி.
ஏற்கனவே விவசாய நிலங்க, மூணு வீடுகள், அத்துடன் சின்ன காஞ்சிபுரத்தில் அவர்களுடைய கடை, அது இருக்கும் அவரகளுக்கு சொந்தமான இடம் என வசதி வாய்ப்பிற்குக் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு. மேலும் கடையிலும் வியாபாரம் கொழிக்க, அவர்களுடைய குடும்பத்திற்கு ஊரில் நல்ல மரியாதையை இருந்தது .
வரதன், செல்வம் மற்றும் கயல் என மூன்று பிள்ளைகள் அருளாளனுக்கு. செல்வம் நன்றாகப் படிக்கவும் அவரைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தனர். படிப்பு முடிந்ததும் அவருக்கு அரசாங்க வேலையும் கிடைத்துவிட்டது.
வரதனுக்கும் செல்வேந்திரனுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். செல்வத்தை விட ஐந்து வருடம் சிறியவள் கயல்விழி. அருளுடைய சொந்த தங்கையின் மகள்தான் சுலோச்சனா. பட்டுத் தறிகள், ரைஸ் மில், சா மில், என வசதி படைத்த குடும்பம் அவர்களுடையது. மூன்று மகன்களுக்குப் பிறகு சுலோச்சனா என்பதால் அவர்கள் வீட்டின் இளவரசி அவள். அவளைத் தனது மூத்த மகனுக்குத்தான் முதலில் கேட்டார் அருளாளன்.
ஆனால் படித்து அரசாங்க வேலையில் இருக்கும் இளைய மகனுக்குத்தான் தன் மகளைக் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார் அவரது தங்கை, தன் மகளின் மனம் அறிந்து.
செல்வ நிலையில் கொஞ்சம் குறைந்திருந்தாலும் தனது ஒன்று விட்ட சகோதரனின் மகளான ஆதிலட்சுமியை வரதனுக்குப் பேச விரும்பினார் பரமேஸ்வரி, அவளது குண இயல்புகளை அறிந்தவராக.
அருளாளனுக்கும் மனைவியின் எண்ணம் சரி எனப் படவே, பேசி முடித்து இரண்டு திருமணங்களையும் அடுத்தடுத்த முகூர்த்தத்திலேயே நடத்தி முடித்தனர்.
கயல்விழியும் சுலோச்சனாவும் சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாக வளரவே கயலுக்கு சுலோச்சனாவுடன் நன்றாக ஒத்துப்போனது.
தங்களது நிலையிலிருந்து குறைவான இடத்திலிந்து வந்தவள் என்ற எண்ணம் மட்டுமே லட்சுமியின் மீது அவளுக்கு இருந்தது. அது அவளது வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்கியது.
பரமேஸ்வரிக்கு மட்டும், தாய் வீடே கதி என்று இருக்கும் நாத்தனாரின் மகளை விட, கைக்கு உதவியாக இருக்கும் தனது தம்பியின் மகளைத்தான் மிகவும் பிடிக்கும். நாட்கள் செல்லச்செல்ல வீட்டிற்குள்ளேயே உட்கட்சி பூசல்கள் ஆரம்பமானது.
திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே ஆதி பிறந்துவிட, இரண்டு வருடம் கழித்தே சுலோச்சனா அவர்களது மகன் கமலக்கண்ணனை பெற்றெடுத்தாள். அதற்குள்ளாகவே அவள் கொண்ட புகைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. அடுத்த வருடமே அவர்களது இரண்டாவது மகன் விமல் பிறந்தான்.
கயல்விழிக்கு அதே ஊரிலேயே அவர்களுக்கு இணையான குடும்பத்தில், ராமலிங்கம் என்பவருடன் திருமணம் முடித்தனர். மூன்று வருடங்கள் கழித்துத்தான் அவர்களது ஒரே மகளான வேல்விழி பிறந்தாள்.
அதற்குள் அருள், பரமேஸ்வரி இருவரின் முதுமைக் காரணமாக கடையின் பொறுப்பு முழுதும் வரதனுக்கே வந்தது என்றால், வீட்டின் பொறுப்பு மொத்தமுமே லட்சுமிக்கு வந்து சேர்ந்தது.
செல்வத்திற்குக் கடையை கவனிக்க ஆர்வம் இல்லை. அது அவரது வேலைக்கும் பிரச்சினை ஏற்படுத்தும் என்றும் பயந்தார். சுலோச்சனா மறந்தும் வீட்டு வேலைகளில் ஈடுபாடு காட்டவில்லை. எனவே வரதன் லட்சுமி இருவருமே ஓயாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
ஆதி வளர வளர சுலோச்சனா தன் அன்னையிடம் காட்டும் அலட்சியமும், அதற்குக் கயல் அத்தை துணைபோவதும் இலைமறைக் காயாக புரியத் தொடங்கியது.
அப்பொழுதுதான் ஆதி பிறந்து மிக நீண்ட பத்து வருடத்திற்குப் பிறகு அம்மு பிறந்தாள்.
மருத்துவமனையில் பாட்டிகள் இருவர், வரதன், லட்சுமியின் தம்பி என அனைவரும் காத்துக்கொண்டிருக்க, பிறந்த குழந்தையான அமிர்தவல்லியை முதன்முதலாகத் தன் கைகளில்தான் ஏந்தினான் தேவாதிராஜன்.
ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிக் கொண்டிருந்த சுலோச்சனாவிற்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.


