top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·4 members

20. தவறும் நம்பிக்கை

'கேர் ஃபார் லைப்' மருத்துவமனையின் கார் பார்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, சுற்றிவந்து லட்சுமியை கை பிடித்து இறக்குவதற்காக குனிந்தான் ஆதி.


அவருக்கு மூட்டு வலி அதிகமாகி நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவரிடம் காண்பிப்பதற்காக அங்கே அழைத்துவந்திருந்தான்.


அந்த நேரம் அவனது காரின் மற்றொரு புறமாக வந்து நின்றனர், மல்லியும் பரிமளாவும்,


அந்தப் பகுதியே, ஆளரவமின்றி அமைதியாய் இருந்தது. ஆதி குனிந்த நிலையில் இருந்ததால் அவர்கள் அங்கே இருந்ததையே அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.


“நாம இப்ப இருக்கற நிலமைல நீ செய்யறது சரியா மல்லி? அவங்க பாவம்தான் இல்லன்னு சொல்லல. ஆனா நம்ம கைல இருக்கறத குடுத்துட்டு அவசரம்னா நாம என்ன செய்யறது? நம்மள உள்ள நுழையக்கூட விடமாட்டேங்கறானுங்க பாரு. திருட்டுத்தனமா எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?” எனப் பொரிய ஆரம்பித்தார் பரிமளா!


என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனப் புரியாமல் சத்தம் செய்யாமல் நிமிர்ந்து நின்றான் ஆதி.


அவர்கள் எதிர் புறம் நோக்கி நின்றிருந்ததால் இருவரது முகமும் அவனுக்குத் தெரியவில்லை. அவர்களும் அவனைப் பார்க்கவில்லை.


“அம்மா! நீங்க ஏம்மா கவல படறீங்க? எனக்குத்தான் ஆதி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் டிசைனிங்ல வேலை கிடைச்சிருக்கே. அதுவும் பெர்மெனென்ட் ஆகிட்டா நல்ல சம்பளம் கிடைக்கும். இந்தமாதிரி நகையெல்லாம் சீக்கிரமே வாங்கிடலாம்மா” என்றாள் மல்லி அன்னையைச் சமாதானப்படுத்தும் விதமாக.


அவர்களுடைய பேச்சில், தன்னுடைய நிறுவனத்தில்தான் அந்தப் பெண் வேலையில் நியமிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அவன் அறியவும், ஆராய்ச்சியுடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான் ஆதி. ஏதோ பேச வந்த லட்சுமியை கைகாட்டித் தடுத்தவன் அவர்களிடம் கவனத்தைச் செலுத்தினான்.


அதற்குள் மல்லி தன் கைப்பேசியில் யாரையோ அழைத்து, “அத்த நானும் அம்மாவும் இந்த ஆஸ்பத்திரில காரெல்லாம் நிறுத்துவங்க இல்ல அங்க இருக்கோம். நீங்க உடனே இங்க வாங்க.” எனச்சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.


நேரம் ஆகிறது என்பது போல் மகனிடம் கைகாட்டி லட்சுமி ஜாடை காண்பிக்கவும், மிகவும் மெல்லிய குரலில், “அம்மா! ஒரு அஞ்சு நிமிஷம்!” என்றவன் அங்கே யாரோ வரும் அரவம் கேட்கவும் தன்னை மறைத்துக் கொண்டான்.


நடுத்தர வயதில் ஒரு பெண்மணி அங்கே வந்து அந்த இருவரையும் பார்த்தவாறு நின்றார். அவரை மட்டுமே ஆதியால் பார்க்க முடிந்தது .


அவர் அங்கே வந்த நொடியே, “அத்த! கிட்டு மாமாக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்து முடிச்சுட்டாங்களா?” என்று மல்லி கேட்க, “இன்னும் இல்லம்மா, ஏதோ டெஸ்ட், இன்னும் பாக்கி இருக்காம்” என்று மல்லியால் 'அத்தை' என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் சொல்லவும், “அப்பா! நல்லவேள!” என்ற ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படினா எந்தப் பேப்பர்லயும் மாமா கையெழுத்து போடலதான?” என்று கேட்டாள் மல்லி.


“இல்ல மல்லி!” என்றார் அந்தப் பெண்மணி.


“தேவிகா! எந்தக் கையெழுத்தும் போடலேன்னு உனக்கு நல்லாத் தெரியுமா?” எனக் கேட்டார் பரிமளா.


“இல்ல பரி! அவரு எந்த கையெழுத்தும் போடல. எனக்கு நல்லாத் தெரியும்” என்றார் அந்த தேவிகா.


“அம்மா!” என்றவாறு மல்லி பரிமளாவைப் பார்க்க, தனது கைப் பையிலிருந்து, சிறிய பெட்டி ஒன்றை எடுத்து அதை தேவிகாவிடம் கொடுத்தார் அவர்.


அதை வாங்கிப் பார்த்த தேவிகா “இது என்ன பரி?” என்றவாறே அதைத் திறக்க அதைப் பார்த்து, “பரி! என்ன இது?!” என்று தீயைத் தீண்டியது போல் பதறினார்.


“நேத்து நீ எங்க வீட்டுக்கு வந்துட்டு போனதுல இருந்தே அத்தைக்கு நாம கண்டிப்பா எதாவது செய்யணும்னு மல்லி ஒரே பிடிவாதம்! உங்க அண்ணனும் அவளுக்கு சப்போர்ட்டு. இதுல ஒரு பதினோரு சவரன் நகை இருக்கு, தேவி. இத உன் பொண்ணோட கல்யாணத்துக்கு வச்சிக்கோ. உன்னால எப்போ முடியுமோ அப்ப திருப்பிக் கொடு” என்றாள் பரிமளா.


“வேண்டாம் மல்லி! திடீர்னு உனக்குக் கல்யாணம் கூடி வந்தா தேவைப்படும். நடக்கறது நடக்கட்டும். நாங்க அனுபவிச்சுகிறோம்மா. எங்களோட சேர்ந்து நீங்களும் கஷ்டப்பட வேண்டாம்” என்று மறுத்தாள் தேவிகா.


“அத்த, எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போன சமயம் நாங்க பட்ட பாடு அந்த கடவுளுக்குத்தான் தெரியும். எதோ எங்களுக்காவது கொஞ்சம் நிலபுலன் இருந்துது. வித்து சமாளிச்சோம். ஆனா நீங்க என்ன செய்விங்க? எப்படி சமாளிப்பிங்க? இன்னைக்கு நம்ம லல்லி அக்காவோட கல்யாணத்த நடத்த மாமாவோட கிட்னிய விப்பீங்க. நாளைக்கே மாமாவுக்கு எதாவது உடம்பு சரியில்லாம போனா உங்க கிட்னிய விப்பீங்களா?


யாருக்காவது இந்த மாதிரி உடல் உறுப்புகள் தேவப்பட்டா, ரத்த சம்பந்தம் இருக்கறவங்க அத மனம் உவந்துக் கொடுக்கணும். பணம் இருக்கறதால, சாகரவயசுல இருக்கிறவங்களுக்கு கூட இப்படி விலை கொடுத்து வாங்க நெனைக்கறது அராஜகம், அத்த. அதுவும் உங்கள போல ஒழச்சு வாழ்க்கைய ஓட்டுற நிலையில இருக்கறவங்க இப்படி உடல் உறுப்ப விக்கத் துணியறது கொடுமையிலயும் கொடுமை. அத பார்த்துட்டு நாங்க எப்படி அத்த சும்மா இருக்க முடியும்? மொதல்ல போய் கிட்னியெல்லாம் விக்க முடியாதுன்னு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்புற வழியப் பாருங்க. வேற பேச்சே வேண்டாம்” என்றாள் மல்லி முடிவாக.


நெகிழ்ச்சியில் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே, “மல்லிமா அத்த சொன்னா கேளு! எங்களால இந்த நகைய இப்போதைக்கு திருப்ப முடியாது. உனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனா அம்மா, அப்பா ரொம்ப கஷ்ட படுவாங்க” என தேவிகா நிலைமையை எடுத்துச் சொல்ல, அதெல்லாம் அவள் செவிக்குள் நுழையவே இல்லை.


“மல்லிய மல்லிக்காக மட்டுமே கல்யாணம் செஞ்சுக்கறவனா இருந்தா மட்டும்தான் நான் கல்யாணமே செஞ்சுப்பேன் அத்த! நகைக்காகன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்! அதுவும் கொஞ்ச நாள் வேல பார்த்துட்டுத்தான் நான் கல்யாணமே பண்ணிப்பேன். நீங்க கவலையே படவேண்டாம்!” என தேவிகாவிற்கும், அவர்கள் பேசுவதையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த பரிமளாவிற்குமாகச் சேர்த்து பதில் சொன்னாள்.


என்ன செய்வது என்பதுபோல் தேவிகா பரிமளாவைப் பார்க்க, “எடுத்துக்க தேவிகா. மொதல்ல இப்போதைய பிரச்னையை தீர்ப்போம். மத்த விஷயங்கள அப்பறம் பாத்துக்கலாம். உங்க பேரைச் சொல்லி உன்ன ஆஸ்பத்திரி ரிசப்ஷன்ல கேட்டோம். எங்கள உள்ளயே விடல. அங்கயே வெச்சி பேசினா ஏதாவது பிரச்சனை ஆகுமோன்னு பயந்துதான் மல்லி உன்ன இங்க வரச்சொல்லிச்சு. நேரம் ஆக ஆக எதாவது டாக்குமென்ட்ல கையெழுத்துப் போட்டுட்டா சிக்கல் ஆயிடும். அதனாலதான் இங்கயே வந்துட்டோம்!” என்று முடித்தார் பரிமளா. தேவிகாவின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி பரவியது!


“அத்த, சீக்கிரமா போங்க. மாமா ஏதாவது சைன் பண்ணிடப் போறாங்க” என மல்லி தேவிகாவை அவசரப்படுத்தவே, “ரொம்ப நன்றி பரிமளா! நன்றிம்மா மல்லி!” என்றவாறு மல்லியைக் கட்டி அணைத்துக்கொண்ட தேவிகா பிறகு வேக நடையுடன் அங்கிருந்து சென்று மறைந்தாள்.


“நல்லதுதான் செஞ்சிருக்கோம். ஆனா தம்பிய வேற மேல் படிப்பு படிக்க வைக்கணும். உங்க ரெண்டு பேரையும் நெனச்சாதான் எனக்குக் கவலையா இருக்கு மல்லி!” என்று புலம்பினாள் பரிமளா.


“தம்பிக்கு என்ன அவன் நல்லாத்தான படிக்கிறான். அவன் மெரிட்லயே வருவான். நல்லதே நடக்கும் கவலையே படாதம்மா!” என்றவாறே அவளின் கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச்சென்றாள் மல்லி.


அப்பொழுது அங்கே ஒரு கார் நுழையவும் அந்த ஓசையில் அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள் மல்லி. அப்பொழுதுதான் அவளது முகத்தைப் பார்த்தான் ஆதி. தானே அறியாமல் அவனது இதயத்தை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள் மல்லி.


அதற்கு முன்பே, அவளை ஒரு முறை பார்த்த நாள் நினைவில் வரவும், சில்லென்ற இனிமை மனதில் பரவ அவள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டு, கற்சிலையென நின்றிருந்த ஆதியை, அவனது அன்னையின் குரல் கலைத்தது. அவருமே அங்கே நடந்ததைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.


“என்னப்பா, நீ சொல்லுவியே பணத்த நேசிக்காம மனுஷங்கள நேசிக்கற ஒருத்திதான் உனக்கு பொண்டாட்டியா வர முடியும்னு. அந்தப் பொண்ணு இவதானா?” என்றார் லட்சுமி சிரிப்புடன். இதழில் வழிந்த புன்னகையுடனே, “இருந்தாலும், இருக்கலாம் யார் கண்டது!” என்று தனது மனதை மறைக்காமல் சொன்னான் ஆதி.


அவன் குடும்பத்தில் சுற்றத்தில் என்று சில பெண்கள் அவன் மனதில் இறக்கிச் சென்றிருந்த கசப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக இளவரசியைப்போலப் பொத்தி வைத்திருந்த அம்மு சுயநலமாகத் தன்னை அழித்துக் கொண்டது என பெண்களைப் பொறுத்தவரை இரும்பாக இறுக்கிப்போயிருந்த அவனது இதயத்தை அவள் செய்த ஒரே ஒரு செயலால் ஒரே நொடியில் முழுவதுமாக தன்வசமாக ஆக்கியிருந்தாள் மல்லி.


***


அனைத்தையும் வியப்புடனேயே கேட்டுக்கொண்டிருந்தாள் மல்லி.


“ஓ! ஆனால் ஆனா அன்னைக்கு நீங்க அங்க இருந்தத நான் கவனிக்கவே இல்ல பாருங்களேன்!” என்றவள், “இந்த அளவுக்கு தெரிஞ்ச பிறக்கும் அந்த விநோத்க்கிட்ட இத பத்தி நீங்க ஒண்ணுமே கேக்கலையா, தேவா?” என முடித்தாள்.


“அன்னைக்கே, அம்மாவோட செக் அப் முடிஞ்சதும் அவங்கள பிஸியோதெரப்பிக்காக விட்டுட்டு, அவன நேர்ல பார்த்து இத பத்தி கேட்டேன் மல்லி. ‘எங்க ஹோஸ்பிடல்ல இந்தமாதிரி இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ நான் துளி கூட என்கரேஜ் பண்றதில்ல. தனிப்பட்ட முறையில அந்த நோயாளியே அவங்கள கூட்டிட்டு வந்திருக்கலாம்’ன்னுதான் சொன்னான். அதுக்குமேல என்னாலயும் அவன சந்தேகப்பட முடியல. அதனால அவன கொஞ்சம் கவனமா இருன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான் ஆதி.


“இல்ல மாம்ஸ்! நான் அங்க வந்த அன்னைக்கு முன்னாடி நாள், தேவிகா அத்த, மாமாவுக்கு தெரியாம எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவரோடகிட்னிய தானமா கொடுக்க சம்மதிக்கறதா எழுதி இருந்த அக்ரீமெண்ட் காபி ஒன்ன காமிச்சு, அதுல என்ன எழுதிருக்குன்ற விவரத்தக் கேட்டாங்க. அது இங்லிஷ்ல இருந்ததால அம்மாகிட்ட கேட்கலாம்னு எங்களத்தேடி வந்திருந்தாங்க. அன்னைக்குதான் அவங்க நெலமய சொல்லி அழுது புலம்பினாங்க.


தேவிகா அத்த எங்க சொந்தக்காரங்க இல்ல. அவங்க எங்க பேமிலி ஃப்ரண்ட். தேவப்படும்போது எங்க கழனில வேலை செய்ய வருவாங்க. இப்பல்லாம் விவசாய வேலை செய்ய முடியாம, ரெண்டு பேரும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில தினக் கூலியா வேலை செய்யறாங்க. அந்தச் சமயம்தான் அவங்க மக கல்யாணம் முடிவாகி இருந்துச்சு. ஓரளவுக்கு மத்த செலவெல்லாம் மேனேஜ் செஞ்சுட்டாங்க ஆனா, நக வாங்க மட்டும் பணத்தேவ இருந்ததால கடனுக்காக அலஞ்சிட்டு இருந்த சமயம், புரோக்கர் ஒருத்தன் இவங்க நிலைமைய தெரிஞ்சுட்டு, உதவி செய்யறமாதிரி, பேசிப் பேசியே மாமாவ பிரெய்ன் வாஷ் பண்ணியிருக்கான்.


ஆனா அத்தைக்கு இதுல கொஞ்சம்கூட விருப்பமில்ல. மறுநாள் மாமாவ அந்த ஹாஸ்பிடலில்ல அட்மிட் பண்ண போறதா சொன்னாங்க. அவங்க கிளம்பிப் போனதுக்கு அப்பறம், எங்க எல்லாருக்குமே ரொம்பவே அதிர்ச்சியா இருந்துது.


இதையெல்லாம் சினிமாவுல பார்க்கும்போதே பாக்குனு இருக்கும். நிஜத்துல அதுவும் நமக்கு வேண்டப்பட்டவங்களுக்கே நடக்கும்போது எப்படி இருக்கும்? எனக்கு அத எப்படியாவது தடுக்கணும்னு மட்டும்தான் மனசுக்குள்ள ஆணி அடிச்ச மாதிரி தோணிச்சு. அதனாலதான் என் நகைகள கொடுக்க முடிவு செஞ்சேன். அப்பா உடனே சம்மதிச்சாங்க. அம்மாவுக்கு அரை மனசுதான். ஆனாலும் வேண்டாம்னு சொல்லல. ஏன்னா அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல போனப்ப, நாங்க பட்ட கஷ்டம் அந்த மாதிரி.


பணம் இருந்தா உயிரக் கூட இவங்களால விலை கொடுத்து வாங்கிட முடியும். ஆனா எங்களப் போல இருக்கற மிடில் கிளாஸ் மக்களால, சாதாரணமா பாக்கற மெடிக்கல் ட்ரீட்மெண்ட்ட கூட பார்த்துக்க முடியாது. இதுதான் உண்மை” என்று சொல்லும்போதே துக்கத்தில் தொண்டைக்குழி அடைத்தது மல்லிக்கு.


தி கிரேட் தேவாதிராஜனின் மனைவி, தன்னை ஒரு சாதாரண நடுத்தர வர்க்கம் என்று சொல்லிக்கொள்கிறாள். இதுதான் மல்லி!


அவள் இப்படிச் சொன்னது நியாயத்திற்கு ஆதிக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும். மாறாக, அவன் மனதில் மகிழ்ச்சிதான் பெருகியது!


அவளது இந்தக் குணம்தான் அவனைக் கவர்ந்தது!.


அவளை, நிர்பந்தப்படுத்தி தன்னை மணக்க வைத்து!.


மேலும் மேலும் காதலில் மூழ்க வைக்கிறது!.


“ஐ லவ் யூ! மல்லி!” என மெல்லிய குரலில் சொன்னான் ஆதி. அவன் சொன்னது புரியாமல், “என்ன சொன்னிங்க” என்று கேட்டாள்.


“மல்லிய மல்லிக்காக மட்டுமே கல்யாணம் செஞ்சுக்கறவனா இருந்தால் மட்டுமே நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன இல்ல? உண்மையாவே மல்லிய மல்லிக்காகவேதான் நான் கல்யாணம் செஞ்சுட்டு இருக்கேன். உனக்கு அது புரியுதா மல்லி?!” என அவளின் விழிகளை நோக்கினான்.


வெட்கப் பூக்கள் முகத்தில் பூக்க, “ம்!” என்று தலை அசைத்தாள் மல்லி. அதை ரசனையுடன் பார்த்திருந்த ஆதி, பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, “சரி சரி நீ மேல சொல்லு!” என்றான்.


“ஆனா மாம்ஸ்! அங்க நடக்கற எல்லா விஷயமும் அந்தப் பெரிய டாக்டருக்கு தெரியுங்கற மாதிரிதான் தேவிகா அத்த அன்னைக்கு சொன்னாங்க.


பெரிய டாக்டர்னா யாரோ வயசானவங்களா இருப்பாங்கன்னுதான் நான் மொதல்ல நெனச்சேன். ஆனா நேத்து தாமரை அண்ணி சொன்னத வெச்சுதான் அங்க பெரிய டாக்டர்னா அது அந்த வினோத்னு புரிஞ்சுது. நிச்சயமா அங்க ஏதோ பெரிய தப்பு நடக்குது மாம்ஸ்!” என்றாள் மல்லி.


உடனே எதோ யோசனை தோன்றவும், “மாம்ஸ்! அம்மு இறந்த சமயம் நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்ததா சொன்னீங்கல்ல! அப்ப கேர் ஃபார் லைப்லயா இருந்தீங்க?” என்று கேட்டாள் மல்லி, அதிர்வுடன்.


“ஆமாம், அப்ப வினோத்துக்கு கல்யாணம் ஆகல. அந்த ஹாஸ்பிடல அப்பதான் தங்கவேலு தாமரைக்காக வாங்கியிருந்தார். அங்க அவன் சம்பளத்துக்கு வேலை செஞ்சுட்டு இருந்தான். அதனாலதான் அந்த ஹாஸ்பிடலுக்கே போக ஆரம்பிச்சோம்” என்றான் ஆதி.


அந்தச் சமயம் நடந்த விஷயங்களைக் கோர்வையாக நினைவுபடுத்திப் பார்க்க, அந்தக்கணம் அவனுக்குமே அங்கே ஏதோ தவறாக நடப்பதுபோல் மனதில் தோன்றியது.


“மாம்ஸ்! தாமரை அண்ணி சொன்னாங்களே அந்தப் பொண்ணுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணணுமே” என்றாள் மல்லி.


“பொறுத்தார் பூமி ஆளுவார்! மல்லி!” என்று அவளை நோக்கி அர்த்தமான புன்னகை ஒன்றைச் செலுத்தினான் தேவாதிராஜன்.


அந்தப் புன்னகைக்கான பதில் அடுத்த நாளின் 'முக்கியச் செய்தியாக' தொலைக்காட்சியில் அனைத்துச் செய்தி சேனல்களிலும் கதறிக்கொண்டிருந்தது.

18 Views

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page