Krishnapriya Narayan

Jun 15, 20224 min

Poove Unn Punnagayil - 36

அத்தியாயம்-36

சென்னை மாநகரின் பிரதான பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையின் முன்பு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கிய சக்தி சற்று தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

ஹாசினியின் பிரச்சனை முடிந்த ஓரிரண்டு நாட்களுக்குள்ளாகவே அவளுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவள் வேலூர் சென்றுவிட, தொடர்ந்த ஒன்றரை மாதங்களும் அவள் அங்கேயே தங்கிவிடவே தாமரையால் அவளை நேரில் சந்தித்து நன்றி சொல்ல இயலாமல் போனது. அந்த சந்தர்ப்பத்தில்தான் பாபுவின் எண்பதாவது பிறந்தநாள் வரவிருக்க அவர்கள் குடும்பத்தில் எல்லோருமாகச் சேர்ந்து அவருடைய அமுதவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதையே காரணமாகக் கொண்டு தாமரையும் கருணாகரனுமாக வேலூர் வரை வந்து, அமுதவிழா அழைப்பிதழுடன் தாம்பூலத்தில் ஒரு பட்டுப்புடவையும் வைத்து சக்தியையும் அவளுடைய அம்மாவையும் நேரில் அழைத்ததுடன், அவளுக்கு மனதார நன்றியையும் சொல்லிவிட்டு வந்தனர்.

சத்யா வேறு அவளைக் கட்டாயம் வரச்சொல்லி மறுபடி மறுபடி அழைத்திருக்க தவிர்க்க இயலாமல் அங்கே வந்திருந்தாள் சக்தி.

ஹாசினியின் திருமணத்தை எந்த அளவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்களோ அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது பாபு - மோகனா அமுதவிழா ஏற்பாடுகள்.

அவர்களுடைய சொந்தபந்தம் நட்பு வட்டம் என அப்படி ஒரு கூட்டம் நிரம்பி வழிந்தது அங்கே.

தொழில்முறை பார்ட்டிகள் அது இது என எத்தனையோ புதியவர்களை தினம் தினம் எதிர்கொண்டாலும் இப்படிப்பட்ட குடும்ப விழா என்பது அவளுக்கு மிகவும் அரிதானது. கௌசிக்குடனானதும் கூட ஒருவகையில் தொழில்முறை பழக்கம் மட்டுமே.

மற்றபடி சத்யாவைத் தவிர அவனுடைய குடும்பத்தில் மற்ற அனைவரையும் ஓரிருமுறை சந்தித்திருந்தாலும் இதுவரை யாருடனும் அதிக நெருக்கம் ஏற்படவில்லை. எனவே ஒரு தயக்கத்துடனேயே அவள் உள்ளே வர அவளைப் பார்த்துவிட்டு, "வாங்காக்கா, வாங்க வாங்க" என மலர்ந்த புன்னகையுடன் அவளை நோக்கி ஓடி வந்தான் சந்தோஷ். அவனை பின் தொடர்ந்து வந்த ஹாசினி உரிமையுடன் அவளுடைய கையை பற்றி உள்ளே அழைத்துச்செல்ல, பாந்தமாக பட்டுடுத்தி அணிமணிகளுடன் முகம் முழுவதும் மகிழ்ச்சி பூரிக்க அவளைப் பார்த்ததுமே சக்தியின் தயக்கமெல்லாம் தூர ஓடிப்போனது.

அவளை அப்படியே அழைத்துவந்து முன் வரிசையில் அமர்ந்திருந்த கோதைக்கு அருகில் உட்காரவைத்தவள், "பாட்டி, காலைல இருந்து இன்னும் வரலியான்னு கேட்டுட்டே இருந்தீங்களே, இவங்கதான் லாயர் சக்தி அக்கா" என ஹாசினி அவளை அவருக்கு உற்சாகமாக அறிமுகப்படுத்த, அவளைப் பார்த்ததுமே அப்படி ஒரு திருப்தி உண்டானது கோதைக்கு.

சத்யா எதையுமே மூடி மறைத்து செய்வதில்லை என்பதால், சக்திக்காக இரவோடு இரவாக வேலூர் வரை சென்றது, கொஞ்சமும் யோசிக்காமல் அவ்வளவு பெரிய தொகையை அவளுடைய அக்கௌண்டுக்கு மாற்றியது முதல் இன்று வரை தொடரும் அவர்களுக்கிடையேயான கைப்பேசி உரையாடல் வரை அனைத்துமே அவர்கள் வீட்டிற்குள் அனைவருக்குமே வெளிப்படையாகத் தெரிந்தே இருந்தது.

இது ஒரு விதமான எதிர்பார்ப்பை எல்லோருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்க, 'டேய் சட்டுபுட்டுன்னு அந்த பொண்ணு கிட்ட ப்ரபோஸ் பண்ணி ரெண்டுல ஒண்ணு சொல்லுடா" எனத் தாமரை அவனிடம் நச்சரிக்கவே தொடங்கிவிட்டார்.

கோதைக்கும் அத்தகைய எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. விட்டால், ‘என் பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா? அவனை கட்டிக்கறியா?’ என முதல் வேலையாக அப்படியே அவளிடம் கேட்டும் வைத்திருப்பார் அவர்.

"பாட்டி, மாமாதான் அவங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணனும். நீங்க அவசரப்பட்டு வாயை விட்டு எதையும் சொதப்பி வெச்சுடாதீங்க" என சந்தோஷ் அவரை முன்கூட்டியே எச்சரித்து வைத்திருக்கவே தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவராக, அவளுடைய கையை பிடித்துக்கொண்டு, "ரொம்ப தேங்க்ஸ் மா, எங்க ஹாசினி இப்ப நல்லபடியா குடித்தனம் நடத்திட்டு இருக்கான்னா அதுக்கு நீதான் காரணம்னு உன்னை பத்தி தாமரை பேசாத நாளே இல்ல" என்றதோடு முடித்துக்கொண்டார் அவர்.

அதற்குள் அங்கே வந்த கௌசிக் அவன் பங்கிற்கு சக்தியை வரவேற்று நலம் விசாரித்துவிட்டு, "முகூர்த்தம் முடியற வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் அங்கேயே நிற்கணுமாம். உங்க அத்தை சொல்றாங்க. வா" என ஹாசினியை அழைத்துக்கொண்டு மேடை நோக்கிச் சென்றான்.

அங்கே போடப்பட்டிருந்த அலங்கார இருக்கையில் மாலையும் கழுத்துமாக பாட்டி தாத்தா இருவரும் அமர்ந்திருக்க ஹோமத்துடன் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.

மகன்கள் மருமகள்கள் மகள் மருமகன் பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன்கள் என அந்த மேடையே நிரம்பி வழிய, அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, 'ஆயிரம் கோபதாபங்கள் மன பேதங்கள் இருப்பினும் அனைத்தையும் மறந்து ஒரு நாள் கிழமை என்று வரும்போது இப்படி விட்டுக்கொடுக்காமல் ஒன்று கூடி மகிழ்வது என்பதுதானே உறவுமுறைகளைத் தாங்கிப்பிடிக்கும் அடிப்படையாக உள்ளது. இப்படிப்பட்ட உறவுகளும் குடும்பம் அமைவது என்பதுகூட ஒரு கொடுப்பினைதானே!' என்பதாக அவ்வளவு நிறைவாக இருந்தது சக்திக்கு.

"நீ போய் டிபன் சாப்பிட்டுட்டு வந்துடும்மா" என கோதை அவளிடம் சொல்ல, "பரவாயில்லைமா, எனக்கு இப்ப பசிக்கல" என்றாள் அவள் சங்கோஜத்துடன்.

அதே நேரம் மாமனைத் தேடி, அவன் பந்தி நடக்கும் இடத்தில் இருக்கவும் அங்கே வந்த சந்தோஷ், வேட்டியை மடித்துக் கட்டியவாறு சாம்பார் வாளியுடன் நின்றவனை காணவும், "ஐயோ மாம்ஸ், ஊர் பழக்கம் உங்கள விடவே விடாதா? அதான் இதையெல்லாம் கவனிக்க கேட்டரிங் ஆளுங்க இருக்காங்க இல்ல" என கிசுகிசுப்பாக அவனைக் கடிந்துகொள்ள, "வந்திருக்கறவங்க நம்ம கெஸ்ட். நாமதான் முன்ன நின்னு அவங்கள கவனிக்கணும்" என யாரும் அறியாவண்ணம் அவனை நன்றாக முறைத்துவைத்தான் சத்யா.

அப்பொழுதுதான் கவனித்தான் அங்கே தேன்மொழி மல்லிகா இருவரும் அருகருகில் உட்கார்ந்திருக்க அவர்களின் கணவன்மார்கள் மற்றும் பிள்ளைகளும் உடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதை. 'ஓஓ!' என மனதிற்குள் பெரிதாக சொல்லிக்கொண்டவன், "எனக்கு என்ன வந்துது. உங்க ஆளு வந்திருக்காங்க. அவங்க கண்ணு உங்களைத்தான் தேடிட்டு இருக்கு. அதுக்குதான் சொன்னேன்" என அவன் அலட்டலாக சொல்லி முடிக்கவில்லை, கையிலிருந்த வாளியை அவனிடம் திணித்துவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றான் சத்யா.

மல்லிகா அவர்கள் இருவரையும் வியப்புடன் பார்த்துவைக்க, "ஹா...ஹா... ஒண்ணுமில்ல, மாமாவோட ஒரு வீ.ஐ.பீ கெஸ்ட் வந்திருக்காங்க" என அவளிடம் கொளுத்திப்போட்டவன் சாம்பாரை அவர்களுக்குப் பரிமாறத்தொடங்கினான்.

சில நிமிடங்களில் சக்தியுடன் அங்கே திரும்ப வந்தவன், "உன்ன உங்க அத்தை கூப்பிட்டாங்க. போ, போய் மேடைல நில்லு" என அவனை அனுப்பிவிட்டு சக்தியை சாப்பிடச்சொல்ல, "தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. ப்ளீஸ் சத்யா, எனக்கு கம்பெனி கொடுங்க" என அவன் காதருகில் அவள் கிசுகிசுக்கவும் மறு வார்த்தை பேசாமல் அவளுடன் போய் சாப்பிட உட்கார்ந்தான் சத்யா.

தாமரை அவளுக்காகத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்த பட்டுப்புடவையைத்தான் உடுத்திவந்திருந்தாள் சக்தி. மிகையான நகைகள் இல்லை. அதீத ஒப்பனை இல்லை. ஆனாலும் நேர்த்தியாக அவள் புடவையை உடுத்தியிருந்த பாங்கும் அறிவுக்களை பொருந்திய மென்மையான அவளுடைய முகமும் பெண்கள் இருவரையுமே வெகுவாக கவர சத்யாவின் கவனம் அவளைத் தாண்டி அங்கே இங்கே திரும்பவில்லை என்பது வேறு புரியவும் தேன்மொழி மல்லிகா இருவருமே அவனை 'ஆ'வென பார்த்துக்கொண்டிருந்தனர், 'நம்ம சத்யாவா இது?' என்பதாக.

வாய் ஓயாமல் மென்மையான குரலில் எதையோ பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தேன்மொழிக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அவளுடைய தோளில் இடித்து அவளை மீட்ட மல்லிகா, "கவலைப்படாத தேனு, எனக்கு என்னவோ சத்யாகிட்டயிருந்து சீக்கிரமே நல்ல சமாச்சாரம் வரும்னு தோணுது" என்று சொல்ல, "அது மட்டும் நடந்தா என்னை விட யாரும் சந்தோஷப்படமாட்டாங்கடீ மல்லி" என தழுதழுத்தாள் தேன்மொழி சத்யாவின் மலர்ந்த புன்னகையை மனதிற்குள் படம்பிடித்தபடி.

ஒருவாறாக இருவரும் சாப்பிட்டு முடித்து வரவும் உறவுகள் சூழ, ஒரு சல்லடையில் தங்க ஆபரணங்களை நிரப்பி அவர்களுக்கு மேலாக அதைத் தூக்கிப் பிடித்து கலசத்தில் நிரப்பியிருந்த நீரை அதன் வழியாக ஊற்றி அமுதவிழா தம்பதியருக்கு கனகாபிஷேகம் செய்துகொண்டிருந்தனர்.

அது முடிந்து சில நிமிடங்களில் அவர்கள் உடை மாற்றி வரவும் குடும்பத்தினர் தொடங்கி வந்திருந்த அனைவரும் அவர்களை வணங்கி ஆசி பெற வரிசையில் வந்து நின்றிருந்தனர்.

அந்த கூட்டத்திற்குள் சென்று மீள அதிக நேரம் பிடிக்கும் என்பது விளங்க அருகில் நின்றவனிடம், "சத்யா இன்னைக்கு சைதாப்பெட் கோர்ட்ல ஒரு முக்கியமான கேஸ் ஹியரிங் இருக்கு, நான் அதை முடிச்சிட்டு ஊருக்கு போகணும். இஃப் யூ டோன்ட் மைண்ட், இந்த கிஃப்ட்ட நீங்களே அவங்க கிட்ட கொடுத்துடறீங்களா?" என சக்தி தயக்கத்துடன் இழுக்க, "ப்ச்... அதெல்லாம் வேணாம், நீயே உன் கையால கொடு" என்றவன் தானே கூட்டத்திற்குள் புகுந்து அவளை விழா நாயகர்களிடம் அழைத்துச் சென்றான்.

அனைவரும் செய்வதுபோல அவளும் அவர்களை வணங்கி ஆசி பெற்று பரிசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு தாமரையிடமும் கோதையிடமும் சொல்லிக்கொண்டு தாம்பூலப் பையையும் பெற்று அங்கிருந்து கிளம்ப, அவளைப் பின்தொடர்ந்து வந்தவன், இயல்பாகக் கேட்பதுபோல், "உன் கேஸ் ஹியரிங் முடிய எவ்வளவு நேரம் ஆகும்" எனக்கேட்க, "தெரியல சத்யா, ஆனா நான் கோர்ட்ல இருந்து கிளம்ப எப்படியும் ஈவினிங் ஆகிடும்" என்றாள் அவள்.

அவளுடன் வாயில் வரை வந்தவன் அங்கே நின்றிருந்த கோபாலை அழைத்து, "மேடம்ம கொஞ்சம் சைதாப்பேட்டை கோர்ட்ல இறக்கிவிட்டுட்டு வந்திடு" என அவள் மறுத்துப்பேச இடங்கொடுக்காமல் சொல்லிவிட ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து கிளம்பினாள் சக்தி அவனை நீங்கிச் செல்ல மனமே இல்லாமல்.

நீதிமன்றத்தில் இறங்கி அன்றைய வேலைகளை முடித்துக்கொண்டு அவள் வெளியில் வரும் வரையிலும் கூட அவளை விட்டு நீங்காமல் அவனுடைய நினைவு அவளை தன் பிடிக்குள்ளேயே வைத்திருக்க, அவளுக்காக வாயிலிலேயே காத்திருந்தான் சத்யா காருடன்.

****************

    2